“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு,
“என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு,
“ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார்.
முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”.
தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது போன்ற முகமன்களை நிறைய கடந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், அது எனக்கும் எதிரில் இருப்பவருக்கும் உவப்பானதொரு அனுபவமாகவே இருந்திருக்கிறது.

பொற்சுடருக்கு முன்னர், பெயர் குறித்த உரையாடல் நிகழ்ந்தது எங்கே என்பது, அந்த உரையாடல் நடந்த ஞாயிற்றுக்கிழமை வெயிலின் அனலோடு நினைவிருக்கிறது. 200 அடி ரேடியல் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கில் காரை நிறுத்தி இறங்கி நின்று கொண்டிருந்தேன். பங்க்கின் ஓரத்தில் நடப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகள் கிழக்கே இருந்து அடித்த அனல் காற்றில் திணறிக் கொண்டிருந்தன. யாரையும் காணாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது, தனது உருவத்திற்கு சற்றும் பொருந்தாத டீ சர்ட், பேண்ட், பூட்ஸ் அணிந்து, பில்லிங் கவுண்ட்டர் அறையிலிருந்து இறங்கினாள் அந்தப் பெண். வெயிலுக்காக தலை குனிந்து, தொப்பியை சரி செய்தவாறு என்னை நோக்கி நடந்து வந்தாள். அருகே வந்தவுடன்.
“பெட்ரோல், டேங்க் ஃபுல்” என்றேன்.
எந்த சுரத்துமில்லாமல்,
“ஜீரோ பாத்துக்கங்க” என்று ஆள்காட்டி விரலை டெர்மினலைக் நோக்கிக் காண்பித்து விட்டு, பெட்ரோல் போடத் தொடங்கினாள்.
தலையில் இருந்த கேப்-ஐ கழற்றி, வியர்வையை துடைக்க முயன்றவள், தனது நீளமான ஒற்றைச் சடையை கேப்பின் பின்பக்க லூப்பில் சிக்கிக் கொள்ள,
“இது வேற” என்று சன்னமான குரலில் அங்கலாய்த்தவாறு மறுபுறம் திரும்பினாள்.
பெட்ரோல் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து ருசித்தேன். “மந்திரப்புன்னகை” திரைப்படத்தின் வசனமொன்று நினைவிற்கு வந்தது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் வாசனையை நுகரும் போதெல்லாம் இந்த வசனம் நினைவுக்கு வருவது, கரு.பழநியப்பன் எழுதிய சொற்களின் ஆயுளை மேலும் ஒரு முறை நீட்டிக்கிறது. “டக்” என்ற சத்ததோடு பெட்ரோல் கன் கட்-ஆஃப் ஆனதை நான் சட்டை செய்யவில்லை.
“கேஷா..கார்டா சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.
“கேஷ் தர்றேன்” என்றவாறு, சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை நீட்டினேன்.
மூன்று முறை எண்ணினாள். ரூபாய் நோட்டுக்களை தனது கண்டக்டர் பையினுள் வைத்து விட்டு, மீதிச் சில்லறை தருவதற்காக தன் சிறிய கைகளால் துழாவிக் கொண்டிருந்தாள். சில்லறையை எடுக்க திணறிக் கொண்டிருந்தவளைப் பார்க்கையில், ஊர் டவுன் பஸ்களில், எந்தப் பிடிமானமும் இல்லாமல், படியில் நின்றவாறு, ஒரு கையால் தோல்பையினை உலுக்கி, ஒரே தடவையில், இரண்டு நாலணாக்களையும், ஒரு ஐம்பது காசையும் ஒரே சேர எடுத்து சுழற்றிக் கொடுக்கும் கண்டக்டர்கள் நினைவில் வந்து போனார்கள்.
“இந்தாங்க சார்” என்று அவள் மீதிப் பணத்தை நீட்டும் போது தான், அவளது ஐடி கார்டில் இருந்த பெயரப் பார்த்தேன்.
“செம பேரு போங்க” என்றேன்.
“எங்க அப்பா வச்ச பேரு சார்”, என்றாள் சிறிய சிரிப்புடன்.
“வீட்ல அரசின்னு கூப்டுவாங்களோ” என்று கேட்டதற்கு,
“எப்டி சார் ?” என்று புருவத்தை உயர்த்தினாள்.
“மக பேர்ல ‘அரசி’ங்கிற வார்த்தை இருக்கும் போது, எந்த அப்பா அம்மா வேற பேர் சொல்லிக் கூப்ட போறாங்க ?” என்றேன்.
“எப்பவும் ராணி மாதிரி இருக்கணும்னு நினைச்சு இந்தப் பேரை வச்சாராம். ஆனா பெட்ரோல் தான் போட்டுட்டு இருக்கேன்” என்று சிரித்தாள்.
“திருநெவேலி பக்கமா” என்றேன்.
“ஆமா சார்…நீங்களுமா” என்றாள்.
“இல்லல்ல..கொஞ்சம் கிட்டதான்.. உங்க பக்கம் நிறைய தில்லைன்னு பேரு வச்சு கேள்விப்பட்டிருக்கேன். சாமி பேருல்ல ” என்றதற்கு.
“ஆமா சார்” என்றாள்.
“சரி..பாப்போம்” என்று விலகி காரை நகர்த்தினேன். பெட்ரோல் பங்க்கின் எக்ஸிட் அருகே சென்று ஏர் செக் செய்து கொண்டிருந்த போது திரும்பிப் பார்த்தேன். டெர்மினல் அருகே நின்று, தனது தொப்பியில் சிக்கிய ஒற்றைச் சடையை எடுக்க போராடிக் கொண்டிருந்தாள், “தில்லைக்கரசி”.
பொற்சுடருயும் தில்லைக்கரசியும் நினைவுக்கு வந்தது, நிறைய பெயர் சார்ந்த உரையாடல்களை எழுதப் பணித்தது. பிடாங்கு, முப்புடாதி, பாபநாசம் போன்ற அத்தனை பெயர்களையும் மீறி நினைவின் படிமங்களில் இருந்து மேலேறி வருவது ஒரு பெயர் தான். உத்தராக்கண்ட் மாநிலத்தின் ஒரு மலைக்கிராமத்தில் தான் அந்தப் பெயர் எனது மனதில் ஆழப்பதிந்தது.
கல்லூரி முதல் செமஸ்டரின் போது பெரிதாக நண்பர்கள் அமைந்திருக்கவில்லை. படிப்பில் ஈடுபாடில்லாமல், எந்த நோக்கமும் இன்றி விட்டேத்தியாக சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என்சிசி-யில் சேர்ந்திருந்தேன். வடக்கே தேசிய அளவிலான ஒரு கேம்ப்புக்கு தேர்வாகியிருந்த சீனியர்கள் இருவர் செல்ல முடியாமல் போக, எங்கள் பேட்ச்சில் இருவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பற்றிக் கொண்டேன். தமிழ்நாட்டில் இருந்து பதினோரு பேர் மட்டும் சென்றிருந்தோம். பதினோரு பேரும் திருநெல்வேலி, மதுரை பக்கத்து ஆட்கள். உத்தராக்கண்ட்டில் நைனிதால், பீம்தால், சாத்தால், கெளசானி பக்கம் இருந்த மலைகளைக் கடக்க வேண்டியிருந்த டிரெக்கிங் கேம்ப் அது. காலையில் எழுந்தவுடன், தூரத்தில் தெரியும் ஒரு மலையைக் காண்பித்து அங்கே போகச் சொல்லி விடுவார்கள். மதிய உணவுக்கு, ஒரு சருவத்தாளில் இரண்டு சப்பாத்திகளும், வெங்காயமும் கட்டிக் கொடுப்பார்கள். சூரியன் மறைவதற்குள் அடுத்த இடத்தில் இருக்கும் கேம்ப்பை சென்றடைய வேண்டும். இது போல நாளைக்கு ஒரு கேம்ப் என்று மாறிக் கொண்டே இருக்கும்.
பயம் ஒன்றுமில்லை, சாலை வழியாகவும், சிறிய கிராமங்கள் வழியாகவும் இலக்கை நோக்கி நடந்து கொண்டே இருக்க வேண்டியது தான். வெவ்வேறு மொழி, கலாச்சாரங்களைச் சார்ந்தவர்கள், நல்ல ஷார்ப்பான ஆட்கள், திறமையானவர்கள், மோடுமுட்டிகள், அரை மெண்டல் குஸ்காக்கள், என்று பலதரப்பட்டவர்களுடன் பழக வாய்ப்புக் கிடைத்தது. பீகாரைச் சேர்ந்த அப்படிப்பட்ட ஒரு குஸ்காவிடம், எனக்கு சென்ட்ரி (Sentry) ட்யூட்டி வாய்த்த ஒரு நல்லிரவில், சிக்கிக் கொண்டேன். எனது ட்யூட்டியை அவனது ட்யூட்டி என்று தவறாக நினைத்துக் கொண்டு, “ஏன் நைட் வெளிய சுத்துற” என்று என்னிடம் ஒரண்டு இழுத்துக் கொண்டிருந்தான். அவன் இந்தியிலும், நான் தமிழிலும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டதில் பஞ்சாயத்தானது. எனக்கு ஓரளவுக்கு இந்தி புரிந்து, அவன் திட்டியதில் கடுப்பாகி நான் சட்டையைப் பிடிக்க, அவனோடு இன்னொருவனும் சேர்ந்து கொள்ள சலசலப்பானது. நான் அடி வாங்க சில நொடிகள் இருக்கும் போது, எனக்கும் அவ்விருவருக்கும் இடையே அந்த அண்ணன் வந்து நின்றார்.
மாவட்ட கலரில், ஆறடி உயரத்தில், நரம்பாக இருந்தாலும் இரும்பாக இருப்பார். ஒட்ட நறுக்கப்பட்ட தலைமுடி, நீண்ட முகம், சற்றே ஒடுக்கு விழுந்த கன்னங்கள், உயர்ந்த கன்ன எலும்புகளோடு கூடிய கூரிய பார்வை கொண்டவர். Hunter’s eyes என்பார்களே, அதனுடைய சரியான உதாரணம் இவர்தான்.
இடது கையால என்னை பின்னுக்குத் தள்ளி,
“வெலகுலே” என்றவர், எதிரே எகிறிக் கொண்டிருந்தவனின் நெஞ்சில் தனது வலதுகையை வைத்து லேசாகத் தள்ளினார். இரண்டடி பின்னே சென்றான். ஆள்காட்டி விரலை மட்டும் அவனிடம் உயர்த்திக் காட்டினார். இருவரும் கப்சிப்பென்று அமைதியானார்கள். திரும்பி, என் தோளைத் தட்டி
“வாலே” என்று நடக்கத் தொடங்கினார். சற்று தூரம் நடந்த பின்னர், நேரே பார்த்தவாறு,
“செமக்க வாங்கிருப்ப. சண்டை போடணும்னு முடிவு பண்ணிட்டா, சண்டை போடணும். சும்மா கத்திட்டு இருக்கக் கூடாது, புரியுதாலே” என்று திரும்பி என்னைப் பார்த்தார். தலையாட்டினேன்.
அதிலிருந்து, டிரெக்கிங்கில், பெரும்பாலும் நானும் அவரும் சேர்ந்து நடப்பது வழக்கம். ஒரு நாள், நாங்களிருவரும் வேகமாக நடந்ததில், மற்றவர்களுக்கு வெகு தூரம் முன்னே சென்று விட்டோம். நல்ல வெயில். அன்று நாங்கள் ஏறிக் கொண்டிருந்த மலையில் சரியான சாலைகள் இல்லை. தார்ச்சாலை போடுவதற்காக, மானாவாரியாக நிரடி விட்டு, அப்படியே கிடப்பில் போட்டுருந்தார்கள். கற்களும் பாறைகளும் நிறைந்த அந்த சாலையில், தோள்களில் கிட் பேக்கோடு ஏறிக் கொண்டிருந்தோம்.
“எவனையும் காணும்லே, கொஞ்ச நேரம் நிப்பமா” என்றார்.
“பசிக்குது…எதாது ஊராப் பாத்து உக்காருவோம்ணே” என்றேன். மேலேறி நடக்கத் தொடங்கினோம்.
சற்று நேரத்திற்கு பின்னர், ஒரு சிறிய ஒரு குடியிருப்பை வந்தடைந்தோம். மலையின் உட்புறம் இல்லாமல், சாலையின் விளிம்பில் வரிசையாக வீடுகளை அமைத்திருந்தார்கள்.
“என்னண்ணே இப்டி கட்டிருக்காய்ங்க, அவசரத்துக்கு கொல்லப் பக்கம் போனா, குப்புறடிக்க பள்ளத்தாக்குலதான் டைவ் அடிக்கணும். பல் வெளக்காமயே செத்துருவாய்ங்களே” என்றேன்.
லேசாகச் சிரித்தவர்,
“அங்கன உக்காருவோம்” என்று அந்த வரிசையில் முதலில் இருந்த டீக்கடையக் காண்பித்தார்.
கடையின் வாசலில், கிட் பேக்கை தொப்பென்று கீழே போட்டேன்.
“பைய்ய ஒழுங்கா வைலே, இந்தக் கனத்த செமக்க மாட்டியோ” என்றபடி, அவரது கிட் பேக்கை ஓரமாக சாத்தி வைத்து விட்டு கடையின் அருகில் இருந்த முகட்டை நோக்கிச் சென்றார்.
“சாய் ?” என்று கேட்ட கடைக்காரரிடம், வேண்டாமென்று வேகமாக தலையாட்டிவிட்டு, ஒரு பார்லே-ஜி பிஸ்கெட் பாக்கெட் மட்டும் வாங்கினேன்.
தமிழ்நாடு என்று தெரிந்து கொண்ட கடைக்காரர், நியூஸ் பேப்பரை காண்பித்து “சிஎம்..சிஎம்” என்றார். ஜெயலலிலதா படம் போட்ட அந்த இந்தி பேப்பரில் இருந்து, செல்வம் என்றொருவர் புதிய முதலமைச்சராகிறார் என்ற செய்தியை மட்டுமே என்னால புரிந்து கொள்ள முடிந்தது..
கடைக்கு அருகே இருந்த சிறிய முகட்டில் அண்ணன் அமர்ந்திருந்தார். அவரின் அருகே சென்று அமர்ந்தவாறு,
“யாரோ செல்வம்னு ஒருத்தரு புதுசா சிஎம் ஆயிருக்காராம்ணே நம்மூர்ல”, என்றேன்.
“அப்ப..அம்மா?” என்றார்.
“தெர்லண்ணே….அரெஸ்டு போல”, என்றவாறு பிஸ்கெட் பாக்கெட்டை நீட்டினேன்.
மொட்டை வெயிலில், முகட்டில் அமர்ந்து, கால்களைத் தொங்கப்போட்டவாறு, பள்ளத்தாக்கை வேடிக்கைப் பார்த்தபடி ஆளுக்கொரு பார்லே-ஜி பிஸ்கட்டை மென்று கொண்டிருந்தோம்.
“இன்ஜினியரிங் தான படிக்க…நீ எதுக்குலே இந்த கேம்ப்புக்கு வந்து கஷ்டப்படுத ?” என்று கேட்டார்.
“கஷ்டம்லாம் இல்லண்ணே, காலேஜுக்கு இது பரவால்ல” என்றதற்கு சிரித்தார்.
“நீங்க எதுக்கு வந்தீங்க” என்றேன், அடுத்த பிஸ்கெட்டை எடுத்தவாறு.
“மிலிட்டரிக்கு போணும். என்சிசி சி சர்டிபிகேட் இருந்தா லேசா இருக்கும்” என்றார்.
“எதுக்குண்ணே மிலிட்டரிக்கு போறீங்க, வேற நல்ல வேலைக்கு போலாம்ல”, என்றேன்.
“வீடு இருக்க நெலமைக்கு நா திருநெவேலி வரைக்கும் வந்து படிக்கதே பெருசுலே. ஸ்போர்ட்ஸ் கோட்டானால ஹாஸ்டல் அப்டி இப்டின்னு ஓடுது. இந்த வருசத்தோட படிப்பு முடியுது. மத்த வேலையெல்லாம் எத்தன நாள்ல கிடைக்கும்னு உறுதியில்ல. இதுனா அடுத்த வருசம் செலக்சன் வரும். ஒரே அட்டெம்ட்ல போயிட்டா, பிரச்சனையில்ல. இதுக்கு மேல வீட்டை சிரமப்படுத்த முடியாது”. என்றார்.
“அப்பா..விவசாயமாண்ணே”,
“ம்ம். நெலம் கெடக்கு. ஆனா காட்டை மட்டும் நம்பி இருக்க முடியாதுல்ல. அக்கா தங்கச்சிக்கு எடுத்து செய்ய அது மட்டும் தான் இருக்கு.” என்றார்.
அதுவரையில் பொருளாதார ரீதியாக எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்திருந்த எனக்கு அந்த பதில் அத்தனை அதிர்ச்சி அளித்தது. இராணுவத்திற்கு செல்வதற்கு நாட்டின் மீது கொண்ட பற்றின் அளவுக்கு, வறுமையிலிருந்து எப்படியாவது தப்பிப் பிழைத்திட வேண்டும் என்கிற வெறியும் காரணம் என்ற புரிதல் எனக்குக் கிடைக்க, நான் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைமுகடு வரை செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் புரிதல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இன்று வரையில், அலுவலக வேலை, நேர்காணல்கள் என்று ஊழியர்கள் சார்ந்த நிறைய முடிவுகளை பரிவுடன் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருப்பதற்கு, மலைமுகட்டில் நடந்த அந்த உரையாடலும் ஒரு காரணம்.
கேம்ப்பின் மீதி நாட்கள் எனக்கு அவரது நிழலியே கழிந்தன. அவரது நிதானமும், பொறுப்புணர்வும் அவர் மீதான மரியாதையையும் அன்பையும் அதிகப்படுத்தியிருந்தன. கேம்ப் முடிந்த பிற்பாடு அவரவர் வழியில் சென்று பிறகு, தொடர்புக்கு சாத்தியமில்லாமல் போக, அந்த அண்ணனை அதன்பிறகு பார்க்கவில்லை. எப்போதாவது நண்பர்கள் யாரிடமாது கதை பேசும் பொழுது, அவரையும், அவரது பெயரைப் பற்றியும் பேசுவதுண்டு. அந்தந்த நேரத்து நினைவுகளோடு சரி.
பல வருடங்கள் கழித்து, “கர்ணன்” படம் பார்த்த பொழுது, அந்த அண்ணனின் பெயர் குறித்த வசனம் ஒன்றை கவனிக்க நேர்ந்தது. அந்த அண்ணன் திருநெல்வேலிக்காரர் என்பதும், ஊரை விட்டு வெளியேறி மேடேற, இராணுவத்துக்கு செல்வது தொடர்பான காட்சிகள் அந்தப் படத்தில் அமைந்திருந்ததும் நிறைய ஒத்துப் போனது. படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜிடம் ஒரு நாள் போனில் பேசும் போது,
“யாரை நினைச்சு இந்த பேரை வச்சீங்க ? உங்களுக்கு தெரிஞ்சவங்களா ? எனக்குத் தெரிஞ்ச அண்ணன் ஒருத்தரு என்சிசில இருந்தாரு. கண்டுபுடிக்க முடியுமா” என்று கேட்டு டிரெக்கிங் கேம்ப் கதையைச் சொன்னேன்.
“எங்க ஊர்ப்பக்கம் இந்தப் பேருல நிறைய இருப்பாங்களே, நிறைய மிலிட்டரிக்கும் போவாங்க. இத மட்டும் வச்சுக் கண்டுபிடிக்க கஷ்டம்”, என்றார்.
அந்த அண்ணன் மிலிட்டரிக்கு வேலைக்குச் சென்றாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போதும், மனம் அவரை ஒரு இராணுவ வீரராகத் தான் உருவகம் செய்து கொள்கிறது. இராணுவத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதும், அவர் நினைத்தது அவருக்குக் கிடைக்க வேண்டும் எனறு நான் ஆசைப்பட்டதும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
தனது ரோமியோ-ஜூலியட் நாடகத்தில், “What’s in a name ? That which we call a rose by any other name would smell as sweet” – என்ற வரிகளில் – வெறும் பெயரில் ஒன்றுமில்லை. ஒரு மனிதனின் எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்பதை ரோஜாப் பூவை உருவகமாகப் பயன்படுத்தி விளக்கியிருப்பார் ஷேக்ஸ்பியர். அது எனக்கு மிகவும் பிடித்த வரிகளுள் ஒன்று. ஆனாலும் சில நேரங்களில் பெயர்களும் முக்கியம் தானே. பெயர் இல்லாவிட்டால், நம்மிடம் என்றோ ஒரு நாள் கரிசனம் காட்டிவிட்டு கண்ணுக்குத் தென்படாத தூரம் சென்று விட்ட நல்லுள்ளங்களை வேறு எதை வைத்து நாம் அடையாளப்படுத்த முடியும் ?
சமீபத்தில் “தென்னாடு” பாடலில் நடிகர் பசுபதியை பார்த்ததும் அந்த அண்ணன் குறித்த நினைவுகள் மனதை ஆக்கிரமத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வேளை அந்த அண்ணன் நினைத்ததெல்லாம் ஈடேறி, இராணுவத்தில் இருந்து ஊருக்குத் திரும்பியிருந்தாலோ அல்லது ஊரிலேயே சம்சாரியாக இருந்திருந்தாலோ, Bison படத்தில் வரும் பசுபதி தோற்றத்தில் தான் இருப்பார். உங்களுக்குத் தெரிந்து திருநெல்வேலி பக்கம் யாராவது, அதே தோற்றத்தில், தங்கள் நாற்பதுகளில் இருந்தால் சொல்லுங்கள். இந்த அடையாளத்ததை வைத்து கண்டுபிடிப்பது சிரமமானதாக இருக்கும் என்று தோன்றலாம்.
ஆனால், திருநெல்வேலி செயிண்ட் சேவியரில் படித்து, என்சிசியில் இருந்து, உத்தராக்கண்ட் கேம்ப்புக்கும் சென்று, இன்று தனது நாற்பதுகளில் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு “ஊய்க்காட்டான்” எனும் அட்டகாசமான பெயர் வாய்த்திருக்கும் ?