நிழல் யுத்தம்

1943-ல் இரண்டாம் உலகப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருந்தது. வட ஆப்பிரிக்காவைத் தன் வசப்படுத்திய நேச நாடுகள் (Allies), அடுத்ததாக நாஜிக்களின் பிடியிலிருந்த ஐரோப்பாவைக் குறிவைத்தன. ஆப்பிரிக்காவில் இருந்த டுனிசியா (Tunisia) அருகே நிலைகொண்டிருந்த நேச நாடுகளின் படைகள், ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான எளிதான வழி இத்தாலியில் இருந்த சிசிலி  (Sicily) தீவு. அந்தத் தீவினை, ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சில் ‘அச்சு நாடுகளின் மென்மையான அடிவயிறு’ (Soft underbelly) என்று வர்ணித்தார். அங்கே அடித்தால், ஜெர்மனியின் ஆதிக்கத்துக்கு அதிக பாதிப்பு உண்டாகும் என்பதால், சர்ச்சில் அப்படிச் சொன்னார். நேச நாடுகளின் அடுத்த அடி அங்கே விழும் என்பதைத் துல்லியமாகக் கணித்து, அங்கு தனது படைகளைக் குவிக்க நாஜி உளவுத்துறையும் இரவு பகலாக வேலை செய்துகொண்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏப்ரல் 30, 1943 அன்று விடியற்காலையில், ஸ்பெயினின் ஹுவெல்வா (Huelva) அருகே அட்லாண்டிக் கடலில், ஸ்பானிய மீனவர் தனது படகைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு சடலத்தைக் கண்டெடுத்தார். பிரிட்டனின் ராயல் மெரைன் சீருடை அணிந்த அந்தச் சடலம், ஒரு லைஃப் ஜாக்கெட் உதவியுடன் மிதந்து கொண்டிருந்தது.  அந்தச் சடலத்தின் இடது கையில் ஒரு கருப்பு லெதர் சூட்கேஸ், ஒரு இரும்புச் சங்கிலியால் அவரது மணிக்கட்டுடன் பிணைக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு சடலம் கிடைத்த தகவல் கடற்கரையில் இருந்த ஹுவெல்வா நகரத்தின் அதிகாரிகளுக்குச் சென்றடைந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தாலும், அதன் துறைமுக நகரமான ஹுவெல்வாவில் நாஜி உளவுத்துறையான ‘அப்வேர்’ (Abwehr) அமைப்பின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஜிப்ரால்டருக்கு (Gibraltar) மிக அருகாமையில் ஹுவெல்வா அமைந்திருந்தது, அதனை நாஜிக்களின் உளவு வேலைகளுக்கான ஒரு முக்கிய மையமாக மாற்றியிருந்தது. இப்படி பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கடற்படை அதிகாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட செய்தி, காட்டுத்தீயாகப் பரவி, உள்ளூர் நாஜி ஏஜெண்ட் அடோல்ஃப் கிளாஸின் காதுகளுக்குச் சென்றது.

நாஜி ஏஜென்ட்கள் அந்தச் சடலத்தை ஸ்பானிய அதிகாரிகளிடமிருந்து தந்திரமாகப் பெற்றனர், அந்த சடலத்துடன் இணைக்கப்பட்டிருந்த சூட்கேஸைத் திறந்தபோது, அதிலிருந்த நேச நாடுகளின் அடுத்த கட்டப் போர் வியூகம் குறித்த விவரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக, லெப்டினன்ட் ஜெனரல் ஆர்ச்சிபால்ட், ஜெனரல் அலெக்சாண்டருக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தில், “நாம் சிசிலி (Sicily) மீதுதான் தாக்கப் போகிறோம் என்று அந்த ஜெர்மானியர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது உண்மையான இலக்கு கிரீஸ் (Greece) மற்றும் சார்டினியா (Sardinia) தான்” என்று ஜெனரல் ஆர்ச்சிபால்ட் எழுதியிருந்தார். மேலதிகமாக, அந்தச் சடலம் மேஜர் வில்லியம் மார்ட்டின் எனும் பிரிட்டன் அதிகாரியினுடையது என்பதை சூட்கேசில் இருந்த மற்ற ஆவணங்களில் இருந்து தெரிந்து கொண்டனர். அதோடு சேர்த்து, சில தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய காகிதங்களும், அவரது காதலியின் புகைப்படமும் இருந்தன. ஒரு பிரிட்டிஷ் உயர் அதிகாரி, மிக முக்கியமான ஆவணங்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.  நல்வாய்ப்பாக சடலம் ஜெர்மானியர்கள் கையில் சிக்கியிருந்தது. எதிராளியின் அடுத்தகட்ட நகர்வை அவர்கள் நிகழ்த்தும் முன்பே அறிந்துகொள்வதை விட, ஒரு போரில் வேறென்ன பேராயுதம் இருந்துவிட முடியும் ?

பெர்லினில் இருந்த நாஜி உளவுத்துறை ஆய்வாளர்கள் இந்த ஆவணங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்தனர். கையெழுத்துகள், காகிதத்தின் தரம் என்று அதில் இருந்த அனைத்தும் ஆராயப்பட்டன. அதிலிருந்த தகவல்களின் உறுதித் தன்மையின் மீது நாஜி உளவுத்துறைக்கு நம்பிக்கை வந்தது. தகவல் ஹிட்லரைச் சென்றடைந்ததும், சிசிலியின் மீது நேச நாடுகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதைப் போல் இருந்த சூழல்,  ஒரு கண்துடைப்பு என்பதை உணர்ந்தார். உடனடியாக, ஆயிரக்கணக்கான வீரர்களை சிசிலியிலிருந்து அகற்றி, கிரீஸ் மற்றும் சார்டினியாவிற்கு மாற்ற உத்தரவிட்டார். சிசிலி மிக முக்கியமான தளம் ஆதலால், ஜெர்மனியின் மிக வலிமையான பீரங்கிப் படையான ‘1st Panzer Division’  அங்கே நிலைகொண்டிருந்தது. இருந்தாலும், சார்டினியாவுக்கு வரும் நேச நாடுகளின் படைகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியைத் தர விரும்பியதால், அந்த Panzer Division-ஐயும் கிரீஸ் மற்றும் சார்டினியாவிற்கு மாற்ற உத்தரவிட்டார், ஹிட்லர். சார்டினியா சென்றடைந்த ஹிட்லரின் படைகள், தங்களிடம் வசமாக சிக்கிக் கொள்ளப் போகும் நேச நாடுகளின் படைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

ஜூலை 10, 1943 அன்று, நேச நாடுகள் ‘ஆப்ரேஷன் ஹஸ்கி’ எனும் பெயரில் சிசிலி மீது  படையெடுத்தன. ஹிட்லர் தனது சிறந்த படைகளை சார்டினியாவுக்கு அனுப்பியிருந்ததால், எண்ணிக்கை மற்றும் வலு இரண்டிலும் குறைவான நாஜிப் படைகளே அங்கே இருந்தன. சிசிலி மிக எளிதாக வீழ்ந்தது. சார்டினியாவில் காத்துக் கொண்டிருந்த நாஜிப் படைகள், காத்துக் கொண்டே இருந்தன. நேச நாடுகள் வரவேயில்லை. பிரிட்டன் தங்களை ஏமாற்றிவிட்டதை உணர நாஜிப் படைகளுக்கு நேரம் ஆனது. தாக்குதல் தொடங்கி சில மணி நேரங்கள் கழித்துக்கூட, “உண்மையான தாக்குதல் இன்னும் வரவில்லை, சிசிலியில் நடப்பது ஒரு திசைதிருப்பல் தான்”  என்று நம்பிக்கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் மிகச்சிறந்த போர்த்தந்திரத்தை பிரிட்டன் நிகழ்த்தியிருந்தது.

ஹுவெல்வா அருகே கண்டெடுக்கப்பட்ட அந்தச் சடலம் ஒரு ராயல் மெரைன் அதிகாரியுடையது அல்ல. அந்த சூட்கேசில் இருந்த ஆவணங்களோ, கடிதங்களோ உண்மையானவை அல்ல. அனைத்திற்கும் மேலாக, அந்த ‘மேஜர் வில்லியம் மார்ட்டின்’ என்ற மனிதனே இவ்வுலகில் கிடையாது. இது லண்டனின் MI-5 ஆல் தீட்டப்பட்ட ‘ஆப்ரேஷன் மின்ஸ்மீட்’ (Operation Mincemeat) எனும் அசாத்தியமான திசைதிருப்பல் திட்டம். இந்தத் திட்டத்தின் மூளை MI5-ன் அதிகாரிகளாகப் பணியாற்றிய சார்லஸ் சோல்மண்டலி (Charles Cholmondeley) மற்றும் ஈவன் மாண்டேகு (Ewen Montagu). சோல்மண்டலி “Twenty Committee” (XX) எனும் இரகசியக் குழுவின் உறுப்பினர். எதிரியை ‘டபுள் கிராஸ்’ செய்வது இந்தக் குழுவின் வேலை. ஈவன் மாண்டேகு கடற்படை உளவு அதிகாரி. சோல்மண்டலி முதலில் ஒரு சடலத்துடன் பழுதான ஒரு ரேடியோவை அனுப்பி ஜெர்மானியர்களைக் குழப்பலாம் என்றுதான்  நினைத்திருந்தார். ஆனால், இந்தப் போலிப் பிம்பத்தை ஒரு முழுமையான திட்டமாக மாற்றியவர் ஈவன் மாண்டேகு (Ewen Montagu) எனும் கடற்படை உளவு அதிகாரி. ஒரு ரேடியோவை விட, ஒரு சடலத்தின் கையில் கிடைக்கும் ஆவணம் அதிக நம்பகத்தன்மையை உருவாக்கும் என்று அவர் நம்பினார்.

இந்த ஆபரேஷனுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த அந்தச் சடலம், லண்டனின் தெருவோரம் ஒன்றில், எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்து கொண்ட கிளிண்டர் மைக்கேல் (Glyndwr Michael) என்பவருடையது. இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி ரோட்டில் பிச்சைக்காரராகத் திரிந்தவர், மைக்கேல். அவரை மேஜர் வில்லியம் மார்ட்டின் எனும் மெரைன் வீரராக மாற்றியது இந்தத் திட்டம். வெறும் இராணுவச் சீருடையை அந்தச் சடலத்தின் மீது போர்த்திவிடுவதால் மட்டும் இந்தத் திட்டம் முழுமையடைந்து விடாது என்பதை மாண்டேகு நன்கு உணர்ந்திருந்தார். பொய்யான ஒரு மனிதனுக்கு, மெய்யான ஒரு வாழ்க்கையையும், அவனுக்கான உணர்ச்சிகளையும், உறவுகளையும் கற்பனையாகச் செதுக்கி, அந்தச் சடலத்திற்கு ஒரு ‘வாழும் அடையாளத்தை’ வழங்கும் மிக நுட்பமான பணி அங்கு தேவையிருந்தது.

மார்ட்டினுக்கான கடந்தகாலத்தை நம்பகத்தன்மை உடையதாய் மாற்ற, அவரது சூட்கேசில்  ‘பாம்’ (Pam) என்ற ஒரு கற்பனை காதலியின் புகைப்படத்தையும், அவள் எழுதியதைப் போன்ற காதல் கடிதங்களையும் வைத்தார், மாண்டேகு. அவளுக்குப் பரிசளிக்க, மைக்கேல் மோதிரம் வாங்கியதைப் போல தோற்றமளிக்க ஒரு மோதிர ரசீது, அவரது பொருளாதார நிலையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்ட, ஒரு  வங்கி அனுப்பிய ஓவர்டிராஃப்ட் கடிதம் என ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை அந்தச் சடலத்தின் மீது போர்த்தினார். யாரும் உரிமை கோராமல், அனாதைப் பிணமாகக் கிடந்த மைக்கேல், இப்போது ‘மேஜர் வில்லியம் மார்ட்டின்’ ஆக மறுபிறவி எடுத்திருந்தார். இந்த திட்டத்தின் மையக்கருவாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆர்ச்சிபால்ட், ஜெனரல் அலெக்சாண்டருக்கு எழுதியதாக உருவாக்கப்பட்ட கடிதங்கள் கூட, ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் போலன்றி, இரு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் போல மிக இயல்பாக வடிவமைக்கப்பட்டன. 

இத்தோடு நின்றுவிடவில்லை. ஸ்பெயினுக்கு அந்தச் சடலத்தை அனுப்பிய பிறகு, லண்டனில் இருந்த மாண்டேகு இந்த நாடகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார். மார்ட்டின் இறந்த செய்தியை பிரிட்டிஷ் செய்தித்தாள்களில் வரச்செய்தார். மேலும், ஸ்பெயினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு “மிகவும் ரகசியமான ஆவணங்கள் மார்ட்டினுடன் காணாமல் போயுள்ளன, அவற்றைக் கண்டுபிடித்து, பிரிக்காமல் உடனடியாகத் திரும்ப அனுப்பவும்” என்று பல அவசர தந்திச் செய்திகளை அனுப்பினார். இந்தத் தந்திகள் அனைத்தும் ஜெர்மானியர்களால் இடைமறிக்கப்பட்டுப் படிக்கப்படும் என்பதை அறிந்தே இதைச் செய்தார். பிரிட்டிஷ் அதிகாரிகளின் இந்த பதற்றம் அந்த ஆவணங்கள் உண்மையானவை என்பதை ஜெர்மானியர்களுக்கு அடித்துச் சொன்னது. ஜெர்மானியர்களை திசைதிருப்புவதற்காக ஆடப்பட்ட ஒரு அட்டகாசமான நாடகத்தை அவர்கள் முழுமையாக நம்பினர். “Mincemeat swallowed whole” “மின்ஸ்மீட் முழுமையாக விழுங்கப்பட்டது” என்று மாண்டேகு வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ரகசியச் செய்தி அனுப்பியதாகக் கூட தகவல்கள் உண்டு.

மேஜர் மார்ட்டினின் உடல், HMS Seraph என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டது. கடலின் நடுவே மார்ட்டின் உடலுக்கு ஒரு லைஃப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டது. அவர் ஒரு விமான விபத்தில் சிக்கித் தப்பித்துக் கடலில் மிதந்து வந்தது போன்ற தோற்றத்தை இது உருவாக்கியது. ஸ்பெயின் கடலோரத்தில் ஹுவெல்வா எனும் ஊரின் அருகே, அதனைக் கடலில் மிதக்க விட்டனர். மறுநாள் காலை, ஒரு ஸ்பானிய மீனவர் அந்த உடலைக் கண்டெடுத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளால், சிசிலியில் பிரிட்டன் மிகக் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இத்தாலியின் வீழ்ச்சிக்கும், முசோலினியின் சிறைபிடிப்பிற்கும் வழிவகுத்தது. பிரிட்டன் தன்னுடைய இந்த நிழல் யுத்தத்தின் உதவியால், ஜெர்மனியுடனான நிஜ யுத்தத்தில் எளிதாக வென்றது.

இப்படியொரு முயற்சிக்கான உந்துதல் 1939-ல் அட்மிரல் ஜான் காட்ஃப்ரே எழுதிய ‘ட்ரௌட் மெமோ’ (Trout Memo) எனும் குறிப்பிலிருந்து தான் MI-க்குக் கிடைத்தது. அந்தப் புகழ்பெற்ற குறிப்பை எழுதியதில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்போது ஜானின் உதவியாளராக இருந்த இயன் ஃபிளெமிங் (Ian Fleming). இதே இயன் ஃபிளெமிங் தான், பிற்காலத்தில் உலகம் கொண்டாடும் ஜேம்ஸ் பாண்ட் 007 எனும் காலத்தால் அழியாத கதாபாத்திரத்தை உருவாக்கினார்.  தன் வாழ்நாளில் எதையும்  சாதித்திராத, கிளிண்டர் மைக்கேல் என்ற ஒரு ஆதரவற்ற மனிதன், தனது மரணத்திற்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிரைக் காப்பாற்றிய ஒரு மாபெரும் வீரனாக மாறினார். ஸ்பெயினின் ஹுவெல்வாவில் மேஜர் வில்லியம் மார்ட்டின் என்ற பெயரில் முழு இராணுவ மரியாதையுடன் அவர் அடக்கம் செய்யப்பட்டார். 1998-ல் தான் பிரிட்டிஷ் அரசு அவரது உண்மை அடையாளத்தை வெளிப்படுத்தியது. இன்று அவரது கல்லறையில், “கிளிண்டர் மைக்கேல்… வில்லியம் மார்ட்டினாகச் சேவையாற்றியவர்” என்று சேர்க்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில், எதிரியின் அறிவைக் கொண்டே அவனை வீழ்த்தும் தந்திரமே வெற்றியைத் தீர்மானிக்கிறது. அதிகாரத்தின் வலிமையை விட அறிவின் கூர்மை மேலானது என்பதை உணர்த்த, ஒரு சாதாரண சடலத்தை வைத்து, உலகப் போரின் போக்கினை மாற்றிய இந்த நிகழ்வே சான்று.

One thought on “நிழல் யுத்தம்

Leave a comment