பீடியை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, “வெக்கமா இல்ல…. இப்புடில்லாம் பண்ணிட்டு திரியுறதுக்கு” என்ற சொன்ன தொனியில் நிமிர்ந்து உட்கார்ந்தவன், “சோபா சிலுக்கையெல்லாம் கொஞ்ச வயசுலயே கூப்டுகிட்டீக, பவுனுத்தாயிக்கு மட்டும் என்ன பதினாறு வயசா நடக்குது, நேத்துத்தான் சமைஞ்சாளாக்கும்?” என்று தொடங்கி, “நான் கேட்டத நீ குடுக்கலை, வெசக்குட்டாங்கிற என் பேரை சாய்குட்டான்னு மாத்தி வச்சிக்கிட்டு, சாய் பாபாவைக் கும்புடப் போயிருவேன்” என்று வெசக்குட்டா கருப்பனை நோக்கி ஆங்காரமாகப் பேசி முடிக்கும் பொழுது மனதார சிரித்து மாய்ந்திருந்தேன். ‘தாய் கிழவி’ திரைப்படத்தில், கருப்பசாமியுடன் வெசக்குட்டா நடத்திய அந்த உரையாடல், தமிழ் நிலத்தின் எளிய மக்கள் தங்கள் தெய்வங்களுடன் கொண்டிருக்கும் உறவின் ஆகச்சிறந்த பிரதிபலிப்பு.

விருமாண்டி திரைப்படத்தின் “அந்தக் காண்டாமணி ஓசை கேட்டிருச்சு” என்கிற பாடலின் இரண்டாவது சரணத்தில், “திக்கத்த ஏழைக்கிங்க ஒன்னை விட்டா, கஷ்டத்தில் கைகொடுக்க யாரிருக்கா” என்று தொடங்கும் வரிகள், “கொறையேதும் இல்லாத சாமி, எங்க தெய்வமின்னு எங்களுக்குக் காமி” என்று முடியும். அதன் இன்னொரு வடிவம் தான் வெசக்குட்டா கருப்பனிடம் பீடியை இடுக்கியவாறு ஒரண்டு இழுத்தது. தான் நம்பும் தெய்வத்தைக் கட்டளையிட்டு, அதனை தெய்வமென்று நிரூபிக்கச் சொல்லும் உரிமைக்குப் பெயர் பக்தி என்றால், இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியொரு உரிமையை மீறும் வலு எந்த நிறுவப்பட்ட மதத்திற்கும், அதன் கோட்பாடுகளுக்கும் இல்லை என்பதே உண்மை.
நடிகர் முத்துக்குமார் “ஜவஹர்லால் நேரு” என்கிற தன் பெயரை “சவர்ஹலால் நேரு” என்று சொல்வதாகட்டும், அவரது மகன் “ராஜீவ் காந்தி”, “பென்னிகுக்கை” பார்த்து “ம்ம்..தள்ளுவ” என்பதாகட்டும், கதை மாந்தர்களிடமும், வசனங்களிலும் அவ்வளவு மண்வாசம். இதற்கு முன்னர் ஆடுகளம், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் ஆகியவை மட்டுமே தங்கள் மாந்தர்களையும், அவர்களின் உரையாடல்களையும் மதுரை நிலப்பரப்பிற்கு இத்தனை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.
வெசக்குட்டா கதாபாத்திரம் சுப்ரமணியபுரத்தின் டும்காவை நினைவுபடுத்தியது. இரண்டுமே வெகு இயல்பான பாத்திரப் படைப்புகள். அவர்கள் இருவரின் உலகமும் மிகச்சிறியது, நிறைய எதிர்பார்ப்புகள் இல்லாதது. வெசக்குட்டாவின் உலகம் கருப்பனோடு முடிந்து விடுவதைப் போல், டும்காவின் உலகம் அழகரோடும், பரமனோடும் முடிந்து விடுகிறது. இரு கதாப்பாத்திரங்களும் கதையின் போக்கிற்கு அவசியமானவை என்பதைத் தாண்டி, கதையினை அது நிகழும் நிலப்பரப்போடு பொருத்திப் பார்ப்பதற்கு, இவை அதிமுக்கியம். டும்காவாக நடித்த மாரி, வெசக்குட்டாவாக நடித்த ஆத்தாடி குமரன் இவ்விருவரின் உடல் மொழியும், உச்சரிப்பும் அத்தனை நேர்த்தியாக இருந்ததற்குக் காரணம், இவர்கள் கதை நடக்கும் நிலம் சார்ந்தவர்கள் என்பது மட்டுமே. மதுரை மதுரையாக திரையில் தெரிவதற்குக் காரணம் இது போன்ற பாத்திரங்கள் தான். இல்லாவிட்டால், அவிய்ங்க, இவிய்ங்க என்று பேசுவதோடு நின்று விடும்.
இயக்குநர் வெற்றி மாறன் ஒரு நிகழ்ச்சியில், “You have to go more local, to go international” என்று சொல்லியிருப்பார். சர்வதேச தரத்திலான படங்களை எடுப்பதற்கு நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும், புதிய தொழில் நுட்பங்களை நாட வேண்டும் என்கிற அவசியமில்லை. நம் மண் சார்ந்த கதைகளை, மனிதர்களை, அவர்களின் வாழ்வியலைத் துல்லியமாகக் காட்சிப்படுத்துதல் மூலம் சர்வதேச பார்வையாளர்களை அவர்கள் அறிந்திராத முற்றிலும் புதிய ஒரு உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும். அந்த அனுபவம் தரும் உளக்கிளர்ச்சியின் மூலம் மட்டுமே ஒரு படைப்பு சர்வதேசத் தரத்திற்கு உயர்கிறது.
இதைத் தவிர இன்னொரு முக்கியமான விசயம் இசை. எத்தனை இசையமைப்பாளர்களை நமக்குப் பிடித்திருந்தாலும், இளையராஜாவுக்கு ஒரு தனி இடம் நம் மனதில் இருப்பதற்குக் காரணம், அவரது இசை நம் மண் சார்ந்தது என்பதன்றி வேறென்ன ?. “கரகாட்டக்காரன்”, “தாரை தப்பட்டை”, “கும்பக்கரை தங்கய்யா”, “எங்க ஊரு பாட்டுக்காரன்” போன்ற படங்களின் பாடல்கள் எல்லாம் நம்மை உசுப்பி உலுக்கி விடுகிறதில்லையா ? தாய்க்கிழவி திரைப்படத்தின் ஒரு காட்சியில், சுருளி “யத்தா…” என்று அழைத்தும் மாடியில் இருந்து பவுனுத்தாயி வராத காரணத்தினால், சுருளி தன் மகன் குலுக்கையை (ராஜீவ் காந்தி) மேலே சென்று பார்த்து வரச் சொல்வாள். குலுக்கை பவுனுத்தாயின் அறைக்குச் சென்று அவள் சாகக் கிடப்பதைப் பார்க்கும் நொடியில் ஒரு இசைக்கோர்வை தொடங்கும். அதற்கு, தியேட்டரில் என்னை அறியாமல் மட்டியைக் கடித்தவாறு தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன் என்று என் மனைவி சொல்லித் தான் தெரிந்தது. அந்தக் கோர்வை என் மனதிற்கும், மண்ணிற்கும் வெகு அணுக்கமாக இருந்தது மட்டுமே அதற்குக் காரணம். “ஆறடி காத்திருக்கு” என்கிற பாடலின் prelude-உம் அதுதான். முழுப் பாடலும் வேறு genre, ஆனால் ஆங்காங்கே வரும் இந்தக் கோர்வைக்காக ஒருமுறை கேட்டுப் பாருங்கள். அதே போல், “சேயான்” படத்தின் முன்னோட்டத்தில் வரும் “பனைமரமா எட்டு வச்சு, சூரியன பொட்டு வச்சு, வாரான் வாரான் பாரு விருமாண்டி” என்கிற பாடலும் எனக்கு இதே உணர்வினை அளித்திருக்கிறது. தவிர அந்தோணி தாசன், அந்தக்குடி இளையராஜா போன்றோரின் குரலும், பாடலும் நமக்குச் சட்டென உவகை தருவதற்கான காரணம், அவை இசையின் கூறுகளைக் கடந்து நம் நிலத்தையும் மக்களையும் பிரதிபலிப்பதனால்தான்.
தாய்க்கிழவி திரைப்படமும், அதன் மொழியும், என் மக்களை, என் ஊரை, பெரும் பிரியம் கொண்ட என் தாய்க்கிழவிகளை இரத்தமும் சதையுமாக என் கண்முன் நிறுத்திவிட்டது. படம் முடிந்து நிறைவோடு வெளியே வந்த வேளையில், “ஊருக்குப் போகணும்” என்று தோன்றியதுதான் படத்தின் வெற்றி. ராதிகா, இளவரசு, சிங்கம்புலி, பாலசரவணன், அருள்தாஸ் அண்ணன் போன்ற தேர்ந்த கலைஞர்களுக்கு இது ஹோம் கிரவுண்ட். They are lovely and at their hilarious best. அவர்களுக்கும், ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மதுரை மண்ணின் நையாண்டியோடு காட்சிப்படுத்திய இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கும், வெசக்குட்டாவாக வாழ்ந்திருக்கும் நடிகர் ஆத்தாடி குமரனுக்கும், இதனைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் முத்தங்களும்.