“காட்டுச் சுனையைப் போலப் பிரவகிக்கும் மனசு” என்ற சொற்றொடரை, எழுத்தாளர் இயக்குநர் ராஜு முருகன் தனது “வட்டியும் முதலும்” நூலில் பயன்படுத்தியிருப்பார். அவர் சொல்வதைப் போல, “இதனால் நமக்கு என்ன ?” என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், காட்டுச் சுனையைப் போலப் பிரவகிக்கும் மனசு உள்ளவர்களால் தான், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும் மேடுகளை கடந்து செல்ல முடிகிறது. அப்படியான மனது வெகு சிலருக்கே வாய்க்கிறது. அந்த சிலரில் குமரனும் ஒருவர்.

குமரன் எங்கள் ஊரில் சலூன் வைத்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்னர், அருள் மாமா தான் முதலில் அவரது கடையை பழக்கப்படுத்தி விட்டார். பெங்களூரில் வேலை பார்த்த போது, நிறைய முடி வளர்த்து ஃபங்க் விட்டிருந்தேன். ஆங்காங்கே செம்பட்டை கலரிங். வீட்டில் ஒரு விசேசத்திற்காக, அதே கெட்டப்போடு ஊருக்குச் சென்றிருந்தேன். “எப்டி இருக்க, வேலை எப்டி போகுது, எத்தனை நாளு லீவு” என்று எல்லாரும் என் தலையைப் பார்த்தே பேசினாலும், முதல் ஓரிரு நாட்கள் யாரும் அது தொடர்பாக குறிப்பிட்டு எதுவும் கேட்கவில்லை. இன்னும் ரெண்டு நாள்ல ஃபங்சன் முடிஞ்சதும் எஸ்ஸாயிரலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது,
“வீட்ல விசேசம் நடக்கும் போது இப்டியாடா வந்து நிப்ப. தயவு செஞ்சு போயி மயிரை வெட்டிட்டு வா” என்றார் அருள் மாமா.
“ஊருக்குப் போயி வெட்டிக்கிறேன். இங்கல்லாம் சரியா வராது” என்றதற்கு,
“ஏன் இங்க முடி வெட்டுறவன்லாம் மனுசன் இல்லையா. பாக்க சகிக்கல டா. குமரன் கடைக்குப் போ” என்று அனுப்பி வைத்தார்.
“வம்பாடு பட்டு வளர்த்த முடியை இப்டி இரக்கம் இல்லாம வெட்டச் சொல்றாய்ங்களே” என்று நொந்து கொண்டு மாடசாமி கோயில் தெருவில் இருக்கும் அந்தக் கடைக்குச் சென்றேன்.
“குமரன் ஜென்ஸ் ப்யூட்டி பார்லர்” என்ற போர்டில் ராம்கி சைடு போஸில் சிரித்துக் கொண்டிருந்தார் ராம்கியின் போர்டுக்கு கீழே, நன்கு சவரம் செய்ப்பட்ட முகம், நேர்த்தியாக வகிடு எடுத்து வாரப்பட்ட தலைமுடி, கத்தி போல அயர்ன் செய்யப்பட்ட தூய வெள்ளை நிறத்திலான அரைக்கை சட்டை, கருப்பு பேண்ட் என டக்-இன் செய்து பேங்க் ஆபீசர் கெட்டப்பில் கடையின் வாசலில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைக் கடந்து உள்ளே சென்றேன். திசைக்கு ரெண்டாக நான்கு சுழல் நாற்காலிகளில் மும்முரமாக முடி வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
அடி பாக்காமப் போனவளே குருவம்மா
ஒரு பெண்ணென வந்தது பொன்னுல பண்ணிய உருவமா
குறுக்குப் பாதையிலே மறிச்சு வழியில் நிக்க
உறுத்தும் இளமனசின் அர்த்தம் தெரிஞ்சு நிக்க
கூறாமப் போறவளே குருவம்மா
என்று கண்ணாடிக்கு மேலே, மர ஸ்டாண்டில் இருந்த டேப்ரிக்கார்டர் அலறிக் கொண்டிருந்தது. எஸ்பிபியின் குரலுக்கு தகுந்தவாறு சிகப்பும் பச்சையுமாக ஈக்வலைசரில் லைட்டுகள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. வேலை செய்து கொண்டிருந்த நால்வரில் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை. யாரை கூப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பக்கமாக இருந்தவர், அண்ணாந்து கண் மூடி உட்கார்ந்திருந்தவரின் மீசையை ஒதுக்கிக் கொண்டிருந்தார். லேசா ஸ்லிப் ஆனாலும் பெரிய சேதாரமா ஆயிரும், என்று அவரை விடுத்து இந்தப் பக்கத்து ஆளிடம் திரும்பும் போது,
“உட்காருங்க. வேலையா இருக்கம்ல” என்று தினசரிகளும், பத்திரிக்கைகளும் இரைந்து கிடந்த பெஞ்ச்சை காட்டினார் மீசையை ஒதுக்கிக் கொண்டிருந்தவர்.
“இங்க குமரன்னு” என்று நான் ஆரம்பித்ததை சட்டை செய்யாமல், மீதி மீசையை ஒதுக்கச் சென்று விட்டார். “சீக்கிரம் முடிச்சாலும் இந்தாளுகிட்ட முடி வெட்டக் கூடாது. நம்ம சொல்றத கேக்க மாட்டாப்ல. எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுத்து வேற ஆள்கிட்ட வெட்டிக்கிருவோம்” என்று பெஞ்ச்சில் அமர்ந்தேன்.
இரைந்து கிடந்த தினசரிகளுக்கு ஊடே இருந்து வாரமலரை எடுத்து, நேரடியாக நடுப்பக்கத்தை புரட்டினேன். “எகிறியது அசின் சம்பளம்” என்ற துண்டுச் செய்திக்குப் பக்கத்தில் அசின் இடுப்பில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தார். எந்தப் படத்துல வந்த போஸ் இது என்று கழுத்தைச் சாய்த்து, போட்டாவை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது,
“அருளண்ணே அனுப்ச்சாப்லயா” என்றபடி வந்து நின்றார் வாசலில் பேங்க் ஆபீசர் கெட்டப்பில் இருந்தவர். பதிலுக்கு காத்திராமல்,
“உள்ள வாங்க. உங்களுக்குத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நீங்க பாட்டுக்கு கண்டுக்காம வந்துட்டீங்க என்று உள்ளே காலியாக இருந்த இன்னொரு சுழல் நாற்காலிக்கு அழைத்துச் சென்றார்.”
“அருளண்ணே நம்மகிட்ட தான் வெட்டுவாப்ல. பெங்களூருல மட்டும்தான் நல்லா வெட்டுவாங்களா, நாங்கள்லாம் என்ன குறையா வெட்டிரப்போறோம்..ம்ம்” என்று சிரித்தபடி ஷீட்டை எடுத்து கழுத்துக்கு கீழே மூடினார்.
என்னதான் பழக்கமா இருந்தாலும், மெனக்கெட்டு போனைப் போட்டு இதையெல்லாமாடா சொல்லுவீங்க என்று அருள் மாமாவை நொந்து கொண்டு,
“ரொம்ப லைட்டா வெட்டுனா போதும். பின்னாடி ஃபங்க் வேணும், லெந்த் குறைச்சிர வேணாம்” என்றேன்.
“வெட்டுனா மாதிரி இருக்கும், ஆனா வெட்டாத மாதிரியும் இருக்கும்” என்று கத்திரிக்கோலை சுழற்றினார். பதினைந்து நிமிடங்களில் வெகு நேர்த்தியாக வெட்டி முடித்திருந்தார். கண்ணாடியில் என்னைப் பார்த்து,
“எப்டி சார்..ஓகே வா?” என்றார்.
“நல்லாருக்கு சார்” என்று நான் சொல்வதற்குள்,
“என்ன பெரிய பெங்களூரு. வேலைல கருத்து இருந்தா போதும் சார்” என்று சிரித்தார். உடையில் மட்டுமல்ல, அவரது தொழிலில் இருந்த நேர்த்தியும் அன்றே மனதில் பதிந்து விட்டது.
அதன் பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. எப்போதாவது ஊருக்குச் செல்லும் போது ரோட்டில் கடந்து போகும் போது பார்ப்பதோடு சரி. ஆனால் ஒரு முறை கூட அவரை வேறு உடையிலோ, டக்-இன் செய்யாமலோ நான் பார்த்ததில்லை. தெரியாதவர்கள் பார்த்தால் அவரை வழக்கறிஞர் என்று தான் நினைப்பார்கள். இடைப்பட்ட காலத்தில் ஃபேஸ்புக் அவரைக் கொண்டு வந்து டைம்லைனில் சேர்த்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது, அவர்களுக்கான உரிமைகள் சார்ந்து போராட்டம் நடத்துவது போன்ற நிகழ்வுகளில் எல்லாம் முன்னின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். ஏதோ அவ்வப்போது அல்ல, குறைந்தது மாதத்துக்கு ரெண்டு என, இது போன்ற முன்னெடுப்புகளை தொடர்ந்து ஊர் வாரியாக நிறைய செய்து கொண்டிருந்தார்.
பல ஆண்டுகள் கழித்து கோவிட் நேரத்தில் மொத்தமாக ஊருக்கு மாறிச் சென்ற போது தான் அவரிடம் பேசக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் இருந்ததால், முடி வெட்டுவதற்கு அவரை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்திருந்தோம். பத்து வருடம் முன்பு பார்த்த அதே கெட்டப்பில், அப்படியே இருந்தார். வேலை முடிந்து அவர் கிளம்பும் போது, வழியனுப்ப கேட்டின் அருகே சென்றேன்,
“நல்லாருக்கீங்கள்ல சார்” என்றதற்கு,
“நல்லாருக்கோம் சார். என்ன இந்த லாக்டவுன் தான் படுத்துது” என்றார். அப்போது முதலாவது லாக்டவுன் ஆரம்பித்த நேரம். சலூன்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
லாக்டவுனில் ஊரில் இருந்தபடியே வேலை செய்ததால், பயணம், கடைச் சாப்பாடு, சினிமா இன்ன பிற வெட்டிச் செலவுகள் எல்லாம் குறைந்து கையில் கொஞ்சம் பணம் நின்றது. நெருங்கிய வட்டாரத்தில், லாக்டவுனால் வேலைக்குச் செல்ல இயலாமல், சிரமத்தில் இருப்பவர்கள் சிலருக்கு தரலாம் என்று முடிவு செய்திருந்தோம். பெரும்பாலும் மில் வேலைக்கு, நாள் காண்டிராக்டுக்கு செல்பவர்களுக்குத் தான் கொடுத்துக் கொண்டிருந்தோம். குமரனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசனை. பணம் வேணுமா என்று உரிமையாக கேட்கும் அளவுக்கு நெருக்கம் இல்லை. கண்டு கொள்ளாமல் விடும் அளவிற்கு தூரமும் இல்லை.
தீவிர யோசனைக்குப் பிறகு, “தேவையான காலத்துல செய்றது தான் உதவி. அது போக, அவருக்குத் தேவையில்லன்னா கூட, அவருக்குத் தெரிஞ்ச மாற்றுத் திறனாளிகளுக்கோ இல்ல ஆதரவற்றோருக்கோ கண்டிப்பா தேவையிருக்கும். அதுனால கேட்டுருவோம்” என்று ஃபோனைப் போட்டேன்.
“சொல்லுங்க சார்” என்றார்.
“இந்த வாரம் ஃப்ரீயா சார். பாக்கலாமா” என்றதற்கு.
“ரெண்டு நாள் டைட் சார், புதன் கிழமை வேணா வர்றேன். அப்பா எப்டி இருக்காங்க” என்றார்.
“இல்ல சார், முடி வெட்டுறதுக்கில்ல. தப்பா நினைக்காதீங்க. இந்த லாக் டவுன் இன்னும் முடியல, பெருசா வேலை நடந்திருக்காது உங்களுக்கு. பணம் எதுவும் வேணுமான்னு கேக்குறதுக்குத் தான் கால் பண்ணேன். திருப்பித் தர வேணாம் சார். ரொம்ப யோசனைக்கு அப்புறம் தான் கேக்குறேன். தப்பா நினைக்காதீங்க” என்றேன்.
ஒரு பத்து செகண்ட் அமைதி இருந்திருக்கும்.
“சார்..” என்று நான் மறுபடியும் அழைத்தவுடன், லேசான விசும்பல் சத்தம் கேட்டது. இரண்டொரு நொடிகளில் உடைந்து அழத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அழுகை அதிகரித்து, சிறு பிள்ளை அழுவதைப் போல கேவிக் கேவி அழுதார். என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரம் அமைதியாய் இருந்தேன். இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
“சார்..சாரி சார். நான் வச்சிர்றேன். அப்புறமா கூப்பிடுறேன்” , என்றேன்.
“இல்ல சார், ஒரு நிமிசம்” என்று அழுகையை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினார்.
“சார் நான் நிறைய பேருக்கு நல்லது செஞ்சிருக்கேன். கஷ்டப்படுறவங்களுக்கு தொணையா நிக்கணும்னு சொந்த வேலைய விட்டுட்டு அவ்வளவு அலைஞ்சிருக்கேன். இனிமேலும் இதத் தொடர்ந்து செய்யத்தான் போறேன். ஆனா, இத்தன வருசத்துல ஒரு ஆள் கூட, வாண்ட்டடா என்கிட்ட பணம் வேணுமான்னு கேட்டதே இல்ல சார். எனக்கு எப்டி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல. இப்ப பணக் கஷ்டமும் இருக்கா. அதான் அழுதுட்டேன். சாரி சார்”, என்றார்.
அவரைக் காயப்படுத்தவில்லை, என்று எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது.
“பரவால்ல சார். நான் தப்பா எடுத்துக்குவீங்களோன்னு தான் பயந்தேன்.அக்கவுண்ட் நம்பர் தர்றீங்களா. கொஞ்சம் பணம் டிரான்ஸ்பர் பண்ணி விடுறேன்” என்றதற்கு,
“வேணாம் சார். சமாளிக்கிற மாதிரி தான் இருக்கு. வேணும்னா நானே கேக்குறேன். நீங்க கேட்டதே போதும்”, என்று மறுத்து விட்டார்.
“கைல இருக்கு சார். எப்ப வேணாலும் கேளுங்க. என்னைய விட உங்களுக்கு நிறைய பேரைத் தெரியும். மாற்றுத் திறனாளிகளுக்கு எல்லாம் நிறைய பண்றீங்க. அதான் கேட்டேன்”, என்றேன்.
“பணம் மட்டும் அவங்க பிரச்சனைக்கு தீர்வு இல்லை சார். வேணும்னா கண்டிப்பா கேக்குறேன். நீங்க கேட்டதே நிறைவா இருக்கு. நன்றி சார்”, என்றதும், மேலும் வற்புறுத்த மனமில்லாமல் விட்டு விட்டேன்.
சில மாதங்கள் கழித்து, லாக்டவுன் எல்லாம் முடிந்த பிற்பாடு, அவரது கடைக்குச் சென்றிருந்தேன். பழைய உரையாடல் குறித்து நான் எதுவும் பேசவில்லை. பாதி வெட்டிக் கொண்டிருக்கும் போது,
“அன்னைக்கு நீங்க கேட்டது ஒரு மாதிரி எமோசன் ஆயிருச்சு சார். நீங்க கேட்டப்போ கூட சிரமம் தான். இந்தா இந்தப் பசங்களுக்கு எல்லாம் சம்பளம் குடுக்க முடியல, ஆனா எல்லார் வீட்டுக்கும் பலசரக்கு ரெண்டு மாசத்துக்கு வாங்கிப் போட்டுட்டேன் சார். ஒவ்வொரு தடவையும் மாற்றுத் திறனாளிகளுக்காக கூட்டம் போடுறது, அவங்கள கலக்டரேட் கூட்டிட்டுப் போறது,எல்லாம் கைக்காசை போட்டுத் தான் செஞ்சிட்டு வர்றேன். அதுல நமக்கு ஒரு திருப்தி. இருக்க வரைக்கும் செய்வோம் சார். என்னத்த கொண்டு போகப் போறோம்” என்றார். அமைதியாக கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தேன்.
கண்ணாடியில் சரி பார்த்து விட்டு, கடையை விட்டு வெளியே வரும் பொழுது, மனது அத்தனை நிறைவாக இருந்தது. எப்பேர்ப்பட்ட மனது ? பிரதிபலன் எதிர்பாராத இத்தனை எளிமையான மனது எத்தனை பேருக்கு வாய்க்கும். இது போன்ற அடுத்தவருக்கு உதவும் செயல்களை எத்தனை பர்சனலாக எடுத்துக் கொண்டிருந்தால், அன்று உடைந்து அழுதிருப்பார் ?
சமீபத்தில் அவரது மகனின் திருமணத்திற்கு அழைத்திருந்தார். நான் ஊரில் இல்லாததால், அப்பா மட்டும் சென்றுவிட்டு வந்தார். “அத்தனை கூட்டம்டா, சாதாரண லேபர்ல இருந்து எம்எல்ஏ எம்.பி வரைக்கும் எல்லாரும் வந்திருக்காய்ங்க. அப்படி பழக்கம் வச்சிருக்காப்ல. இப்பக்குள்ள பாத்ததுல ரொம்ப நிறைவான கல்யாணம்டா. சூப்பரா இருந்துச்சு” என்றார். ஒருவரது வாழ்வு எத்தனை முழுமையானதாக இருந்தால், அவரது வீட்டு நிகழ்வை, சம்பந்தமில்லாத வேறொருவர் நிறைவாக உணர முடியும். எண்ணம் போல் வாழ்வு என்பது எத்தனை உண்மை.
குமரனைப் பற்றி பேசும் பொழுது, ரங்காவைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். ரங்கா பொருளாதார ரீதியாக குமரனை விட பன்மடங்கு வசதியானவர். நான் வேலை செய்த நிறுவனத்தின் துணைத் தலைவர். எனது மெண்டர்களில் ஒருவர். தெளிவான சிந்தனையோடு மிக வெளிப்படையாக பேசக் கூடியவர். ஒரு கார்ப்பரேட் எக்ஸிக்யூடிவுக்கான அத்தனை பரிமாணங்களோடும் பொருந்திப் போகக் கூடிய நபர். வேலை, வாசிப்பு என எல்லா தளங்களிலும் முழுமையான மனிதர். தனிப்பட்ட வாழ்விலும், கேரியரிலும் நமக்கென்று சில குறிக்கோள்கள் இருக்கும். வெகு சிலரைப் பார்த்தால் மட்டுமே நமக்கு ரோல் மாடலாக நினைக்கத் தோன்றும். அவர்களின் சிந்தனையை, செயல்பாடுகளை mimic செய்ய எத்தனிப்போம். எனக்கு அப்படியான மனிதர் ரங்கா.
அலுவல் சார்ந்த விசயங்களில், சில நேரங்களில் நியாயமாக, சில நேரங்களில் பக்குவம் இல்லாமல் என அத்தனை முறை அவருடன் முரண்பட்டிருக்கிறேன். ஒருமுறை கூட தான் துணைத் தலைவர் என்ற இறுமாப்பிலோ, தனக்கு இரண்டு மூன்று லெவல் கீழே வேலை பார்ப்பவன் தானே என்ற எண்ணத்திலோ அவர் என்னிடம் பேசியதில்லை. முழுமையாக நான் சொல்ல வந்ததைக் கவனித்து, அந்தக் கருத்தை மட்டுமே கையாண்டிருக்கிறார். இந்த நிறுவனம் முதன்முதலில் தொடங்கிய போது, என்னை வேலைக்குத் தேர்வு செய்ததும் அவர் தான். பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்திருந்தாலும், ஒரு startup போன்ற சூழலில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் போது வந்த வாய்ப்பு அது. நான்கைந்து சுற்றுக்கள் முடிந்து, கடைசிச் சுற்று நேர்காணல் அது. மிக நீண்ட நேர்காணல். இரவு ஏழரை மணிக்குத் தொடங்கி, பத்து மணிக்குத் தான் முடிந்தது. நேர்காணல் முடித்து வெளியே வரும் பொழுது மனதுக்கு திருப்தியாக இல்லை. ஓரளவுக்கு தான் நன்றாக செய்திருந்தேன். ஒரு சில கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்திருந்ததால், கொஞ்சம் திமிரா பேசிட்டோமோ என்று தோன்றியது. சில கேள்விகளுக்கு இன்னும் நல்ல முறையில் பதிலளித்திருக்க வேண்டும் என்றும் தோன்றியது. பெரிதாக நம்பிக்கையில்லை. மனதை சாந்தப்படுத்த வழக்கம் போல சுபம் ஓட்டலில் புரோட்டா சாப்பிட்டு விட்டு, பதினோரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். பதினொன்றரை மணியளவில் தெரியாத நம்பரில் இருந்து ஒரு ஃபோன் வந்தது. ரங்கா தான் பேசினார்.
“Right time to talk ?”, என்று கேட்டுவிட்டு,
“I have interviewed over 500 people in my career. The others in the panel would have also done as many interviews as me. And we know when we have found the right candidate. Would you like to work with us ?”, என்றார்.
“Of course”, என்றேன்.
“Sorry for calling you late. I could have told this to you tomorrow. But I felt, you would have a better sleep, if I told you this right away” என்றார். உண்மையில் அந்த உரையாடலுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினேன். அன்றிலிருந்து இன்று வரையில் அவரது நம்பரை நான் ஃபோனில் ஸேவ் செய்ததில்லை. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களின் நம்பரைப் போல, அவரது நம்பரும் மனதில் பதிந்து விட்டது. அன்றே அவர் எனக்கு பேசியிருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் அந்த சிறிய செயல், எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. Sometimes, small actions have a big and long lasting impact.
அந்த நிறுவனத்தில் ஒரு பாலிசி இருந்தது. நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் ஏதேனும் அறக்கட்டளைக்கு உதவி செய்ய நினைத்தால், நிறுவனமும் அதே தொகையை அந்த அறக்கட்டளைக்கு செலுத்தும். உதாரணத்திற்கு நான் ஒரு அறக்கட்டளைக்கு 10000 ரூபாய் தர விரும்புகிறேன் என்றால், நான் 5000 கொடுத்தால் போதும், மீதி 5000-த்தை எங்கள் நிறுவனம் கொடுத்துவிடும். ப்ராசஸ் சற்று நீளமானதாக இருந்தாலும், நல்ல பாலிசி அது. CSR (Corporate Social Responsibility) initiative-களில் ஒன்று என நினைக்கிறேன். ஆனால் உதவி பெறும் அறக்கட்டளையானது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையாக இருக்க வேண்டும், அரசியல் மதம் சாராத அமைப்பாக இருக்க வேண்டும் என நிறைய விதிமுறைகள் உண்டு.
கோவிட் நேரத்தில் அந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், கிராமப்புறத்தில் தேவைப்படுவோரின் கைக்கு நேரடியாக பணம் சேரும் விதமாக அந்த பாலிசியில் எதுவும் இல்லை. HR-இடம் கேட்ட போது மறுத்து விட்டார்கள். ஏதாவது பள்ளி மாணவர்களுக்கு பென்சில், நோட்புக் வேண்டுமென்றால் வாங்கலாம், பணப் பரிமாற்றம் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். ரங்காவிடம் நேரடியாக கேட்கலாம் என்று யோசித்தேன். ஒரு வேளை நம்மள தப்பா நினைச்சிட்டா என்ன செய்றது என்ற யோசனை வேறு ஒரு பக்கம். ஒரிரு நாட்கள் கழித்து, வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில், சப்போட்டா மர நிழலில் உட்காந்திருக்கும் போது இது நினைவுக்கு வர, எதற்கும் கேட்டுப் பார்த்து விடுவோம் என்று அவருக்கு ஃபோன் செய்தேன். எதிர்முனை ரிங் ஆனதும், எப்போதும் போல நடந்து கொண்டே பேச ஆரம்பித்தேன். சம்பிரதாய நல விசாரிப்புகளுக்குப் பின்,
“I have been trying to give some money to people who are not able to go to jobs. They are people who work for daily wages. If we can match the amount that I am giving, I can help them for some more time, or I can extend this to a few more people” என்றேன்.
“Tough to track or measure. Cash transactions are not possible” என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.
“Okay, no issues” என்று வைத்து விட்டேன்.
சப்போட்டா மரத்தில் தொடங்கிய உரையாடல், பத்தடி தள்ளியிருந்த வாழை மரத்துக்கு வரும் முன்னர் முடிந்து விட்டது. கேட்டிருக்கக் கூடாதோ, தப்பா நினைச்சிருப்பாப்லயோ என்று தீவிர யோசனையில் வாழை மரத்தை சுரண்டிக் கொண்டிருந்தேன். பத்து நிமிடத்தில் திரும்ப அழைத்தார்.
“Can I ask a few questions on what you just proposed ?”, என்றார்.
“Yes”, என்றதற்கு,
“Will you be charging interest for the money that you are giving to these folks? “, என்று கேட்டார்.
“No Ranga, I am not lending it. I am trying to help them out and I don’t expect them to return it to me. I would rather not give them any money than charge interest for it” என்றேன்.
“Got it. Tell me how much you need. I should be able to help. This is not official and this is from my personal funds”, என்றார்.
எனது ஊருக்கு சற்றும் சம்பந்தமில்லாத நபர். எந்தக் காலத்திலும் அவர்தான் செய்தார் என்பது உதவி பெற்ற யாருக்கும் தெரியப் போவதில்லை. அவர் உதவத் தயாராயிருப்பார் என்றோ, எவ்வளவு வேண்டும் என்று கேட்பாரென்றோ நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நொடிகள் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தேன்,
“And that amount does not have to be less. I have enough. Just tell me the number you need” என்று அடுத்த அதிர்ச்சியைத் தந்தார்.
அலுவலகத்தில் இருந்த பாலிசியில் இதற்கு வழியிருந்தால், அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் கேட்டேனே தவிர, வேறொருவரின் பணத்தை கையாளுவதற்கு மனம் ஒப்பவில்லை. தயக்கத்தைத் தாண்டி, பயம் இருந்தது. நாம் சரியான இடத்தில் பணத்தைச் சேர்த்தோம் என்று எப்படி நம்புவார்கள். நண்பர்கள் என்றால் பரவாயில்லை, புரிந்து கொள்வார்கள். மேலும், எனது பணி சார்ந்து, நிறைய முரண்பாடுகள் வருவதற்கான சூழல் இருந்தது. அது போன்ற சூழல்களில், இந்த உதவியினால், நான் சமரசம் செய்து கொள்ள வேண்டி வந்தால் என்ன செய்வது, அல்லது இந்த பணத்தை நான் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்று என்னை ஒரு வேளை தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வது என்று பல சிந்தனைகளுக்கு மத்தியில், யோசித்து சொல்கிறேன் என்று ஃபோனை வைத்து விட்டேன்.
ஓரிரு வாரங்கள் கழித்து ரங்கா திரும்ப ஃபோன் செய்தார்.
“You never got back to me on how much you need?”, என்றார்.
“If it is official and handled by someone else, I am okay. But I am not comfortable handling your money Ranga”, என்று சொல்லவும்,
“Up to you. But remember, I trust you and that’s why I offered”, என்று வைத்து விட்டார்.
நான் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்ததற்கு முகாந்திரம் இருந்தது. நான் உதவ வேண்டும் என்று நினைத்தவர்கள் என்னுடைய ஊர்க்காரர்கள், என் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள், ஏன் உறவுகளும் கூட உண்டு. நான் அவர்களுக்கு உதவி செய்வதால் என்னுடைய social capital அதிகரிக்கும். சுற்றத்தில் என்னை மதிப்பார்கள். அதில் எனக்கு மிகப்பெரிய பலன் உண்டு தானே. அதனால் எந்தப் பலனையும் எதிர்பாராமல் எல்லாம் நான் உதவி செய்ய எத்தனிக்கவில்லை. ஒரு வகையில் மேற்சொன்ன அனுகூலங்கள் கிடைக்கும் என்ற சுயநலத்தாலும் உதவி செய்தேன் என்றும் கூறலாம்.
ஆனால், குமரனின் கண்ணீருக்குப் பின்னாலோ, ரங்கா எவ்வளவு வேண்டுமானாலும் கேள் என்று சொன்னதற்குப் பின்னாலோ இது போன்ற எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. இருவரின் செயல்களும், அவர்கள் சக மனிதர்கள் மீதும், சமூகத்தின் மீதும் வைத்திருக்கும் பரிவின் வெளிப்பாடு மட்டுமே. எனக்கும் ஓரளவுக்குப் பரிவு உண்டு, உதவி செய்ய மனமும் உண்டு. ஆனால் அந்த இருவரின் மனநிலைக்கும் எனக்கும் இன்னும் நிறைய தூரம் இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் எனக்கும் அப்படிப்பட்ட மனநிலை வாய்க்கும் என்று நம்புகிறேன். அது வரையில், என்னைச் சுற்றியுள்ள குமரன்களுக்காவும், ரங்காக்களுக்காகவும் பெய்யும் மழையில் நானும் நனைந்துவிட்டுப் போகிறேன்.