“The Ministry Of Ungentlemanly Warfare” என்ற திரைப்படம் வெகு நாட்களாக எனது வாட்ச் லிஸ்ட்டில் இருந்தது. கய் ரிச்சியின் (Guy Ritchie) திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகன் என்றாலும், படத்தின் போஸ்டர் என்னைப் பெரிதாக ஈர்க்காததால், இதனைப் பார்க்காமல் இருந்தேன். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் இதனை பார்க்க நேரம் வாய்த்தது. கய் ரிச்சிக்கே உரித்தான நக்கல், நையாண்டி நிறைந்த கதாபாத்திரங்கள், அற்புதமான ஒளிப்பதிவு, நேர்த்தியான இசை என அட்டகாசமான திரைப்படம். இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் மையக்கரு பிரிட்டன், ஜெர்மனி இடையேயான போர் சார்ந்த உத்திகளில் ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. அது தொடர்பான சில தகவல்களை எழுத வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரை.

1941ம் ஆண்டு பெர்லினின் ரைக் சான்சலரி (Reich Chancellery) மாளிகையில் நடந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கான கூட்டத்தில், சோவியத் யூனியனுக்கு (ரஷ்யா) எதிராக “ஆபரேஷன் பார்பரோசா” (Operation Barbarossa) எனும் படையெடுப்பினை அறிவிக்கிறார், ஹிட்லர். பிரிட்டனைப் பணிய வைப்பதற்கான தனது உத்திகள் அனைத்தும் பலனற்றுப் போன பிற்பாடு, கடைசியாக இந்த முடிவினை எடுத்திருந்தார். ஆனால், உலக வரலாற்றிலும், தனது வாழ்விலும் அதிமுக்கியமானதொரு முடிவினைத் தான் எடுத்திருப்பதை ஹிட்லர் உணர அன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆனது.
ஆரம்ப காலத்தில் ஹிட்லர், பிரிட்டனையும், அங்கு இருந்த “anglo-saxon” இனத்தவரையும் தன் ஆரிய இனத்திற்கு நிகராக உயர்வாகக் கருதினார். உண்மையில், அவர்களுடன் இணைந்து, உலகை ஆள வேண்டும் என்று விரும்பினார். ஆனால், ஐரோப்பாவில் ஹிட்லர் மட்டுமே ஒற்றை அதிகாரமாக இருக்க வேண்டும் என்ற ஆதிக்கத்தை பிரிட்டன் ஏற்க மறுத்தது. பிரிட்டனில் இருக்கும் யூதர்களின் செல்வாக்கு காரணமாகவே தனக்கு நிகராக இருக்கும் ஒரு உயரிய இனம், தனக்கு இணக்கமாகச் செயல்பட மறுக்கிறது என்று உறுதியாக நம்பினார். இதனாலேயே பிரிட்டன் மீது போர் தொடுத்தார். தவிர, அப்போது தான் பிரான்ஸை கைப்பற்றியிருந்ததால், ஹிட்லர் தனது ஆற்றலின் மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். பிரான்ஸை வீழ்த்த, ஹிட்லருக்கு வெறும் ஆறு வாரங்களே தேவைப்பட்டது. ஜெர்மனிக்கு எதிரான சண்டையில், பிரிட்டன் பிரான்ஸுடன் கைகோர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிரிட்டனை முழுமையாக அழிக்கவும் அவருக்கு மனமில்லை. பிரிட்டனின் வலுவான கடற்படையைக் கைப்பற்றி, அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. தனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரிட்டனுக்கு அவ்வப்போது “அமைதித் தூது” விடுத்ததற்கான காரணமும் அதுதான்.
அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்த அமைதித் தூதுகளை முற்றிலும் நிராகரித்தார். பிரிட்டனின் மூத்த அரசியல்வாதிகளும், இராணுவ அதிகாரிகளும் ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருந்தாலும், ஹிட்லரின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதில் சர்ச்சில் மிக உறுதியாக இருந்தார். 1940ம் ஆண்டு ஜூலை வாக்கில், ஹிட்லரின் நாஜி படை, பிரிட்டனின் மீதான தாக்குதலைத் தொடங்கியது. உள்நாட்டு அரசியல் சூழல், ஹிட்லரின் தாக்குதல் என்ற பல அழுத்தங்கள் இருந்தபோதிலும், சர்ச்சில் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு, அமெரிக்காவுடன் பிரிட்டன் கொண்டிருந்த லெண்ட்-லீஸ் (lend lease) ஒப்பந்தமும் ஏதுவாய் இருந்தது. இந்த ஒப்பந்தம், அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள், உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் பிரிட்டனுக்கு கிடைக்க வழி செய்தது. ஜெர்மனியைப் போன்ற ஒரு அசுர சக்தியை எதிர்ப்பது, அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் உதவியில்லாமல் சாத்தியமில்லை.
அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து கிடைத்த உதவிகள், பிரிட்டனுக்கு வலுவாக சண்டை செய்ய உதவின. இதனால், பிரான்சுடனான போரைப் போல் அல்லாமல், இது நீண்டு கொண்டே சென்றது. அமெரிக்காவின் உதவிகள் பிரிட்டனைச் சென்றடையாமல் தடுக்க, ஹிட்லர் தனது நீர்மூழ்கிக் கப்பல்களை (U-Boats) அட்லாண்டிக் கடலில் இறக்கினார். ஓநாய்கள் திட்டமிட்டு குழுவாக இணைந்து வேட்டையாடுவதைப் போல, இக்கப்பல்கள் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு பொருட்கள் ஏற்றி வந்த கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்தன. அன்றைய விமானங்கள் அட்லாண்டிக் கடலின் நீளத்திற்கு பறக்க முடியாததால், வான்வழிப் பாதுகாப்பு (air cover) இல்லாமல், அமெரிக்கக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு போதுமான அளவிற்குக் கடற்பரப்பும், நிறைய வாய்ப்புகளும் இருந்தன. பிரிட்டனுக்கு, ஜெர்மனியின் நேரடித் தாக்குதலை விட, இந்த U-boatகள் ஏற்படுத்திய பொருட்சேதமும், உளவியல் ரீதியான பாதிப்பும் மிக அதிகம். “The only thing that ever really frightened me during the war was the U-boat peril” என்று சர்ச்சில் குறிப்பிடுமளவிற்கு இவைகளின் தாக்கம் இருந்தது. டாம் ஹேங்க்ஸ் நடித்த “Greyhound” என்ற திரைப்படம் இந்தத் தாக்குதல் குறித்து அத்தனை நுண்ணிய விவரங்களுடன் பேசியிருக்கும் அற்புதமான ஒரு கலைப்படைப்பு.
ஒரு புறம் U-boatகளின் மூலம் பிரிட்டனை வலுவிழக்க வைத்தாலும், என்றேனும் ரஷ்யா பிரிட்டனுக்கு ஆதரவாகக் களமிறங்கி விடுமோ என்கிற யோசனை ஹிட்லருக்கு இருந்தது. ஆனால், ரஷ்யாவைக் கண்டு ஹிட்லர் ஒரு காலத்திலும் பயந்ததில்லை. சொல்லப் போனால், ரஷ்யாவை “a colossus with a feet of clay” என்று ஹிட்லர் விவரித்ததாகச் சொல்வார்கள். களிமண்ணால் ஆன கால்களைக் கொண்ட ஒரு மாபெரும் உருவம் என்று பொருள். வலுவான அடித்தளம் இல்லாமல் கட்டமைக்கப்பட்ட தேசம் என்பது தான் ரஷ்யா குறித்த ஹிட்லரின் மதிப்பீடு. போதாக்குறைக்கு பின்லாந்துடனான போரில் ரஷ்யா அத்தனை வலுவாகச் செயல்படவில்லை. இருந்தாலும், ஒரு வேளை ரஷ்யா பிரிட்டனுடன் சேர்ந்து கொண்டால், ஜெர்மனி இருமுனைத் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அப்படி ஒரு சூழல் உருவாவதை ஹிட்லர் விரும்பவில்லை. அதனாலேயே, பெர்லினின் ரைக் சான்சலரியில் (Reich Chancellery) நடந்த கூட்டத்தில், ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுக்க முடிவு செய்கிறார் ஹிட்லர். தவிர, ரஷ்யாவை வீழ்த்தி விட்டால், பிரிட்டன் அத்தனை தூரத்தில் இருக்கும் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். அது பிரிட்டன் படைகளுக்கு மன ரீதியாக ஒரு பின்னடவைத் தரும் என்று நம்பினார்.
உளவியல் ரீதியாக ஒரு கூற்று உண்டு. “எந்த ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்று நாம் சில முடிவுகளை எடுக்கிறோமோ, சில நேரங்களில் அந்த முடிவுகளே, அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடும்” என்பார்கள். ஹிட்லர் விஷயத்தில் நடந்தது அதுதான். ஜெர்மன் படைகள் ரஷ்யாவைத் தாக்கவும், ரஷ்யா பிரிட்டனுடன் இணைந்து கொண்டது. ஹிட்லர் எடுத்த முடிவு, கம்யூனிசத்தை வெறுத்த சர்ச்சிலையும், கம்யூனிசத் தலைவரான ஸ்டாலினையும் நண்பர்களாக்கியது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் பிரிட்டனும், ரஷ்யாவும் கைகோர்க்க, ஹிட்லரின் நாஜி படைகள் மீதான இருமுனைத் தாக்குதல் தொடங்கியது. கிழக்கே ரஷ்யாவுடனான சண்டைக்காக, ஜெர்மனி நிறைய வீரர்களையும் தளவாடங்களையும் மேற்கே இருந்து இடம் மாற்ற நேர்ந்தது. அது பிரிட்டனுக்கு எதிரான ஜெர்மன் படைகளை வலுவிழக்கச் செய்தது. மேலும் அமெரிக்காவில் இருந்து வந்த உதவிகள், பிரிட்டனுக்குச் சாதகமாக இருந்தன.
ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்க வேண்டும் என்று எடுத்த முடிவு எத்தனை தவறானதோ, அதை விடத் தவறானது அவர் அந்தத் தாக்குதலை செய்ய வேண்டும் என்று நினைத்த நேரம். ரஷ்யாவின் பெரும் நிலப்பரப்பையும், கடுங்குளிரையும் ஜெர்மானியர்கள் குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், நெப்போலியன் ரஷ்யாவை வீழ்த்த நினைத்த போது செய்த அதே தவறு. அப்போது பிரெஞ்சுப் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்த நேரத்தில், ரஷ்யப் படைகள் தங்கள் வயல்களையும், நகரங்களையும் தாங்களே தீக்கிரையாக்கி விட்டு, பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தனர். மேற்கே பால்டிக் கடலில் இருந்து கிழக்கே பேரிங் கடல் வரைக்கும் பரந்து விரிந்திருந்த, நிலப்பரப்பு ரஷ்யர்களுக்குப் பெரும் பலமாக இருந்தது. இதனோடு கடுங்குளிர் காலமும் சேர்ந்து கொள்ள, ரஷ்யாவின் நிலமே பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான ஆயுதமாக மாறி, நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இதே தான் ஹிட்லருக்கும் நேர்ந்தது. வெகு வேகமாக முன்னேறிச் சென்றாலும், 1941-ன் இறுதியில் ரஷ்யாவின் குளிர்காலம் தொடங்கிய போது, ஜெர்மனியப் படைகள் நிலைகுலைந்திருந்தன. பிரிட்டனை வீழ்த்த நினைத்து ரஷ்யா மீது கைவைத்தது, ஹிட்லரை இருமுனைப் போரில் தள்ளி, அவரது பேரழிவிற்கு வழிவகுத்தது.
தனது கொள்கைகள் மற்றும் வலிமை அளித்த மாயத்தோற்றம் ஹிட்லரை அழித்தது. நேர்மாறாக, தனது கொள்கைகள் மற்றும் வலிமை மீது சர்ச்சில் கொண்டிருந்த பெரும் நம்பிக்கை, பிரிட்டனைக் காப்பாற்றியது. போர் நேரத்தில் ஹிட்லரை விட வலிமை குறைந்தவராக இருந்தாலும், பாசிசத்துக்கு எதிரான தனது கொள்கைப் பிடிப்பினாலும், எத்தனை தடைகள் தோல்விகள் வந்தாலும் மீண்டெழும் திறன் இருந்ததாலும், சர்ச்சில் இன்றளவும் கதாநாயகனாகக் கொண்டாடப்படுகிறார். எத்தனை வலிமை படைத்தவராய் இருந்திருந்தாலும் இன்று ஹிட்லர் மனிதனாகக் கூட மதிக்கப்படுவதில்லை. வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்- எத்தனை வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும் எதேச்சதிகாரமோ, பாசிசமோ ஒருபோதும் நிலைத்திருக்கப் போவதில்லை. அடக்குமுறைகள் ஆயிரம் இருந்தாலும், சனநாயகமும் சமத்துவமுமே மீண்டெழுந்து வென்று நிலைக்கும். சிலப்பதிகாரத்தில் சொன்னதைப் போல,
“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”.
பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இருக்கும் புகைப்படம், சர்ச்சில் கனடா சென்றிருந்த போது, கர்ஷ் எனும் புகைப்படக் கலைஞர் எடுத்தது. சர்ச்சிலின் சுருட்டில் இருந்து வந்த புகை, படத்தினை பாதிக்கும் என்பதால், கர்ஷ் சுருட்டினைக் கீழே போடுமாறு கேட்க, சர்ச்சில் அதை மறுக்கிறார். விறுவிறுவென்று அருகே சென்ற கர்ஷ், சர்ச்சிலிடம் இருந்து சுருட்டினைப் பறிக்கவும், சர்ச்சில் கோபத்தில் முறைக்க, கர்ஷ் அதனை படம்பிடித்து விட்டார். தொடர்ந்து “You can even make a roaring lion stand still to be photographed” என்று சர்ச்சில் கர்ஷிடம் சொன்னதால், இந்தப் புகைப்படத்துக்கு , “The Roaring Lion” என்று பெயர்.
“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”.
சம காலத்திய அரசியலில் கண்கூடாக காணும் பாடம். திரைப்படம் வழியே வரலாறு, அதன் வழியே அரசியல்.. அருமை👌👌
வரலாற்றை மறந்த எந்தவொரு சமூகமும் நிர்ணமூலமாகும். தொடர்ந்து நினைவு படுத்திக்கொண்டே இருப்போம்.. 👏👏👏
LikeLiked by 1 person