பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் போலவே ஒரு பெரிய பேரரசை உருவாக்க வேண்டும் என்று ஜப்பானுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. அதற்காக 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளில் இறங்கியது. இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தி, கடல் சார்ந்த வர்த்தக வழிகளை உருவாக்குவதன் மூலம் தங்கள் குறிக்கோளை அடைய முடியும் என்று நம்பினார்கள். ஆனால், ஜப்பானின் சொந்த நிலப்பரப்பில் இரும்பு, நிலக்கரி, எண்ணெய் ஆகிய இயற்கை வளங்கள் இல்லை. ஒரு தொழில்மயமான நாடாக வளரவும், நவீன முறையில் ராணுவத்தைப் பராமரிக்கவும் இந்த வளங்கள் ஜப்பானுக்குத் தேவைப்பட்டன. இதன் காரணமாக, ஜப்பான் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
வடகிழக்கு சீனாவின் ஒரு பகுதியாக இருந்த மஞ்சூரியா, இரும்பு மற்றும் நிலக்கரி வளம் நிறைந்த நிலப்பரப்பு. தனக்கு அருகில் இருந்ததால், ஜப்பான் முதலில் தாக்கியது மஞ்சூரியாவைத் தான். அத்தனை சிறிய நாடான ஜப்பான், தன்னைவிட பன்மடங்கு பெரிய, வலுவான சீனாவின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க முயன்றது ஆச்சரியமே. பேராசை எப்பேர்ப்பட்ட செயல்களுக்கும் நியாயம் கற்பிக்கும் வல்லமை கொண்டது என்பது இது போன்ற சில நிகழ்வுகளில் இருந்துதான் எளிதாக விளங்குகிறது. ஜப்பானின் தாக்குதலுக்கு சீனா பதிலடி கொடுக்க, இது முழு போராக மாறி, அதிக காலத்துக்கு நீடித்தது. இது பொருளாதார ரீதியான அழுத்தத்தைக் கொடுக்கவும், ஜப்பான் தனது வியூகத்தை இரண்டு கட்டங்களாக மாற்றியமைத்தது.
ஒன்று – தனது இராணுவத்தின் உதவியுடன், வடக்கே சோவியத் யூனியனிடம் இருந்த சைபீரியா மற்றும் மங்கோலியாவைக் கைப்பற்றுவது. இரண்டு – தனது கடற்படையின் உதவியுடன், தெற்கே பிரிட்டிஷ் மலாயா மற்றும் இந்தோனேசியாவைக் கைப்பற்றுவது. சீனாவைச் சீண்டி மாட்டிக் கொண்ட பிற்பாடு, ஜப்பான் சோவியத்திடம் சண்டைக்கு நின்றது விந்தை.1939ல் கல்கின் ஆற்றங்கரையில் நடந்த இந்தப் போரில் ஜப்பான் படுதோல்வி அடைந்தது. அதே ஆண்டு ஜெர்மனியும் சோவியத்தும் தாங்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளப் போவதில்லை என்று நட்பு உடன்படிக்கை (Non-aggression pact) செய்து கொண்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான், ஜெர்மனியுடன் கைகோர்த்திருந்ததால், இந்த ஒப்பந்தத்தின் படி சோவியத்துடனான போரினை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது இருந்தது. 1941ம் ஆண்டு ஹிட்லர் சோவியத்தைத் தாக்கி, தனது அழிவைத் தேடிக் கொண்டது, இந்த ஒப்பந்தத்தை மீறித்தான்.
வடக்கே திட்டங்கள் பலனிக்காமல் போனாலும், தெற்கே ஜப்பானின் கடற்படை சீனாவுக்கு செல்லும் வர்த்தக வழிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பசிபிக் கடலில் தன்னைத் தவிர இன்னொரு ஆளுமையாக ஜப்பான் உருவாகும் வாய்ப்பிருப்பதை, அமெரிக்கா விரும்பவில்லை. மேலும், தனது எதிரிகளான ஜெர்மனி மற்றும் இத்தாலியுடன் ஜப்பான் கைகோர்த்திருந்ததால், ஜப்பானை எதிர்ப்பதற்கு வேறு பெரிய காரணங்கள் தேவைப்படவில்லை. ஜப்பானுக்கு இரும்பு, எஃகு, தாமிரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. இந்த வளங்கள் தன்னிடம் இல்லாத காரணத்தினால் தான் ஜப்பான் அண்டை நாடுகளின் மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது. தடை விதிக்கப்பட்டாலும் தன்னிடம் இருக்கின்ற வளங்களை வைத்து அந்தப் பகுதியில் இருக்கும் சிறிய தீவுகளை, ஜப்பான் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அமெரிக்க அரசு, அமெரிக்காவில் உள்ள ஜப்பானின் சொத்துக்களை முடக்கவும், ஜப்பான் சர்வதேச சந்தையில் எண்ணெய் வாங்குவது தடைபட்டது.
இரும்பு, எண்ணெய் வளங்கள் இல்லாது எப்படி தளவாடங்களை பராமரிப்பது, எப்படி வல்லரசாவது ? ஆகையால் ஜப்பான், பிரிட்டிஷ் மலாயா மற்றும் இந்தோனேசியா மீது தாக்குதல் நடத்தி அங்கிருக்கும் வளங்களைக் கைப்பற்ற முடிவு செய்தது. இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் நட்பில் இருந்ததால், கண்டிப்பாக அமெரிக்கா எதிர்த்தாக்குதல் நடத்தும் என்று ஜப்பானுக்குத் தெரியும். ஆகையால், அதற்கு முன்னதாக அமெரிக்கா எளிதில் மீண்டு வரமுடியாத படி ஒரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது. எதிர்பாராத முறையில் தாக்கி, அமெரிக்காவை திணறச் செய்து, ஒரு அமைதி உடன்படிக்கைக்கு கொண்டு வந்து, தான் கைப்பற்றிய பகுதிகளை தன்னகத்தே வைத்துக் கொள்வது தான் ஜப்பானின் மாஸ்டர் ப்ளான். அப்படி ஒரு தாக்குதல் நடத்த ஜப்பான் தேர்ந்தெடுத்த இடம், ஹவாய் தீவுகளில் உள்ள பேர்ல் ஹார்பர் (Pearl Harbor).
1941-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி காலை ஜப்பான் தனது தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்கர்கள் இதனைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆதலால், முதல் தாக்குதலில் நிறைய பாதிப்பு ஏற்பட்டது. துறைமுகத்தில் ஒன்றோடொன்று இணைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர் விமானங்கள் எளிதான இலக்குகள் ஆகின. இரண்டாவது தாக்குதலுக்குள் அமெரிக்கா சற்று சுதாரித்துக் கொண்டாலும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மூன்று முக்கிய விமானம் தாங்கி கப்பல்கள் (aircraft carriers) அப்போது கடலில் இருந்ததால், அவை தப்பித்தன. தவிர, எரிபொருள் கிடங்குகளையும், பழுதுபார்க்கும் இடங்களையும் ஜப்பான் தாக்கத் தவறியிருந்தது, அமெரிக்கா எளிதில் மீண்டு வர உதவியது. துறைமுகத்தில் கடல் அதிக ஆழமில்லாத காரணத்தினால், மூழ்கிய உபகரணங்களை, எளிதாக வெளியில் எடுத்து சரிசெய்ய முடிந்தது என்றும் சொல்வார்கள். இப்படி ஒரு தாக்குதலுக்குப் பிறகு, ஜப்பான எதிர்பார்த்ததைப் போல அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வராமல், போர்ப் பிரகடனம் செய்தது. பேர்ல் ஹார்பரின் தாக்கம் நான்கு ஆண்டுகள் கழித்து தங்கள் தலையெழுத்தை முற்றிலும் மாற்றும் என்று ஜப்பான் அறிந்திருக்கவில்லை.
பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பிறகு சில மாதங்களிலேயே ஜப்பான் பிலிப்பைன்ஸ், குவாம், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் பர்மா ஆகியவற்றைத் தன்வசப்படுத்தியது. எல்லா ஆக்கிரமிப்பாளர்களுக்கும் போலியான ஒரு காரணம் தேவைப்படுவதைப் போல, தன்னை “Liberator of Asia” என்று ஜப்பான் பறைசாற்றிக் கொண்டது. அமெரிக்காவைத் தாக்கிய பிற்பாடு, ஜப்பான் தனது எல்லையை மேலும் விரிவுபடுத்தி, அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் பிரிக்க விரும்பியது. அதற்காக பசிபிக் கடலின் மத்தியில் இருந்த “மிட்வே” (Midway) தீவைத் தாக்கத் திட்டமிட்டது. ஆனால், அமெரிக்கக் குறியீட்டு நிபுணர்கள் (Code Breakers) ஜப்பானின் ரகசியத் தகவல்களை உடைத்து, தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்தனர். ஜப்பான் கடற்படை மிட்வே-க்கு வந்த பொழுது, அங்கே அமெரிக்கர்கள் ஏற்கனவே தயாராக இருந்தனர். இந்த 4 நாள் போரில் ஜப்பான் தனது மிக முக்கியமான 4 விமானம் தாங்கி கப்பல்களை இழந்தது. இது ஜப்பானின் கடற்படை வலிமையை நிரந்தரமாகச் சிதைத்தது என்று கூறலாம்.
ஜப்பானியப் பேரரசு பசிபிக் கடல் தீவுகள் முழுவதும் பரவி இருந்தாலும், அந்தத் தீவுகளுக்கும் ஜப்பானுக்கும் உண்டான தூரம், பெரும் பின்னடைவாக மாறியது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீரர்களுக்கு உணவு, மருந்து மற்றும் ஆயுதங்களை அனுப்புவது ஜப்பானுக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஒரு வகையில் இந்தத் தூரம் தான் ஜப்பானை அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது என்றும் கூறலாம். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள தூரம் கிட்டத்தட்ட 9000 கிலோமீட்டர். அன்றைய காலகட்டத்தில், பசிபிக் கடல் மீது, இத்தனை தூரம் ஒரே முயற்சியில் பறந்து வந்து தாக்குதல் சாத்தியமில்லை. ஆகவே, அமெரிக்கா “Island Hopping” எனும் உத்தியைக் கையில் எடுத்தது. அமெரிக்கா பெரிய தீவுகளைத் தாக்காமல், ஜப்பானின் முக்கிய supply chain-ல் உள்ள சிறிய தீவுகளை மட்டும் கைப்பற்றியது. இதனால், மற்ற தீவுகளில் இருந்த ஜப்பானிய வீரர்கள் உணவு மற்றும் மருந்தின்றி தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் சிறிய தீவுகளில் இருந்து கிளம்பிச் சென்று, அவர்களை வீழ்த்துவது அமெரிக்காவிற்கு எளிதாக இருந்தது.
இப்படியாக, 1945-இல் அமெரிக்கா ஜப்பானின் நிலப்பரப்பை நெருங்கியது. அமெரிக்காவின் புதிய B-29 சூப்பர்ஃபோர்ட்ரஸ் (B-29 Superfortress) குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பானிய நகரங்கள் மீது குண்டு மழையைப் பொழிந்தன. ஜப்பானிய நிலப்பரப்பிற்குள் நுழைய ஒகினாவாவைக் கைப்பற்றுவது, அமெரிக்காவிற்கு அவசியமாக இருந்தது. 82 நாட்கள் நடந்த இந்தப் போர் (Battle of Okinawa) மிகக் கொடூரமானது. ஜப்பானிய ராணுவம் பொதுமக்களைக் கூட தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. ஜப்பானியர்கள் சரணடைவதை விட சாவதே மேல் எனக் கருதினர். ஆயிரக்கணக்கான ஜப்பானிய விமானங்கள் ‘காமிகாசே’ (Kamikaze) எனப்படும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தின. அதாவது ஜப்பானிய விமானங்கள் குண்டு போடாமல், நேரடியாக அமெரிக்கக் கப்பல்களின் மீது சென்று விழுந்து வெடித்துச் சிதறின. உண்மையில், சரணடையாமல் ஜப்பானியர்கள் சண்டையிட்ட விதம், அமெரிக்காவிற்கு வியப்பை அளித்தது. போர் இழுத்துக் கொண்டே போவதை அமெரிக்கா விரும்பவில்லை.அப்போது தான், சக்தி வாய்ந்த அணுகுண்டு ஒன்றை சோதித்து முடித்திருந்த அமெரிக்கா, போரை முடிவுக்குக் கொண்டு வரவும், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அதனை ஜப்பான் மீது பயன்படுத்த முடிவு செய்தது.
ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8.15 மணியளவில் ஹிரோஷிமா மீது முதல் அணு குண்டு (Little Boy) வீசப்பட்டது. ஏறத்தாழ 20 ஆயிரம் டன் டி.என்.டி-க்கு இணையான இந்த அணு குண்டு, பெரும் பாதிப்புகளை மூன்று கட்டங்களாக ஏற்படுத்தியது. முதலில் – எப்போதும் போல, பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்ல தங்கள் நாளைத் தொடங்கியிருந்த மக்களை இதிலிருந்து வந்த வெப்பத்தில் தீக்கிரையாயினர். இரண்டாவது, குண்டு வெடித்த அழுத்தத்தில் நகரில் இருந்த கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாகின. மூன்றாவதாக, இதிலிருந்து பிழைத்தவர்கள் வினோதமான நோய்களால் பாதிக்கப்பட்டார்கள். மருத்துவர்களால் என்னவென்று கண்டுபிடிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ முடியவில்லை. அது கதிர்வீச்சு நோய் என்று அவர்கள் அறிந்து கொள்ளவே சில வாரங்கள் ஆனது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,40,000 மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்து 16 மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஹாரி.எஸ்.ட்ரூமேன் தனது அறிக்கையில் இவ்வாறு கூறினார்.
“The Japanese began the war from the air at Pearl Harbor. They have been repaid many fold. And the end is not yet. With this bomb we have now added a new and revolutionary increase in destruction to supplement the growing power of our armed forces. In their present form these bombs are now in production and even more powerful forms are in development. It is an atomic bomb. It is a harnessing of the basic power of the universe. The force from which the sun draws its power has been loosed against those who brought war to the Far East.”

இந்தத் தாக்குதல் நடந்து மூன்று நாட்களில், ஆகஸ்ட் 9 அன்று, அமெரிக்கா அடுத்த அணுகுண்டை (Fat Man) நாகசாகியின் மீது வீசியது. வானிலை ஒத்துழைக்காத காரணத்தால், குறிப்பிட்ட இடத்தில் சரியாக வீச முடியாமல் போனது. இருந்தும் 40000 பேருக்கு மேல் பலியானார்கள். முதல் அணுகுண்டுக்கு இத்தனை தாக்கம் இருந்தும், ஏன் அமெரிக்கா இரண்டாவது குண்டை வீசியது என்பதற்கு காரணம் இருந்தது. அடுத்தடுத்து அமெரிக்கா இது போல பல அணுகுண்டுகளை வீசக்கூடும் என்று ஜப்பான் பயப்பட வேண்டும். அது, அவர்களை பதிலடி கொடுக்கவோ, அல்லது அடுத்த கட்ட திட்டமிடுதல் செய்யவோ விடாமல் உளவியல் ரீதியாக முடக்கும். அமெரிக்கா எதிர்பார்த்தது இம்மி பிசகாமல் நடந்தது. 1945க்குப் பிறகு, அமெரிக்கா மற்றுமின்றி வேறு எந்த நாட்டுடனும் ஜப்பான் போருக்குச் செல்லவில்லை. அது மட்டுமின்றி, அணு ஆயுதத்தைத் தயாரிக்கவோ, ஆதரிக்கவோ மாட்டோம் என்கிற கொள்கையை இன்று வரை கொண்டிருக்கிறது.
இது போன்ற அணுகுண்டு முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. அதன் திறன் என்னவென்பதையும், பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் நேரடியாகக் களத்தில் தான் சோதித்தார்கள். ஏனெனில், பரிசோதனையின் போது, அணுகுண்டை விமானத்தில் இருந்து வீசியிருக்கவில்லை. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தாக்குதல் இது என்றால் அது மிகையாகாது. முதல் குண்டு வீசப்பட்ட அந்த நொடியில், மனித இனம் அணு ஆயுத சகாப்தத்துக்குள் நுழைந்ததாகச் சொல்லலாம்.
தனக்கான பேரரசைக் கட்டமைக்க நினைத்த அன்றைய ஜப்பான் மன்னர் ஹிரோஹிட்டோ, அமெரிக்காவிடம் ஒரே ஒரு கோரிக்கை தவிர்த்து, வேறு எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தார். அந்த கோரிக்கை, தான் அரசராகத் தொடர வேண்டும் என்பதே. அமெரிக்காவும் அவரை constitutional monarch-ஆக அறிவித்தது. அன்று இருந்த ஜப்பான் மக்கள் ஹிரோஹிட்டோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். கடவுளாகக் கருதினார்கள் என்ற கூற்றும் உண்டு. அவரை போர்க் குற்றவாளியாக அறிவித்தால் உள்நாட்டுக் கலவரம் வரக்கூடும் என்பதால், அமெரிக்கா அதனைச் செய்யவில்லை என்கிற கருத்தும் உண்டு. ஹிரோஹிட்டோ, அவருக்குப் பின் அவரது மகன் அகிஹிட்டோ, அதற்குப் பின்னர் அவரது மகன் நருஹிட்டோ என்று இன்று வரையில் மன்னர்களாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் பிறந்தவர்கள் இந்த பாதிப்பினைத் தாண்டி பல சமூகப் பாகுபாடுகளைச் சந்தித்துள்ளனர். உதாரணத்திற்கு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் குறைபாடு இருக்கும் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் இருந்த காரணத்தினால், அவர்களுக்குத் திருமணம் அமைவது கூட கடினமாக இருந்தது.
போர்கள் பெரும்பாலும் தனிமனித அகங்காரத்தாலும், ஆசையினாலும் மட்டுமே தழைக்கின்றன. ஜப்பானின் இந்த நிலைக்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஒரு காலத்திலும் அமெரிக்கா செய்த கொடுஞ்செயலை நியாயப்படுத்த இயலாது. தலைமுறைகள் தாண்டி பாதிக்கும் அளவிற்கு அவர்கள் செய்த தாக்குதலுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் இவை எல்லாம் தொடங்கியது, தான் ஒரு பேரரசராக வேண்டும் என்கிற ஒரு மன்னனின் ஆசையினால் மட்டுமே. அந்தப் பேராசை லட்சக்கணக்கானோரை சாம்பலாக்கிவிட்டுத் தான் ஓய்ந்தது.
கணியன் பூங்குன்றனார், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் தன் பாடலில்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
என்கிறார். “நமக்கு வரும் நன்மையும் தீமையும் பிறரால் உண்டாவதில்லை; அவை நம் செயல்களாலேயே விளைகின்றன; துன்பம் வருவதும், அது நீங்குவதும் கூட பிறரால் ஏற்படுவதில்லை” என்பது பொருள். கணியனின் கூற்றினை மறுத்துப் பேச மனமில்லை தான். இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக அரசர்கள் மற்றும் அரசுகளின் தவறுகளுக்கு – சாதாரண மக்கள்தான் பலிகடா ஆனார்கள், ஆகிக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் ஆக்கப்படுவார்கள் என்பது தான் நிதர்சனம்.