லோகேஷும் இசையரசும்

ஏதேனும் ஒரு திங்கட்கிழமை அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றுதல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஊரே அந்த வாரத்திற்கான வேலைகளை இழுக்கத் தயாராக டிராஃபிக் சிக்னல்களில் நின்று கொண்டிருக்கும் போது,  அதனூடே நாம் மட்டும் குறிக்கோளில்லாமல் அலைந்து திரிதல் ஒரு privilege, அது தற்காலிகமானதாக இருந்தாலும் கூட. சரியாகத் திட்டமிட்டு நிதி விடுதலை (Financial Independence) அடைந்தவர்களுக்கு அந்த privilege தினசரி கிடைக்கும். எழுத்தாளர் மார்கன் ஹவுசலின் சொற்களில் – “The ability to do what you want, when you want, with who you want and for as long as you want is priceless”. நிதி விடுதலை அது போன்ற பல திங்கட்கிழமை காலைகளை நமக்குப் பெற்றுத் தர வல்லது. இன்று தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு அது குறிக்கோளும் கூட. “எப்டியும் ஒரு நாள் நம்ம அந்த நிலைக்கு வந்திருவோம், அன்னைக்கு என்ன பண்றதுன்னு தெரியாம தட்டழியக் கூடாதுல்ல, அதுனால அப்பப்ப இப்டி லீவு போட்டு ப்ராக்டீஸ் பண்ணிக்கிருவோம் மாப்ள” என்று நண்பனிடம் பேசிக் கொள்வதுண்டு.

அப்படியான ஒரு ப்ராக்டீஸ் திங்கட்கிழமையன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோவில் ஏறி விம்கோ வரை சென்று, அங்கே ஒரு டீ சாப்பிட்டு விட்டு  வரலாம் என்று திட்டம். நானும் மனைவியும், மெட்ரோவுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தோம். சிக்னலை மீறாமல், ஒன் வேயில் செல்லாமல், மிகச் சரியாக சென்று கொண்டிருந்த ஆட்டோக்காரர், காமாட்சி ஆஸ்பிட்டலைத் தாண்டும் போது,

“இந்த கார்ப்பரேட் பூரா திருட்டுப் பசங்க சார்” என்றார்.

அதற்கு சற்று முன்னர், “ஆட்டோலாம் இல்லன்னா சென்னை, பாம்பே மாதிரி பெரிய ஊர்கள் எல்லாம் அப்டியே ஸ்தம்பிச்சிரும்ல” என்று நான் என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதால், என் மீது ஒரு சாஃப்ட் கார்னர் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆட்டோக்காரர்களுக்கே உரிய உரிமையோடு பேசத் தொடங்கினார்.

“அவனாது பரவால்ல, இவன் ரொம்ப ஒர்ஸ்டு” என்று ஆட்டோ, டாக்ஸி சார்ந்த இரண்டு இயங்கு தளங்களையும் தரம் பிரித்து விலாவாரியாக ஒப்பிட்டார்.

“நிறைய பேரு இப்டி பணம் வர்றதுல கம்ப்ளைண்ட் இருக்குன்னு சொல்றாங்க. நீங்க யூனியன்ல பேசி எல்லாரும் சேர்ந்து சம்பந்தப்பட்ட ஆளுகளைப் பாத்துப் பேசலாம்ல சார்” என்றேன். 

ஸ்லோ மோஷனில் என்னைத் திரும்பிப் பார்த்து,

“யூனியனா ? எந்தக் காலத்துல சார் இருக்கீங்க ? நான் எங்க வேலை பாத்துட்டு இருந்தேன் தெரியுமா ? ஒரு பில்லியன் டாலர் கம்பெனில. அங்கயே யூனியனை வச்சு ஒண்ணும் பண்ண முடியல. புரியுதா உங்களுக்கு ?” என்று தான் முன்னர் வேலை பார்த்த ஒரு பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பேரைச் சொன்னார்.

“கேண்டீன் இன்சார்ஜ் சார் நானு, ஒரு நாளைக்கு நாலாயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவன். பதினைஞ்சு வருசம் வேலை பாத்தேன். எனக்கு சூப்பர்வைசரா இருந்தவங்க எல்லாம்- ‘நீங்க நல்லா வேலை பாக்குறீங்க, குறையே சொல்ல முடியாது உங்க வேலையில, இன்னும் கடினமா உழைச்சா, நல்லா மேல வந்துரலாம்’னு மோட்டிவேட் பண்ணிட்டே இருந்தானுக. மாடு மாதிரி உழைச்சேன். ஆனா கடைசியில வேலைய விட்டுத் தூக்கிட்டானுக”

“ஆனா, அன்னைக்கு என் நேரம் என்னுதுல்ல சார், இன்னைக்கு அப்டி இல்ல. முடிஞ்ச வரை ஓட்டுவேன். புடிக்கலயா லாக் ஆஃப் பண்ணிட்டு போயி பொண்டாட்டி புள்ளைககூட இருப்பேன்.”

என்னிடம் பதில் எதிர்பாராமல், இடைவிடாமல் தொடர்ந்தார்.

“என் பொண்டாட்டி சொல்லுவா சார், ‘கம்பெனிய தலையில தூக்கி வச்சிக்கிட்டு, குடும்பத்தைப் பாக்காம வேலை வேலைனு ஓடுற, ஒரு நாள் தூக்கி எறியப் போறான் பாரு’ ன்னு. அப்டியே நடந்துச்சு.”

“வேலையவிட்டுத் தூக்குற அன்னைக்கு என் சூப்பர்வசைர் என்னைப் பார்த்து ஒண்ணு சொன்னான் சார். ‘லோகேஷ்…நீங்க திறமைசாலி, நல்லா வேலை பாக்குறீங்க. ஆனா உங்கள மட்டும் வச்சுதான் நான் இந்த வேலைய செய்ய முடியும்னு நினைக்காதீங்கன்னான்’. அப்டினா என்ன அர்த்தம் புரியுதா சார்?” என்று திரும்பி என்னிடம் கேட்டார் 

புரிந்தது என்றாலும் விளக்கம் குடுக்காமல், “ம்ம்ம்” என்றேன்.

நம்மலாம் அவனுக்கு ஒரு ஆளே இல்லங்கிறான் சார்”, என்று என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்ட போது எங்கள் ஆட்டோ மயிலை பாலாஜி நகர் சிக்னலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிக அறிமுகம் இல்லாதவர்கள், குறிப்பாக அப்போது தான் பேசத் தொடங்கியவர்கள், இது போல “நம்ம” என்று கூறி நம்மை அவர்களில் ஒருவராக சட்டென அங்கீகரித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் மனதுக்கு அத்தனை நிறைவைத் தருகின்றன.

அவர் என்னை நம்ம என்றதில், இசையரசு என்கிற ஆட்டோக்காரர் செய்த சம்பவம் நினைவிற்கு வந்தது. 2016ல் நடந்த பணமதிப்பிழப்பு தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், கட்சி பிரதிநிதிகள் மற்றும் நிதி வல்லுனர்களோடு இசையரசு என்கிற ஆட்டோக்காரரையும் அழைத்திருந்தார்கள். அடுத்தவரைப் பற்றிய பரிவு சிறிதளவு கூட இல்லாத  நிதி வல்லுனரும், பாஜக-வைச் சார்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவரும் பணமதிப்பிழப்பை நியாயப்படுத்தும் முயற்சியில்,

“கஷ்டம்தான் சார். என்ன பண்ண முடியும் ? கேஷ் டிரான்ஸாக்ஷன் வச்சிக்கிற பூக்காரி, மீன்காரிங்க எல்லாம் சிரமப்படத்தான் செய்வாங்க” என்ற ரீதியில் பேசினார்கள்.

அதில் பதில் அளித்த இசையரசு மெல்லிய புன்னைகையோடு,

“இங்க நிறைய இந்தியா இருக்கு. இப்ப சொன்னீங்களே, பூக்காரி, மீன்காரின்னு – இது ஒரு இந்தியா. மீன்காரம்மா, பூக்காரம்மா அப்டினு சொல்றது ஒரு இந்தியா. அந்த இந்தியாவுல இருந்துதான் நான் வந்துக்கிறேன். இன்னைக்கு அடிப்படை உளவியல் இதுதான்.புரியுதா. எங்கள சகமனுசனா மதிங்கன்னு கேக்குறோம். அதுனால மீன்காரி, பூக்காரினு பேசுறத தயவு செய்து நிறுத்திக்கங்க, மீன்காரம்மா பூக்காரம்மான்னு மரியாதை குடுத்துப் பேசுங்க” என்றார். அந்தப் புன்னகைக்கு பின்னால் அத்தனை ரெளத்திரம் ஒளிந்திருந்தது.

எதிரே இருந்த மெத்தப் படித்த இருவருக்கும் சமூக பொருளாதார அளவில் தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் மக்களைப் பற்றிய புரிதலோ, அவர்களது வாழ்க்கை சார்ந்த புரிதலோ துளி கூட இல்லை. அதிகாரத்திற்கு சொம்பு தூக்க மட்டும் பயன்படும் அவர்களது கல்வியையும், போலியான கவுரவத்தையும்,எளிமையான சொற்களை வைத்து இசையரசு சுக்கு நூறாக்கியிருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சக மனிதர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள, அவர் சொன்ன அந்த ஒரு வாக்கியம் போதுமானது . உங்கள் சுற்றத்தில் எத்தனை பேர் தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை வேலைக்காரி என்று அழைக்கிறார்கள், எத்தனை பேர் அக்கா அல்லது அம்மா என்று அழைக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் அவர்கள் மனநிலை விளங்கும். It is a litmus test to understand if people treat others with respect.

சிக்னல் பச்சையானவுடன், “இந்த ஐடி வந்துதான் சார் எல்லாம் மாறிப் போச்சு” என்று வலப்புறம் ஒடித்து கியர் மாற்றினார்.

“முன்னாடிலாம் எவ்வளவு சம்பளம் குடுத்தான். இப்பப் பாருங்க, வெறும் முப்பதாயிரம் தான் குடுக்குறான். ஆனா இந்த டீம் லீடுகளுக்கு மட்டும் மாசம் 1.5 லட்சம் மாதிரி குடுக்குறான். அவன் ஏசியில ஜாலியா உக்காந்துட்டு இந்த சின்னப் பசங்கள வச்சி நல்லா வேலை வாங்குறான். சம்பளம் அதிகமா கேட்டா,  ‘வேணும்னா இரு இல்லாட்டி உன்னை விட எக்ஸ்பீரியன்ஸ் கம்மியான ஆளுகளை வச்சி வேலை வாங்கிக்கிறேன்னு’ திமிராப் பேசுறான்” என்று அவரது சூப்பர்வைசர் மேல் இருந்த கோபத்தை ஏதோ ஒரு ஐடி கம்பெனியில் இருக்கும் டீம் லீடின் மீது காட்டினார். 

“பிரச்சனை அதில்ல சார், இந்த கார்ப்பரேட், பசங்கள ஒரு மாதிரி வசதியான லைஃப்ஸடைலுக்கு பழக்கி விட்டுர்றான். அவன் ஆபீஸுக்கு போறதுக்கு ஒரு பைக் தேவைப்படுது, லேட்டஸ்ட் மாடல் ஃபோன் தேவைப்படுது, நல்ல டிரஸ் எடுக்கணும். அவன் மாசம் முப்பதாயிரம் சம்பாதிச்சிட்டு வர்றதுக்கு நம்ம வருசத்துக்கு ஒரு லட்ச ரூபா செலவழிக்க வேண்டியிருக்கு…புரியுதா உங்களுக்கு” என்று மூன்றாவது முறையாக எனது புரிதலின் அளவை சோதித்துக் கொண்டார்.

“ம்ம்ம்” என்றேன்.

“கவர்ன்மெண்ட் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தணும் சார். கவர்ன்மெண்ட் வேலை இருந்தா நம்ம பசங்க எதுக்கு சார் கார்ப்பரேட் கிட்ட வேலைக்குப் போகணும், சொல்லுங்க”

“ஆனா மெட்ராஸைப் பொறுத்த வரை சம்பளத்துக்கு வேலை பாக்குறதெல்லாம் சரி வராது சார். தொழில் தான். இத்தனை பேரு இருக்க ஊர்ல எதுக்கு சார் இன்னொருத்தனுக்கு அடிமையா வேலை பாக்கணும். தொழில் பண்றது தான சார் கரெக்டு. நம்ம ஜனங்களுக்கு அது புரியுறதில்ல” 

“எங்க ஏரியாவுல 20 வருசத்துக்கு முன்னாடி, ஒரு மலையாளி டீக்கடை வச்சான். அப்புறம் அதே இடத்துல ஒரு ஜூஸ் கடை வச்சான். அதுக்கப்புறம் அந்தக் கடையவே சொந்தமா வாங்கி ஜூஸ் வேர்ல்டுனு பேர் வச்சான். இன்னைக்கு அவனுக்கு ஊருக்குள்ள எத்தனை கடை இருக்கு தெரியுமா ? அவன விடுங்க, சேட்டு நம்மூர்ல யார்கிட்டயாது வேலை பாத்து பாத்திருக்கீங்களா. எல்லாத்தையும் விட்டுட்டோம் சார்”

நம்ம விட்டுட்டோம் என்று சொன்னாரே தவிர, வெளியே இருந்து உழைத்துப் பிழைக்க வந்தவர்களை ஒருமுறை கூட அவர் பழிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அவர் சொல்லும் போது, ரோட்டின் இடப்புறம்  “ஜூஸ் வேர்ல்டு” என்ற கடையைத் தாண்டிக் கொண்டிருந்தோம். இதற்கும் அவர் சொன்ன ஜூஸ் வேர்ல்டும் நிச்சயம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சென்னையில் கிலோமீட்டருக்கு குறைந்தபட்சம் மலையாளிகள் நடத்தும் 2 ஜூஸ் கடைகளையாவது பார்த்து விடலாம். 

“எந்த ஏரியா சார் நீங்க?”

“எண்ணூர் சார்”

“எண்ணூர்ல இருந்து இங்க வரைக்கும் சவாரி எடுக்க வந்திருக்கீங்க ?”

“லாபம் வந்தா சவாரி எடுத்துத் தான சார் ஆகணும். இன்னைக்கு சென்னையில் ஆட்டோ ஓட்டுனா ஒரு மாசத்துக்கு எவ்வளவு சம்பாதிக்க முடியும்னு நினைக்கிறீங்க”

“தெர்லயே சார்”

“யோசிச்சுச் சொல்லுங்க சார்”

“இல்ல சார், ஐடியாவே இல்ல”

“சும்மா கெஸ் தான பண்ணச் சொல்றேன், ஒரு நம்பர் சொல்லுங்க சார்”

என்ன சொன்னாலும் அதைச் சரியென்று அவர் ஒத்துக் கொள்ளும் மூடில் இல்லை என்றாலும், முடிந்த வரை சரியாகச் சொல்லுவோம் என்று ஆழ யோசித்து,

“ஒரு 60-65 ஆயிரம் ரூவா” என்றேன்.

“எதே..60 ஆயிரமா ? எந்த மூலைக்கு சார் ? 60 ஆயிரம்லாம் எந்த மூலைக்குங்கிறேன்” என்று என் ஆழ்ந்த யோசனையை லெஃப்டில் டீல் செய்தார்.

“ஒரு லட்ச ரூபாய்க்கு ஓட்டுவேன் சார் மாசத்துக்கு. கரெக்டா ப்ளான் பண்ணி ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு இத்தனை டிரிப்புன்னு டார்கெட் வச்சு அச்சீவ் பண்ணிருவேன்”

“ஆனா கமிசன்னு ஒண்ணு எடுக்குறான், அது போக ப்ளாட்ஃபார்ம் பீஸ்னு ஒரு நாளைக்கு நாப்பது ரூவா எடுக்குறான். ஒரே ஒரு சவாரி குடுத்தாக் கூட நாப்பது ரூவா எடுத்துர்றான். இதே மாதிரி ஒரு ப்ளாட்ஃபார்மை கவர்ன்மெண்டே எடுத்துப் பண்ணலாம்ல சார். எல்லாருக்கும் எவ்வளவு பெனிஃபிட்டா இருக்கும் ?” என்று வெகு நாட்களாக சேர்த்து வைத்து அத்தனை ஒப்பீனியன்களையும் என்னிடம் சேர்ப்பிக்கும் மும்முரத்தில் இருந்தார். அதற்குள் ஸ்டேசன் வந்துவிட்டதால்,

“பார்ப்போம் சார், பேசுனது சந்தோசம்” என்று நான் இறங்கிய போது,

“திருட்டுப் பசங்க சார் இந்த கார்ப்பரேட்டுக” என்று அடுத்த சவாரிக்கான நோட்டிஃபிகேசனை பார்த்தார்.

ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது அவர் பேசியவற்றை யோசித்துப் பார்த்தேன். தான் சாராத துறை குறித்த சற்றே தவறான புரிதல் தவிர்த்து, வேலை, குடும்பம், தொழில் வாய்ப்புகள் போன்ற மற்ற  விசயங்கள் அனைத்திலும் அவரது பார்வை அத்தனை சரியானது. மொத்த உரையாடலிலும் ஒரு முறை கூட தான் கஷ்டப்படுகிறேன் என்று சொல்லவில்லை, இரக்கம் தேடவில்லை. மாறாக, தனது உழைப்பையும், திறமையையும் வைத்து அவரது முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பவற்றை எப்டி எதிர்கொள்கிறார் என்று மட்டுமே சொன்னார். கடைசியாக இது போன்ற இயங்குதளங்களை எல்லாம் அரசு எடுத்து நடத்தலாம் என்று அவர் சொன்னதை யோசித்துப் பார்த்தால், அது போக்குவரத்து சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு  நல்ல  வாய்ப்பாக அமையும் என்றே தோன்றுகிறது. சவால்கள் இருக்கலாம், ஆனால் சாத்தியமற்றது இல்லை.

ஒரு சட்டமோ அல்லது திட்டமோ அறிவிக்கப்பட்டால், அவசரகதியில் ஆதரிக்காமல், அதனைத் தன்னோடு பொருத்திப் பார்ப்பதைத் தாண்டி, சமூக பொருளாதார அளவில் தனக்குக் கீழே இருக்கும் மக்களைப் பாதிக்குமா என்று யோசித்துப் பார்த்து, அதன் பின்னர் அதனை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்தல் அடிப்படை அறம். அந்த அறமும், நேர்மையும், உழைப்பும், சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த புரிதலும், எல்லாவற்றிற்கும் மேல் சுயமரியாதையும் கூடிய இசையரசுகளும், லோகேஷ்களும் நிறைந்த தமிழ்ச் சமூகத்தை, மதத்தையும், போலியான பேப்பர் முன்னேற்றத்தையும் வைத்து ஏமாற்றி விடலாம் என்று எடைபோடும் சிலரை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

It was a wholesome conversation, நன்றி லோகேஷ் 🙂

2 thoughts on “லோகேஷும் இசையரசும்

  1. லோகேஷ் மற்றும் இசையரசு வழியாக அறம் வளர்த்த நண்பன் சுந்தருக்கு வாழ்த்துக்கள்!

    Liked by 1 person

Leave a reply to JOEL Cancel reply