அந்த சிறிய கிளைச்சாலையின் முனையில் இருந்த ஸ்டார்பக்ஸ்லிருந்து எனக்கான ஹாட் சாக்லேட்டை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். கண்ணாடி கதவைத் திறந்தவுடன் குளிர் அப்பிக் கொண்டது. காலை பதினோரு மணிக்கு இப்படியொரு குளிரை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தனை தடிமனான ஓவர்கோட்டைத் துளைத்து மில்லிசெகண்டுகளுக்குள் நெஞ்சாங்கூட்டை அடைந்து விட்டது. பெரிதாக போக்குவரத்து இல்லாத சாலையைக் கடந்து சென்று மறுபுறம் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தேன். உள்ளங்கை முழுக்க ஹாட் சாக்லேட்டின் இளஞ்சூடு பரவியிருந்தது. ஹாட் சாக்லேட் தொண்டையை அடைந்து, நெஞ்சாங்கூட்டை அடையும் இதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது தான், கடந்து வந்த சாலையைக் கவனித்தேன். கற்சாலை.

சிறிய, ஒரே அளவிலான, சதுரமான கற்களால், ஒரு ஜியோமெட்டிரிக்கல் ஒழுங்கோடு அமைக்கப்பெற்ற சாலை. ஆங்கிலத்தில் cobblestone street என்பார்கள். அதன் அழகை விவரிக்க இயலாமல் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அமர்ந்திருந்த இடத்தில் இருந்து நூறடி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த தேம்ஸ் நதியின் மேல் இருந்த அதே ஈர்ப்பு, இந்த கற்சாலையின் மீதும் இருந்தது. இரண்டுக்கும் இடையே மனம் அல்லாட, சட்டென்று “கல் பாவிய தெருக்கள்” என்கிற சொற்றொடர் நினைவுக்கு வந்தது. இரா. முருகனின் “மூன்று விரல்” அல்லது அ.முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” – இந்த இரு புத்தகங்களில் ஏதோ ஒன்றில் படித்த வாசகம். அத்தனை நேர்த்தியாக கற்கள் பதிக்கப்பட்ட சாலைக்கு, முழுமையாக நியாயம் சேர்க்கும் வாசகம். அதை வாசித்த நாளில், அது போன்ற ஒரு தெருவை பார்த்து விட வேண்டும், அதில் நடந்து விட வேண்டும் என்று துளிர்விட்ட ஆசை அன்று நிறைவேறியிருந்தது. ஹாட் சாக்லேட் தீருவதற்குள் கல் பாவிய அந்தத் தெருவை போதுமான அளவிற்கு மனதில் நிரப்பிக் கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரம் அந்தத் தெருவை ரசித்துக் கொண்டிருந்திருக்கலாம் தான். ஆனால், உடனிருந்த அனந்து என் மனநிலையின் மேல் சந்தேகம் கொள்ளும் வாய்ப்பிருந்ததால், நிரப்பிய வரை போதுமென்று தேம்ஸ் நதியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
தேம்ஸ் நதியின் படகுத்துறையில் இருந்த திறந்த படகொன்றில் ஏறி, லண்டன் டவரில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் வரை மிதந்தோம். அங்கிருந்து சாலை வழியாக பிக் பென் கடிகாரம், பார்லிமெண்ட் சதுக்கம் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ், வெஸ்ட்மின்ஸ்டர் அபே, டவுனிங் தெரு,டிரஃபால்கர் சதுக்கம் என்று நடந்தலைந்ததில் இருட்டி விட்டது. சென்ட்ரல் லண்டனில் இருக்கும் எங்கள் ஹோட்டலுக்கு செல்வதற்காக, Elephant & Castle Tube Station-ஐ வந்தடைந்தோம். சுரங்கப்பாதை ரயிலுக்கு tube என்று பெயரிட்டிருக்கிறார்கள். உண்மையில் பெரிய சைஸ் குழாய் போன்று தான் இருக்கிறது. லண்டனில் பூமிக்குக் கீழே தனியாக ஒரு உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 30 லட்சம் பேர் “ட்யூபை” பயன்படுத்துகிறார்கள். சொல்லப் போனால் எந்த ஒரு நாளை எடுத்துக் கொண்டாலும், பூமிக்குக் கீழே சில லட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ட்யூப் ஓல்ட் ஸ்டிரீட் ஸ்டேஷனை வந்தடைந்தவுடன், பூமிக்கு அடியில் இருந்து மேலேறி வந்தோம். லண்டன் குளிர் பாய்ந்து வந்து ஆக்கிரமித்துக் கொண்டது. பதினோரு மணி குளிரை விட, மாலை ஏழு மணிக்கு இன்னும் உக்கிரமாக இருந்தது. கைகள் இரண்டையும் ஓவர்கோட்டின் பாக்கெட்டுகளுக்குள் இடுக்கிக் கொண்டு நானும் அனந்துவும் நடக்கத் தொடங்கினோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஸ்டேஷனில் இருந்து ஒரு ஐந்து நிமிட நடை.
ஊருக்கு மத்தியில் இருக்கும் இந்த ஹோட்டலில் தான் தங்குவேன் என்று அலுவலகத்தில் சொல்லி வாங்கியிருந்தேன். வெளியூர் சென்றால், ஊருக்கு மத்தியில் இருக்கும் இடங்களில் தங்குவதே எனக்கு விருப்பமாக இருந்திருக்கிறது. ஊருக்கு வெளியே இருக்கும் பெரிய ஓட்டல்களில், ரிசார்ட்களில் அதிகப்படியான வசதிகள் இருக்கலாம். ஆனால், அவைகளுக்கென்று ஒரு தனிப்பட்ட இயல்பு இருப்பதில்லை. அவை தனக்கென்று எந்த தனித்த குணாதிசயங்களும் இல்லாத வெற்றுக் கூடாரங்கள், ஷாப்பிங் மால்கள் போல. சென்னையில் இருந்தால், ஒரே நாளில் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலிலும், தி.நகரிலும் நேரம் செலவழித்துப் பாருங்கள். நான் சொல்வதன் வித்தியாசம் புரியும். தவிர, ஒரு நகரத்தின் முழுமையான இயல்பை அறிந்து கொள்ள, அந்நகரத்தின் முக்கிய சாலைகளும், சந்தைகளும் மட்டுமே ஒரே வழி. அந்த இயல்பை நாம் அறிந்து கொள்ளும் போது தான் அந்த ஊருக்கு மேற்கொள்ளப்பட்ட பயணம் ஒரு நிறைவை அடைகிறது.
முந்தைய நாள், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் ரெஸ்டாரண்டில் இருந்து காலை சிற்றுண்டி எடுத்துக் கொண்டே ஓல்ட் ஸ்டீரிட்டின் போக்குவரத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். வாகனங்களை விட நடந்து செல்லும் மக்கள் அதிகமாக இருந்தார்கள். நடப்பவர்களுக்குள் பெரும்பாலானோர் கருப்பு நிற ஓவர்கோட்டோ அல்லது ஜாக்கெட்டோ அணிந்திருந்தார்கள். வேறு நிறங்களைக் காண்பது மிக அரிதாக இருந்தது. படு வேகமாக நடந்தார்கள். எதிரே யாராவது வந்தால், ஒரு நொடி நிதானித்து, விலகி மறுபடியும் விருட்டென வேகமெடுத்து நடந்தார்கள், எறும்புகள் போல. உயரே இருந்து பார்த்தால், ஓல்ட் ஸ்டீரிட்டில் மனிதர்கள் நடப்பது சாரை சாரையாக பிள்ளையார் எறும்புகள் ஊர்வது போலத்தான் தெரியும். “எதுக்கு இவ்வளவு வேகமா நடக்குறாய்ங்க” என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அன்று ஓல்ட் ஸ்டிரீட் ஸ்டேஷனில் இருந்து நானும் அனந்துவும் ஹோட்டலை நோக்கி நடந்து செல்லும் போது தான் புரிந்தது.
“யோவ் நாளைக்கு தலைக்கு குப்பி வாங்கிரணும்யா, குளிரு இந்தப் போடு போடுது, காதெல்லாம் கிய்யின்னு இருக்கு” என்றேன், புகையைக் கக்கிக் கொண்டே.
“சன் ஸ்டார் எக்ஸ்பிரஸ்ல வாங்கிருங்க பாஸ்” என்றார் அனந்து.
“ஏழு பவுண்டு சொல்றான்யா, ஒரு மப்ளருக்கு 700 ரூவா தர மனசு ஒவ்வல. பார்ப்போம். வெரசா நடப்போம்” என்று நடையை எட்டிப் போட்டேன்.
அப்பொழுது தான் புரிந்தது மக்கள் ஏன் வேக வேகமாக நடக்கிறார்கள் என்று. இயல்பாகவே அங்கே இருக்கும் அடர்த்தியான குளிர் அவர்களை வேகமாக நடக்கப் பணிக்கிறது. அங்கேயே வாழும் அவர்களுக்கே அந்த நிலைமை என்றால், நமக்கு எப்படி இருக்கும் ? நானும் அனந்துவும் எறும்புகளானோம். குளிரையும், சனத்திரளிடம் இருந்து நிறத்தையும் கழித்து விட்டால்,குறுகிய சாலைகள், ரோட்டடி கடைகள், பிச்சைக்காரர்கள் என்று ஓல்ட் ஸ்டிரீட் கிட்டத்தட்ட மெட்ராஸ் தான். என்ன ரோட்டில் டீக்கடைகளுக்கு பதில், பத்தடிக்கு ஒரு பப் இருக்கிறது. டீ-க்கு பதிலாக பியர் குடிக்கிறார்கள்.
சாலையோரம் இருந்த ப்ளாட்பார்மில் வேகமாக நடந்து கொண்டிருந்தோம். பால்ட்வின் தெருவைக் கடப்பதற்காக, ப்ளாட்பார்மில் இருந்து இறங்க வேண்டியிருந்தது. லண்டனின் அடையாளங்களுள் ஒன்றான ப்ளாக் டாக்ஸி ஒன்று குறுக்கே வர, சற்று நிதானித்தோம். எதிரே இருந்த ப்ளாட்பார்மில், கடையின் சுவற்றில் சாய்ந்தவாறு ரெட்டினக் கால் போட்டு ஒருவர் தரையில் அமர்ந்திருந்தார். பளிங்கு நிறத்தில் தெளிவான முகம், பழுப்பு நிறக் கண்கள், செதுக்கப்பட்டதைப் போல தாடை, நீளமான கூர்மையான மூக்கு, காபிக்கொட்டை நிறத்தில் மெல்லிய தாடி. ஒரேயொரு முறை ஹமாம் சோப்பு போட்டு குளித்தாரென்றால், ஹ்ரித்திக் ரோஷனுக்கு டூப் போடலாம். நான் பார்ப்பதை அவர் பாத்துவிட்டார். பார்வையை தளர்த்திக் கொண்டேன். சாலையைக் கடந்து நாங்கள் அவரைத் தாண்டிச் செல்லும் போது, இடது கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டில் இருந்து சாம்பலை தட்டியவாறு, வலது கையில் இருந்த கோக்கோ கோலா கப்பை எங்களிடம் நீட்டி, ஹ்ரித்திக் ரோஷன் பிச்சை கேட்டார்.
“யோவ் உங்க ஊரு காசுக்கு நான் ஒரு ரூவா போடணும்னா கூட, எங்கூரு காசுக்கு நூறு ரூவா ஆகும்யா. வாய்ப்பில்ல ராசா, மன்னிச்சுரு” என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அவரைக் கடந்தவுடன்,
“நம்மூர் மாதிரி தான இருக்கு அனந்து, என்ன ஆளுகள்லாம் கொஞ்சம் அழகா இருக்காய்ங்க. பிச்சை எடுக்குறவிங்க கூட சினிமா ஸ்டார் மாதிரி இருக்காய்ங்க” என்றேன்.
“யெஸ் பாஸ், அமெரிக்காக்காரய்ங்க மாதிரி இல்ல. அவிங்க வெள்ளையா மட்டும் தான் இருப்பாய்ங்க. இவிங்க ஒரு மாதிரி அழகா இருக்காய்ங்க” என்றார். கீழுதட்டில் மூன்று வளையங்கள் மாட்டிய ஒருவன் எங்களைக் கடந்து சென்றான்.
“கரெக்ட். இவிங்களுக்குக் கண்ணும் மூக்கும் ஒரு மாதிரி நல்லா அமைஞ்சிருக்கு. பெரும்பாலும் நல்ல நீளமான, வடிவான மூக்கு வாய்ச்சிருக்கு. நேத்து ரிசப்சன்ல நம்மள செக்-இன் பண்ணுச்சுல்ல ஒரு புள்ளை, ஹெலனா, அவளுக்கும் இதே மாதிரி நீளமான மூக்குதான்” என்றேன். அனந்து ம் கொட்டினார். தலைமுடியில் மூன்று வெவேறு ப்ரவுன் கலர் ஷேடுகள் இருக்கும்படி கலர் செய்திருந்த ஹெலனா ரோமானியாவைச் சேர்ந்தவள்.
நம் கோயில் சிற்பங்களில் பொங்கி வழியும் அழகிற்குக் காரணம், சிற்பங்களில் இருக்கும் மனிதர்களுக்கு இருக்கும் நாசி என்று நம்புகிறேன். உண்மையில் அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்கு அப்படியொரு நாசி வாய்த்திருந்ததா, இல்லை அப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணத்தில் செதுக்கினார்களா என்று தெரியவில்லை. பரிணாம வளர்ச்சியில் ஏதோ ஒரு இடத்தில் இது போன்ற நாசியை இழந்து, இப்போதிருக்கும் தவளைக்கொட்டா மூக்கை அடையும் பாதையில் பயணித்திருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டே மெயின் ரோட்டைக் கடந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தேன். ஹோட்டலின் சுழற்கதவுகள் என்னை உள்வாங்கிக் கொள்ள, வெளியே இருக்கும் குளிருக்கு ஏற்றவாறு மிகச்சரியான தட்பத்தில் இருந்த ஓட்டலின் வரவேற்பறை என்னை வாரியணைத்துக் கொண்டது. ரிசப்சனில் இருந்த ஹெலனாவுக்கு ஹாய் சொல்லிவிட்டு பதினைந்தாவது மாடியில் இருந்த எனது அறைக்குச் சென்றேன். அனந்து எனக்கு நேர் கீழே பதினான்காவது மாடியில் இருந்தார். நல்ல வ்யூ வேண்டும் என, இரண்டு பக்கம் கண்ணாடிச் சுவர்கள் இருந்த இந்த கார்னர் ரூமை கேட்டு வாங்கியிருந்தேன்.
உடைகளை மாற்றிவிட்டு, டிவியை ஆன் செய்தால், சுவாசக் கோளாறுக்கான எதோ ஒரு மருந்தை விற்றுக் கொண்டிருந்தார்கள். வெளிர் பச்சை நிறத்தில் இருந்த விங் சேரை இழுத்து, கண்ணாடி சுவற்றின் அருகே போட்டு, அதிலமர்ந்து சாலையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். சிவப்பு, மஞ்சள் வெள்ளை ஒளித்துகள்களாக வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அடர்த்தியான அந்தக் குளிரிரவில், அவற்றைப் பார்த்த போது – “ In a city with lights like these, any dream could come true” என்று சினிமா வசனம் நினைவுக்கு வந்தது. Begin Again திரைப்படம் என்று நினைக்கிறேன். உலகெங்கிலும், அடையாளமற்று அலைவோர்க்கெல்லாம், தங்கள் கனவுகளை அடையும் பெருவாசல்களைத் திறந்து அடையாளத்தை வழங்குபவை இது போனற பெருநகரங்கள் தான். இந்த விளக்குகளும், வெளிச்சமும், நம் கனவை நோக்கிச் செல்ல இந்நகரங்கள் நமக்காக விரிக்கும் பொன்னிறப் பாதை. நகரும் வாகனங்களை, சற்று தொலைவில் இருந்து, அவைகளின் இரைச்சல் இல்லாமல் பார்க்கப் பார்க்க பொது மனம் ஒரு மாதிரி அமைதியானது. அந்த நொடியில், இந்த உலகத்தில் நானும் தூரத்தில் தெரிந்த ஒளித்துகள்களும் மட்டுமே இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு தியானம் போல. “கிர்ர்ர்ர்ர்ர்”ரென்று அலறிய காலிங் பெல் அந்த அமைதியை நிர்மூலம் ஆக்கியது.
வெறுப்போடு எழுந்து சென்று கனமான அந்தக் கதவைத் இழுத்துத் திறந்தேன். கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை, அதன் மேல் கருப்பு நிற ஆப்ரான் அணிந்து நின்றிருந்தாள் ஒருத்தி. ஹ்ரித்திக் ரோஷனிடம் பார்த்த அதே பழுப்பு நிறக் கண்கள், பொன்னிறக் கூந்தல், நீளமான கூர்மையான மூக்கு. “எள்ளுப்பூ நாசி பத்தி பேசிப் பேசித் தீராது” என்று பாடல் எழுதிய கங்கை அமரன் நினைவுக்கு வந்தார்.
“Room Cleaning ?” என்று கேட்டாள்.
“Yes”, என்று கதவை முழுக்கத் திறந்து விலகி வழிவிட்டேன். அறையை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் நிறைந்த டிராலியை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அவள் அறையை சுத்தம் செய்யத் தொடங்கவும், நான் மீண்டும் கண்ணாடி சுவற்றின் அருகே சென்று நின்று வாகனங்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
“Do you want a bed?” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.
“Sorry” என்று திரும்பச் சொல்லச் சொன்னேன். கைகளை மட்டமாக்கி, அடுக்குவது போல காண்பித்து,
“Bed”, என்றாள். கலைந்து கிடந்த படுக்கையை சரி செய்யவா என்று கேட்டிருக்கிறாள்.
“Oh, yeah yeah, please make my bed. Thank you” என்றதும், மெத்தையில் இருந்த தலையணைகளை எடுத்து கீழே வைத்து விட்டு, கலைந்திருந்த வெள்ளை நிற பெட்ஷீட்டை எடுத்து டிராலியில் வைத்தாள். உள்ளே இருந்து சலவை செய்து, அயர்ன் செய்யப்பட்ட புதிய வெள்ள நிறை பெட் ஷீட்டை மெத்தையின் மேல் விரித்தாள். பொதுவாக இது போல ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருப்பவர்களுக்கு உண்டான வேகம் இந்தப் பெண்ணிடம் இல்லை. அசாத்திய வேகத்தில் படுக்கையை ஒழுங்கு செய்து முடிப்பார்கள். அவர்கள் ஐந்து நிமிடத்தில் செய்வது நமக்கு 20 நிமிடமாவது ஆகும். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.
மறுபடியும் வாகனங்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். “ஏன் இந்தப் பொண்ணு பேசுற இங்கிலீஷ் நம்மள விட மோசமா இருக்கு” என்று மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த போது, வெள்ளை பெட்ஷீட்டை படுக்கையின் முனையில் இறுக்கமாக மடிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இரண்டு மூன்று முறை முயற்சித்தும் ‘ஹாஸ்பிட்டல் கார்னர்” எனப்படும் அந்த மடிக்கும் முறை அவளுக்கு சரியாக வரவில்லை. ஓட்டலில் படுக்கையை சரி செய்தல் ஒரு கலை. நுணுக்கமானஅசைவுகளாலும் கணக்கிடுதல்களாலும் ஆனது. திக்கித் திணறி ஒரு வழியாக மடித்து முடித்திருந்தாள். அப்போதும் ஹாஸ்பிட்டல் கார்னர் சரியாக வரவில்லை.
என்னைப் பார்த்ததும்,
“Sorry”, என்று சிரித்து விட்டு, duvet-ஐ எடுத்து மெத்தையின் மீது வைத்து, படுக்கையின் கீழ் பகுதி வரை இழுத்துவிட்டாள்.
“How many beds do you make per day? ”, என்றேன்.
“Sorry”, என்றாள். நான் கேட்டது அவளுக்கு புரியவில்லை. படுக்கையைக் காண்பித்து ஒரு நாளைக்கு எத்தனை படுக்கைகளை இது போல சரி செய்வாய் என்று சைகையில் கேட்டேன்.
“Fifteen” என்றாள். படுக்கையை சரி செய்ய இந்தப் பெண்ணுக்கு 20 நிமிடங்கள் ஆகியிருந்தது. நன்கு வேலை தெரிந்தவர்கள் சராசரியாக ஒரு படுக்கைக்கு பத்தில் இருந்து பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பதினைந்து படுக்கைகள் என்றால், கிட்டத்தட்ட 300 நிமிடங்கள், அது போக சுத்தம் செய்வதற்கு ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும், வேலை செய்யும் நேரம் மட்டுமே கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்தைத் தாண்டும்.. ஒருமுறை ஐதராபாத்தில் நான் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில், வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு நாளைக்கு தான் பதினெட்டு படுக்கைகளை சரி செய்வதாகச் சொன்னார். இதிலும் நம்மூர்க்காரர்கள் லீடிங் தான்.
“Where are you from, country?”, என்றதற்கு,
“Ukraine” என்றாள்.
“What study ?” என்று கேட்டேன்.
“Finansi” என்றாள். ஃபைனான்ஸ் என்று புரிந்து கொண்டேன்.
“India ?” என்று என்னை சரியாகக் கணித்தாள்.
ஆங்கிலத்தை வெறும் வினைச்சொற்களாக உடைக்க உடைக்க, எங்களுக்குள்ளான உரையாடல் எளிமையாகிக் கொண்டே இருந்தது.
“Why this work, finance study”, என்றதற்கு.
“War. No work” என்று அவள் சொல்லவும் தான் எனக்கு ரஷ்ய-உக்ரைன் போர் நினைவுக்கு வந்தது.
“Oh..I understand. Sorry” என்று சொல்லவும்,
“Yeah, Yeah” தோள்களை குறுக்கி, தலையசைத்து சிரித்தாள். அவள் கண்களில், பொதுவாக இருபதுகளில் இருக்கும் இளைஞர்களிடம் தெரியும் தைரியமோ, நம்பிக்கையோ துளி கூட இல்லை.
“Name” என்றதற்கு,
“Katerina” என்றாள். என் பெயரைச் சொல்லி,
“Pleasure to meet you. Hope this new land helps build a great future for you. All the best. ” என்று சொல்லவும் பிரகாசமாகச் சிரித்துவிட்டுச் சென்றாள். வேலை முடிந்து ஊர் திரும்பும் போது, என் நினைவுகளில், லண்டனின் கல் பாவிய தெருக்களோடு, கூர்மையான நாசி கொண்ட கேத்தரீனாவும் நிரம்பியிருந்தாள்.
கேத்தரீனாவுக்கு இருபத்தி ஐந்து வயதிற்குள் தான் இருக்கும். போரினால், குடும்பத்தைப் பிரிந்து, வேறொரு நாட்டில், படித்த படிப்பிற்கு தொடர்பில்லாமல், ஏதோ ஒரு ஹோட்டலின் ஹவுஸ் கீப்பீங்கில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இது போல கொடுமையான சூழ்நிலை ஒன்றும் புதிதானது அல்ல. நம் ஊரிலும் குடும்பத்துக்காக, குடும்பத்தைப் பிரிந்து வளைகுடா நாடுகளில் எத்தனையோ பேர் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எப்போது தாய்நாடு திரும்புவோம் என்று தெரியாத சூழல் அந்தப் பிரிவை மேலும் கடினமாக்கி விடுகிறது. நண்பர்கள், உறவினர்கள் இல்லாமல், ஏனென்று கேட்க நாதியில்லாத நிலைமையின் கொடூரம், உண்மையில் அந்தச் சூழ்நிலையில் இருக்கும் போது மட்டும் தான் தெரியும்.
எனக்கு சலீம் அண்ணனும், விஜயகுமார் அண்ணனும் நினைவுக்கு வந்தார்கள். ஊரில் எங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்கள். தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகள் முகாமில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு வாய்க்கும் பெயிண்டிங் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கேத்தரீனாவுக்காவது பிரிட்டனில் மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிக விசா உண்டு. சுரண்டல் இருந்தாலும் வேலை, கல்வி என்று ஏதாவது ஒரு வாய்ப்பிருக்கும். சலீமும், விஜயகுமாரும் 90களின் மத்தியில் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். அவர்களுக்கு இன்று வரையில் குடியுரிமை இல்லை. பிரான்ஸ், கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் கூட குடியுரிமை பெற்று விட்டார்கள். நம் நாட்டிற்கு வந்தவர்களுக்கு இன்று வரையில் அத்தனை சிக்கல் இருக்கிறது.
அவர்களின் பிள்ளைகளுக்கு இந்தியாவைத் தவிர, ஏன் தமிழ் நாட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களது பேச்சுத்தமிழில் கூட ஈழத்தமிழுக்கு இருக்கும் வாடை இல்லை. இங்கேயே பிறந்து வளர்ந்தாலும், உயர்கல்வி, நிரந்தர வேலை என்று எந்த வாய்ப்புகளும் இல்லை. எந்த அடையாளமும் இல்லாத அவர்களின் வாழ்வு முகாம் எனும் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் முடங்கிக் கிடக்கிறது. அவர்களின் மனநிலையும் கலாச்சாரமும் அந்த முகாமுக்குள் சுருங்கி எத்தனை பாதிப்புக்குள்ளாகும். அவர்கள் பிறந்த இடத்தில் இருந்து ஒரு நான்கைந்து கிலோமீட்டர் தள்ளி பிறந்து வளர்ந்த எனக்கு இந்த உலகத்தின் அனைத்து வாசல்களும் திறந்திருக்கின்றன. வித்தியாசம், நான் இந்த தேசத்தினன் என்ற ஒரேயொரு அடையாளம் மட்டுமே.
ஒருமுறை சலீம் அண்ணன்,
“எல்லாரும் பென்சில் ரப்பர் தான் வாங்கித் தர்றாங்கள். சிட்டிசன் ஆக்குனா நாங்கள் நல்ல விதமா பிழைக்கலாம். எங்களுக்கு வேணாம், பிள்ளையளுக்கு கிடைச்சாக் கூட போதும். ஆனா எங்களப் பத்தி யாரும் எதுக்கு கவலப்படோணும் ? அவசியமில்லை. அதனால அதுக்கு வழியில்லை.” என்றார் சிரித்துக் கொண்டே. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜோ முன்னெடுப்பில் கெலவரப்பள்ளி அருகே இருந்த முகாமுக்கு நாங்கள் சென்ற போது பென்சில், ரப்பர், நோட்டு புத்தகம் தான் வாங்கிச் சென்றிருந்தோம்.
சலீம் அண்ணன் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தவர், விஜயகுமார் அண்ணன் வேளாண்மைத் துறையில் வேலை பார்த்தவர். இருவரும் சேர்ந்து இன்று நாள் கூலிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றைக்கோ, யாராலோ, வரையப்பட்ட வெறும் கோடுகள் எத்தனை ஆயிரம் பேரின் வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றன ? எந்தவித நியாயங்களும் இல்லாத இந்த உலகத்தில், அடையாளம் மறுக்கப்பட்ட கேத்தரீனாவுக்கும், சலீம் அண்ணனுக்கும் பிழைக்கும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கிறது. ஆனால், நம்மைப் போன்றோருக்கு வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரிதாக சாதிக்கவெல்லாம் வேண்டாம். போதும் என்ற மனதோடு, கிடைத்த வாழ்க்கையை கரைகின்ற வெல்லக்கட்டியாக நினைத்து ருசித்து வாழும் மனநிலை இருந்தால் போதும். குறைந்தபட்சம் அப்படிப்பட்ட மனநிலையோடு வாழ முயற்சிப்பது கடமை என்றே நினைக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு வரை “ச்சே..என்னடா வாழ்க்கை இது. நமக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது” என்று அத்தனை அங்கலாய்த்திருக்கிறேன். துயர் மிகுந்தவை என்று நான் நினைத்த அந்த நாட்களை ஒரு வகையான தன்னிரக்க போதையில் கழித்திருக்கிறேன். இன்று யோசித்துப் பார்த்தால், அவையெல்லாம் சில்லறைப் பிரச்சனைகள். சொல்லப்போனால், நாம் அலுத்துக் கொள்ளும் பல பிரச்சனைகள் சில்லறை வகையறா தான். அம்பஞ் சல்லிக்கு பெறாதவை. இப்பொதெல்லாம் அப்படிச் சொல்வதில்லை. வாய்த்த பயணங்களும், அதில் சந்தித்த மனிதர்களும், அவர்கள் சொன்ன கதைகளும், நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. இன்றைய தேதிக்கு, all I feel is privilege and gratitude.
நம்மில் பெரும்பாலானோருக்கு ஓரளவுக்கு நல்ல சூழலில் பிறந்து, வளர்ந்து, ஆளாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு வேளை மோசமான சூழலில், வறுமையில் பிறந்தாலும் எதோ ஒன்றைப் பிடித்து மேடேறும் வாய்ப்பிருக்கும் வரையில், நாம் வாழ்வது நல்ல வாழ்க்கைதான். ஒவ்வொரு நாளையும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகக் கருதி, முடிந்த வரையில் சக மனிதனை நேசித்து, கிடைத்த நேரத்தை ரசித்துச் சுவைப்பது மட்டுமே நம்மை விட்டு வைத்திருக்கும் இயற்கைக்கும், வாழ வைத்துக் கொண்டிருக்கும் தற்செயலுக்கு காட்டும் நன்றி.