அறம்

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் தொழிலாளர்களில் ஒருவர் நாகராஜ் சார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எனக்கு அவரைத் தெரியும். தெரியும் என்றால், வெறும் அறிமுகம் மட்டும்தான், அதிகப்படியான பழக்க வழக்கமோ, பேச்சுவார்த்தையோ இல்லை. காலை நடைபயிற்சிக்கு செல்லும் போது எதிரே குப்பை வண்டியோடு  வருவார். இப்போது இருக்கும் பேட்டரி வண்டி அல்ல, பழைய மீன் பாடி மாடல் வண்டி. ஒற்றைக் கையில் அதனை இழுத்துக் கொண்டு, மற்றொரு கையை அநாயசமாக வீசிக் கொண்டு வருவார். டவுசர், பச்சை நிற அரைக்கை சட்டையுடன், இரண்டு பாதங்களிலும் இருவேறு நிறங்களில் உள்ள ஹவாய் செருப்பு அணிருந்திருப்பார். நிமிர்ந்த நன்னடை கொண்டவர். He walks like he owns the place என்பார்களே, அதைப் போல. தரை அதிர நடப்பார். அவர் இப்படி தெருவில் நடந்து வரும் போது, எதிரெதிரே பார்த்துக் கொண்டால் ஒரு பரிச்சயமான பார்வை வீசுவதோடு சரி.

அவர் குப்பை அகற்றும் பணியில் இருந்ததால், என் வீடு அவருக்கு நன்றாகத் தெரியும். அவரது வசிப்பிடம் எனக்குத் தெரியாது. எனது பகுதியில் அருகே இருப்பார் என்று எனக்கொரு அனுமானம் இருந்தது. இரண்டே முறைதான் பேசியிருக்கிறோம். அதில் இரண்டாவது முறை நடந்த உரையாடல் தான் இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் அவரை என் ஞாபகத்தில் இருத்தியிருக்கிறது. இதற்குப் பின்னரும் அது எனக்கு மறக்கும் என்று தோன்றவில்லை. நாகராஜ் சாருடனான அந்த உரையாடலை, நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று பல பேரிடம் பல முறை பல சூழ்நிலைகளில் விவரித்திருக்கிறேன். இம்முறை உங்களுக்காக.

அன்றைய தினம் காலையில், நானும் நண்பர்களும் பொருட்களை ஒதுக்கி வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தோம். பழைய விலைக்குப் போடக் கூடிய பொருட்கள் இருந்ததால், அதை நாகராஜ் சாரிடம் கொடுத்து விடலாம் என்று அவரை வீட்டிற்கு அழைத்திருந்தேன். வந்தவர், விலை போகக்கூடிய பொருட்கள், குப்பைகள் என்று அரை மணி நேரத்தில் சரசரவென்று தனியாகப் பிரித்து பழைய சிமெண்ட் சாக்குகளில் மூட்டை கட்டி விட்டார். கடைசி மூடையை எடுத்துக் கொண்டு திரும்பியவர்,

“பாத்ரூம் எதுனா கழுவணும்னா சொல்லுங்க சார்” என்றார்.

பேச்சிலர்களாக இருந்ததால், கழிவறை மோசமாக இருக்கும் என்ற அனுமானத்தில் கேட்டாரா என்று தெரியவில்லை.

“இல்ல. வேணாம்” என்று மறுத்தேன்.

“மத்தவங்க மாதிரி இல்ல சார். சும்மா ப்ரஷ் போட்டு தேய்க்க மாட்டேன். ஆசிட் போட்டு, கையால தான் கழுவுவேன்”.

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மழுப்பி அனுப்பிவிட்டேன். ஏன் அப்படிச் சொன்னார் என்று இரண்டொரு நாட்களுக்கு மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு வாரம் கழித்து அவரைப் பார்த்த போது, ஒரு முச்சந்தியில் இருக்கும் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். நான் எதிர்ப்புறம் இருந்து, தெருவைக் கடந்து அவரை நோக்கி நடந்து சென்றேன். அருகே செல்லும் போது கவனித்து,

“என்ன சார்” என்றார்.

பர்ஸில் இருந்து ஒரு இருபது ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினேன். எவ்வளவு சம்பாதித்தாலும், இது போன்ற பத்து, இருபது ரூபாய்களில் தானே நமக்குள் இருக்கும் கர்ணன் விசுவரூபமெடுக்கிறான்.

“எதுக்கு சார்” என்று புன்முறுவலோடு வாங்கி, அதனை மடித்து, முத்தமிட்டு சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். 

அப்போது தான் அவரது கைகளை கவனித்தேன். புறங்கை, உள்ளங்கை, விரலிடுக்குகள் என்று கை முழுக்க புண்கள். ஆறித் தழும்பாய் மாறிய புண்கள், லேசான இரத்த நிறத்தில் புதிதாய் உருவான புண்கள் என்று தோல் உரிந்து விகாரமாக இருந்தது. “ஆசிட் போட்டு கையால தான் சார் கழுவுவேன்” என்று சொன்னது நினைவிற்கு வந்தது. கையைக் காண்பித்து

“மருந்து போடலாம்ல சார்” என்றேன்,

“இதுவா, இது மருந்துக்கெல்லாம் ஆறாது சார். மாத்தி மாத்தி வந்துனே தான் இருக்கும். மருந்து கட்டினு இருந்தா வேலை யாரு பாக்குறது” என்று சிரித்தார்.

“எப்டி சாப்டுறீங்க இத வச்சிக்கிட்டு”, என்றேன்.

“பழகிருச்சு சார். சம்பளம் மட்டும் பத்தாது. இப்டி எதுனா பாத்ரூம் கழுவுனா, பாத்ரூமுக்கு 500 ரூபாய் வரைக்கும் பார்க்கலாம், அதுல தான் வண்டி ஓடுது”.

“வேற வேலை பாக்க வேண்டியது தான சார், மெட்ராஸுல வேலைக்கா பஞ்சம்” என்றேன்.

“எனக்கு வேற வேலை தெரியாது, வேற வேலை குடுக்கவும் மாட்டாங்க.  எங்க அப்பாவை மாதிரி எனக்கும் இது தான் வாய்ச்சது. என்ன இருந்தாலும் இதான சார் சோறு போடுது” என்றவர் தொடர்ந்து,

“என் புள்ள செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான் சார். இன்னும் பத்து வருசமாவது நான் இந்த வேலையப் பாத்தா தான், அவன் இதே வேலையப் பாக்காம இருக்க முடியும்” என்றார்.

யோசித்துப் பார்த்தால், தனது மகனோ மகளோ, என்ன வேலை பார்க்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு காணும் பெற்றோர்கள் மத்தியில் – தன் பிள்ளை, தான் பார்க்கும் அதே வேலையை செய்யும் சூழ்நிலை உருவாகி விடக்கூடாது எனும் பதைபதைப்பின் கனம் எத்தனை பெரியது ?. அவரது மகனுக்கு அந்த சூழ்நிலை உருவாகாமல்  இருக்க, அதே வேலையை தான் தொடர்ந்து செய்வதே வழி என்பதை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு வகையில், அந்த நிலைக்கு அந்த வேலையைச் செய்திராத நம்மால் ஆளாக்கப்பட்டிருக்கிறார். இன்று வரையில் அதற்கான எவ்வித எதிர்வினையும் ஆற்றாது, நாம் அவரை வைத்திருக்கும் சுழற்சியில் இருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 

இந்தியாவில், பொதுமக்களின் நலனைக் காப்பதற்காக இருக்கும் சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லையென்பது அத்தனை பெரிய முரண். அவர்களின் நலனை உறுதி செய்வதற்கான செயல்திட்டங்கள் அவ்வப்போது இயற்றப்பட்டாலும், அவை முழுமையாக பலன் அளிக்காது. காரணம், இந்த செயல்திட்டங்களுக்கான அடிப்படையான, அந்தத் துறை சார்ந்த புள்ளி விவரங்கள் நம்மிடம் சரியாக இல்லை என்பது தான். ஆங்கிலத்தில், Statistical Invisibility என்பார்கள். உதாரணத்திற்கு, சுகாதாரத் தொழிலாளர்களில் எத்தனை பேர் என்னென்னெ நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்தால், அதனடிப்படையில் அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டை உறுதி செய்தல் சாத்தியமாகும். என்னைக் கேட்டால், இன்னும் ஒரு படி மேலே போய், அவர்களின் குழந்தைகளின் உடல் நலன் குறித்த புள்ளி விவரங்களும் எடுக்கப்பட வேண்டும். அவை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். ஆனால், நமது நிர்வாகக் கட்டமைப்பில் இந்தத் தொழிலாளர்களின் systemic exlcusion தொடரும் வரையில், இதற்கான முறையான செயல்திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வாய்ப்போ, அவை சரியான பலனை அளிப்பதற்கான சாத்தியங்களோ மிகக் குறைவு. அது வரையில் அவர்களுடன் அமர்ந்து உணவருந்துதல் போன்ற செயல்களைத் தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது. விலாவாரியான புள்ளி விவரங்கள் நிறைய குறைகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும். நல்ல கருத்தியலும் தொழில்நுட்பமும் கைகோர்க்கும் போது ஒரு மேஜிக் நடக்கும். அதை செய்வதற்கான முனைப்பு மட்டும் நம்மிடம் இருந்தால் போதுமானது.

ஒடுக்கப்பட்டு, சமவாய்ப்புகள் மறுக்கப்பட்டு, எண்ணற்ற இன்னல்களோடு விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு – தங்கள் அருகிலேயே சொகுசாக வாழ்ந்து வரும் பெருங்கூட்டமொன்று, தங்களை ஏவல் செய்வதைப்  பார்க்கும் போது எவ்வளவு ஆத்திரம் வரும் ? அந்த ரெளத்திரத்திடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் அறம் அன்றி வேறென்ன ? இதை அறம் என்று வகைப்படுத்தாவிட்டால், வேறு எதை அறம் என்று சொல்வது ? ஒரு வகையில் அவர்களின் அறத்தால் நாம் அடையும் பலனும் அவர்களிடம் பெறும் கடன் தான். அவர்களை சுயமரியாதையுடன் நடத்துவதும், நம் நிலையில் இருந்து சமூகத்தைப் பார்க்காமல், அவர்கள் நிலையில் இருந்து பார்ப்பதும், அவர்கள் மேடேற நம்மால் ஆனதைச் செய்வதுமே அந்தக் கடனை சிறிது சிறிதாக திருப்பித் தருவதற்கான எளிய வழியாக எனக்குப் படுகிறது.

அதற்குப் பிறகு எனக்கும் நாகராஜ் சாருக்கும் இடையே அதிகமான சந்திப்புகள் நிகழவில்லை. நானும் வேறு வீடு மாறி வந்துவிட்டேன். வெகு நாட்கள் கழித்து, ஒரு காலை வேளையில் வேளச்சேரியில் இருந்து கடற்கரை செல்லும் இரயிலில் படிகளை ஒட்டி நின்றிருந்தேன். திருவான்மியூர் நிலையத்தில் இரயில் நின்ற போது, அடுத்த ப்ளாட்பார்மில், எதிர் திசையில் செல்லக் கிளம்பிய ரயிலில் இருந்து “சார்” என்ற குரல் வந்தது. நாகராஜ் சார் தான். அந்த ரயிலில், படிக்கட்டின் அருகே ஒரு கையில் கம்பியைப் பிடித்துக் கொண்டு, சற்றே  வெளியே சாய்ந்தபடி இன்னொரு கையை என்னைப் பார்த்து அசைத்துக் கொண்டிருந்தார். சிரித்தபடி, நானும் கையை உயர்த்தினேன். அவ்வளவு தூரத்திலும், அவரது கையில் இருக்கும் புண்கள் அனைத்தும் அத்தனை தெளிவாகத் தெரிந்தன. 

Leave a comment