நெறி

வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு, இரண்டாம் உலகப் போருக்கு நிகரான வேறு ஒரு களஞ்சியம் இல்லையென்று நினைக்கிறேன். கடந்த நூற்றாண்டின் பேரிடரான இதனுடைய ஆவணங்கள் – தனிமனித செயல்பாடு, அரசியல் அமைப்பு, அறிவியல் என்று பல வேறுபட்ட தளங்கள் சார்ந்த நிகழ்வுகளும், தகவல்களும் கொட்டிக் கிடக்கும் அரிய பெட்டகம். அவை அனைத்திலும் மிக முக்கியமானதொரு ஆவணம் – நாஜி படைகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேச நாடுகள் (Allies) நடத்திய நியூரம்பெர்க் விசாரணை (Nuremberg Trials).

சோவியத் படைகள் பெர்லினை சுற்றி வளைக்கவும், 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று ஹிட்லர் தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின்னர் நாஜி படைகளின் மேலதிகாரிகள் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் விசாரணையின்றிக் கொல்லப்பட வேண்டும் என்பது நேச நாடுகளைச் சார்ந்த பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், இவர்கள் விசாரணை இல்லாமல் கொல்லப்பட்டால், தியாகிகளாகவும், கொள்கைத் தலைவர்களாகவும் மாறுவதற்கு வாய்ப்பிருந்தது. அது “ஜெர்மனிய மேலாதிக்கம்” (German Supremacy) எனும் அடக்குமுறைக் கொள்கை மறுபடியும் தலைதூக்க அடித்தளம் அமைக்கும்.  மேலும், விசாரணையின்றிக் கொல்லுதல், இன ரீதியாக தாங்கள் உயர்ந்தவர்கள் என்கிற நாஜிக்களின் அடிப்படை நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யாது. ஏற்கனவே முதலாம் உலகப் போரில் படுதோல்வி அடைந்த போதும், அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் மீண்டெழுந்து மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்த வரலாறு நாஜிக்களுக்கு உண்டு. அவர்கள் மீண்டெழுந்த போது, தங்கள் இனத்தினைத் தவிர மற்றவர் மீது அத்தனை வெறுப்புணர்வுடன் வந்திருந்தார்கள். அந்த வெறுப்புணர்வே அவர்களுடன் இருந்த யூதர்களுக்கு எதிராக இத்தனை ஒடுக்குமுறைகளையும், இன அழிப்பையும் முன்னெடுக்க வைத்தது. 

மீண்டெழுவதற்கான அப்படி ஒரு வாய்ப்பை அமெரிக்காவோ மற்ற நேச நாடுகளோ மீண்டும் ஒரு முறை நாஜிக்களுக்குத் தர விரும்பவில்லை. எனவே சட்ட வல்லுநர்கள் சார்ந்த ஆணையம் ஒன்றை அமைத்து, நாஜி மேலதிகாரிகளை விசாரணைக்கு உள்ளாக்கி, அதன் மூலம் அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத்தர  நேசநாடுகள் முடிவு செய்தனர். இதன் மூலம், போரின் தோல்வியால் நாஜி தலைவர்கள் கொல்லப்படவில்லை, அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டனர் என்று நிறுவ முடியும். வரலாற்றில் தோல்வியாளர்கள் கொண்டாடப்படலாம், ஆனால் குற்றவாளிகள் ஒரு போதும் கொண்டாடப்படுவதில்லை. தவிர, இப்படி ஒரு ஆணையம், 

மேற்கு உலகின் அரசியல் ஆதிக்கத்தை பறைசாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் ஒரு காரணம். இந்த விசாரணைகள் ஜெர்மன் நாட்டின் நியூரம்பெர்க் நகரில் நடைபெற்றதால், நியூரம்பெர்க் டிரையல்ஸ் என்று பெயர் பெற்றது. இந்த ஆணையம் அமைய முக்கிய காரணமாக இருந்தவர் அன்றைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராபர்ட் ஜாக்சன். 1945-ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் இந்த ஆணையத்தை அறிவித்தார். 

இந்த ஆணையம் அமைக்கப் பெற்றாலும், நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருந்தன. அந்த காலகட்டத்தில், சர்வதேச குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் போதுமான அளவில் இல்லை. ஆதலால், சில குற்றங்களை – இவை இந்த சட்டங்களை மீறின என்று வகைப்படுத்த இயலாத சூழ்நிலை இருந்தது. சட்டம் மீறப்படாத போது எப்படி ஒரு செயலை குற்றம் என்பது ? எப்படி அதைத் தவறு என்று நீதிமன்றத்தில் நிறுவி, அதற்குத் தக்க தண்டனை பெற்றுத் தருவது ? அதிலும் இந்த விஷயத்தில், பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி என அனைத்து நாடுகளும் போரில் ஈடுபட்டிருந்தன. தனது நாட்டினைக் காத்துக் கொள்வதற்காக அந்தந்த அரசுகள் போர் செய்வதை குற்றம் என்று கருத முடியாது. ஒருவேளை, எதிரி நாட்டு மக்களின் மீது போர்க்குற்றங்களில் ஈடுபட்டால், அதற்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தர சட்டங்கள் இருந்தன. ஆனால், சொந்த நாட்டு மக்களை வதைப்பதற்கு எதிரான சர்வதேச சட்டங்கள் அப்போது தெளிவாக இல்லை. ஜெர்மனியில் நாஜிக்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தங்கள் சொந்த நாட்டின் குடிமக்களான யூதர்களை என்பதால், இது மேற்சொன்ன சிக்கலை உண்டாக்கியது. இதனால் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட நாஜி மேலதிகாரிகள் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இதனைத் தவிர்ப்பதற்காக, சோவியத் பரிந்துரை செய்திருந்த, “குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்” (Crime against citizens) என்கிற பதத்தினை, ராபர்ட் ஜாக்சன் “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” (Crime against humanity) என்று மாற்றம் செய்தார். இதன் கீழ் கொலை, இன அழிப்பு, அடிமைத்தனம் என்று அத்தனை ஒடுக்குமுறைகளையும் வகைப்படுத்தினார்கள். இதனடிப்படையில், நாஜி மேல்மட்ட தலைவர்களான ஹெர்மன் கோரிங், ஜூலியஸ் ஸ்டிரைக்கர் போன்றோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹெர்மனுக்கு அடுத்த கட்டத்தில் இருந்த ருடால்ஃப் ஹெஸ் ஆயுள் தண்டனைக்குள்ளானார். ஹெர்மன் கோரிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற ஒரு சூழல் வரும் என்று கிட்டத்தட்ட யூகித்திருந்த நாஜி மேல்மட்டத் தலைவர்கள், இந்த விசாரணைகளுக்கு ஓரளவு தயாராகவே இருந்தனர். சர்வதேச குற்றம், சட்டம் சார்ந்த குழப்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் தப்பித்து விடலாம் என்று எண்ணியிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் விசாரணைகளுக்கு முக்கிய திருப்புமுனையாக இருந்தவர், அமெரிக்காவைச் சார்ந்த மனநல மருத்துவர் டக்ளஸ் கெல்லி என்பவர். இவர் நாஜி கைதிகளுடன், (குறிப்பாக ஹெர்மன் கோரிங்) உரையாடி அவர்களின் தற்பெருமித (Narcissistic) மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டு, அதன் மூலம் ராபர்ட் ஜாக்சன் போன்றோர் நீதிமன்றத்தில் சரியான கேள்விகளைக் கேட்க உதவி செய்தார். அந்தக் கேள்விகளின் மூலம் இவர்களின் குற்றங்கள் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டு அதற்கேற்ப தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை இவர்களை உளவியல் ரீதியாக அணுகாமல், வெறுமனே குற்றவாளி என்கிற அடிப்படையில் அணுகியிருந்தால், இப்படி ஒரு தீர்வு சாத்தியம் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.

இந்த நிகழ்வுகளை, நுண்ணிய விவரணைகளோடு “Nuremberg” என்கிற பெயரில் சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். ஹெர்மன் கோரிங்-ஆக ரஸ்ஸல் க்ரோவும், மருத்துவர் டக்ளஸாக ரமி மலெக்-கும் வாழ்ந்திருக்கிறார்கள். அத்தனை நேர்த்தியான வசனங்கள் மற்றும் அன்றைய மனநிலையை விவரிக்கும் காட்சியமைப்புகள். இது போன்ற உண்மைச் சம்பவங்கள் கலைப்படைப்பாகும் போது, அதன் தாக்கம் பன்மடங்காகிறது. இரண்டாம் உலகப் போர் எப்போது முடிவுக்கு வந்தது என்ற என்பது சார்ந்த காட்சிகளில் அத்தனை ஆழம். சிலருக்கு ஹிட்லர் இறந்தவுடன் போர் முடிந்தவிட்டதாக தோன்றும். ராபர்ட் ஜாக்சனுக்கு நியூரம்பெர்க் விசாரணைகள் முடிந்து, நாஜி மேல்மட்டத் தலைவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படும் போது தான் போர் முடிவடைகிறது. மருத்துவர் டக்ளஸுக்கு உதவியாளராக வரும் யூத பின்புலம் கொண்ட சார்ஜண்ட் ஹோவர்ட் –  “எனது பெற்றோரின் மரணத்திற்குக் காரணமான, ஜூலியஸ் ஸ்டிரைக்கர் சாகும் போதுதான் எனக்கு இந்த போர் முடிவுக்கு வருகிறது” என்பார். போர் முடிந்துவிட்டது என்கிற உணர்வு, ஒவ்வொருவருக்கான தனிப்பட்ட பாதிப்புகள் மற்றும், நோக்கங்கள் பொறுத்து மாறுபடும் என்பதை அத்தனை அழகாகச் சொல்லியிருகிறார்கள். ஜூலியஸ் தூக்கிலிடப் போவதற்கு முன்னர், அவரிடம் சென்று “நான் ஒரு யூதன்” என்று சொல்லப் போவதாக ஹோவர்ட் மருத்துவர் டக்ளஸிடம் கூறுவார். ஆனால், தூக்கிலிடும் முன்னர் கதறியழும் ஜூலியஸ், ஹோவர்டிடம், அவர் யூதர் என்று தெரியாமல் “You have been friendly” என்று கூறுவதும், ஹோவர்ட் தான் சொல்ல நினைத்த எதையும் சொல்லாமல், மெளனமாக அதை ஆமோதிப்பதும் absolute cinema.

மருத்துவர் டக்ளஸ் கெல்லி தன்னுடைய அனுபவங்களை “22 Cells in Nuremberg” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். “நாஜிக்கள் யூதர்களிடம் காட்டிய காட்டுமிராண்டித்தனம், நாஜிக்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது போன்ற மன நிலை கொண்டோர் எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் இருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால், மக்கள் தொகையில் ஒரு பாதியினரின் ஆதரவு இருந்தால், மீதிப் பாதி மக்கள் அனைவரின் பிணங்களின் மீது நடக்கத் தயங்காத மனம் கொண்டவர்கள் எல்லா நாடுகளிலும் உண்டு”,  என்கிற அவரது கூற்று வெகுஜன வாசகர்களிடமும், மக்களிடமும் எடுபடவில்லை. ஆதலால் அவர் எழுதிய புத்தகம் வெற்றி பெறவில்லை. தன் கூற்று ஏற்கப்படாமல் போன விரக்தியில், அடுத்த சில ஆண்டுகளில் டக்ளஸ் கெல்லி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். தான் கவுன்சிலிங் செய்த, ஹெர்மன் கோரிங்-ஐ போல சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

மருத்துவர் டக்ளஸ் கெல்லியின் கூற்று எத்தனை உண்மை என்று இன்றைக்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாஜிக்களால் இத்தனை கொடுமைகளுக்கு ஆளான யூதர்கள் அதிலிருந்து பிழைத்து வந்து, பாலஸ்தீனத்தில் நடத்திக் கொண்டிருக்கிற கொடுஞ்செயல்கள் துளி கூட அறம் அற்ற வரலாற்று முரண். இதிலிருந்து விளங்குவது ஒன்றே ஒன்று தான் – சக மனிதனை துன்புறுத்த, ஒருவன் நாஜியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமோ, ஒரு குறிப்பிட்ட சீருடை அணிந்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை. அடுத்தவனை ஒடுக்குவதற்கான மனநிலை வாய்த்தால் மட்டும் போதுமானது. சாதி, மதம், இனம், மொழி, பழிவாங்கும் உணர்ச்சி என்று ஏதாவது ஒன்றைக் காரணமாக வைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளலாம். இருக்கும் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் கண்மூடித்தனமாக ஆதரிக்கும்படியாக அந்தக் காரணம் இருந்தால் மட்டும் போதுமானது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் அடிப்படைவாதிகளால், அச்செயல்களைத் தங்களுக்குள் நியாயப்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பதுதான் இன்னும் வேதனை அளிக்கும் விசயம்.

போர் செய்வதற்கு, வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அத்தனையும் விடுத்து, வேறு வழி தேடுவதில் தான் மனிதம் துளிர்க்கிறது. அடுத்தவரை துன்புறுத்த எத்தனிக்கும் போது, அல்லது ஏமாற்ற நினைக்கும் போது ஏற்படும் ஒரு குற்றவுணர்ச்சி மட்டுமே நாம் மனிதனாக இருக்கிறோம் என்பதற்கான சான்று. ஆனால் அதை வெகு இலகுவாக புறந்தள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம். விருமாண்டி திரைப்படத்தில் ஒரு காட்சியில், நெப்போலியன் – “மனசு தாண்டா கோர்ட்டு, அப்புறம் தான் மத்ததெல்லாம்” என்று சொல்வார். ஒருவன் எப்பேர்ப்பட்ட கொடுஞ் செயலையும் எதாவது காரணம் கொண்டு நியாயப்படுத்திக் கொள்ளலாம். தண்டனையில் இருந்து கூட தப்பித்து விடலாம். ஆனால், அவனது மனசாட்சி அதனை ஏற்றுக் கொள்ளாவிடில், அதைவிட பெரிய தண்டனை என்ன இருக்க முடியும் ? உறக்கம் வராத இரவுகளைத் தாங்கிக் கொள்ளும் வலு யாருக்கு உள்ளது ? அதனாலேயே அறமும்,  அது சார்ந்த நெறியும் கொண்டு வாழ்தல் அவசியமாகிறது. கடினமாக இருந்தாலும், தவறு செய்யும் போது உறுத்தும் மனசாட்சி வாய்க்க, அதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

4 thoughts on “நெறி

  1. //பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி என அனைத்து நேச நாடுகளும்//

    நேச நாடுகளின் பட்டியலில் தவறுதலாய் அச்சு அணி நாடு.

    //மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்//

    இதை அடுத்தவனை நோக்கி விரல் சுட்ட மட்டுமே பயன்படுத்தி விட்டு அந்த இடத்தில் அதே அமெரிக்கா வீற்றிருப்பது ஆகப்பெரிய நகை முரண்.

    ரங்கா என்றொரு தமிழ்ப்படத்தில், நல்லவனும், கெட்டவனும் தங்கள் கொள்கைகளை ஒரிரவில் மாற்றிக் கொள்வது போல, அச்சு நாடுகள் இன்று இருந்த இடமும்-தடமும் தெரியாமல் இருக்க, அதைக் களைய வந்த நேச நாடுகள், இன்று அப்பாவிகளின் ரத்தம் உறிஞ்சுவது கொடுமை.

    //அடுத்தவனை ஒடுக்குவதற்கான மனநிலை வாய்த்தால் மட்டும் போதுமானது.//

    இத்தகைய மனநிலையோடு, அதிகாரத்தின் ஒப்புதலும் வேண்டும். அப்போது தான் இதைத் தவறு என்று சொல்லும் துணிச்சல் சமூகத்திற்கு எழாது. அப்படியே ஒன்றிரண்டு குரல்கள் எழுந்தாலும் அட(ஒடு)க்க வசதியாயிருக்கும்.

    Like

  2. இரண்டாம் உலகப்போரின் இன அழிப்பை காரணம் காட்டியே, தனக்கென தனி நாட்டை உருவாக்கிக் கொண்டவர்கள், இடம் கொடுத்தவனையே அழிக்கத் துடிப்பதைப் பார்த்தால், ஒருவேளை ஹிட்லர் செய்தது சரியோ என்று தோன்றுகிறது…, ☹️☹️☹️

    Like

Leave a comment