ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

ஷாருக்கானின் தொழில் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய “The Inner world of Shahrukh Khan” எனும் டாகுமெண்டரி 2004ல் பிபிசியால் தயாரித்து வெளியிடப்பட்டது. 2010 வாக்கில் முதன் முதலில் அதனைப் பார்த்தேன். இந்த 13 வருடங்களில் அதை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த டாகுமெண்டரிகளில் ஒன்று அது. எதைப் பற்றியும் சட்டை செய்யாத, பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஷாருக்கானின் இயல்புக்காக அது எனக்குப் பிடித்திருந்தாலும், நிஜத்துக்கு மிக அருகே அழைத்துச் சென்ற ஒரு படமாகத் தான் அதை நான் பார்க்கிறேன். ஒரு சினிமாக்காரரைப் பற்றி சற்றும் சினிமாத்தனம் இல்லாத ஒரு படமாகத் தான் எனக்கு அது தோன்றும். 

அந்த டாகுமெண்டரியில் மும்பைக்கும் தனக்குமான உறவைப் பற்றிப் பேசும் பொழுது, ஷாருக்கான் சொல்வார்,

“டெல்லியைச் சேர்ந்த நான், பிழைப்புத் தேடி மும்பைக்கு வந்தேன். வசிப்பதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை. சிறிய வீடுகள், அதிகப்படியான விலைவாசி என மும்பை, டெல்லிக்கு நேரெதிராக இருந்தது. சினிமாவில் எனது எதிர்காலம் கேள்விக்குறியாய் இருந்த நிலையில், எனது சகோதரியை பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும் இருந்தது. ஜெயிப்பதெல்லாம் பிற்பாடு, முதலில் இந்த நகரத்தில் நம்மால் வாழ்ந்து விட முடியுமா என்கிற சூழலில்,  ஒரு நாள் ஓபராய் ஓட்டலின் அருகே நின்று கொண்டிருந்த போது, அழுதேன். தாளாத சோகத்திலும், ஆத்திரத்திலும், “ஒரு நாள் வெல்வேன், வென்று இந்த நகரத்தை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்வேன்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதே போல் நான் ஜெயித்தும் விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தால், பத்து ஆண்டுகள் கழித்து, இத்தனை வெற்றிக்குப் பின்னர், இந்த நகரம்தான் என்னை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது” என்பார்.

இது மிகச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஒரு மனிதன் வேறொரு விசயம் தன்னை சொந்தமாக்கி கொண்டது என்று சொல்வதற்குப் பின், ஆழமான சிந்தனையும், விசாலமான புரிதலும் தேவை. கடைசியாக நீங்கள் எதனைச் சொந்தமாக்கிக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்வது எளிது. ஆனால் எது உங்களைச் சொந்தமாக்கிக் கொண்டது என்பது மிகச் சிக்கலான கேள்வி. உளவியல் தொடர்பானது. ஒருவர் தன் மேல் கொண்டிருக்கும் சுயபுரிதலின் அளவு சார்ந்தது. மொத்த டாகுமெண்டரியிலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி இதுதான். பல சவால்களைக் கடந்து வெற்றியடைந்த ஒரு மனிதன், தான் கொண்டிருந்த நம்பிக்கைக்கு நேரெதிர் புரிதலை அடைந்து, அதனை மனதார உணர்ந்து ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடு அது. ஒரு தோல்வி உங்கள் நம்பிக்கை தவறு என்று உணர்த்துவது இயல்பு. ஆனால், மாபெரும் வெற்றிக்குப் பின், உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறிய பின் ஒருவரின் நம்பிக்கை மாறுவது மிகவும் அரிதானது என்று தான் நினைக்கிறேன். ஒரு வேளை அத்தனை பக்குவம் இருப்பதால் தான், இந்த வெற்றி ஷாருக்கானுக்கு சாத்தியமானதோ என்று தோன்றும்.

இதே போன்றதொரு ஒரு புரிதலை, காலப்போக்கில் அந்த புரிதல் அடைந்த மாற்றத்தை பவா செல்லதுரை தனது “சொல் வழிப் பயணம்” பாட்காஸ்டில் கூறியிருந்தார். ஒரு அப்பாவைப் போல மகன் இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று சொல்லியிருப்பார். மகன்களுக்கு என்று தனி சிந்தனை வேண்டும் என்பார். “மகன்” என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார். பெரும்பாலும் மகள்கள் தங்களைப் போல் இருக்க வேண்டும் என்று அப்பாக்கள் விரும்புவதில்லை. மகள்களை அவர்கள் போக்கில் சிந்திக்க விட்டு, அவர்கள் போக்கில் வாழவிட்டு அதனை ரசிப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா மகன்களுக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதில்லை. அதனால் மகன் என்று குறிப்பிட்டுச் சொன்னாரா இல்லை அவரும் மகனாக இருந்ததால் அப்படிச் சொன்னாரா என்று தெரியவில்லை.

ஆரம்ப காலத்தில் கதைகள் எழுதிய போது, தனது பெயரில் அப்பாவின் இனிஷியல் சேர்க்காமல் எழுதியதாகச் சொல்வார். அவரது கதைகள் பிரபலமாகி, அவரைத் தேடி வாசகர்கள், சக எழுத்தாளர்கள் வீட்டுக்கு வரத் தொடங்கிய காலகட்டத்தில், “நான் உன் அப்பன் தான, என் இனிஷியல போட மாட்டியா” என்று அவரது அப்பா கேட்டிருக்கிறார். அதற்கு பவா, “நான் உன் தொடர்ச்சி இல்லப்பா” என்று பதிலளித்திருக்கிறார். ஆனால் பின்னாளில், தான் அப்பாவின் தொடர்ச்சியாக இல்லாமல் இருக்க முயற்சிருத்திருக்கிறேனே தவிர, எதோ ஒரு வகையில் தான் தனது அப்பாவின் தொடர்ச்சி தான் என்று உணர்ந்ததாகச் சொல்லியிருப்பார். அவரது இனிஷியலை போடாமல் நிரகாரித்ததற்காக வருந்தியிருக்கிறேன் என்பார். புரிய இயலாத அந்தத் தொடர்ச்சியின் தாக்கத்தை விளக்க, “அது அப்பாக்கள் நமக்குக் கொடுக்கும் கொடை, அப்பாக்கள் நமக்குத் தரும் பாக்கியம், அப்பாக்கள் நமக்குத் தரும் பெருமிதம்” என்று சிலாகித்திருப்பார். மூன்று சிறப்பான சொற்கள் – கொடை, பாக்கியம், பெருமிதம். தன் அப்பாவின் மீது ஒரு மகனுக்கு இருக்கக்கூடிய அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்திவிடக் கூடிய சொற்கள் இவை. மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள், 

பவா அதைச் சொல்லியவுடன் எனக்கு ஷாருக்கானின் டாகுமெண்டரிதான் நினைவுக்கு வந்தது. இரண்டு ஆளுமைகள் ஒரு விசயத்தில் தாங்கள் கொண்டிருந்த புரிதலை எப்படி நேரதிராக மாற்றிக்கொண்டுள்ளார்கள் என்பதைத் தாண்டி, அந்த மாற்றத்தை அவர்கள் விவரித்தது உணர்வுகளின் குவியலாக இருந்தது. ஒரு வேளை இருவரும் படைப்பாளிகள் என்பதனால் அந்த அழகியல் சாத்தியமனதா என்று தெரியவில்லை. இது போன்றதொரு புரிதல் மாற்றம் நம் எல்லோருடையை வாழ்விலும், வெவ்வேறு களங்களில், காலங்களில் நடந்திருக்கும் என்று நம்புகிறேன். அந்த மாற்றம் எப்போது தொடங்குகிறது என்று தெளிவாகத் தெரியும் முன்னர் அது நிகழ்ந்து விடுவதில்தான், அதன் அத்தனை அழகும் பொதிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

2 thoughts on “ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

Leave a reply to sundar bala Cancel reply