கெட்ட பய சார் !

விவரம் தெரிந்து தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் தளபதி. அப்பாவும் நானும் மட்டும் சென்று பார்த்த முதல் ரஜினி படமும் அதுதான். அதனால் தானோ என்னவோ இன்னமும் நினைவில் உள்ளது. கறாரான அப்பா. ஒரு முறை டாடி என்று அழைத்ததற்கு “என்னடா செல்லம் வேண்டிக் கெடக்கு ராஸ்கல்” என்று வெளுத்து விடும் அளவுக்கு ஸ்டிரிக்ட் ஆபிசர். படுக்கை விரிப்பை பிசிரில்லாமல் மடித்து வைப்பதில் தொடங்கி, புத்தகங்களை அளவு வாரியாக அடுக்கி வைப்பது வரையில் ஒரு இராணுவ ஒழுங்கை தினசரி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். அப்படி ஒரு அப்பா என்றாவது ஒரு நாள் அவராக படத்துக்கு அழைத்தால் அது ஜாக்பாட்.

பெரும்பாலும் அப்பாவுடன் பார்த்த படங்கள் அனைத்துமே மாலை 6.30 மணி காட்சிகள் தான். எங்கள் வீடு அப்போது விருதுநகர் கலெக்டரேட் அருகில் இருந்தது. அப்பா அலுவலகம் முடிந்து திரும்பியதும், “படத்துக்குப் போவமாடா” என்று கேட்டால் அன்றைக்கு ஜாலி தான். வீட்டில் இருந்து டிவிஎஸ் 50ல் கிளம்பினால், கால் மணி நேரத்தில் தியேட்டர். ஹவுசிங் போர்டு பஸ் ஸ்டாப் தாண்டி, நெடுஞ்சாலையில் ஏறிய உடன் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். போகும் வழியெல்லாம் தெரிந்த நபர்கள் வர, ஒரு சைஸாக கையை உயர்த்தி சல்யூட் வைத்துக் கொண்டே செல்வார். அப்படியான ஒரு ஜாக்பாட் மாலையில், அந்த டிவிஎஸ் 50 ரோட்டோரத்திலயே பயணித்து ரயில்வே கேட், கெளசிகா பாலம், கருமாதி மடம், தெப்பம்,  மாரியம்மன் கோயில் வழியாக, ராஜலட்சுமி தியேட்டரை சென்றடைந்தது.

கொட்டும் மழையில், தளபதி தினேஷின் பொடனிக்குப் பின்னால் இருந்து, கேமரா இடப்பக்கமும் வலப்பக்கமும் நகர்ந்து, ரஜினியின் கூர்மையான, கோபமான கண்களைக் காண்பிக்கும் பொழுது வாயைப் பிளந்தவன், மொட்டை போலீஸ் கிட்டியைப் பார்த்து “தொட்றா பார்க்கலாம்” என்று ரஜினி சேரை உதைத்துத் தள்ளிவிட்டு எழும் பொழுது முழு ரசிகனாக மாறியிருந்தேன். ஶ்ரீவித்யா ரஜினி இடையிலான உறவின்  தாக்கமோ, எதற்காக வில்லன்கள் எல்லாம் ஜிப்பா போட்டுக்கொண்டு திரிகிறார்கள் என்ற புரிதலோ அன்றைக்குப் பெரிதாக இல்லை. ஜிப்பா நபர்கள் தொடர்பான புரிதல் இன்று வரையில் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், அம்ரீஷ் பூரி மீதிருந்த அதே அளவு வெறுப்பு, சாருஹாசன் மீதும் இருந்தது என்பது சத்தியமான உண்மை. மம்முட்டி இவ்வளவு சொன்னப்புறம் கூட நம்மாளுக்கு பொண்ணைக் குடுக்க மாட்டேங்கிறானே இந்த பெருசு என்ற கடுப்புதான் காரணம். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்த போது ஒரு விஷயம் தெளிவாக இருந்தது. “வாழ்க்கையில ரெண்டே குறிக்கோள் தான். ஒண்ணு, நம்ம யாருக்காது சூர்யாவா இருக்கணும், இல்லேன்னா நமக்கு சூர்யா மாதிரி ஒரு நண்பன் இருக்கணும்”. நம்ம சூர்யா மாதிரி இருந்து, அதுனால சுப்புலட்சுமி கிடைக்காமப் போயிட்டா என்ன பண்றது போன்ற கவலைகள் அப்போது இல்லை.

அன்று தொடங்கி ரஜினியின் கலைந்த ஹேர்ஸ்டைல், அவர் நடப்பது, பேசுவது, தலையை சாய்த்து கூர்மையாகப் பார்ப்பது என்று எல்லாவற்றிற்கும் ரசிகனாகிப் போனாலும், அரசியல் வருகையை அவர் வருடக்கணக்கில் இழுத்தடித்தது பெரும் அயர்வைத் தந்தது உண்மை. ரஜினி எப்ப நினைச்சாலும் சி.எம் ஆயிரலாம் என்ற லெவலுக்குதான் என் அரசியல் புரிதல் அன்றைக்கு இருந்தது. ஆனால், ரஜினியின் புரிதல் என் போன்றோரை விட படு ஷார்ப்பாக இருந்திருக்க வேண்டும். தனக்கு வாய்ப்பில்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததால் தான், அவர் தனது அரசியல் வருகையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து, இறுதியில் அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

சமகாலத்தில், கபாலி, காலா போன்றவை அரசியல் ரீதியாக பிடித்தாலும்,  ரஜினி என்ற பிம்பம் சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது. “பேட்ட” பழைய ரஜினியின் வெகு அருகே வந்து சென்றது சற்றே ஆறுதல் அளித்தாலும், அவரின் அரசியல் நிலைப்பாடுகள் மூலமாக, மிகத் தெளிவாக அவர் நமக்கான ஆளு இல்லை என்று நிறுவியிருந்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர் பேசியதெல்லாம், ஊடகங்கள் கட்டமைத்திருந்த ரஜினி என்ற அரசியல் பிம்பத்தை சுக்கு நூறாக நொறுக்கியிருந்தன. தான் ஒரு வலதுசாரி என்ற நிலைப்பாட்டை அவர் வெளிப்படையாய் எடுத்திருந்தால் கூட அவரது தொழிலுக்கு பாதிப்பு வந்திருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. நடுநிலை என்கிற போர்வையில், தன் ரசிகர்களைப் போலவே நிஜ ரஜினியும், நிழல் ரஜினியாய் தன்னை நிரூபிக்க முயன்றதால் தான் இத்தனை பேர், பணம், புகழ் இருந்தும் இடைப்பட்ட காலத்தில் சிரமப்பட்டார் என்று  நினைக்கிறேன். “ரஜினியாய் இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு மட்டும்தான் தெரியும்” என்று மூத்த பத்திரிக்கையாளரும், ஊடகவியலாளருமான திரு. ப.திருமாவேலன் அவர்கள் ஒருமுறை எழுதியிருந்தார். அதை ரஜினியும் கூட ஒருமுறை சிலாகித்துப் பேசியிருந்தார். உண்மையில் அவர் அவராக இருந்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லைதான். 

இப்படி விமர்சிப்பதால் நான் ரஜினியை வெறுக்கிறேன் என்று பொருள் இல்லை.இன்று வரை, அலுவலகத்தில் உபயோகிக்கும் slack எனும் communication app-ல் எனது ஹேண்டில் எனக்கு மிகவும் பிடித்த “பேட்ட” தான். அதில் DP கூட இதோ இந்தப் பதிவில் ரஜினி silhouette-ல் நிற்கும் படம் தான். திரையரங்குகளை கொண்டாட வைத்து, இந்திய சினிமாவில் இருந்த கற்பிதங்களை உடைத்தெறிந்து உச்சம் தொட்ட கலைஞனாக ரஜினி மீது இருக்கும் பிரமிப்பும், அதைத் தாண்டிய சாஃப்ட் கார்னரும் என்றும் மாறாது.

ஆனால், தமிழ் ஊடகங்கள் நடிகர்களை, கலைஞர்களை, படைப்பாளிகளாக மட்டுமே இருக்க அனுமதிப்பதில்லை. அதனால் மனதுக்கு நெருக்கமான கலைஞர்களாக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களை கருத்தியல் ரீதியாக மதிப்பிடுவது தவிர்க்க முடியாததாகிறது.மேலும், சமூகத்தையும் அரசியலையும் குறித்துப் பேசாத எந்த கலைப் படைப்போ, கலைஞனோ காலம் தாண்டி நிற்பது சாத்தியமுமில்லை. இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பிற்பாடு, நிழல் ரஜினியை, திரையரங்குகளைக் கொண்டாட வைத்த ரஜினியை, சூப்பர் ஸ்டாராக எப்போதும் போல தயக்கமின்றி ரசிக்கலாம் என்ற relief இருந்தது உண்மை.

சில நேரங்களில் அவர் ரஜினி என்ற காரணத்தினாலேயே அதிகம் விமர்சிக்கப்படுகிறாரோ என்றும் தோன்றும். தவிர, தனது 40களில் இருந்த ரஜினியையும், 70களில் இருக்கும் ரஜினியையும் ஒப்பிட்டு பார்ப்பது நியாயமில்லை என்றே நினைக்கிறேன்.

1990களின் மத்தியில் ஒரு வார இதழில் ரஜினியின் பேட்டி வந்தது. முத்தாரம் என்று நினைக்கிறேன். ரஜினி கையில் சிகரெட்டோடு போட்டோ போட்டிருந்தார்கள். 

“இவ்வளவு வெளிப்படையா இருக்கீங்களே” என்ற கேள்விக்கு,

“என் கையில் பத்து பைசா இல்லாதப்பவே, நான் யாருக்கும் பயந்ததில்லை. இப்ப பாக்கெட் நிறைய பணம் இருக்கு, புகழ் இருக்கு. யாருக்கு பயப்படணும்” என்று தான் பதிலளித்திருந்தார். 

அது தான் ஒரிஜினல் ரஜினி. நாமும் அதே போன்றதொரு தெனாவட்டில் இடையில் சில ஆண்டுகள் திரிந்திருப்போம். ஆனால் நம்மில் எத்தனை பேர் இருபதுகளில் இருந்த அதே தெனாவட்டோடு நாற்பதுகளிலும் இருக்கிறோம் ? அதே தெனாவட்டோடு தொடரந்து இருக்கும் மனநிலை நமக்கு வாய்த்தாலும் அது சரியான பாதையில் இட்டுச் செல்லும் என்று உறுதியில்லை. 

சென்ற வாரம் வேட்டையன் படம் பார்த்தேன். சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களும், முன்முடிவுகளும் எத்தனை இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் வழிவகுக்கும் என்பதை இதைவிட தெளிவாக காட்ட இயலாது. ஒரு கதையின் நாயகனை, அதுவும் ரஜினி ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்தை, இயல்பான  vulnerability-யோடு காண்பித்தது மிகச்சிறப்பு. தவறே செய்யாத மனிதர்களை விட, செய்த தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளும் மனிதர்களை கதையின் நாயகர்களாக பார்ப்பதில் அத்தனை நிறைவு இருக்கிறது. படம் பார்த்த பிற்பாடுதான் வேட்டையன் இசை வெளியீட்டு விழா பார்த்தேன்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசியிருப்பார் ரஜினி. தனது பேச்சில், அத்தனை இடங்களில் புன்னகைக்க வைத்தார். 73 வயதில் நடிப்பதை விடுங்கள், இப்படி வந்து நின்று, சொல்ல வந்ததை சற்றும் தொய்வில்லாமல், கோர்வையாக, கிண்டல், சுயபகடியோடு சுவாரசியமாக எல்லோரும் ரசிக்கும்படி தெளிவாகப் பேசுவது எத்தனை பேருக்கு சாத்தியம் ? வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பார்த்தது சர்வ நிச்சயமாக 90களில் இருந்த பழைய ரஜினி. உண்மையில் அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்த பிற்பாடுதான், ரஜினி ரஜினியாகத் தெரிகிறார். 

பொதுவாகவே insecure ஆன ஆட்களுக்கு தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் இருப்பவர்களைப் பிடிக்காது. “இவன் மட்டும் எப்டி, அடுத்தவன பத்திக் கவலைப்படாம, மனசுல பட்டத தைரியமா பேசிட்டுத் திரியுறான்” என்ற காண்டு, தன்னம்பிக்கையை மண்டைக்கனம் என்றும், விடாமுயற்சியை பிடிவாதம் என்றும் பொரணி பேச வைக்கும். அதைத் தாண்டி, தன்னம்பிக்கை உடையவர்களிடம் இருக்கும் ஒரு selfcare அவர்களுக்கு வாய்க்காமல் இருக்கும் வயிற்றெரிச்சலும் உண்டு. தன்னைப் போலவே அவர்களையும் insecure-ஆக மாற்ற அது எத்தனை கீழ்த்தரமான வேலையையும் செய்ய வைக்கும். மாதச் சம்பளம் வாங்கும், சாதாரண அலுவலக வேலையிலேயே பாலிடிக்ஸ் செய்யும் ஆட்கள்  இருக்கும் போது, பணமும், செல்வாக்கும் நிறைந்த திரைத்துறையில் இதற்கு பஞ்சமா என்ன ? அது குறித்து பேசும் பொழுது, “ரஜினியை சுத்தி இருக்கவங்கள்லாம் அவரு நல்லாருக்கணும்னு நினைப்பாங்கன்னா நினைக்கிறீங்க?” என்று கவுண்டமணி கூட ஒரு பத்திரிக்கை நேர்காணலில் சொன்னதாக நினைவு.

நாம் வளரத் தொடங்கும் போது தான் நம்மைக் குறித்து அவதூறு பேசுவார்கள், சறுக்கினால் கொண்டாடுவார்கள் என்ற புரிதல் இருந்தாலும், அது பெரும் மண்டைக் குடைச்சலான சூழ்நிலை. சில நேரங்களில், செவுளைப் பேத்துரலாம் என்று தோன்றினாலும், வெற்றிகளால் மட்டுமே பதில் சொல்ல வேண்டிய அழுத்தம் சாதாரணமானது அல்ல. இதில் நிறைய விஜய், அஜித் போன்றோருக்கும் பொருந்தும். உண்மையில் சினிமா நட்சத்திரங்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவர்களிடம் இருக்கும் விடாமுயற்சியையும், தோல்விகளில் இருந்து மீளும் தன்மையையும் தான் என்று நினைக்கிறேன். Persistence and resilience are two attributes we can imitate from movie stars.

தன் 70களில், இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகும், இப்படி ஒரு attitude-ல், இத்தனை resilient-ஆக இருக்கும் ரஜினியை, அவரது 30-40களில் சுற்றி இருந்தவர்களால் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது. வலுவாக ஸ்கெட்ச் போட்டிருப்பார்கள். அப்படி எத்தனையைக் கடந்து வந்திருந்தால், தனது பேச்சின் இறுதியில் , “நம்மள மிதிக்கணும்னு நினைக்கிறவன் தலை மேல மிதிச்சு நம்ம மேல ஏறிப் போகணும்” என்று சொல்லியிருப்பார். வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசி முடிக்கும் பொழுது 73 வயது சூப்பர் ஸ்டார் ரஜினி தெரியவில்லை. “கெட்ட பய சார் இந்த காளி” என்று அசால்ட்டாக சிரித்துக் கொண்டே சொல்லும் “முள்ளும் மலரும்” ரஜினிதான் தெரிந்தார்.

2 thoughts on “கெட்ட பய சார் !

Leave a reply to Simbu Cancel reply