“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம்.

அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து விட்டு, அவளது குழுவின் வண்டி வரும் வரை, இருவரும் சாலையோரத்தில் காத்திருப்பார்கள். அப்போது கதாநாயகன் அந்தப் பெண்ணிடம் தயக்கத்தோடும் முன்தீர்மானத்தோடும்,
“இந்த மாதிரி டான்ஸ் ஆடுற வேலையெல்லாம் விட்டுரலாம்ல”, என்று கேட்பான். அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு,
“நீங்க என்ன வேலை பாக்குறீங்க” என்று பதிலுக்குக் கேட்பாள்.
“இங்க பக்கத்து கிராமத்துல பஞ்சாயத்து செகரட்டரியா இருக்கேன்” என்பான்.
“ நீங்க பாக்குற வேலை உங்களுக்குப் பிடிச்சிருக்கா ?” என்று அந்தப் பெண் தொடர்ந்து கேட்க,
“பிடிக்கல, அதான் வேலை பாத்துக்கிட்டே எம்பிஏ படிக்கிறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்” என்று கதாநாயகன் பதில் சொல்வான். அந்தப் பெண் லேசான புன்னகையோடு,
“ஒரு வகையில் நீங்களும் என்னை மாதிரி டான்ஸ் ஆடிட்டு தான இருக்கீங்க” என்று சொல்லும் போது, கதாநாயகனின் முன்தீர்மானம் சுக்குநூறாக நொறுங்கிவிடும். அந்தப் பதிலின் அதிர்ச்சியில் இருந்து அவன் மீள்வதற்குள்,
“எல்லாரும் ஏதோ ஒரு இடத்துல டான்ஸ் ஆடிக்கிட்டு தான் இருக்காங்க” என்று சொல்லிவிட்டு அவளது வண்டியில் ஏறிச் சென்று விடுவாள்.
கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏதேதோ காரணங்களுக்காக வெவ்வேறு வேலைகள் செய்யத் தொடங்கி, மீள முடியாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டத்தின் நிலையை ஆழமாகப் பதிவு செய்த இந்தக் காட்சி, மூன்று மாதங்கள் முந்தைய ஒரு இரவுக்கு என்னைக் கடத்திச் சென்றது.
அவ்வப்போது வாய்க்கும் தூக்கம் வராத இரவு அது. ஏசி சன்னமாக இரைந்து கொண்டிருந்தது. சிறிதும் பயனற்ற, எந்தவித குறிக்கோளுமற்ற நினைவுகளில் புரண்டு கொண்டிருந்தேன். நான்கைந்து முறை தலையணையை மாற்றி, ஏழெட்டு முறை போர்வையை சரி செய்த பின்பு இனிமேல் தூக்கம் வரப்போவதில்லை என்று புரிந்தது.
எழுந்து படுக்கையில் அமர்ந்து, கட்டிலின் பக்கவாட்டில் இருந்த சைட் டேபிளில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்கும் போது, பெட் சைட் கடிகாரம் மணி 2.15 என்றது. பாட்டிலைக் காலி செய்து விட்டு எழுந்து சன்னலின் திரைச்சீலையை விலக்கியவுடன் நிலா வெளிச்சம் கட்டிலின் மேல் பாய்ந்தது. இரண்டு மூன்று முறை திரைச்சீலையை மூடித் திறந்து, அதை வைத்து விளையாடிப் பார்த்தேன். சூரிய ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடம் ஆகும், என்கிற அளவுக்கு நிலவின் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் ஏன் பரவலாக பேசுபொருளாக்கப் படவில்லை என்ற அரிய சிந்தனையை தூர எறிந்து விட்டு, விங் சேரில் கிடந்த விண்ட்-சீட்டர் ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டேன்.
வெளியே சென்று காலாற நடந்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கதவின் அருகே இருந்த கண்ணாடியில் பார்த்து தலைமுடியை சரி செய்து விட்டு, ஷூவை அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். லாபி கம்மென்றிருந்தது. பொடனிக்கு பின்னால் அறைக்கதவு மடாரென்று மூடிய பின்பு தான், கீ-கார்டை எடுக்க மறந்தது மூளைக்கு உரைத்தது. கீ-கார்டை மறந்துவிட்டு கதவை மூடுவது இதோடு இருபத்தி ஏழாவது தடவையாக இருக்கலாம். ரிஷப்சனில் இருக்கும் ஷெர்லி, எந்தக் கேள்வியும் கேட்காமல் “Not a problem” என்று சடுதியில் இன்னொரு கார்டை தயார் செய்து கொடுத்து விடுவாள் என்ற மப்பு.
லிஃப்டில் தரைத்தளத்திற்கு வந்து, ஆள் அரவமற்ற சாப்பாட்டு மேசைகளின் ஊடே நடந்து சென்றேன். இரவு விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில்தான், காலியான சாப்பாட்டு மேசைகளின் அழகியல் வெளியே தெரிகிறது. ஒரு மூலையில் நின்று மேசைகளைப் பார்த்துவிட்டு, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எதிரே இருந்த டிவியில் வெள்ளைக்காரர் ஒருவர், காலி மேசைகளிடம் ஏதோ ஒரு உடற்பயிற்சி கருவியை சத்தமில்லாமல் விற்க முயன்று கொண்டிருந்தார்.
மேசைகளுக்கு அப்பாலிருந்த கண்ணாடிக் கதவைத் திறந்தவுடன், குளிர் அப்பிக் கொண்டது. விண்ட் சீட்டரில் இருந்த முக்காடை ஏற்றிவிட்டுக் கொண்டு, வெளியே நீச்சல் குளத்தின் அருகே இருந்த ஃபயர் ப்ளேஸுக்கு சென்றேன். “பூச்சுடும் ராப்போது…பூங்காற்று தூங்காது…வா வா வா… பனி விழும் இரவு” என்று உதடுகள் என்னையறியாமல் முணுமுணுத்தன. சற்று நேரம் அங்கயே நின்று நீச்சல் குளத்தின் விளிம்புகளை தண்ணீர் அலப்புவதை பார்த்துக் கொண்டிருந்தேன். கடலோ, குளமோ, ஆறோ, நீர்வீழ்ச்சியோ, ஓடையோ – தண்ணீர் எந்த வடிவில் இருந்தாலும் மனதை ஆற்றுப்படுத்தி விடுகிறது என்று தோன்றியது.
கீ-கார்டை வாங்கிக் கொண்டு, நடந்து விட்டு வருவோம் என்று மறுபடியும் உள்ளே வந்து, மனதிற்கு நெருக்கமான காலி மேசைகளைக் கடந்து ஹோட்டல் வாசலின் அருகே இருந்த ரிஷப்சனை நோக்கிச் சென்றேன். காலியாக இருந்தது. இரண்டு மூன்று முறை “எக்ஸ்க்யூஸ் மீ” என்று ரிஷப்சனின் பின்னறைகளை நோக்கிக் கூப்பிட்டுப் பார்த்தும் பதிலில்லை. “அலோ யார்னா இருக்கீங்களா” என்று புதுப்பேட்டை தனுஷ் போன்று லேசாக கத்திப் பார், என்று மைண்ட் வாய்ஸ் யோசனை சொல்லியது. மைண்ட் வாய்ஸை மண்டையில் தட்டி உட்கார வைத்தேன். நடையை முடித்து விட்டு வரும் பொழுது, கீ-கார்டை வாங்கிக் கொள்ளலாம் என்று வாசலை நோக்கி அடியெடுத்து வைத்தேன். தானியங்கி கதவு இருபுறம் விலகி திறந்து கொள்ளவும், வெளியே பக்கவாட்டில் இருந்து பளிச்சென்று ஒரு முகம் சாய்ந்தபடி எட்டிப் பார்த்து, “You need me?” என்று கேட்டது.
திருத்தமான முகம், தீர்க்கமான பழுப்பு நிறக் கண்கள், கருப்பு ஜீன்ஸ், கருப்பு டீ சர்ட், அதன் மேல் கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்தாள். ஆறடிக்கும் சற்றே குறைவான உயரம்.பொன்னிற முடிக்கற்றைகளை குதிரை வால் சடையாக ஏற்றிக் கட்டியிருந்தாள். இடது கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.
கீ-கார்டு வேண்டும் என்பதை மறந்துவிட்டு, “No” என்றபடி வெளியே வந்தேன்.
அவளைக் கடந்து நடக்க எத்தனிக்கும் போது, ஹோட்டல் எதிரே இருந்த புதர்களைத் தாண்டி தூரத்தில் கயோட்டி(Coyote) ஒன்று தெரிந்தது. எப்போதும் நடக்கும் பாதையில் இப்போது செல்வது சுத்தப்படாது என்று ஓட்டல் வாசலிலேயே குறுக்கும் மறுக்குமாக நடக்கத் தொடங்கினேன்.
அவளருகே வரும் பொழுது,
“I am not supposed to be out smoking during shift hours. Let me know if you need anything” என்றாள், ஹோட்டல் போர்டிகோவின் தூணில் சாய்ந்தபடி. புது ஃப்ரண்ட் ஆபிஸ் அஸிஸ்டெண்ட் என்று புரிந்தது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்த ஊருக்கு வருகிறேன். குறைந்தபட்சம் வருடத்திற்கு இரண்டு முறை. எப்போதும் தங்குவது இந்த ஹோட்டலில் தான். பெரிய ஸ்டார் ஹோட்டல் இல்லை. ஆனால், சமைக்க, துணி துவைக்க வசதியோடு ஒரு ஹோம் ஸ்டே. சான் டியாகோ பக்கத்தில் இருக்கும் இந்த சிறிய ஊர் மனதுக்கு நெருக்கமாகி விட்டது போல, இந்த ஹோட்டலும் பிடித்துப் போய் விட்டது. Its my second home என்று அடிக்கடி சொல்வதுண்டு. தொடர்ந்து வருவதால் சமையல்காரர், ஜேனிட்டர் முதற்கொண்டு அத்தனை பேரையும் நன்றாகத் தெரியும். இவளை அப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன்.
“I need a duplicate access card for my room. Can you get me one when you’re done ?” என்று கேட்டேன்.
புகையைக் கக்கியபடி, “Sure” என்றாள்.
“Are you new here ? I haven’t seen you here before” என்று நான் இங்கு வழக்கமாக தங்குபவன் என்பதை மறைமுகமாகத் தெரியப்படுத்தினேன். ஒரு வேளை என்னை அவள் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக அதைச் சொன்னேனா என்று தெரியவில்லை. ஆனால், அவள் அதனை சட்டை செய்யவேயில்லை.
“Stephanie” என்றபடி கையை நீட்டினாள், அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
“இந்தியா ?” என்று அவள் கேட்டதற்கு, நான் “யெஸ்” என்று சொல்லவும்,
“Hoo…far away” என்றபடி சிகரட்டை அணைத்தாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் அவளது வயது முப்பத்தி ஐந்து என்பதில் தொடங்கி, அவளது தோழி குடும்பத்தோடு தங்கியிருப்பது, இங்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது என்கிற வரையில் தகவல் தெரிந்தது. கூடுதல் தகவலாக, அவளுக்கு இங்கு வேலை செய்வது பிடிக்கவில்லை என்பதும் தெரிந்தது.
“You don’t like it here because it is monotonous ?” என்று கேட்டதற்கு.
“Maybe, I don’t know. Doesn’t matter, I need this job anyway. Better than the time I spent in the army” என்று சிரித்தாள். அவளது பேச்சிலும், உடல் மொழியிலும் இருந்த swag-ற்குக் காரணம் அதுவாக இருக்கலாம் என்று தோன்றியது.
“மிலிட்டரிக்காரியா நீயி” என்று மைண்ட் வாய்ஸ் சத்தம் போட, அதனை சூ சொல்லிவிட்டு,
“Oh really, for how long ? ” என்று கேட்டேன்.
“Well, I enlisted when I turned 19. Mom didn’t like it. She was unhappy. Told me I can’t come back home if I join the army. But, you gotta do what you gotta do, you see what I’m saying ? “ என்றாள்.
“16 years in the army ? You should have got a better job. I have always assumed countries treat veterans with much respect”, என்றேன் புருவத்தை உயர்த்தியபடி.
“Yeah…. I could not have landed a better job with my habits. I am a marijuana user and that takes you off the list from many jobs available for veterans” என்றாள்.
“அடிப்பாவி டோப்பு பார்ட்டியா நீயி ? ஒரு கஞ்சாக்குடிக்கி கிட்டயா இவ்வளவு நேரம் சகவாசம் வச்சிருந்தோம்” என்று பொதுப்புத்தி வழக்கம் போல் அவளை ஜட்ஜ் செய்தது. பொதுப்புத்தியை புறந்தள்ளி விட்டு,
“You could not have disclosed that” என்று நான் கேட்பதற்கு முன்னால்.
“I could not have disclosed that. But what is the point ? It is what it is.You see what I’m saying” என்றபடி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தாள்.
“This one pays better than the other two jobs I do. One can’t expect everything to fall in place for you” என்று தோள்களைக் குறுக்கினாள். ரிஷப்னிஸ்டாக இருப்பதைத் தவிர இவள் வேறென்ன இரண்டு வேலைகள் செய்யக்கூடும் என்று யோசித்தபடி,
“Two more jobs ?” என்று கேட்டேன்.
“Yeah, I sing for a band and I am a stripper at the gentlemen’s club”, என்றாள்.
எதே ! Stripper ஆ ? என்று பொதுப்புத்தி மறுபடியும் சீறிப் பாயத் தயாரான பொழுது, சிகரெட்டைப் பற்றியிருந்த விரல்களை உயர்த்தி,
“Being a stripper is my job, not my lifestyle” என்றாள் ஸ்டெஃபனி.
பொதுப்புத்தி அடங்கி ஒடுங்கி உட்கார்ந்தது. எத்தனை பெரிய தெளிவு ! அந்த ஒரு வாக்கியம், அவளை இத்தனை நாட்களாக என் நினைவில் நிறுத்தியிருக்கிறது. இன்னும் வெகு காலத்திற்கு ஸ்டெஃபனி என் நினைவில் இருக்கக் கூடும். வாழ்வாதாரத்திற்காக ஒரு மனிதன் செய்யும் வேலையை அவனது தரத்தோடும், குணத்தோடும் பொருத்திப் பார்க்கும் மனநிலை உள்ள நம் சமூகத்தில் இருந்த எனக்கு, தான் ஒரு ஸ்டிரிப்பர் என்று சொல்லும் போது, துளிகூட தயக்கம் காட்டாத ஸ்டெஃபனியின் மனநிலை பேரதிர்வாக இருந்தது. Job-க்கும் lifestyle-க்குமான வித்தியாசங்களை மனம் யோசித்துக் கொண்டிருக்க,
“Come on, let’s get you a card” என்று சிகரெட்டை அணைத்துவிட்டு, பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றாள்.
ஸ்டெஃபனிக்கு தான் செய்வது வெறும் வேலை மட்டுமே என்ற புரிதல் இருக்கிறது. அந்த வேலை மட்டுமே அவளை define செய்துவிடாது என்ற தெளிவும் இருக்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேரை நமது வேலை மொத்தமாக define செய்து வைத்திருக்கிறது ? சினிமா எடுக்க வேண்டும், முழு நேர எழுத்தாளராக வேண்டும், அரசியல்வாதியாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சாப்ட்வேர் என்ஜினியர்களாக, சேல்ஸ் மேன்களாக இருப்பது எத்தனை பேர் ? வாத்தியார் வேலையில் சேர வேண்டும் என்று நினைத்து, போலிஸ்காரர்களானவர்கள் எத்தனை பேர், வீட்டோடு இருக்கும் பெண்கள் எத்தனை பேர் ?
சமூக பொருளாதாரச் சிக்கல்கள், நம்மை நாம் செய்ய விரும்பிய வேலைகளில் இருந்து பாதை மாற்றி, மேடையில் ஏற்றி ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர்களாக மாற்றி விடுகிறது. ஸ்டெஃபனியைப் போன்று வெகுசிலரே, அது வேலை என்றுணர்ந்து எப்படியாவது மேடையில் இருந்து கீழே இறங்கி தப்பித்து விடுகிறார்கள். பெரும்பாலானோர் அது தாங்கள் பார்க்க வந்த வேலை என்பதை மறந்து விட்டு, காலப்போக்கில் ரெக்கார்ட் டான்சர்களாக மாறி, அதைத் தங்கள் வாழ்வியலாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர்களாக இருப்பது சரியா தவறா என்பது இங்கு வாதமல்ல. வேலை என்ற பெயரில் மேலதிகாரிகள் முன்பும், மேலாளர்கள் முன்பும், சமூகத்தின் முன்பும் தாங்கள் ஆடிக்கொண்டிருப்பது ரெக்கார்ட் டான்ஸ் என்ற புரிதல் இல்லாமல் இருப்பதுதான் சிக்கல். அந்தப் புரிதல் வந்துவிட்டால், மீறலும் விலகலும் வெகு இயல்பாக நடந்து விடும் என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு,
ஒரு வேளை உங்களுக்குப் பிடிக்காத மேடையில் நீங்கள் ஆடிக்கொண்டிருந்தால், அதிலிருந்து நீங்கள் விடுபட்டு இறங்கி மேடேற வாழ்த்தும் சக ரெக்கார்ட் டான்சர்.