வால்கெய்ரி

சனநாயகத்தில் அதிகாரம் என்பது மக்களால் வழங்கப்படுகிற ஒரு தற்காலிகப் பொறுப்பு. அதில் அதிகார மாற்றம் என்பது ஒரு சட்டப்பூர்வமான, அமைதியான வழிமுறையாகவே இருக்கிறது. ஒருமுறை அந்த அதிகாரத்தினை இழந்தாலும், திரும்ப அதனை அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. ஆனால், ஒரு சர்வாதிகார ஆட்சியில் அல்லது முடியாட்சியில், அதிகாரம் என்பது ஒரு தனிமனிதனின் வலு சார்ந்தது. அதனை இழப்பது பெரும்பாலும் அந்தத் தனிமனிதனின் வீழ்ச்சியில் மட்டுமே முடிந்திருக்கிறது. தங்களை ஒரு மேலான சக்தியாகக் கருதும் அதே வேளையில், தங்களுக்கு நெருக்கமானவர்களே தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவார்களோ அல்லது பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுத் தங்களது அதிகாரத்தைப் பறித்துவிடுவார்களோ என்ற ஆழ்ந்த அச்சம் சர்வாதிகாரிகளுக்கு எப்போதும் நிழலாடிக் கொண்டே இருக்கும். அதனால்தான், சனநாயக நாடுகள் மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டுவதில் கவனம் செலுத்தும்போது, சர்வாதிகாரிகள் தற்காப்புத் திட்டங்களைத் (Contingency Plans) தீட்டுவதில் குறியாக இருந்திருக்கிறார்கள். மனிதனுக்கே உரிய ஆயிரம் ஆண்டு கால தற்காப்பு உணர்வின் (Survival instinct) வெளிப்பாடாக, எதிர்பாராத நெருக்கடி காலங்களில் தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் மிகவும் விரிவான மற்றும் ரகசியமான பாதுகாப்புத் திட்டங்களை எப்போதும் கைவசம் வைத்திருப்பார்கள். அப்படி தன் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஹிட்லர்  உருவாக்கிய திட்டம் தான் “வால்கெய்ரி”.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியில் ஏதேனும் மிகப்பெரிய உள்நாட்டுக் குழப்பங்கள் விளைந்தால்—உதாரணமாக, நேச நாடுகளின் கடும் தாக்குதலைப் பயன்படுத்தி, ஹிட்லரைப் பிடிக்காதவர்கள் கிளர்ச்சி செய்தாலோ அல்லது மக்கள்  புரட்சியில் ஈடுபட்டாலோ—அதை ஒடுக்குவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஜெர்மனியின் ‘ரிசர்வ் ஆர்மி’ (Reserve Army) உடனடியாகச் செயல்பட்டு, நாட்டின் முக்கிய அரசு அலுவலகங்கள், வானொலி நிலையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என்பதே இதன் அசல் நோக்கம். சுருக்கமாகச் சொன்னால், நாஜி அரசுக்கு ஆபத்து வரும்போது அதைக் காப்பதற்கான ஒரு பாதுகாப்புக் கவசமாகவே இது உருவாக்கப்பட்டது. “ரிசர்வ் ஆர்மி”, ஹிட்லரின் SS (பாதுகாப்புப் படை), Gestapo (ரகசிய போலீஸ்) போன்று தனி ஒரு அமைப்பாக செயல்பட்டது. SS-ம் Gestapo-வும் ஹிட்லரின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அசாதாரண சூழலில் தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஹிட்லர் உருவாக்கிய இப்படி ஒரு செயல்திட்டத்தினை, அவருக்கு எதிராகத் திருப்ப சிலர் முடிவு செய்தனர்.

ஃபிரெடெரிக் ஓல்பிரிட்ச் (Friedrich Olbricht), ஹென்னிங் வான் ட்ரெஸ்கோ (Henning von Tresckow), லுட்விக் பெக்(Ludwig Beck) ஆகிய உயர் இராணுவ அதிகாரிகள்,  ஹிட்லருக்கு எதிரான சதியில் ஈடுபட்டிருந்தனர். ஹிட்லரை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்து விட்டு, ஒரு புதிய அரசினை அமைத்து, அதன் மூலம் நேசநாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஹிட்லரின் அதிகார ஆசையால் உருவான இந்தப் போர் ஜெர்மனிக்கு எந்த வகையிலும் நன்மை பயக்கப் போவதில்லை என்பது அவர்கள் எண்ணம். இந்த சதித் திட்டத்தில் அவர்களுடன் கிளாஸ் வான் ஸ்டாஃபென்பெர்க் (Claus von Stauffenberg) எனும் இளைஞனும் இணைந்து கொண்டார். ஜெர்மன் இராணுவத்தின் உயரிய ‘அயன் கிராஸ்’ (Iron Cross) விருது பெற்ற கர்னல் ஸ்டாஃபென்பெர்க், ஆப்பிரிக்கப் போர்க்களத்தில் தனது ஒரு கண்ணையும், ஒரு கையையும் இழந்தவர். அவரது விசுவாசம் ஹிட்லர் எனும் தனிமனிதன் மீதன்றி, தனது தாய்நாடான ஜெர்மனி மீதே இருந்தது. ஹிட்லரின் அதிகார நிழலில் வாழ்வதை விட, அழிவின் விளிம்பிலிருந்த ஜெர்மனியை மீட்டெடுப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

ஸ்டாஃபென்பெர்க் தவிர மற்ற அதிகாரிகள், ஹிட்லரைக் கொன்றுவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே இருந்தார்களே தவிர, அதற்குப் பிறகு வரக்கூடிய பிரச்சனைகளைக் குறித்து யோசித்திருக்கவில்லை. ஹிட்லரின் மீது அதீத விசுவாசம் கொண்ட SS, Gestapo மற்றும் “ரிசர்வ் ஆர்மி”யை எப்படி கையாளுவது என்பது குறித்த எந்தத் திட்டங்களும் அவர்களிடம் இல்லை. இதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாஃபென்பெர்க், வேறு ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தார். ஹிட்லருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ‘எஸ்.எஸ்’ (SS) படைப்பிரிவும், Gestapoவும் முழுவீச்சில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கும். வால்கெய்ரி திட்டத்தின் படி, “ரிசர்வ் ஆர்மி”யும் அவர்களோடு சேர்ந்து கொண்டால் மேலும் சிக்கல். ஹிட்லரைக் கொன்றாலும்,  நாஜி மேல்மட்ட தலைவர்களான ஹிம்லர், கோரிங், கோயபெல்ஸ் போன்றோரிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்க இயலாது.  எனவே, ‘வால்கெய்ரி’ திட்டத்தின் விதிகளை மாற்றியமைத்து அதனை ஹிட்லரின் அதிகார வட்டத்திற்கு எதிராக பயன்படுத்த நினைத்தார் ஸ்டாஃபென்பெர்க்.

வால்கெய்ரியின் அசல் திட்டத்தின்படி, உள்நாட்டு நெருக்கடி ஏற்படும் பொழுது, ஹிட்லரின் நேரடி உத்தரவு அல்லது அவரது நாஜி உயர்மட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி “ரிசர்வ் ஆர்மி” எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஸ்டாஃபென்பெர்க் இதில் செய்த முக்கிய மாற்றம்—”ஹிட்லர் இறந்துவிட்டார்” என்ற செய்தி வந்து, வால்கெய்ரி செயல்பாட்டுக்கு வந்தால், “ரிசர்வ் ஆர்மி” யின் முழு அதிகாரமும் ‘பென்ட்லர்ப்ளாக்’ (Bendlerblock) தலைமையகத்தில் இருந்த கிளர்ச்சியாளர்களின் கைக்கு வருமாறு ஆணைகளை மாற்றி எழுதினார். மேலும், திருத்தப்பட்ட இந்த ஆணைகள், ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு உடனடியாக ‘எஸ்.எஸ்’ (SS) படைப்பிரிவு மற்றும் நாஜி கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைக் கைது செய்யும் அதிகாரத்தை “ரிசர்வ் ஆர்மி” க்கு வழங்கின.

ஹிட்லர் இறந்துவிட்டால், SS-ம், நாஜி உயர் அதிகாரிகளும் எடுக்கப் போகும் பாதுகாப்புப் பதில் நடவடிக்கைகளை, நாஜி கட்சிக்குள்ளேயே வெடித்த ஒரு கிளர்ச்சியாகச் சித்தரித்து, “ரிசர்வ் ஆர்மி”யை வைத்து அவர்களை கைது செய்வது தான் திட்டம். ஹிட்லரின் மீது தனிப்பட்ட விசுவாசப் பிரமாணம் (Oath of loyalty) செய்திருந்த அந்த “ரிசர்வ் ஆர்மி” யின் வீரர்கள், தாங்கள் அரசாங்கத்தைக் காப்பதாக நம்பி, உண்மையில் அதே அரசாங்கத்தை வீழ்த்தும் செயலில் ஈடுபடுமாறு இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. எதிராளியின் பாதுகாப்பு வியூகத்தையே, அவர்களுக்கு எதிரான தாக்குதல் வியூகமாக மாற்றிய அசாத்திய மதிநுட்பம். 

ஸ்டாஃபென்பெர்க் “ரிசர்வ் ஆர்மியின்” படைத்தலைவராக நியமிக்கப்பட்டு இருந்ததால், அவரால் இந்தத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய முடிந்தது. மிக நுணுக்கமான மாற்றங்களை புகுத்தி, ஹிட்லரிடமே இதற்கு ஒப்புதல் வாங்கியது அவரது சாமர்த்தியம். ஜெர்மனிக்காக அவர் செய்திருந்த தியாகமும், அவரது இராணுவ பங்களிப்பும் ஹிட்லருக்கு அவர் மீது நம்பிக்கை அளித்திருக்கக் கூடும். கிட்டத்தட்ட தனது மரண சாசனத்தில் ஹிட்லர் தானே கையெழுத்திட்டார் என்று கூறலாம். மாற்றியமைக்கப்பட்ட “வால்கெய்ரி” ஒப்புதல் ஆன பிற்பாடு, ஹிட்லரைக் கொல்வது மட்டுமே மீதம் இருந்தது. அதற்கான வேலையில் ஸ்டாஃபென்பெர்க் இறங்கினார்.

ஜூலை 20, 1944 அன்று கிழக்கு பிரஷ்யாவில் இருந்த Wolf’s Lair எனும் ஹிட்லரின் ரகசியத் தளத்தில் வழக்கமான இராணுவ நிலை ஆய்வுக் கூட்டம் (Daily Situation Briefing)  நடந்தது. கூட்டம். கிழக்கே நடந்து கொண்டிருந்த போரில், சோவியத் யூனியனின் முன்னேற்றம் மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு நிலை குறித்து விவாதிக்க ஹிட்லர் தனது உயர்மட்ட அதிகாரிகளை அழைத்திருந்தார். ‘ரிசர்வ் ஆர்மி’யின் புதிய ஆட்கள் சேர்ப்பு மற்றும் தயார்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்த கர்னல் ஸ்டாஃபென்பெர்க், தனது பையில் இரண்டு பிளாஸ்டிக் வெடிகுண்டுகளையும் கொண்டு சென்றிருந்தார். Wolf’s Lair-ல் இருந்த சன்னல்கள் அற்ற, கான்கிரீட் கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும் பொழுது, வெடிகுண்டு அடங்கிய பையினை அங்கே வைத்துவிட்டு திரும்பிவிடுவது தான் ஸ்டாஃபென்பெர்க்-இன் திட்டமாக இருந்தது. சன்னல்கள் அற்ற கான்கிரீட் கட்டிடம் குண்டு வெடிப்பின் தாக்கத்தை (Blast Pressure) அதிமாக்கும் என்பதால், அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஸ்டாஃபென்பெர்க் உடைமாற்றும் அறைக்குச் சென்று, வெடிகுண்டுகளில் டெட்டனேட்டரைப் பொருத்தினார். தனது உடல் ஊனத்தால் குண்டுகளைத் தயார் செய்ய அவருக்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. கூட்டத்திற்கான நேரம் நெருங்கியதால், அவரால் ஒரு குண்டை மட்டுமே தயார் செய்ய முடிந்தது. இருந்தாலும் அந்த வெடிபொருளின் வீரியம், மற்றும் கான்கிரீட்டினால் கிடைக்கும் தாக்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அந்த ஒரு வெடிகுண்டு போதும் என்று முடிவு செய்தார்.

ஆனால், அன்று நிலவிய கடுமையான கோடை வெப்பம் காரணமாக, கடைசி நேரத்தில் கூட்டம்,  மரத்தினால் ஆன ஒரு தற்காலிகக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் கூட்டத்திற்குச் சென்ற ஸ்டாஃபென்பெர்க், கூட்டம் நடந்த மர மேசையின் கீழே, ஹிட்லருக்கு அருகே, வெடிகுண்டு அடங்கிய பையினை வைத்துவிட்டுக் காத்திருந்தார். கூட்டத்தின் நடுவே ஸ்டாஃபென்பெர்கிற்கு ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொல்லிவைத்தாற் போல, தொலைபேசி அழைப்பு வந்தது. பேசுவதற்காக கூட்டத்தை விட்டு வெளியே வந்த ஸ்டாஃபென்பெர்க், கட்டிடத்தை விட்டு வெளியேறவும், கூட்டம் நடந்த அறை வெடித்துச் சிதறவும் சரியாக இருந்தது. ஏற்கனவே போட்டிருந்த திட்டப்படி, Wolf’s Lair-ன் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஸ்டாஃபென்பெர்க்-இன் ஆள் ஒருவர், ஹிட்லர் இறந்துவிட்ட தகவலை பெர்லினில் “ரிசர்வ் ஆர்மியி”ன் தலைமையகத்தில் இருந்த, ஃபிரெடெரிக் ஓல்பிரிட்ச்-க்கு சொல்லிவிட்டு, Wolf’s Lair- லிருந்து வெளியுலகிற்கு செல்லக்கூடிய அனைத்து தொலைதொடர்புகளையும் துண்டித்துவிட்டார். அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஸ்டாஃபென்பெர்க் பெர்லின் வந்தடைந்தார். “ஆபரேசன் வால்கெய்ரி” தொடங்கியது.

ஹிட்லர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட வால்கெய்ரி ஆணைகளின் படி, “ரிசர்வ் ஆர்மி” மற்ற படையினரையும், நாஜி உயரதிகாரிகளையும் கைது செய்யத் தொடங்கியது. அதன்படி, “ரிசர்வ் ஆர்மி”யின் தளபதி மேஜர் ஓட்டோ ரெமர் (Major Otto Remer) என்பவர், ஜெர்மனியின் பரப்புரை அமைச்சகத்தை தனது வீரர்களுடன் சுற்றி வளைத்தார். அமைச்சகத்தைக் கைப்பற்றி, அமைச்சரும், ஹிட்லரின் நெருங்கிய நண்பருமான ஜோசப் கோயபெல்ஸை கைது செய்வதே அவரது நோக்கம். எதிர்பாராதவிதமாக, தன்னைக் கைது செய்ய வந்த மேஜர் ரெமெரை, ஹிட்லருடன் நேரடியாக தொலைபேசியில் பேச வைத்தார், கோயபெல்ஸ். இறந்ததாகச் சொல்லப்பட்ட ஹிட்லர் தன்னிடம் பேசியதில் ரெமருக்கு அதிர்ச்சி. தாக்குதலில் தான் உயிர் தப்பியதைச் சொல்லி, கிளர்ச்சியை அடக்குமாறு ரெமருக்கு நேரடி ஆணைகளைப் பிறப்பித்தார் ஹிட்லர். ஹிட்லர் உயிரோடிருக்கிறார் என்பதை உணர்ந்த பின்னர், அவர் மீது தனிப்பட்ட விசுவாசப் பிரமாணம் எடுத்திருந்த அவரது “ரிசர்வ் ஆர்மி” ரெமரின் தலைமையில் கிளர்ச்சியாளர்களைத் கைது செய்யத் தொடங்கியது. ஸ்டாஃபென்பெர்க்-ஐ கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

Wolf’s Lair-ல் இருந்து ஸ்டாஃபென்பெர்க் வெளியேறிய சில நிமிடங்களில், மேஜையில் இருந்த வரைபடங்களைத் தெளிவாகப் பார்க்க விரும்பிய கர்னல் பிராண்ட் என்பவர், வெடுகுண்டு இருந்த பையினை மேஜையின் தடிமனான காலிற்குப் பின்னால் தள்ளி வைத்தார். குண்டு வெடித்ததில், அந்த அறை தரைமட்டமானது. மூன்று அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 100 அடி தூரத்தில் இருந்து புகையைக் கண்ட ஸ்டாஃபென்பெர்க், ஹிட்லர் இறந்துவிட்டதாகவே நம்பினார். ஆனால், அந்த மர அறையின் ஜன்னல்கள் குண்டு வெடிப்பின் அழுத்தத்தை வெளியேற்றிவிட்டதாலும், மேஜையின் தடிமனான மரச்சட்டம் ஒரு கேடயமாகச் செயல்பட்டதாலும், ஹிட்லர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். உடனடியாக தொலைதொடர்புகள் சரிசெய்யப் பட்டு, பெர்லினுக்கு தகவல் சொல்லப்பட்டது. இது தெரியாமல், ஸ்டாஃபென்பெர்க், ஓல்பிரிட்ச் ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். பெர்லினுக்கு தகவல் வந்து சேர்ந்ததும், “ரிசர்வ் ஆர்மி” இவர்களை முடக்கிக் கைது செய்தது. கிளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் அன்றே சுட்டுக் கொல்லப்பட்டனர். “Es lebe das heilige Deutschland!” (Long live sacred Germany) என்றபடி உயிர் நீத்தார் ஸ்டாஃபென்பெர்க்.

அன்றைக்கு துரோகியாக பார்க்கப்பட்டாலும், இன்று ஜெர்மனியின் உண்மையான நாட்டுப்பற்றாளராகவும், ஹிட்லரின் அராஜகத்தை எதிர்த்த மிக முக்கியமான முகமாகவும் ஸ்டாஃபென்பெர்க் போற்றப்படுகிறார், ஸ்டாஃபென்பெர்க். பெர்லினில் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட ‘பென்ட்லர்ப்ளாக்’ (Bendlerblock) வீதி, இன்று ‘ஸ்டாஃபென்பெர்க் வீதி’ (Stauffenbergstraße) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் விசுவாசம் ஒரு தனிமனிதனுக்குகாக அல்லாமல், மக்களுக்காகவும், மனிதாபிமானத்திற்கும் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்டாஃபென்பெர்க் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

சர்வாதிகாரத்தில் மட்டுமன்றி நடப்பு சனநாயகத்திலும் இது பொருந்தும். தனிமனித போற்றுதலை விடுத்து, கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் ஒருவரை ஆதரிப்பதே சரியென்று நினைக்கிறேன். ஒருவரை நமக்குப் பிடிக்கும் என்ற காரணத்தினாலேயே, கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லாத பட்சத்திலும், அவருக்கு அதிகாரத்தை அளிக்க எத்தனிப்பதைவிட பெரிய முட்டாள்தனம் இல்லை. இப்படிப்பட்ட ஆட்களும், சனநாயகத்தில் வென்று பதவிக்கு வர முடியும். அவ்வாறு பதவிக்கு வருபவர்கள், ஒரு போதும் அதை பொறுப்பாகவோ கடமையாகவோ உணர்வதில்லை, வெறும் அதிகாரமாக மட்டுமே பார்க்கிறார்கள். அது எல்லா வகையிலும் சாதாரண மக்களுக்குக் கேடாகவே முடியும் என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

தவிர, ஒருவரைப் பிடித்துவிட்டது என்பதற்காக, அவர் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்தும் போக்கும் இன்று பரவலாகக் காணப்படுகிறது. தான் விரும்பும் நபர் செய்வதைச் சரி என்று நிறுவுவதற்கு நாம் செலவிடும் உழைப்பில் பாதியைப் பகுத்தறியப் (Critical Thinking) பயன்படுத்தினால் கூட, சரி எது தவறு எது என்பது தெளிவாக விளங்கிவிடும். ‘எனது தேர்வு ஒருபோதும் தவறாக இருந்துவிடக் கூடாது’ என்கிற அகந்தையே (ego) இந்தத் தெளிவைத் தடுக்கிறது. அது மனித இயல்பு. ஆனால், While it is important to have strong opinions, it is very important to loosely hold on to those என்பதையும் நினைவில் கொள்ளுதல் அவசியம். கவியரசு கண்ணதாசன் பாடியது போல

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் 

தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் 

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் 

எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்”

என்று தனது கருத்தில் உறுதியாக நிற்பது எவ்வளவு முக்கியமோ, புதிய தகவல்களின் அடிப்படையில் அதை மாற்றிக்கொள்ளும் பக்குவமும் அவ்வளவு முக்கியம். இதையே உளவியலில் Cognitive Flexibility (சிந்தனையில் நெகிழ்வுத்தன்மை) என்கிறார்கள். தங்களது கருத்தில் கண்மூடித்தனமான பிடிவாதம் கொண்டவர்களால், தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொள்ள முடியாது. அதனால் பிறர் தங்களை விமர்சிப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. இத்தகையோர், மறுக்க முடியாத ‘உண்மை’ என்று ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் பிம்பங்களை வெறும் நான்கு கேள்விகளுக்குள் நொறுக்கிவிட முடியும்.

“The sign of intelligence is being able to change your mind when presented with new facts.” என்பார்கள். புதிய உண்மைகள் முன்வைக்கப்படும்போது, அதற்கு ஏற்ப நமது கருத்தை மாற்றிக்கொள்ளும் திறனே அறிவுக்கூர்மையின் அடையாளம். நம் அடையாளம் எதுவென்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம், எப்போதும் நம்மிடமே இருக்கிறது.

Leave a comment