ஊர்ச்சாமிகள்

எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று பிரித்தறிய முடியாத ஒரு உணர்வு.   

எப்போது ஊர் நினைவு வந்தாலும், வடக்கே பார்த்து அமர்ந்துள்ள காளியம்மனும், அவளது மஞ்சள் அப்பிய உக்கிரமான முகமும் கண்முன் வருவது ஏன்? எங்கு கொட்டுச் சத்தம் கேட்டாலும், உடனே  “டண்டண்டகுமா…க்கும் டகுமா…டண்டண்டகுமா” என்று ஊரில் கேட்ட உருமி மேளத்தின் சத்தம் மண்டைக்குள் உருள்வது ஏன் ? திரைப்படத்தில் யாராவது சாமியாடுவதைப் பார்த்தால் கூட ஒரு கையில் வேல்கம்பும், மறு கையில் தீப்பந்தமும் ஏந்தி, சல்லடத்தோடு ஆடும் வைரசாமி ஏன் நினைவுக்கு வருகிறார் ? 

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெறுமனே பராக்கு பார்த்துக் கொண்டே காத்திருந்த ஒரு மே மாத நாளில், யூட்யூப் அல்காரிதம் “எங்க ஊரு மாரியம்மா” பாடலைக் கொண்டு வந்து சேர்த்தது. பாடலின் தொடக்கத்தில் வரும் prelude முடியும் வரை ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. “எங்க ஊரு மாரியம்மா….தங்கமான காளியம்மா” என்று தொடங்கி, “தண்ணி விட்டு வளர்த்து விடு தாயே முத்துமாரியம்மா” என்று மலேசியா வாசுதேவன் உருக, மனம் ஒரு நிமிடம் திண்டாடிவிட்டது. கங்கை அமரனும் மலேசியா வாசுதேவனும் சேர்ந்து டெலிபோர்ட்டிங் சக்தி உள்ள ஒரு பாடலை இயற்றுவார்கள் என்று யார் கண்டது. இருக்கும் இடத்தில் இருந்து, நொடி நேரத்தில் நம்மை சொந்த ஊருக்குக் கடத்திச் செல்லும் வல்லமை பெற்ற இது போன்ற நிகழ்வுகள் நம் எல்லோருடைய நினைவிலும் பதிந்திருக்கின்றன தானே ?

புரியாத மொழியில் பேசாமல், சாமிக்கும் சனத்துக்கும் ஊடே மூன்றாம் நபர் யாரும் இல்லாமல், “ஏன் இப்டி உன் புள்ளைய சங்கடப்படுத்துற ? உன் புள்ளைக்கு நல்ல வழி காட்டிக் குடுக்கணும். செய்வியா மாட்டியா ? ” என்று உரிமையோடு தெய்வத்தை நடுவீதியில் நிறுத்தி, கட்டளையிடுவதைத் தாண்டி என்ன பெரிய பக்தி இந்த உலகத்தில் இருந்துவிடப் போகிறது. என்ன பிரச்சனை வந்தாலும், “காளியாத்தா பாத்துக்கிருவா” என்று சொல்லும் அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் பின்னால் இருப்பது அந்த உணர்வு தான் எனத் தோன்றும். 

கோடைகாலக் கோயில் திருவிழாக்கள், காக்கும் தெய்வங்களின் திருவிழாக்கள். எளிய மக்களின் திருவிழாக்கள். எளியவர்களைக் காக்கும் தெய்வங்களும் எளியவர்களாய் இருத்தல் தான் எத்தனை அழகு.  வைகாசி மாத பெளர்ணமியன்று எங்கள் ஊர்ப் பொங்கல். ஓடையில் மண் எடுத்து வந்து, செவ்வாய் இரவு சாமி செய்வதில் தொடங்கி, பொங்கல் வைத்தல், கிடா வெட்டு, முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி என்று மறுநாள் சாயங்காலம் சாமி கரகத்தைக் கரைக்கும் வரை உணர்வுக்குவியல்களால் ஆன நிகழ்வுகள். உருமிகள் முழங்க சாமியை வருத்தி அழைக்கும் போது பொடனி மயிர்கள் சிலிர்த்தெழுந்து நிற்கும். இத்தனை வருடங்களாக அதே இடம், அதே உருமி, அதே சாமி தான். ஆனால் அந்த நிகழ்வு ஒரு முறை கூட சிலிர்ப்புக்குள்ளாக்காமல் இருந்ததில்லை. ஒரு மாதிரியான trance அது. சாமி நகைகள் அடங்கிய செல்லப்பெட்டியை தூக்கிக் கொண்டு, சாமி செய்யும் இடத்தை நோக்கி அழைத்துச் செல்லும் போதே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

கிணற்றடியில் கூட்டமாக உட்கார்ந்து சாமி செய்வார்கள். வெண்கலக் குடத்தின் கழுத்தில் மஞ்சனத்தால் சாமி முகத்தை வடிவமைத்து, குடத்தினுள் வேப்பங்கிளைகளைச் சொருகி, அதில் பூச்சுற்றி, சூலாயுதம் போல் செய்து, சப்பரத்தில் ஏற்றுவார்கள். நச்சாடலிங்கம் தாத்தா தான் பல ஆண்டுகளாக சாமி செய்து வருகிறார். பத்து மணிக்குத் தொடங்கினால், சாமி கரகம் சப்பரத்தில் ஏற விடிகாலை மூன்று நான்கு மணி ஆகிவிடும். சிறு வயதில், நான் ரசித்த மிகச் சிறந்த இரவுகளாக, சாமி கரகம் செய்யும் அந்த இரவுகள் மட்டுமே இருந்திருக்கிறது. பந்தலில் குத்த வைத்து, தலையை ஒரு பக்கம் சாய்த்து, வாயைப் பிளந்த மானைக்கு மணிக்கணக்கில் அமர்ந்தது கரகம் செய்வதைப் பார்த்தது உண்டு. 

விடிகாலையில் சப்பரத்தில் ஏற்றி கரகத்தை கோயிலுக்குள் சேர்தது விடுவார்கள். பொங்கல் வைத்து, கிடா வெட்டு முடிந்து அன்று மாலை கரைப்பதற்குத்தான் சாமி கரகத்தை வெளியே கொண்டு வருவார்கள். மாலையில், கரகத்தை மீண்டும் சப்பரத்தில் ஏற்றி கோயிலை மூன்று சுற்று சுற்றி விட்டு, அதன் பின்னர் முளைப்பாரியோடு கரைக்கும் இடத்திற்குக் கொண்டு செல்வார்கள். கோயிலுக்குள் இருந்து சாமி கரகத்தை இறக்கி சப்பரத்தில் மீண்டும் ஏற்றும் போது குறுக்கே யாரும் மறிக்கக் கூடாது. அத்தனை பெரிய கரகத்தை நான்கைந்து பேர் சேர்ந்து தான் தூக்க முடியும். அந்தக் கோயிலின் சிறிய வாசல் வழியாக ஒரே வேகத்தில் கொண்டு வந்து சப்பரத்தில் ஏற்றினால் தான் உண்டு.

ஒரு முறை திருவிழா முடியும் நேரத்தில், சப்பரத்தை கோயில் வாசலில் தயாராக வைத்து விட்டு, கரகத்தை கோயிலுக்குள் இருந்து தூக்கி வரச் சென்றார்கள். உருமிகள் முழங்க, குலவையோடு கூட்டம் ஆர்ப்பரிக்க, கரகம் இறங்கிய பொழுது, கரகத்தைத் தூக்கி வந்த ஒருவருக்கு, அருள் வந்து முறுக்கிக் கொண்டார். மெலிந்த இளைஞன் தான். ஆனால் இரண்டு மூன்று பேர் பிடித்தும் திமிறிக் கொண்டிருந்தார். நான்கைந்து பேர் சேர்ந்துதான் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மற்றவர்கள் ஒரு வழியாக சமாளித்து கரகத்தை கோயிலில் இருந்து வெளியே கொண்டு வர முயலும் போது, அந்த இளைஞனை வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டம் பாதையை மறிக்க, கரகத்தை  தூக்கியவர்கள், நாக்கைத் துருத்தி தரை அதிர மிதித்து ஆங்காரமாகக் கத்தினார்கள். கூட்டம் விலகி வழிவிட முயன்று கொண்டிருந்த போது, திடீரென்று பந்தக்காலில் தீப்பற்றி, திகு திகு வென மேலே வரை ஏறியது. ஒரு பக்கம் பந்தல் எரிந்து கொண்டிருக்க – அந்த கூச்சல், குழப்பத்தினூடே, ஹோவென்ற சத்தத்தோடு, படியிறங்கி கரகத்தை சப்பரத்தில் சேர்த்தார்கள். உருமிகள் நிற்கவில்லை, கொட்டுக்காரர்கள் முன்னைவிட வேகத்தோடு இருந்தார்கள். கூட்டத்தின் ஒரு பகுதி தீயை அணைப்பதில் மும்முரமாக, சப்பரம் கோயிலைச் சுற்றத் தொடங்கியது. அத்தனை சலசலப்பிலும், கூட்டத்திலும், நச்சாடலிங்கம் தாத்தா, கோயில் வாசலில் எரிந்து கொண்டிருக்கும் பந்தலின் முன்னால் நின்று, வானத்தைப் பார்த்து, கண்களில் நீர் கோர்க்க, இரு கைகளையும் தூக்கி “ஆத்தா..” என்று முணுமுணுத்து நின்றதைப் பார்த்து நான் சிலிர்த்துப் போய் நின்ற நொடியில், நாத்திகவாதியில் இருந்து அஞ்ஞானவாதியாக மாற என் மனம் நினைத்தது என்னவோ உண்மை. 

அம்மா ஊரில் இருக்கும் மாரியம்மன் கோயில் பொங்கலுக்கு, இந்தளவிற்கு மனம் ஏங்கியதில்லை. ஒரு வேளை, ஒவ்வொரு பொங்கலுக்கும் சாமி செய்யும் வழக்கம் இல்லாததால் அப்படித் தோன்றியிருக்கலாம். நடுராத்திரியில் மாரியம்மன் சப்பரத்தில் வரும் போது மட்டும் எழுந்து கும்பிட்டு விட்டு, படுத்துக் கொள்வது வழக்கம். காளியாத்தாளுக்கு வாய்த்ததை விட சற்று வசதியான சப்பரம், அந்த ஊர் மாரியாத்தாளுக்கு வாய்த்திருந்தது. ட்யூப்லைட், வெள்ளை சீரியல் பல்பு, தோரண அட்டைகள் என்று சற்று பாலிசாக இருக்கும். சிறு வயதில் – மாரியாத்தாளை விட, சப்பரத்தின் மேல் இருபுறமும் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் அந்த பூனை பொம்மைகள் மேல் தான் எனக்கு அலாதி பிரியம். சப்பரத்தை அருகில் இருந்து பார்த்தாலும், மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலும், அந்த வெள்ளைப் பூனைகளைத் தான் கண்கள் தேடும். 

ஒருமுறை “ஏண்ணேன்…சப்பரத்தை எறக்கி வச்சப்புறமும், அந்தப் பூனை இப்டி தான் தலையை ஆட்டிட்டே இருக்குமா” என்று இசக்கி அண்ணனிடம் கேட்க,

 “யேய்…புலிடா அது” என்றார்.

“அதான பாத்தேன்..மாரியாத்தாளுக்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம்” என்று மண்டையில் பல்பு எரிந்தது. சப்பரத்தில் வைக்க சின்ன சைஸில் புலி செய்யச் சொன்னால், அது பூனை போல வந்திருக்கிறது. அடித்த மஞ்சள் பெயிண்ட் சாயம் போகாமல் இருந்திருந்தால் கூட புலிக்குட்டி சாயலில் இருந்திருக்கும். 

மாரியாத்தாளை விட, அம்மா ஊரில் இருக்கும் முத்தையா கோயில்தான் மனதுக்கு அணுக்கம். ஒரு முறை மாட்டிற்கு வைத்திருந்த தவிட்டை எடுத்து வெல்லத்தோடு கலந்து சாப்பிட, அது நன்றாக இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கத்தில், தங்கச்சிகளுக்கும் அதை சப்ளை செய்தேன். மாமா வந்ததும்,

“இந்தப் பய தவுட தின்னுட்டுத் திரியுறான், என்னான்னு கேளு அருளு”, என்ற வெள்ளைப் பாட்டி வத்தி வைத்தார்கள். எந்த ரியாக்சனும் இல்லாமல், கைலியை மாற்றிக் கொண்டே,

“அந்தத் தொட்டில முருங்கைக்காய் கெடக்கும் எடுத்துட்டு வா” என்றார் அருள் மாமா.

எதுக்கு மட்ட மத்தியானத்துல முருங்கைக்காய் கேக்குறாய்ங்க என்ற யோசனையோடு, நல்லதண்ணித் தொட்டியில் ஊறப் போட்டிருந்த முருங்கைக்காய்களில், வாட்டமான இரண்டை எடுத்துச் சென்றேன். மாமா கையில் கொடுத்தவுடன், என் முதுகு பழுத்தது. அடுத்தடுத்த அடியில் இருந்து விலகி தப்பித்து ஓடினேன். வீட்டுக்குப் பின்னால் இருந்த மாட்டுப் பண்ணை, அதற்குப் பின்னால் இருந்த வைக்கப் படப்பை என்று நான் தெறித்து ஓடி, ஒளிந்த இடம் முத்தையா கோயில் தான். அதற்குப் பிறகு எப்போது ஒரண்டு இழுத்து விட்டு, அடிக்கு பயந்து தப்பித்து ஓடினாலும், அது தான் அடைக்கலம். 

கொத்தனாராக இருந்த ராசு மாமா முத்தையா கோயிலில் சாமியாடுவார். ஒரு முறை, முத்தையா கோயில் பொங்கலன்று அருள் வந்து சாமியாடியவர், வெறியேறி வேல்கம்பை நங் நங்கென்று ஓங்கி ஓங்கி தரையில் குத்தத் தொடங்கினார். இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் அவரைப் பிடித்து ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை. முத்தையா சிலையைப் பார்த்து கண்கள் கிறங்கிக் கொண்டே அல்லாடியவர், பற்களைக் கடித்தபடி வேல்கம்பை மறுபடி ஓங்கி இறக்க, அது சரியாக அவரது வலது கால் பெருவிரலில் இறங்கியது. ரத்தம் கொப்பளிக்க, எந்தச் சலனமும் இல்லாமல் நாக்கைத் துருத்திக் கொண்டு அவர் தொடரந்து ஆடியது இப்போது தான் நிகழ்ந்தது போல் நினைவிருக்கிறது. அவரது முகத்தில் இருந்த உக்கிரத்தையும், முத்தையா சாமியையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதும் தெற்றுப் பல் தெரிய சிரித்தபடி பேசும் ராசு மாமாவா இது என்று அரண்டு போயிருந்தேன். அதன் பின்னர் முத்தையா கோயிலில் நான் ஒளிந்ததேயில்லை. 

இருபது ஆண்டுகள் கழித்து ஒரு வீடு கட்டும் விசயமாக அவரைப் பார்த்த போது, முதலில் என் கண்கள் சென்றது அவரது வலது கால் பெருவிரலை நோக்கித் தான். 

பாதி பிளந்த நகமும், தழும்புமாய் இருந்த பெருவிரலைக் காட்டி,

“இது முத்தையா கோயில்ல சாமியாடும் போது, வந்தது தான மாமா” என்றேன்.

“என்னய்யா..இப்புடி யாவம் வச்சிருக்க” என்றார்.

அவருக்குத் தெரியாது, சாமி மேல் எளியவர்கள் வைத்திருக்கும் பற்று இப்டி தான் வெளிப்படும் என்று என் மனதில் ஆழப்பதித்த நிகழ்வின் மையப்புள்ளி அவர்தான் என்று.

ராசு மாமாவும், நச்சாடலிங்கம் தாத்தாவும் வெளிப்படுத்திய உணர்வுகளை வெறும் பக்தி என்று சுருக்கிவிட மனம் ஒப்பவில்லை. சாமியின் மேல் இருக்கும் அத்தனை அன்பும், ஆங்காரமாய், அழுகையாய் வெளிப்படுவதற்கு, பக்தியைத் தாண்டி ஒரு உரிமையும் பெருமிதமும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். நண்பர்கள் அவரவர் ஊர்த் திருவிழாக்களைப் பற்றிப் பேசும் பொழுது “இது எங்க சாமி”  என்ற பெருமிதத்தை அவர்கள் கண்களில் பார்த்திருக்கிறேன். பால்யம் தாண்டி, இளவட்டத்தில் சிறிது சிறிதாக கடவுள் என்கிற சித்தாந்தத்தின் மேல் கோபம் வந்து, பின்னர் நம்பிக்கை இழந்த போதும், ஊர்ச்சாமிகளின் மேல் இருக்கும் அன்பு குறையவில்லை. இன்று வரையில், காளியாத்தாளைக் காண ஒவ்வொரு முறை அப்பா ஊருக்குச் செல்வது மனதுக்கு உகந்த நிகழ்வாகவே இருந்திருக்கின்றது.

“பேசாம மெட்ராஸ்லயே செட்டில் ஆயிரலாமான்னு யோசிக்கிறேன் மாப்ள” என்று நண்பன் ரஜப்-இடம் ஒரு நாள் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். பதறிப் போய்,

“மாப்ள..அந்தத் தப்பை மட்டும் செஞ்சுராத மாப்ள. ஊர விட்டு வந்தாலும் வேர விட்டு வரக்கூடாதுன்னு சமுத்திரக்கனி ஒரு படத்துல சொல்லுவாப்ல. என்னா படம்னு தெர்ல. அது என்னமோ அது மட்டும் மனசுல பதிஞ்சிருச்சு. ஊர விடணும்னு நெனைச்சிராத” என்றான்.

எளிய மக்கள் தங்கள் சாமிகளின் மீது கொண்டுள்ள பெருமிதமும், உரிமையும் தான் உறவுகளோடு பின்னி, வேர்களாகப் மாறி நம்மை சொந்த ஊரோடு பிணைத்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். பெருமிதத்தின் அடிப்படையான அந்த உரிமை பறிக்கப்படும் போது,  சாமி அந்நியமாக்கப்பட்டு, மொத்த உணர்வுக் குவியலும் பக்தி என்ற சொல்லுக்குள் சுருங்கி, நிறுவனமயமாகிவிடுகிறது. நிறுவனமயமாக்கப்படும் எதுவும் மக்களால் கேள்விக்குள்ளாக்கப்படும். கேள்வி கேட்பவர்களை நிறுவனங்கள் ஒதுக்கி வைக்கும். பின்னர், அது எங்கே போய் நிற்கும் என்று நமக்குத் தெரியும்.

எத்தனை கேடு தேடி வந்தாலும், சமாளித்து மேடேறும் தெம்பைத் தர நம்மோடு ஊர்ச்சாமிகள் இருக்கும் போது, வேறெதுவும் நமக்குத் தேவையில்லை. தவிர – காளியம்மன்களை, மாரியம்மன்களை, கொத்தாள வீரய்யன்களை, சுடலைமாடன்களை, அய்யனார்களை முழுதாகச் செரித்து விட எத்தனித்தாலும், அதற்கான வலு நிறுவனங்களுக்கு ஒரு போதும் வாய்க்கப் போவதில்லை. 

One thought on “ஊர்ச்சாமிகள்

Leave a comment