மாலை 5.30 மணி இருக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என் வேலை நாளின் இரண்டு சதவிகித நேரத்தை இரக்கமில்லாமல் தின்று செரிக்கும், காமாட்சி மருத்துவமனை சிக்னலில், பாலத்தின் பக்கவாட்டில் நின்றிருந்தேன். எஃப்.எம்-மில்,
ஏ…சீமை பூராவும் சுத்தி வரும் காட்டாறு
எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு
சாதி பாக்காத சனமே என் கூட்டு
மோதிப் பாத்தாலே முடிப்பேன் பொலி போட்டு
என்று பேரன்புக்குரிய அந்தோணிதாசன் அண்ணன் நொறுக்கிக் கொண்டிருந்தார். “கொஞ்சம் கிடைச்சாலும்…. பங்கு வைக்கும் ஆளு”, என்று அடுத்த வரிகளை முணுமுணுத்துக் கொண்டே, கைகள் ஸ்டியரிங்கில் தாளம் போடும் போது, “பொளிச்” என்று மூஞ்சியில் தண்ணீர் எறியப்பட்டது. அனிச்சையாக கைகள் மூஞ்சியை மறைக்கும் போதுதான் தெரிந்தது, தண்ணீர் எறியப்பட்டது என் முகத்தில் அல்ல, கார் விண்ட்ஷீல்டில். வலப்புறம் இருந்து நீண்ட கையொன்று, விண்ட்ஷீல்டை துடைக்கத் தொடங்கியது. சரசரவென்று துடைத்து முடித்து, நன்றாக இருந்த விண்ட்ஷீல்டை அழுக்காக்கிவிட்டு, சன்னல்புறம் இருந்து காசு கேட்டது அந்தக் கை.

எண்ணெய் பார்த்திராத தலைமுடி, அழுக்கான கோடு போட்ட சட்டை, தோளில் சட்டையை விட அழுக்கான ஒரு சிறிய டர்க்கி டவல், மழிக்கப்படாத தாடி மீசை, இரைஞ்சும் கண்கள் என்று கெச்சலான உருவத்தோடு ஒருவன் செய்து முடித்த வேலைக்கு காசு கேட்டு நின்றிருந்தான்.
“யாரைக் கேட்றா கண்ணாடில தண்ணியடிச்ச ?” என்று சன்னலைத் திறந்து கத்த எத்தனிக்கும் போது – பஸ்சில் சன்னல் ஓரத்தில் உட்காந்திருக்கும் வடிவேலுவின் மடியில் மல்லிகைப் பூவை எறிந்து விட்டு, “மண்ணுல போட்டு மாசு படுத்திட்டியா இல்லியா, அம்பது ரூவா எடு” என்று காசு கேட்டு மிரட்டும் தம்பி இராமையா நினைவுக்கு வர, அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.
“காசு வேணும்னா, காசு வேணும்னு கேட்க வேண்டியது தானடா, இது வழிப்பறியால்ல இருக்கு” என்று தோன்றியது. “காசு வேணும்னு கேட்டா மட்டும் குடுத்துருவமா, பிச்சை எடுக்குறான்னு அதுக்கும் திட்டுவோம். அதுனால தான் இப்டி கிரியேட்டிவா யோசிக்கிறானுக” என்று மைண்ட் வாய்ஸ் லாஜிக் பேசியது. எதுவும் பேசாமல், அவனைக் கவனிக்காதது போன்று முன்னால் இருந்த ஆட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“வெறுப்பது யாராயிருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம் – என்றும் அன்புடன் S. பிரபா” என்று எழுதியிருந்தார் ஆட்டோக்கார அண்ணாச்சி. “என்னா மனுசன்” என்று மறுக்கா மறுக்கா படித்துக் கொண்டிருந்தேன். துடைத்தவன் விடுவதாயில்லை, முகத்தைக் கொண்டு வந்து சன்னல் கண்ணாடியில் ஒட்டி வைத்து என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே, இந்தியில் ஏதோ பேசத் தொடங்கினான்.
“ரைட்டு, நம்மகிட்ட காசு வாங்கிரலாம்னு கண்டுபுடிச்சிட்டான். இவ்வளவு கடுசா இருக்கானே.. எந்தூர்க்காரனா இருப்பான்” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஒளியைவிட வேகமாக பயணிக்கும் மனம் என்னை திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் – ஒரு டிசம்பர் மாதத்தின் புதன்கிழமை இரவு என்று நினைக்கிறேன். பத்து மணிக்கு சுமார் இருக்கும். நானும் ஆந்திராவைச் சேர்ந்த நண்பன் ஒருவனும், புல்லட்டில் கன்னியாகுமரி சென்று கொண்டிருந்தோம். திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும், உமாசங்கர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, வாசலில் இருக்கும் பங்க் கடையில் வாழைப்பழமும், முள்ளு முறுக்கும் வாங்கி வந்தேன். ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த எனது புல்லட்டுக்கு மெயின் ஸ்டாண்ட் போட்டு, பெட்ரோல் டேங்க் கவரின் மீது வாழைப்பழத்தை வைத்து விட்டு, சாவகாசமாக முள்ளு முறுக்கை தின்று கொண்டே, அது மடித்திருந்த பேப்பரில் தெரிந்த அரைகுறை செய்தியைப் படிக்க முயன்று கொண்டிருந்த போது, பின்னால் இருந்து ஒரு கை தோளைத் தொட்டது.
யார்றாவன் என்று திரும்பிப் பார்த்தால், குப்பென்று பான்பராக் வாடை. மிகவும் க்ளோஸ்-அப்பில் இருந்திருப்பான் போல, வாடையில் ஒரு நொடி கிறுகிறுத்து விட்டது. வண்டியில் இருந்து இறங்கி, முறுக்கை மென்று கொண்டே “என்னடா” என்ற தொனியில் லேசாக புருவத்தை மட்டும் உயர்த்தினேன். இருபதுகளின் மத்தியில் இருப்பான். ஹமாரா ராஸ்டிரபாசாவில் ஏதோ பேசினான். ஓரளவுக்கு உடைந்த இந்தி தெரியுமென்றாலும், அவன் பேசியது சரியாக விளங்கவில்லை.
“டேய்…எந்தூர்ரா நீயி, இவ்வளவு தூரம் தெக்க வந்து இந்தில பேசிட்டிருக்க” என்றேன்.
பக்கத்து புல்லட்டில் உட்காந்திருந்த நண்பன்,
“What is he asking” என்றான். இந்திக்காரன் அவனைப் பார்க்க, நான் இந்திக்காரனிடம், கட்டைவிரலால் என்னைக் காண்பித்து “தமிழ்”, ஆள்காட்டி விரலால் நண்பனைக் காண்பித்து “தெலுங்கு”, நோ இந்தி ஓகே ?” என்று தம்ஸ்-அப் செய்தேன். ஒரு நொடி அமைதியாக இருந்துவிட்டு, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பக்கம் கையை நீட்டி மறுபடியும் இந்தியில் ஏதோ சொல்லி வரச் சொன்னான்.
“இங்கிட்டு இன்னும் எம்பது கிலோமீட்டர் போனா கடலே வந்துரும்டா, அங்கயும் போயி இந்தில தான் பேசுவீங்க, ரோதனைடா ஒங்களோட” என்று இறங்கி அவனோடு நடந்தேன். இருபது முப்பது மீட்டர் தூரத்தில், சாரா டக்கர் கல்லூரிக்கு திரும்பும் முக்கில் ஒரு சிறிய க்ரூப் உட்கார்ந்திருந்தது. இரண்டு பெண்கள், ஒரு ஆண், ஐந்து சிறுவர்கள். ஐவரில், இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் என் மகள் துகிரா வயதிருக்கும். அதை உணர்ந்த பின்னர், இந்திக்காரன் மீது முதலில் இருந்த கடுப்பு இல்லை.
இரண்டு குடும்பங்கள். எங்கோ வடக்கிலிருந்து வந்து அப்போதுதான் பஸ் ஸ்டாண்டில் இறங்கியிருக்கிறார்கள். இரவு தங்குவதற்கு இடம் தேடும் போது, நாங்கள் சிக்கியிருக்கிறோம். புல்லட், ரைடிங் கியரோடு நாங்கள் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, நிறைய ஊருக்குச் செல்வார்கள் போல, இந்தி தெரியும் என்ற அனுமானத்தில் வந்திருக்கிறான். உடைந்த இந்தி, சைகை என்று கலந்து பேசி பஸ் ஸ்டாண்டில் தங்கச் சொல்லி கை காண்பித்துவிட்டு நகர்ந்தேன். புல்லட்டை எடுத்துக் கொண்டு திரும்பும் பொழுது, அவர்கள் அருகில் வண்டியை நிறுத்தி, கையில் இருந்த வாழைப்பழங்களை அந்தப் பிள்ளைகளிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, இருநூறு ரூபாயை அவன் கையில் திணித்து விட்டு வந்தோம். கன்னியாகுமரி சாலையில் வண்டி விரையும் பொழுது, ரியர்வ்யூ மிரரில் அவன் தெரிந்தது, ஃப்ரீஸ் செய்யப்பட்ட ஒரு ஃப்ரேமாக இன்றும் நினைவில் உள்ளது.
அன்றைக்கு ராத்திரி எங்கு தங்கியிருப்பார்கள், எங்கே சென்று வேலை தேடுவார்கள், இந்தப் பிள்ளைகள் யாருடன் விளையாடும், எங்கு சென்று படிக்கும் ? என்று அடுத்தடுத்து கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன. அவனைப் போல், பொண்டாட்டி பிள்ளைகளோடு அத்தனை தூரம் கடந்து இங்கே வந்து இறங்குகிறவர்கள் எத்தனை நூறு பேர். குடும்பத்தை விட்டு இங்கே வந்து ஓட்டல்களிலும், ப்யூட்டி பார்லர்களிலும் பணிபுரிபவர்கள் எத்தனை ஆயிரம் பேர் ? நிலையற்ற எதிரகாலத்தின் சுமையைத் தூக்கிக் கொண்டு இத்தனை தூரம் பயணிப்பவர்கள் என்ன மன நிலையில் இருப்பார்கள் ?
ஐதராபாத்தில் ஒருமுறை என்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற டிரைவர் ஒருவரின் பெயர் மூன். சொந்த ஊர் அசாம் மாநிலத்தின் வடகோடி மாவட்டம். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊருக்குச் செல்வதாகவும், கிடைக்கும் லீவு நாட்களுக்குள் ஊருக்குச் சென்று வர, விமானப் பயணம் மட்டுமே சாத்தியம் என்று கூறினார். இவர் வாங்கும் சம்பளத்தில், விமானப் பயணத்திற்கு என்று ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியாக வேண்டும் என்று மனம் கணக்குப் போட்டது. இத்தனை தூரம் தாண்டியும், பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையையும், பாதுகாப்புணர்வையும் சமூகத்தில் இருக்கும் மனிதம் தானே அவர்களுக்கு வழங்குகிறது ? அந்த மனிதத்திற்கு சிறிது சக்தி கிடைத்தாலும், சாதி, மதம், மொழி என்று அனைத்துப் பிரிவினைகளையும் சுக்கு நூறாக்கி விடுமில்லையா ?
எத்தனை நம்பர்களை ப்ளாக் செய்தாலும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, புதிதாக வேறு ஒரு நம்பரில் இருந்து பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு விற்பவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எடுத்தவுடன் அவர்கள் “ஹம் பாத் கர் ரஹே ஹை” என்கிற ரீதியில் இந்தியில் பேசினால், நான் தமிழில் தான் பதில் சொல்கிறேன். உடனே,
“Are you comfortable with english” என்பார்கள்.
“Shouldn’t you have asked that first ? Isn’t it rude to assume that everyone in this vast country understands Hindi” என்று கட் செய்து விடுகிறேன்.
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால், இந்த பக்குவம் இருந்ததில்லை. நல்ல பசியில் இருந்த ஒரு மத்தியான நேரத்தில், வேளச்சேரியில் அப்போதிருந்த அமராவதி ஆந்திரா ரெஸ்டாரண்ட்டில் சென்று அமர்ந்திருந்தேன். ஆர்டர் எடுக்க வந்தவன் இந்தியில் பேச,
“புலால் உணவில் என்னென்ன வைத்திருக்கிறீர்கள் தோழர்” என்று நான் கேட்க, பதிலுக்கு அவன்,
“ஹலால் ஹை” என்று தலையாட்ட,
“ஹலால் இல்லை சகோதரா, புலால்” என்று வம்படிக்கு அவனிடம் ஐந்து நிமிடங்கள் செந்தமிழில் பேசி டரியலாக்கினேன்.
“நம்மூர்ல வந்து நம்ம மொழியை பேச மாட்டானா” என்கிற மனநிலை தான் காரணம்.உண்மையில் அது நம் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தின் மீதான கோபம் தான். ஆனாலும் எங்கோ அதிகாரத்தின் மீதிருக்கும் தீராத கோபத்தை அதிகாரமற்ற எளியவர்களிடம் காண்பிப்பது தவறென்று புரிய நாளானது. தவிர அவன் அப்போதுதான் வந்திருக்கலாம், கற்றுக் கொள்ள நாளாகலாம். பெரும்பாலும் தமிழ் கற்றுக் கொண்டு பேசி விடுகிறார்கள் தானே.
ஆதிக்கமும், அதிகாரமும் தான் நம்முடையை பிரச்சனை என்றால், நம் கோபம் நம்முடனே இருந்து சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இருந்து நம்மை அதிகாரம் செய்பவர்கள் மீது வர வேண்டுமா, இல்லை பிழைக்க வந்தவர்கள் மீது வர வேண்டுமா ? என்ற கேள்வி எழுகிறது இல்லையா ? நீ வா, இங்க வந்து வேலை பாரு, நல்லா இரு, ஆனா எனக்கு சமமா இருக்கணும்னு நினைக்காத என்று சொல்வது, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கான ஆரம்பம் தானே ? அதைச் செய்தால் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மற்றவர்களை ஒடுக்க நினைப்பவர்களுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது. தமிழ்ச்சமூகத்தின் அடிப்படையே அறமும் பரிவும் தானே. அரை நூற்றாண்டுக்கும் மேலாக நமக்கு வாய்த்த சமூக பொருளாதார கட்டமைப்பு ஒரு வேளை இல்லாமற் போயிருந்தால், அவர்கள் இடத்தில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்க முடியுமா ?
இதைச் சுற்றியுள்ள அரசியல் தவிர்த்துப் பார்ப்போம். இது ஒரு மொழி, ஒரு மதத்துக்கான தேசம் என்று குறுகிய மனப்பான்மையோடும், கடுகு சைஸ் மூளையோடும் சிந்திப்பவர்கள் அவர்கள் போக்கில் போகட்டும். விரல் நுனியில் உலகம் வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், பல்வேறு கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அறிந்து, அவற்றை ஒருங்கே மதித்து, மூடநம்பிக்கைகளை விடுத்து உலகக்குடிமகனாய் வாழ்வது எளிதானது மட்டுமல்ல, மனதிற்கு உவகை தருவதும் கூட. அள்ளித் தின்ன சட்டி நிறைய சோறு இருக்கும் போது, கிள்ளித் தின்பானேன்.
எனது அமெரிக்க நண்பனொருவனின் தாய் நார்வேயைச் சார்ந்தவர், தந்தை அமெரிக்கர். அவனது மனைவி ஆப்பிரிக்க-அமெரிக்கர். நண்பனின் தந்தை, நண்பனின் மனைவியிடம் “என் மகன் வேலைக்கு போனா போதாதா, நீ வீட்ல இருந்து பிள்ளைகளைப் பார்க்க வேண்டியதுதான” என்று சொன்னதாகச் சொன்னான். வளர்ந்த, பரந்த கொள்கையுடைய நாடுகளுள் ஒன்றென நம்பப்படும் அமெரிக்காவில் இது நடப்பது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அங்குதானே ஜார்ஜ் ஃபளாய்ட் குரல்வளை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். மனித மனத்தின் ஆழத்தில் ஊறிப்போயிருக்கும் ஒடுக்குமுறைகளையும், குறுகிய மனப்பான்மையையும் நாட்டு எல்லைகளோ, மாநில எல்லைகளோ சரிசெய்து விடுமா என்ன ?
பஞ்சாப் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி அருகேயுள்ள தலிவால் கிராமத்தில் உள்ள சிலரின் விவசாய நிலங்கள் நமது நாட்டின் பாதுகாப்பு வேலிக்கு அப்பால் இருக்கிறது. விவசாயிகள், தினசரி எல்லை பாதுகாப்பு படையின் சோதனைச் சாவடியில் தங்கள் ஐடி கார்டுகளை காண்பித்து அந்தப் பக்கமுள்ள நிலங்களுக்கு சென்று வருகிறார்கள். பாகிஸ்தான் அரசு அவர்கள் பக்கம் வேலி அமைக்காத காரணத்தால், இந்திய விவசாயிகளின் நிலங்களையும், பாகிஸ்தானிய விவசாயிகளின் நிலங்களையும் பிரிப்பது, இரண்டுக்கும் இடையே உள்ள சிறிய பாதைகளும் வரப்புகளும் மட்டுமே. இரண்டு நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் அந்தப் பாதைகளில், வரப்புகளிலோ நின்று பேசிக்கொள்ளும் போது, பாஸ்போர்ட், பார்டர், செக் போஸ்ட் என்று அத்தனையும் பொருளற்றதாகி விடுகிறதல்லவா ? நாட்டின் தென்கோடி வரை இத்தனை அரசியல் அதிர்வுகளை இன்று வரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ராட்க்ளிஃப் லைன் (Radcliffe Line), உண்மையில் அதனை ஒட்டி வாழும் மக்களுக்கு வெறும் கற்பனையே. அவர்கள் மனதில் அது வேறு நாடு என்று தோன்றுவதை விட, பக்கத்து கிராமம் என்று தோன்றக் கூடிய வாய்ப்புகள் தானே அதிகம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பூங்குன்றனார் சொன்னதை சற்றே மாற்றி “யாதும் ஊரே, யாதும் கேளிர்” என்று கவிஞர் ஃப்ரான்சிஸ் கிருபா சொன்னதாக, இயக்குனர் ராஜு முருகன் தனது வட்டியும் முதலும் நூலில் சொல்லியிருப்பார். யாவரும் என்றால் மக்கள். யாதும் என்றால் ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்தும். யாதும் கேளிர் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கவிஞனின் மனநிலை எத்தனை உன்னதமானது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது,
“டக்..டக்..டக்”,
என்று விண்ட்ஷீல்டை துடைத்தவன், சன்னல் கண்ணாடியைத் தட்டத் தொடங்கியிருந்தான். கண்ணாடியை இறக்கினேன்,
“அடுத்த தடவை, தொடைக்கலாமான்னு கேளு. சரின்னு சொன்னா, தொடைச்சிட்டு காசு கேளு. உன் நோக்கத்துக்கு தொடைக்கிறதுக்கு எல்லாம் காசு குடுக்க முடியாது. புரியுதா” என்றேன். அரை நொடி வெறித்துப் பார்த்துவிட்டு பின்னால் இருந்த வண்டிக்கு சென்றான். சிக்னல் விழ வண்டியை நகர்த்தினேன். நகரும் வண்டிகளைக் கடந்து, அவன் பாலத்தின் அடிச்சுவற்றுக்கு அருகே சென்று அடுத்த சிக்னலுக்கு காத்திருப்பது ரியர் வ்யூ மிரரில் தெரிந்தது. எஃப்.எம்.மில்,
“வாய் பேசிடும் ஓசையைக் காட்டிலும்
அன்பின் ஜாடைகளே மொழிகளே
ஓடையாய் ஓடினால் சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே
கூரையில் தங்குமோ
பால்நிலா சொல்லடா
எங்குமே செல்லடா”
என்று யுகபாரதி அண்ணன் தலைமுறைக்குமான பாடத்தை எடுத்துக்கொண்டிருந்தார்.