சிறை

Spoiler Alert. “சிறை” படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். படம் பார்த்துவிட்டு வந்து படித்துக் கொள்ளுங்கள்.

சிறை படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். விவரிக்க முடியாத உணர்வுகளால் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. மனதை சற்று லேசாக்கிக் கொள்ளவே இதை எழுதுகிறேன். தமிழ் சினிமா பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு முத்தினைத் தேடி எடுக்கும். “சிறை” அப்படி ஒரு முத்து.

உண்மைச் சம்பவங்களில் இருந்து நேரடியாகவோ, அதனைத் தழுவியோ வரும் படைப்புகள் மிகுந்த தாக்கத்துடன் இருப்பதற்குக் காரணங்கள் இரண்டு உண்டு. ஒன்று அறம், மற்றொன்று நோக்கம். Intent and ethics matter the most, always. இப்படிப்பட்ட படைப்புகளை அறம் என்னும் அடித்தளத்தின் மேல் தான் கட்டி எழுப்ப முடியும். அப்படி கட்டி எழுப்பப்பட்ட படைப்பினை தாங்கி நிற்கும் தூண் – படைப்பாளியின் நோக்கம். “சிறை”, அறமும் நல்நோக்கமும் மட்டுமே நிறைந்த ஒரு படைப்பு.

படம் தொடங்கி முதல் நிமிடத்திற்குள்ளாகவே தியேட்டரை அமைதியாக்கி விட்டார் சுரேஷ் ராஜகுமாரி. Art is the purest form of human expression. கலை மட்டுமே மனித உணர்ச்சிகளின் தூய்மையான வடிவம் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த கலையானது சுரேஷ் ராஜகுமாரிக்கு அப்படி கை கூடி வந்திருக்கிறது. இது போன்ற craft தெரிந்தவர்களால், கலையை வாளாய்ச் சுழற்ற முடியும். அந்தச் சுழற்சியால் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர முடியும். சமூக மாற்றங்கள் நடக்கிறதோ இல்லையோ, தனிமனித சிந்தனை மாற்றங்களை நிச்சயமாக உருவாக்க முடியும். கற்பிதங்களை அசைத்துப் பார்க்க முடியும், ஏன் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து நொறுக்கவும் முடியும். அது தானே கலையின் நோக்கமும், ஒரு கலைஞனின் வேலையும் கூட.

“சிறை” யின் அனைத்துக் கதாப்பாத்திரங்களும் உண்மைக்கு வெகு நெருக்கமாக, நம்மில் ஒரு பரிணாமத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தது அத்தனை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயக்குநர் தமிழின் எழுத்து அத்தனை கச்சிதம். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அடிப்படைத் தகுதிகள் கூர்ந்த அவதானிப்பும், பரிவும் என்று நம்புகிறேன். இவை இரண்டும் இயக்குநர் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. இல்லாவிட்டால் “டாணாக்காரன்”, “சிறை” போன்ற படைப்புகள் சாத்தியமில்லை. அவர் போலீஸ் வேலையில் இருந்த போது அவதானித்த நிகழ்வுகளை, அத்தனை பரிவுடன் கதைகளாக, கதாப்பாத்திரங்களாக வார்த்து எடுக்கிறார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மேடேறுவதற்காக, ஒரு சாமானியனாக நமக்கு இருக்கும் அறிவையோ, செல்வாக்கையோ பயன்படுத்துதல் அத்தனை நிறைவைத் தரும். படிப்பதும், உலக அனுபவங்களைப் பெறுவதும் அதற்கன்றி வேறெதற்கு ? பரிவில்லாத அதிகாரம், சர்வாதிகாரத்தில் தான் சென்று முடியும். அறமும் பரிவும் மட்டுமே மனித நாகரீகத்தின் அடிப்படைக் கூறுகள் என்பது இது போன்ற படைப்புகளால் மீண்டும் மீண்டும் ஆழமாக நிறுவப்படுகிறது.

பெரும் வெற்றிக்கும், படு தோல்விக்கும் ஒரு நூலளவு மட்டுமே வித்தியாசம். கிளைமாக்ஸ் காட்சியில் செண்டர் மீடியனின் மேல், அரை இஞ்ச்சில் தொக்கி நிற்கும் அந்த பஸ் டயர் கலையரசியை மட்டும் காப்பாற்றவில்லை என்பதை தியேட்டரில் எழுந்த பெருமூச்சு சொல்லியது. ப்ரீ க்ளைமேக்சில் “சார்ர்ர்ர்” என்று அப்துல் ரவுப், கதிரவனைப் பார்த்து அலறி அழுவது நீண்ட நாட்களுக்கு என் நினைவில் இருக்கும். ஒரு நல்ல படைப்பில், நடிகர்கள் மறைந்து கதாப்பாத்திரங்கள் நிற்க வேண்டும்.முக்கிய கதாப்பாத்திரங்கள் தொடங்கி, துணை நடிகர்கள் தேர்வு வரையில் அத்தனை நேர்த்தி. விக்ரம் பிரபு தெரியவே இல்லை, கதிரவன் தான் தெரிந்தார்.

கதை சொல்வதில், “Chekhov’s Gun” என்று ஒரு உத்தி உண்டு. ரஷ்ய நாடகாசிரியர் ஆண்டன் செகாவ் சொன்னது. ஒரு காட்சியில் ஒரு துப்பாக்கியை காண்பித்து விட்டால், அதற்கடுத்து வரும் ஏதோ ஒரு காட்சியில், அந்தத் துப்பாக்கி சுடப்பட வேண்டும். அது பார்வையாளர்களுக்கு ஒரு திருப்தியைத் தரும். அப்படி இல்லையென்றால் அந்தத் துப்பாக்கியை காண்பிப்பதில் எந்த பயனும் இல்லை. இதில் துப்பாக்கி என்பது ஒரு குறியீடு தான். ஒரு கதாப்பாத்திரத்தின் பழக்கமோ, செயலோ Chekhov’s Gun ஆக இருக்கக் கூடும். சட்டென நினைவுக்கு வருவது, நாடோடிகள் படத்தில் விஜய் வசந்த் காலை ஆட்டிக் கொண்டே இருப்பது. கடைசியில் அவர் காலை இழக்க வேண்டிய சூழல் வரும் போது, அந்த முதல் காட்சிக்கான தேவை நிறைவேறுகிறது. சில நேரங்களில் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் கூட Chekhov’s Gun ஆக பயன்படுத்துவார்கள். இந்தப் படத்திலும் அது போன்ற Chekhov’s Gun உண்டு. படம் பார்த்தவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள்.

பிண்ணனி இசைக்காகவும், குழுவினர் அசாத்திய உழைப்பிற்காகவும் கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய திரைப்படம். இப்படி ஒரு படைப்பை உருவாக்கியதற்கு 7screenstudio-வுக்கு வாழ்த்துகள்.

Phenomenal writing, wonderful casting, beautiful performances, fierce background score and excellent execution. Take a bow Director Tamil & Director SureshRajakumari . Love you both. அன்பும் முத்தங்களும் ❤️

Leave a comment