அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் ஆட்டோ ஒன் வேயில் பாய்ந்து வந்து, மூன்று சக்கரங்களும் அந்தக் கிடங்கில் இறங்காமல் லாவகமாக இடது புறம் ஒடித்து , OMR சாலையில் நுழைந்து அநாயசமாக சீறிச் சென்றார். சட்டென்று அடித்த பிரேக்கில் எனக்குத் தான் வயிற்றில் இருந்து ஒரு உருண்டை வாய் வரை வந்தது. உருண்டையோடு ஒரு கெட்ட வார்த்தையும் வர, இரண்டையும் முழுங்கிக் கொண்டேன். பின்னால் இருந்து வந்த இன்னோரு ஷேர் ஆட்டோக்காரர், கண்ணாடியைத் தட்டி,
“இப்டித்தான் சடன் பிரேக் போடுவியா…இடிச்சா என்னாகும் தெரியுமா”, என்றார்.
“சடனா போடுறதுக்குத் தான பிரேக் வச்சிருக்காங்க. பிரேக் அடிக்கிறதுக்கு முன்னாடி, உங்களுக்கு லெட்டர் போட்டுட்டா அடிக்க முடியும்” என்றதற்கு மையமாக பார்த்துவிட்டு மனதுக்குள் நாலு நல்ல வார்த்தை சொல்லிவிட்டுச் சென்றார். சரியான பதிலடி கொடுத்து விட்ட திருப்தியோடு நகர்ந்தேன். கிடங்கைத் தாண்டியவுடன், லாஸ்ட் வேர்ல்டு திரைப்படத்தில் தாவி வரும் வித விதமான டைனோசர்கள் போல, ரைட் அண்டு ராயலாக ஒன் வேயில் சீறிப் பாயந்து வந்த டூ-வீலர்களை சமயோசிதமாக கையாண்டு, தப்பித்து ஆசுவாசப்படும் போதுதான் ரோட்டிற்கு இடப்புறம் இருந்த சிறிய சந்தின் முனையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஃப்ளெக்ஸைப் பார்த்தேன்.

இருபதாம் ஆண்டு நினைவு அஞ்சலி என்று அச்சடிக்கப்பட்ட அந்த எட்டுக்குப் பத்து ஃப்ளெக்ஸில் அடர்ந்த தாடி மீசையோடு சிரித்துக் கொண்டிருந்தார், ஆர்.சிவாஜி. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஓரிரு முறை இவரை இதே இடத்தில் ஃபிளக்ஸில் பார்த்திருக்கிறேன். அரசியலிலோ, பொது வாழ்விலோ இருந்தவராகத் தெரியவில்லை. மறைந்த ஒருவரை, இருபது வருடங்களாக அவரது குடும்பத்தினர் நினைவில் வைத்திருக்கலாம்தான். ஆனால், தொடர்ந்து பல வருடங்களாக நினைவில் வைத்து ஃபிளெக்ஸ் அடித்து தெரு முனையில் வைப்பது சற்று வித்தியாசமாகப் பட்டது. அன்போ நன்றியோ இவ்விரண்டில் ஒன்று மிகுந்திருக்காமல் ஒருவரை சுற்றத்தாரும் உறவும் இத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்து அங்கீகரிப்பது சாத்தியமில்லை. எப்போதும் தன்னை மையப்படுத்தியே சிந்திக்கும் மனம், என் காலம் முடிந்த பின்னர், என்னை யார் நினைவில் வைத்திருப்பார்கள், எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று யோசித்தது. சட்டென்று, நான் யாரை நினைவில் வைத்திருக்கிறேன் என்ற கேள்வி எழ, மனம் வெள்ளைப்பாட்டியை கண் முன் நிறுத்தியது. அடுத்த நொடி – அரைடவுசர், பனியன் அணிந்து எட்டு வயது சிறுவனாக, அந்த சிற்றூரின் அரசுப் தொடக்கப்பள்ளிக்கு எதிரே இருந்த வெள்ளைப்பாட்டியின் வீட்டு வாசலில் நின்றிருந்தேன்.
அந்த வீட்டின் ஓட்டுச்சாப்பை தாங்கி நின்ற குத்துக்கற்களில், வாசலுக்கு நேராக இருந்த குத்துக்கல் ஒன்றில் ஒற்றைக்காலில் சாய்ந்து நின்று, எதிரேயிருந்த காலியிடத்தில் கட்டிக் கிடந்த எருமை மாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருந்தேன். குறிப்பாக, அதில் இருந்த ஒரு பெரிய எருமை மாட்டின் மீது தான் எனது கவனம் இருந்தது. மற்ற மாடுகளாவது அவ்வப்போது வெளியே சென்று வருவதைப் பார்த்திருக்கிறேன். இது காலையில் இருந்து தின்பதை மட்டுமே சோலியாக வைத்திருந்தது. மற்ற மாடுகளை விட இது மட்டும் எப்போதும் கோபமாக இருப்பதாகத் தோன்றும். சராசரிக்கும் சற்றே பெரிய அளவிலான கொம்புகள் இருந்தது காரணமாக இருக்கலாம். வெறுமனே சாய்ந்து அமர்ந்து எதையாவது மென்று கொண்டே இருக்கும். சகதியும் சாணியும் உடம்பில் சேர்ந்து காய்ந்து ஒட்டி, கற்கள் பதித்து போல இருக்கும் அதனருகில் வேற்றாள் யாரும் சென்று நான் பார்த்ததில்லை. பள்ளி நாட்களில், தெருவோரத்தில் பிரைஸ் அட்டையும், ஜவ்வு மிட்டாயும் விற்கும் பாட்டி, அதனருகே ஒரு இரண்டி தள்ளி ஜவ்வு மிட்டாய் ஒட்டிய பலகையை வைத்திருப்பாள். பள்ளிக்கு எதிரே இருந்ததால், இடைவேளையின் போது, அந்த பாட்டியிடம் ஐந்து பைசா, பத்து பைசா கொடுத்து பிரைஸ் அட்டை கிழிக்க சிறுவர்கள் கூட்டமாக வருவார்கள். அப்போது மட்டும் பெருமூச்சு விட்டு, எழுவதைப் போல ஆக்சனைப் போட்டு பயமுறுத்தும். மற்றபடி அதனிடம் பெரிதாக எந்த அசைவும் இருந்ததில்லை.
எனக்கொரு ஆசை இருந்தது. எப்போதும் உட்கார்ந்தே இருக்கும் இந்த எருமை மாட்டினை ஓடிச் சென்று தாண்டிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. அதற்குத் தடையாய் இருந்தது ஒன்றே ஒன்று தான் – மாட்டிற்கு அந்தப் பக்கம் எருமைக் கன்றுகள் கட்டிப் போடுவதற்காக இருந்த ஒரு சிறிய கூரைச்சாப்பு. அதனுள் நான்கைந்து கன்றுகள் கட்டிக்கிடக்கும். மாட்டைத் தாண்டினால், அந்த நான்கு கன்றுகளுக்கு ஊடே தான் குதித்தாக வேண்டும். கன்றுகள் மிரண்டு விட்டால் சிக்கல். என்றைக்காவது கன்றுகள் இல்லாத போதுதான் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அந்த நாள் அன்று வாய்த்திருந்தது.
கூரைச்சாப்பினுள் கன்றுகள் இல்லை. கண்கள் சொருக, தன் கோணலான வாயில் மாடு எதையோ மென்று கொண்டிருந்தது. தெருவிலும் ஆள் நடமாட்டம் இல்லை. மாடு தன் கண்களை முழுதாக மூடிவிட்டால், ஓடிச் சென்று தாண்டிவிடலாம் என்று யோசித்தவாறுதான் தூணில் சாய்ந்து ஒற்றைக்காலில் நின்றிருந்தேன். மாடு கண்களை மூடியது. இன்னும் இரண்டொரு நிமிடங்கள் பொறுத்து ஓடத் தொடங்கலாம் என்று எண்ணி தூணில் இருந்து விலக எத்தனிக்கும் போது,
“விடியமின்ன எந்திச்சு ராமாயி வீட்டு எருமைய வேடிக்கை பாத்துட்டு இருந்தா வெளங்கவா ?. இதுல ஒத்தக்காலு வேற. ஒத்தக்கால்ல நிக்காத, வீட்டுக்கு ஆகாதுன்னு எத்தனை தடவை சொல்றது” என்று கீழவீட்டில் இருந்து ஞானம்பாட்டி கத்தியதில் மாடு விழித்துக் கொண்டது.
“வடை வாங்கிட்டு வந்திருக்கு. போயி ரெண்டத் தின்னுட்டு குளிக்கிற வழியைப் பாரு”, என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். மாடு திரும்பி என்னைப் பார்த்தது. பின்னர் வழக்கம் போல மெல்லத் தொடங்கிவிட்டது. நல்ல வாய்ப்பைக் கெடுத்ததற்காக ஞானம்பாட்டியின் மேல் கோபம் வந்தது. சத்தம் கேட்டு வெள்ளைப்பாட்டி வீட்டினுள் இருந்து வெளியே வந்து, முந்தியில் கைகளை துடைத்துக் கொண்டே
“என்ன காலையிலயே கத்துறா” என்றார்.
“ஒத்தக் கால்ல நிக்கக் கூடாதாம்.வடையத் தின்னுட்டு குளிக்கணுமாம்.” என்று நகர்ந்தேன்.
“நீச்சத்தண்ணி உப்பு போட்டு தரவா, புடிக்கும்ல, கொண்டு வரட்டா” என்று கேட்கவும் எச்சில் ஊறியது. மனதே இல்லாமல்,
“வேணாம்…ஞானம் பாட்டி திட்டுவாங்க” என்றேன்.
“அவ கெடக்கா…நான் சொல்லிக்கிருதேன்..வா” என்று வெள்ளைப் பாட்டி சொல்லவும், நடுவீட்டைக் கடந்து வெள்ளைப்பாட்டியோடு அடுப்பறைக்குச் சென்றேன். அடுப்பறைக்குள் நுழைந்ததும், அடுப்பில் கனன்று கொண்டிருந்த கங்கின் நெடி அடி நெஞ்சு வரை சென்று சுருக்கென்று குத்தியது. இதோ, இதை எழுதும் போது கூட, அந்த வாசனை துளி கூட மாற்றமின்றி அப்டியே நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் அந்த நெடி வாசனையாக மாறியது தான் ஆச்சரியம்.
“செத்த உக்காரு….உலைய வச்சிட்டு வந்துர்றேன். அந்தாளு பசிக்குதுன்னு வந்துருவாப்ல” என்று எனக்கு சிறிய மரப்பலகையை எடுத்துப் போட்டுவிட்டு,ஊதுகுழலை எடுத்து அடுப்பினருகே சென்று குத்த வைத்து அடுப்பில் கிடந்த கங்கினை ஊதத் தொடங்கினார். பாட்டியிடம் நான்கைந்து இருமல்களை வாங்கிக் கொண்டு அடுப்பு எரியத் தொடங்கியது. உலையை வைத்து விட்டு, நீச்சத் தண்ணி இருந்த சட்டியில் சிறிது கல்லுப்பை அள்ளிப்போட்டு, என்னிடம் நகர்த்தினார்.
“இத்தினி ஊறுகா தரவா” என்றார். உப்புக் கரித்த நீச்சத்தண்ணியை விழுங்கிக் கொண்டே,
“ம்ஹீம்” என்று வேகமாகத் தலையாட்டினேன்.
பாதித் தண்ணியை குடித்து முடித்து ஏப்பம் விட்டவுடன் திரும்ப எருமை ஞாபகத்துக்கு வந்தது. உட்கார்ந்திருந்த பலகையில் இருந்து லேசாக நகர்ந்து எட்டி தெருவைப் பார்த்தேன். எருமை மாட்டின் உடம்பு மட்டும் தெரிந்தது. எப்போதும் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் அதன் வாலில் அசைவில்லை. பாத்திரத்தை கீழே வைத்து விட்டு,
“ஒரு நிமிசம் பாட்டி..இந்தா வந்துர்றேன்” என்று எழுந்து மெதுவாக வாசலை நோக்கி நடந்தேன்.
“யேய்..சாப்டும் போதும் ஊடால எந்திச்சு போகாதய்யா” என்று அவர் சொல்லி முடிக்கும் போது வாசல் நிலைக்கு அருகே நின்றிருந்தேன்.
மாட்டின் கண்கள் மூடியிருந்தது. அதன் பெரிய வயிறு சீராக ஊதவும், சுருங்கவுமாக இருந்தது. கூரைச் சாப்பினுள் கன்றுகள் இன்னும் வந்திருக்கவில்லை. குத்த வைத்து அமர்ந்திருந்த வெள்ளைப் பாட்டி, கைகளை ஊன்றி, அலமாரியில் கைவைத்து எழுந்து, நடுவீட்டின் வாசல் வரை வர, சில நிமிடங்கள் ஆகும். சட்டென்று வேகமெடுத்து ஓடத் தொடங்கினேன். இரண்டு தாவல்களில், ஓட்டுச் சாப்பைக் கடந்திருந்தேன். பலமுறை ஓடித் திரிந்த வீடும் தெருவும், காலுக்குப் பழகியிருந்ததால், வாசலில் கிடந்த கல்லையும் தெருவுக்கு அந்தப் பக்கம் ஓடிய சிறிய சாக்கடைக்கும் ஊடே எத்தனை அடி வைக்க வேண்டும் என்று துல்லியமாக கணிக்க முடிந்தது. மாட்டினுடைய முதுகின் நடுப்பகுதியைத் தான் குறிவைத்து ஓடிக் கொண்டிருந்தேன். சாக்கடையைத் தாண்டி மாட்டை அடைய ஒரு நான்கைந்து அடிகள் இருக்கும் போதுதான், நான் செய்த தவறு புரிந்தது. என்னுடைய அனாலிசிஸில், மாட்டைச் சுற்றி சொத சொதவென்று கிடந்த சாணியையும், சேறையும் கணக்கில் கொள்ள மறந்து விட்டேன். சட்டென கால் வழுக்க நிலை குலைந்தேன். அரவத்தில் மாடு கண் விழித்தது. நான் அதன் கண்ணைப் பார்த்ததை, அதுவும் பார்த்து விட்டது. ஓடி வந்த வேகத்தில் நிற்க முடியாமல் நான் தாவவும், மாடு பெருமூச்சோடு எழவும் சரியாக இருந்தது. மாட்டைத் தாண்ட வேண்டியவன், மாட்டின் மேலே கோணல் மாணலாக மோதி, சைடு வாக்கில், சகதிக்குள் விழுந்தேன். தட்டித் தடுமாறி நான் எழவும், வெள்ளைப்பாட்டி வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது. கீழே விழுந்த அதிர்ச்சி, முழங்கையில் இருந்த வலி, உடம்பு முழுக்க இருந்த சாணி வாடை என்று அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினேன்.
“மாடு அத்துக்கிச்சா, முட்டிருச்சாக்கும்” என்று கத்தியவாறு வெள்ளைப்பாட்டி வந்தார். இடது கையைப் பிடித்துக் கொண்டு, என் கன்னத்தில் அப்பியிருந்து சாணியை வழித்துப் போட்டார். அழுகையை அடக்கியதில் தொண்டை வலித்தது. மாட்டைத் திரும்பிப் பார்த்தேன். நின்றவாறு எதையோ மென்றுகொண்டே என்னை சலனமில்லாமல் பார்த்தது.
“கழுவணும் பாட்டி, ஒரு மாதிரி இருக்கு” என்றவனை வீட்டினுள் அழைத்துச் சென்றார். அடுப்பறைக்குப் பின்னால், ஈயப்பாத்திரத்தில் முந்தைய நாள் பிடித்த தண்ணீர் இருந்தது. அதை எடுத்து அள்ளி இரைத்து கழுவி விட்டார்.
“உங்க கையி சொரசொரன்னு இருக்கு பாட்டி” என்று எரிச்சல் பட்டேன். வெள்ளைப்பாட்டியின் கைகள் சொரசொரவென்று இருப்பது எனக்குப் பிடித்திருந்தில்லை.
“ரத்தம் வருதான்னு பாரு…சாப்டும் போது எவனாது இப்டி ஊடால எந்திச்சுப் போயி சாணியில விழுந்துட்டு வருவானா. கொடுமய எங்க போயிச் சொல்ல” என்று எத்துப்பல் தெரிய லேசாகச் சிரித்தார்.
“அந்தத் தொட்டில கொஞ்சம் தண்ணி கெடக்கு. இங்கயே குளிச்சிரு. நான் கீழ வீட்டுல போயி துணிய எடுத்துட்டு வாரேன். அவளுக்குத் தெரிஞ்சா வைய்யப் போறா” என்று ஞானம் பாட்டியின் வீட்டுக்கு கிளம்பினார்.
ஏன் இங்க வந்து குளிக்க மாட்டானா என்று ஞானம்பாட்டி திட்டும் வாய்ப்பு உண்டு. ஆனால் எருமைச்சாணிக்கு விழும் திட்டை விட, இதற்குக் கம்மியாகத்தான் விழும் என்பதால், இரண்டு ஆப்சன்களில் இதை டிக் செய்தேன். உண்மையில் நான் விழுந்ததை ஞானம்பாட்டி பார்த்திருந்தால், முதுகு பழுத்திருக்கும் வாய்ப்பு அதிகம் தான்.
வெள்ளைப்பாட்டியும் ஞானம்பாட்டியும் அக்காள் தங்கை. பள்ளிக்கூடத்துக்கு எதிரே இருந்த அந்தத் தெருவில், அடுத்தடுத்த வடக்குப் பார்த்த வீடுகளில் குடியிருந்தார்கள். கிழக்கே இருந்த வீட்டில் ஞானம்பாட்டியும், மேற்கே இருந்த வீட்டில் வெள்ளைப்பாட்டியும் வசித்தார்கள். ஞானம்பாட்டியிடம் எத்தனை அன்பு இருக்கிறதோ அத்தனை கண்டிப்பு இருக்கும். குடும்பம் எப்படியாவது மேடேற வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் வெள்ளைப்பாட்டி, யாரையும் எதற்காகவும் கடிந்து நான் பார்த்ததில்லை. ஒரே ஒரு முறை, மாட்டுக்கு வைத்திருந்த தவிட்டை எடுத்துத் தின்றதற்காக, அருள் மாமாவிடம் மாட்டி விட்டதைத் தவிர பெரும்பாலும் என்னை என் போக்கில் தான் விட்டிருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இன்றி, என்னை நான் என்பதற்காகவே வாரியணைத்துக் கொண்டிருக்கிறார். வெகு சமீபமாகத்தான், என்னை என் குறைகளோடு ஏற்றுக் கொள்கிறவர்கள் மீது, எனக்கு பற்றுதல் சற்று அதிகம் என்பதை உணர்ந்திருக்கிறேன். அவர்களைத் தவிர, யார் எனக்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எப்பாடு பட்டேனும் அதை மீறவே முயற்சித்திருக்கிறேன்.
தன் தங்கையின் மகள் வழிப் பேரனான என்னை, தன் பேரனாகவே தான் பாவித்தார் வெள்ளைப்பாட்டி. ஞானம்பாட்டிக்கு என் அம்மாவையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். என் அம்மாவோ, சித்தியோ, மாமாமாரோ வெள்ளைப்பாட்டியை பெரியம்மா என்றழைத்து நான் பார்த்ததே இல்லை. அம்மா என்றே அழைத்திருக்கிறார்கள். ஞானம்பாட்டிக்கும் வெள்ளைப்பாட்டிக்கும் வயது வித்தியாசம் சற்று அதிகம். அதனால், ஞானம்பாட்டியையும் கிட்டத்தட்ட அவர் தான் வளர்த்திருக்கிறார். என் பாட்டியை வளர்த்து, என் அம்மாவை வளர்த்து, பின்னர் என்னையும் அவரே தான் வளர்த்தார். எல்லாரையும் தன் பிள்ளையாகத்தான் நினைத்தார்.
எருமை மாடு எபிசோடில் வெள்ளைப்பாட்டி என்னை கடிந்து கொள்ளாதது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரது வீட்டில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். நீச்சத் தண்ணி, பழைய சோறு, மிதுக்கு வத்தல் நாவுக்கு பழகியது. ரோஸ் நிற பாக்கெட்டில் வரும் கோபால் பல்பொடி எனக்குப் பிடிக்கும் என்று தெரிந்து, அதை வாங்கி வைக்கத் தொடங்கினார். எனக்கு கோபால் பல்பொடியைக் கொடுத்துவிட்டு, அவர் மட்டும் சாம்பலில் பல் விளக்கிக் கொள்வார். கோபால் பல்பொடியின் ருசி பிடித்துப் போக, பல் விளக்கும் போதெல்லாம் அதை தின்னவும் தொடங்கினேன். ஒரு நாள் காலையில்,
“எவனாது இப்டி பல்பொடிய திம்பானா” என்று வாய்நிறைய சாம்பலோடு அவர் சிரித்தது, சித்திரமாக அப்டியே மனதில் பதிந்திருக்கிறது.
ஒருமுறை அவரது மடியில் நான் படுத்திருந்த போது, எனது கையை அவரது உள்ளங்கைக்குள் வைத்திருந்தார்.
“ஏன் பாட்டி உங்க கையி சொரசொரன்னு இருக்கு” என்றதற்கு,
“வேல செய்றம்ல, காச்சுப் போயிரும்ல” என்றபடி, சொரசொரப்பான கையினால் என கன்னத்தைத் தடவினார். சிறிது சிறிதாக அந்த உள்ளங்கை சொரசொரப்பு எனக்கு பிடித்துப் போனது. பள்ளி, கல்லூரி என்று வளரத் தொடங்கவும் ஊருக்குப் போவது குறையத் தொடங்கியது. எப்போது ஊருக்குப் போனாலும் என் கையில் பணம் திணிக்காமல் அவர் அனுப்பியதே இல்லை. அவருக்கு என்ன வருமானம் இருந்ததென்று எனக்குப் பணம் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஞானம் பாட்டி இறந்த போது கூட,
“அவ போயி சேர்ந்து, நான் இருக்கவா..இன்னும் எத்தன கொடுமைய நான் பாக்கணுமோ” என்று அரற்றிக் கொண்டிருந்தவர், நான் கிளம்பும் போது, ஒரு நூறு ரூபாய்த் தாளை என் கையில் திணித்தார்.
“எனக்கு எதுக்கு பாட்டி, நான் வேலைக்கு போறேன் இப்ப. நாந்தான் உங்களுக்குத் தரணும்” என்றதற்கு,
“எனக்கெதுக்குய்யா காசு, நீ எதாது புடிச்சத வாங்கிச் சாப்டு” என்று தன் சொரசொரப்பான கைகளால் என் கையைப் பிடித்துக் கொண்டார்.
வேலை, குடும்பப் பிரச்சனைகள் என்று ஊடே சில வருடங்கள் ஊருக்குச் செல்வது குறைந்து விட்டது. சில வருடங்கள் கழித்து, என் மகளுக்கு சற்றே விவரம் தெரிந்த பிற்பாடு வெள்ளைப் பாட்டியை பார்க்கச் சென்றேன். பள்ளிக்கூடத்துக்கு எதிரே எருமை மாடு கட்டிக் கிடந்த இடத்தில், புதிதாக ஒரு வீடு முளைத்திருந்தது.
“முன்னாடி இங்க எருமை கட்டிக் கெடக்கும் பாப்பா” என்று மகளிடம் சொல்லிக் கொண்டே வெள்ளைப்பாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தேன். ஒற்றைக்காலில் நான் சாய்ந்து நின்ற குத்துக்கல் இத்தனை சிறியதா என்று தோன்றியது. வலதுகையை ஓட்டுச்சாப்பின் மேல் வைத்து குனிந்து உள்ளே சென்றேன், தாவி ஒடித் திரிந்த வாசலையும் குனிந்து தான் கடக்க வேண்டியிருந்தது. அரவம் கேட்டவுடன், வலதுபுறம் இருந்த கட்டிலில் படுத்திருந்த வெள்ளைப்பாட்டி,
“யய்யா” என்று கூட்டிச் சேர்த்து எழுந்தார்.
“நல்லாருக்கீங்களா பாட்டி” என்று அருகே சென்று அமரவும், கையை பிடித்துக் கொண்டார். இம்முறை அவரது உள்ளங்கையை, எனது உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதே சொரசொரப்பு இருந்தது. நானும் மனைவியும் அவருக்கு இருபுறம் அமர்ந்திருக்க, வழக்கம் போல குசலம் விசாரிக்கத் தொடங்கினார். என் மகள் சன்னல் அருகே இருந்த மர பெஞ்ச்சில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அந்த மரபெஞ்ச்சில் அமர்ந்து சன்னல் வழியாகப் பார்த்தால் பள்ளிக்கூடம் தெரியும். மதிய நேரங்களில் அதே பெஞ்ச்சில் அமர்ந்துதான், பள்ளியில் சமைக்கும் சத்துணவின் வாசத்தை அடிவயிறு வரை இழுத்துக் கொண்டிருப்பேன்.
“ஒம் மகளா.. நல்ல நெறமா இருக்காய்யா. பாட்டிக்கிட்ட வா”, என்றார். என் மகள் சிரித்துக் கொண்டே கிட்டே செல்லவும், தன் கைகளால் அவளது முகத்தை அள்ளிக்கொண்டார். என் மகளும் அந்த உன்னதமான சொரசொரப்பை உணர்ந்திருப்பாள்.
“ஒங்கப்பன் பாசக்காரன். ஒரு தடவ..இந்த… செயவிலாஸ் பஸ் இருக்குல்ல, அதுல ஏத்தி விட்டுட்டு, எங்க பாட்டியை பத்திரமா எறக்கி விட்டுருங்கன்னு, கண்டக்டர்ட்டயும், டிரைவர்ட்டையும் அத்தனை தடவ சொல்லுதான். பஸ்ஸு கெளம்புற வரைக்கும் அத்தனை தடவை சொல்லுதானாக்கும்” என்று என் மகளிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து தெத்துப் பல் தெரிய சிரித்தார். பின்னர் என்னிடம் திரும்பி,
“நீச்சத்தண்ணி தரவா?” என்று கேட்டார்.
“வேண்டாம் பாட்டி..இருக்கட்டும் உக்காருங்க” என்று சொல்லவும், என் மகளிடம் திரும்பி,
“ஒரே அதத்தான் கேப்பானாக்கும். அவ வைஞ்சாலும் கேக்க மாட்டான்” என்று ஞானம்பாட்டியைச் சொன்னவர், சட்டென்று,
“எனக்கு மின்ன போயிச் சேர்ந்துட்டா. அவ போயி நான் இன்னும் கெடக்கேன்” என்றார்.
“மெட்ராஸுல தான வேலை பாக்க ? செல்லச்சாமிய பாத்தியா” என்று அவரது தம்பியை விசாரித்தார்.
“எங்க அண்ணாச்சி இருந்தா பாத்திருப்பாக, அவரும் இல்ல” என்று மறைந்த அவரது அண்ணனை நினைத்தவர், “இப்டி ஆளுக்கு ஒரு திக்கம் கெடக்கமே” என்று கண்கள் பனித்தார்.
“பிரச்சனையாக்கும் யா ? என்னத்துக்கு ஒங்கிட்ட பேச மாட்டிக்காய்ங்களாம்” என்று மாமாமாரை பேருக்குக் குறை சொன்னார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி. சரியாப் போயிரும்” என்றவுடன்,
“நீச்சத்தண்ணி தரவா” என்று மறுபடியும் கேட்டார். வேண்டாம் என்று மறுத்து விட்டு அடுப்பறை நோக்கி நடந்தேன். அதே கங்கின் நெடி அடி நெஞ்சில் சுருக்கென்றது. கோபால் பல்பொடி வைத்திருந்த அலமாரி, அதே இடத்தில் நூலாம்படையோடு அப்படியே இருந்தது.
“மீனா வெளிநாட்டுல இருக்காளாம்ல. வருசத்துக்கு ஒரு தரம் வருவாளா ?” என்று என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
வெள்ளைப்பாட்டிக்குப் பிறகு, இந்த வீட்டிற்கும் எனக்கும் தொடர்பு இருக்காது என்ற உண்மை உரைத்தது. அடுத்தத்த முறை பார்க்கச் செல்லும் போது, அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டேதான் இருந்தது. தொண்ணூறுகளில் வேறென்னெ எதிர்பார்க்க முடியும்.
கோவிட் காலகட்டத்தில் ஒரு நாள், சட்டென்று சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டவர், ஒரு வாரத்தில் போய்ச் சேர்ந்திருந்தார். ஊருக்குப் போனேன். வெள்ளைப்பாட்டியை நடுவீட்டில் மர நாற்காலியில் சாத்தி வைத்திருந்தார்கள். அவரது உள்ளங்கையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். உயிரற்ற அந்த உள்ளங்கையில் எப்போதும் இருக்கும் சொரசொரப்பு இருக்காதோ என்று தோன்றியது. அவர் உயிரோடிருந்த போது, அவரிடம் இருந்து கடைசியாக எனக்குக் கிடைத்த, அந்த உள்ளங்கை சொரசொரப்பை இழக்க மனமில்லாமல், அவரது முன்னங்கையில் “முத்துலட்சுமி” என்கிற தன் பெயரை பச்சை குத்தியிருந்ததை மட்டும் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியே வந்து விட்டேன்.
மனிதர்களை takers, matchers, givers என்று மூன்று வகைப்படுத்தலாம். Takers எப்போதும் அடுத்தவர்களிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருப்பவர்கள். Matchers, அடுத்தவருக்கு ஏதாவது செய்தால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்கிற கணக்கோடு செயல்படுபவர்கள். இவர்கள் பெரும்பான்மையினர். Givers வெகு அரிதானவர்கள். எப்போதும் தன்னைவிட அடுத்தவரை முன்னிறுத்துபவர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்மை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் தான் தசாப்தங்கள் தாண்டி சுற்றத்தாரின் நினைவில் நிற்பார்கள் – வெள்ளைப்பாட்டியைப் போல, ஆர்.சிவாஜியைப் போல.
பெருவாழ்வு வாழ்வதற்கு உலகம் முழுக்க பயணப்பட வேண்டும், பெருஞ்சொத்து, பேர், புகழ் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. நிறைந்த மனதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டால் போதும். எனக்குத் தெரிந்த வரையில் வெள்ளைப்பாட்டி அந்த சிற்றூரை விட்டு அதிகமாக வெளியேறியதில்லை. அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்க்கைப்பட்டு, அங்கேயே மறைந்தார். நாங்கள் விருதுநகர் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது, ஒரு வாரம் வந்து எங்களுடன் தங்கியிருந்தார். திரும்ப ஊருக்குச் செல்லும் போது, ஜெயவிலாஸ் பஸ்சில் ஏற்றிவிட்டது அப்போது நடந்தது தான். பிறந்த ஊரிலேயே வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தார். கிட்டத்தட்ட ஒரு மரத்தினைப் போல. மூன்று தலைமுறைகள் அப்பெருமரத்தின் நிழலில் வளர்ந்தன. எல்லா குடும்பங்களிலும் பிறர்க்காக வாழ்ந்த, வாழ்கின்ற இது போன்ற பெருமரங்கள் உண்டு. அம்மரங்கள் அன்றி நம்மைப் போன்றோர் பறவைகளாக முடியாது. பறவைகளான நமக்கு, அம்மரங்களைத் தொழுவதைத் தவிர வேறென்ன மீட்சி இருந்திவிடப் போகிறது ?
எருமை மாட்டைத் தாண்டி பார்த்து விட வேண்டும்
LikeLike
முழுவதுமாக முடிக்கவில்லை. எருமை மாட்டைத் தாண்டி பார்த்து விட வேண்டும் என்கிற என் சிறு வயது ஞாபகத்தை உன்னோடு நானும் பகிர்ந்து கொள்கின்றேன்.
உன் மென்மையான பக்கங்களை தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொண்டதில் உன்னையும் புரிந்து கொள்கின்றேன்.
“எனக்கு எதுக்கய்யா காசு? புடிச்சத வாங்கி சாப்பிடு” என்கிற இடத்தில் கண் கலங்கி விட்டேன்.
அருமை. நன்றி.
LikeLiked by 1 person