பிக்காலி

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நான் பயணித்துக் கொண்டிருக்கும் எமிரேட்ஸ் விமானம், பெட்ரோஸாவோட்ஸ்க் எனும் ரஷ்ய நகரின் மேல் பறந்து கொண்டிருப்பதாக ஜிபிஎஸ் சொல்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய்க்கு பதினாறு மணி நேரப் பயணம். பின்னார் அங்கிருந்து சென்னைக்கு ஒரு நான்கு மணி நேரம். முப்பதாயிரம் அடி உயரத்தில், வெறுமை மட்டுமே நிரம்பியிருக்கும் இந்த நீண்ட கணங்களில், மனம் திரும்பத் திரும்ப செல்வத்தின் நினைவுகளில் அலைபாய்கிறது. செல்வத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை இப்போது எழுதித் தீர்த்து விட்டால், சுற்றியிருக்கும் வெறுமையின் அடர்த்தி சற்று லேசாகக் கூடும்.

Photo by Juan Giraudo on Unsplash

செல்வம், பிக்காலி என்றுதான் என்னை எப்போதும் அழைத்திருக்கிறான். என்னை மட்டுமல்ல, சுரேசையும் அப்படித் தான் அழைத்திருக்கிறான். “பிக்காலி” சுரேசிடம் இருந்து செல்வத்துக்கு தொற்றிக் கொண்ட சொல். “மாமா”, “மாப்ள” என்பது போல, பிக்காலி சுரேசுக்கு விருப்பமான ஒரு விளிப்புச் சொல்லாக இருந்தது. தமிழ்ச்சமூகத்தில் இன்று புழக்கத்தில் இருக்கும் பல சொற்களைப் போல வடிவேலுவின் வசனம் ஒன்றிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொல்.

சுரேசும் நானும் மூன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாகப் படித்தோம். ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவன் இருந்த போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே நாங்கள் வீடு மாறிப் போன பிற்பாடுதான் நெருக்கம் அதிகரித்தது. சனி ஞாயிறு மதிய வேளைகளில், சைக்கிளை எடுத்துக் கொண்டு சுரேசின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவன் வீட்டுக்கு எதிரே இருந்த வேப்பமரத்தின் கீழ் சைக்கிளை நிறுத்திவிட்டு, வெளேர் என்று அடிக்கும் வெயிலை வேடிக்கை பார்த்தபடி அம்மஞ்சல்லிக்குக் கூட பிரயோசனம் இல்லாத எதையாவது பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். எனக்கு மிகவும் பிடித்த அது போன்ற தருணங்கள், சுரேசுக்கு உவப்பானதாக இருந்ததில்லை.

“மத்தியானம் கறி கிறி தின்னா பேசாம தூங்குடா. மொட்டை வெயில்ல சைக்கிள எடுத்துட்டு வந்துருக்க, பிக்காலிப் பயலே, வீட்டுக்குப் போடா” என்பான்.

இருந்தாலும் உரையாடல் தொடரும். இந்த வழக்கம் வருடக்கணக்கில் தொடர்ந்தது. நாங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். அதே வெளேர் வெயில், அதே வேப்பமரம், அதே சைக்கிள் செட்டப்பில் நின்றிருந்தோம். சுரேஷ் ஹேண்டில்பாரில் கை வைத்து சாய்ந்து நின்று கொண்டிருந்தான். கேரியரில் உட்காந்திருந்த நான், இறங்கி கைலியை அரைக்கட்டாக கட்டிக் கொண்டிருக்கும் போது,

“அண்ணேன் இங்க பாருங்க” என்று, வாய் நிறைய பல்லோடும், கையில் ஒரு பெரிய கரட்டாண்டியோடும் செல்வம் வந்தான். அது கயிற்றில் இருந்த விடுபட முயன்று துள்ளிக் கொண்டிருந்தது. கூடவே அவனது நண்பன் விஜியும்.

“பிக்காலிப் பயலே இத எங்கடா புடிச்ச” என்று சுரேஷ் கேட்க.

“தோட்டத்துல தான், மூக்குப் பொடி வாங்கப் போறோம், வர்றீங்களா” என்றான்.

“லூசுப் பயலே, அத வுடுறா போகட்டும்” என்று சுரேஷ் சொல்லியதை செல்வமும், விஜியும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கரட்டாண்டியைத் தொங்கவிட்ட படி, மளிகைக் கடையை நோக்கிச் சென்றார்கள்

போஸ்ட் கம்பத்தை தாண்டும் வரை, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ், என்னிடம் திரும்பி

“பூரா ஒன்னைய மாதிரித் தாண்டா இருக்காய்ங்க. மொட்டை வெயில்ல ஓணான் புடிக்கிறாய்ங்களாம். மத்தியானம் கறி கிறி தின்னா தூங்குங்கடா,பிக்காலிப் பயலுகளா” என்றான்.

இது நடந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை செல்வம் தொடர்பான நினைவில் என் மனதில் பசுமையாக பதிந்திருப்பது, அரை டவுசரோடும், கரிச்சாமண்டையோடும், சிரித்தபடி கரட்டாண்டியோடு அவன் வந்து நின்ற காட்சி தான். 

செல்வம், சுரேசுக்கு பக்கத்து வீடு. எங்களை விட நான்கைந்து வயது இளையவன். சுரேசைப் பார்க்க அவன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம், செல்வத்தைப் பார்ப்பேன். ஆரம்ப காலங்களில் அதிகம் பேசிக் கொண்டதில்லை. பன்னிரெண்டாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏழாங் கிளாஸ் பயல்களிடம் பேச பெரிதாக ஒன்றும் இருந்திருக்கவில்லை. செல்வமும், சுரேசும் குவார்ட்டர்ஸில் இருக்க, நாங்கள் சற்று தள்ளி தனி வீட்டில் இருந்தோம். சில மாதங்களில், சுரேஷ் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், செல்வமும் வரத் தொடங்கினான். அதன் பிறகு கிரிக்கெட், டீக்கடை, கிணற்றடி, கோயில் திருவிழா என்று தெருப்புழுதியாய் சுற்றியதில் என்று வெகு நெருக்கமாகிவிட்டோம். 

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்காக மதுரை சென்ற பிற்பாடும் வாரத்திற்கு ஒரு முறை சந்திக்கும் வழக்கம் தொடரத் தான் செய்தது. வேலைக்காக சென்னை, பின்னர் பெங்களூரு என்று வாழ்க்கை அடுத்தடுத்த கியர்களை மாற்றும் போதுதான் சற்று இடைவெளி விழுந்தது. தீபாவளி, பொங்கல் இன்னபிற விடுமுறை நாட்களின் போது மட்டுமே சந்தித்துக் கொள்ள முடிந்தது. 

2010 வாக்கில் நான் பெங்களூரில் இருக்க, சுரேஷ் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நான் சென்னை செல்லும் போது, சுரேஷ் வீட்டில் தங்குவது வழக்கம். வேளச்சேரி கங்கை நகரில் இருந்த அந்த வீட்டில், சுரேசுடன் இன்னும் சில நண்பர்களும் இருந்தார்கள்.  அப்படி ஒரு முறை கங்கை நகரில் இருந்த அந்த வீட்டிற்குச் செல்லும் போது தான் பல ஆண்டுகள் கழித்து செல்வத்தை மீண்டும் பார்த்தேன். நன்றாக முடி வளர்த்து, தாடி, பெரிய மீசை என்று ஆளே வேறு மாறியிருந்தான்.

“ஹே..பிக்காலி…எப்டி இருக்கீங்க” என்று கட்டிக்கொண்டான்.

“என்னடா காட்டெருமை மாதிரி ஆயிட்ட” என்றவுடன்.

“வஞ்சனை இல்லாத மனசு இருந்தா அப்டிதான் பிக்காலி இருக்கும்” என்றான். 

எம்.சி.ஏ முடித்துவிட்டு சுரேசுடன் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தான். இடைப்பட்ட காலத்தில் டூட்டியில் இருக்கும் போதே அவனது அப்பா தவறியிருந்தார். அது ஒரு மாதிரி அவனை சீரியஸாக்கியிருந்தது. இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் அவ்வப்போது மீறிக்கொண்டுதான் இருந்தது. 

“அப்பா வேலையக் குடுத்தாங்கண்ணே. நாந்தான் எம்.சி.ஏ முடிச்சிட்டன்ல. அதான் அக்காவ எடுத்துக்கச் சொல்லிட்டேன். அது போலீஸாயிருச்சுன்னா கொஞ்சம் தெம்பா இருக்கும்ல. பெருசு பரவால்ல, சிறுசுக்கு தைரியம் பத்தாதுண்ணே. நான் வேலைக்குப் போற வரைக்கும் அம்மாவை அது பாத்துக்கிட்டா, அதுக்கப்புறம் நான் பாத்திக்கிருவேண்ணேன்” என்றான்.

இதைச் சொல்லும் போது அவனுக்கு 23-24 வயது இருக்கும். 

அப்பாக்களுக்கும், இளவட்ட மகன்களுக்கும் இடையே, எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும், எவ்வளவு வாக்குவாதங்களைக் கடந்தாலும், தங்கள் இருபதுகளில் அப்பாக்கள் தவறும் பொழுது, மகன்கள் உண்மையில் தவங்கித்தான் விடுகிறார்கள். ஆனால், அதிலிருந்து வெகு வேகமாக விடுபட்டு, அசுரத்தனமாக உழைத்து முன்னேறி, குடும்பத்தை மேடேற்றுவதும் அவர்கள் தான். சகோதரிகளோடு இருப்பவர்கள் அண்ணனாக, தம்பியாக மட்டுமல்ல, தகப்பனாகவும் மாறுவதை நேரில் உணர்ந்திருக்கிறேன். ஓரிரு நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு பெங்களூர் சென்று விட்டேன்.

சில மாதங்கள் கழித்து, சுரேஷுக்கும் கல்யாணம் நிச்சயமானது. கல்யாண தேதி குறித்து தகவல் சொல்ல போன் செய்தவன்,

“வேளச்சேரி வீட்டை அடுத்த மாசம் காலி பண்றோம்டா. செல்வத்தை தான் என்ன செய்றதுண்ணு தெரியல. எங்கயாது தங்க இடம் கிடைச்சிட்டா போதும், பாத்துக்கிரலாம்” என்றான்.

“ம்ம்” கொட்டிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன்.

உண்மையில் எனக்கும் பெங்களூரு செட் ஆகவில்லை. இடமாறுதல் தேவைப்பட்டது. அந்த உரையாடல் நடந்து இரண்டு வாரங்களில் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. சுரேசுக்கு போன் செய்தேன்.

“சென்னை மாறி வர்றண்டா. இனிமே அங்கதான். வீட்டைக் காலி பண்ண வேண்டாம், செல்வம் என்கூட இருக்கட்டும். பிரபாவும் என் கூட வருவான்” என்றவுடன் ஜாலியாகிவிட்டான். பிரபா எங்களுக்கு ஸ்கூல் ஜீனியர். பெங்களூரில் என்னோடு தங்கி படித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகான இரண்டு வருடங்கள் செல்வம், கணபதி, பிரபா, நான் என்று கங்கை நகரில் அட்டகாசமாகக் கழிந்தன.

செல்வத்துக்கு மட்டும் வேலை அமையவில்லை. அவனுக்கு வேலை தேட இசவாக இருக்கும் என்று, ஊரில் இருந்த பைக்கை சென்னைக்குக் கொண்டு வந்தேன். பைக் வந்த ஒரு மாதத்தில், செல்வத்துக்கு பிஎஸ்என்எல் சப்போர்ட்டில் காண்டிராக்ட் வேலை கிடைத்தது. மதியம் ரெண்டு மணி ஷிஃப்ட். நந்தனத்தில் இருந்த அலுவலகத்திற்குச் சென்று விட்டு, இரவு பத்து மணி வாக்கில் வருவான். அதன் பிறகு இருவரும் சென்று விஜயநகர் சுதர்லேண்ட் அருகே டீக்குடித்துவிட்டு, அரட்டை அடித்துவிட்டு வருவோம்.

“பதினோரு மணி ஆச்சு. வீட்டுக்குப் போயி தூங்குங்கடா. ரோடல்யே நிக்கிறானுக. பிக்காலிப்பயலுக” என்று சுரேஷ் திட்டுவான்.

செல்வத்துக்கு ஒரு காதல் இருந்தது. கல்லூரியில் உடன் படித்த ஒரு தெலுங்கு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தான்.

“சொல்ட்டியாடா” என்றேன்.

“இல்லண்ணே, நான் லவ் பண்றேன்னு சொல்லி அதுபாட்டுக்கு ஓகே சொல்லிருச்சுன்னா, டபுள் சைட் ஆயிரும். அப்புறம் நேரத்துக்குப் பேசணும், பாக்கணும். சரிப்பட்டு வராதுண்ணே. இதுண்ணா ஒன்-சைட் பாருங்க. என் இஷ்டம், நான் பாட்டுக்கு ஜாலியா லவ் பண்ணுவேன்ல” என்றான்.

“என்னடா வித்தியாசமா லவ் பண்றீங்க” என்றதற்கு,

“அந்தப் பிள்ளைக்கும் என்னை புடிக்கும்ணே. இப்ப நான் கேட்டா ஓகே சொல்லிரும். வேலை இல்ல எனக்கு இன்னும், அது வீட்ல தெரிய வந்துச்சுன்னா, வேற மாதிரி பஞ்சாயத்து ஆயிரும். கொஞ்சம் பொறுப்போம்னு பாத்தேன். என்ன ஆயிரப் போகுது” என்றான்.

இடையிடையே அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசுவான். ஹாலில் ஒரு ஒரமாகப் படுத்து மெசேஜைப் படித்து சிரித்துக் கொண்டு இருப்பான்.

இதற்கிடையே, எப்போதோ எழுதியிருந்த ஒரு மத்திய அரசுப் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தான். நேர்காணலுக்கு டெல்லி வரச் சொல்லியிருந்தார்கள். உயர்பதவி, நல்ல சம்பளம். செல்வத்தைத் தனியாக அனுப்பவும் யோசனை. பின்னர் வழக்கம் போல, அண்ணன் ஒருவர் மூலமாக நண்பன், நண்பனின் நண்பன், நண்பனின் நண்பனுக்கு நண்பன் என்று ஒருவரைப் பிடித்தேன். அவரிடம் பேசி தங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். செல்வம் அங்கேயே சென்று தங்கி, நேர்காணலையும் முடித்து விட்டு வந்துவிட்டான். 

“பண்ணிருக்கேன் பிக்காலி. பாப்போம்” என்று சுரத்தில்லாமல் சொன்னான். சிரமம்தான் போல என்று அதனை மறந்து விட்டோம்.

டெல்லி சென்று வந்த பின்பும் அதே பிஎஸ்என்எல் வேலையில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தான். பல மாதங்கள் கழித்து, ஒரு மட்ட மத்தியானத்தில், ஊரில் உள்ள மொத்த வெயிலையும் வேளச்சேரி முருகன் கல்யாண மண்டபத்துக்கு அருகே இருந்த டீக்கடை வாசலில் நாங்கள் எங்கள் தலையில் வாங்கிக் கொண்டிருந்த போது, அந்த நற்செய்தி வந்தது.

செல்வம் அந்தப் பணிக்குத் தேர்வாகியிருந்தான். கடையில் டீ சொல்லும் போது பி.எஸ்.என்.எல் காண்டிராக்ட் எம்ப்ளாயியாக இருந்தவன், டீ-க்ளாஸை வைக்கும் போது மத்திய அரசுப் பணியில் குரூப்-ஏ ஆபீசர் ஆகியிருந்தான். அந்த நொடியில் செல்வத்தின் வாழ்க்கை மேடேறத் தொடங்கியது. கைகளை இறுக்கிக் கொண்டு, கண்கள் பனிக்க, சிரித்துக் கொண்டே, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான். வெகு நிதானமாக இருந்தான். நானெல்லாம் எனக்கு வேலை கிடைத்த போது சன்ன சலம்பலில் இருந்தேன். அவன் கடந்து வந்த சோதனைகள் அவனை அத்தனை பக்குவப்படுத்தி இருந்தன.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது. டெல்லியில் சேரச் சொல்லி உத்தரவு. ஆனால் போஸ்டிங் அந்தமான் தீவுகளில். ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிவிட்டோம். அவனுக்கு முழுதாக விருப்பமில்லை, ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை எப்படி நிராகரிக்க முடியும்.

“இல்ல பிக்காலி, அஞ்சு வருசம் இருந்தா டிரான்ஸ்பர் வாங்கிக்கலாமாம். மெட்ராஸே வாங்கிட்டு வந்துருவென். டோண்ட் ஒர்ரி” என்றான்.

அந்தமானில் போர்ட் ப்ளேர் என்றால் கூட பரவாயில்லை. அங்கிருந்து ஆறு மணி நேரப் பயணதில், மாயா பந்தர் என்றொரு இடத்தில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். அலுவலகத்தில் மட்டும் சிக்னல் கிடைக்கும். அங்கிருந்து தான் போன் பேசுவான். வருடத்திற்கு ஒரு முறை பொங்கலை ஒட்டி வருவான். சென்னைக்கு வந்து, இங்கிருந்து கயத்தாறு அருகே இருந்த சொந்த ஊருக்கு சாமி கும்பிடச் செல்வான். அவனது அப்பாவை அங்கே தான் அடக்கம் செய்திருந்தார்கள்.

இதற்கிடையே எனக்கு திருமணம் நிச்சயமானதை அவனுக்கு தகவல் சொன்னேன். 

“ரெண்டு மூணு நாளு முன்ன வர முடியுமான்னு தெர்ல பிக்காலி. ஆனா கல்யாணத்தன்னைக்கு வந்திருவேன். டோண்ட் ஒர்ரி” என்றான்.

எனது திருமணத்திற்கு ஒரிரு வாரங்கள் முன்பு ““A real short bluff” என்ற தலைப்பிட்டு, ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தான். அவன் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது குறித்து வெகுவாக வருத்தப்பட்டிருந்தான். நண்பர்கள் உடன் இல்லாத ஏதோ ஒரு தீவில் தனிமை வேறு அவனை சிரமப்படுத்தியிருக்கிறது. அவன் அப்பா தவறியது, அவன் கஷ்டபட்டதை எல்லாம் சொல்லி “என்கிட்ட வேலை இல்லாதப்ப, பாக்கெட் காலியா இருந்தப்ப நீங்க, அந்தப் பொண்ணு எல்லாரும் என் கூட இருந்தீங்க. இப்ப வேலை இருக்கு, பாக்கெட் நிறைய காசு இருக்கு. ஆனா நீங்க யாரும் என் கூட இல்ல. அந்தப் பொண்ணும் என் கூட இல்ல.  I feel bad and unlucky. ஆனா இந்தத் தனிமை கூட எனக்கு பிடிச்சிருக்கு, ஏன்னா நான் அழுதா யாருக்கும் தெரியாதுல்ல” என்ற ரீதியில் எழுதி அனுப்பியிருந்தான். படித்துவிட்டு நான் பதில் எதுவும் எழுதவில்லை.

அதன் பிறகு எனது திருமணத்திற்கு வந்தான். அவனது அக்கா திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். எனக்கு மகள் பிறந்த போது தகவல் சொன்னேன். சொன்ன நாளில் இருந்து என் மகளின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான்.

“அத வச்சு என்னடா செய்யப்போற” என்றதற்கு,

“ஹலோ..அனுப்புன்னா அனுப்பணும். நான் பெரியவனா, நீங்க பெரியவனா. சொல் பேச்சுக் கேட்டுப் பழகுங்க” என்றான்.

ஓரிரு மாதங்கள் கழித்து ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவனிடம் இருந்து ஈமெயில் வந்தது. எனது மகளின் பிறப்புச் சான்றிதழில், பச்சை மையில் கையெழுத்திட்டு, அவனது பதவிக்கான சீல் வைத்து, அதனை ஸ்கேன் செய்து “Thanks for all you have done for me” என்று எழுதி அனுப்பியிருந்தான்.

அவன் க்ரூப்-ஏ ஆபீசர் ஆகி, அட்டெஸ்டேஷன் செய்து கையெழுத்திட்ட முதல் சான்றிதழ் என் மகளுடையது. என் மகளுக்கான முதல் சான்றிதழில் முதல் அட்டெஷ்டேஷன் செல்வத்தினுடையது. இப்படி யோசித்து செய்வான் என்று நான் நினைக்கவில்லை. அந்த ஒற்றைக் கையெழுத்தின் பின்னால் இருக்கும் உழைப்பையும், அன்பையும், நம்பிக்கையையும் விட என்ன பெரிய பரிசினை அவனோ நானோ என் மகளுக்குக் கொடுத்துவிட முடியும்.

“சந்தோசம்டா” என்பதைத் தவிர அவனிடம் வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு. 

அது தவிர, எப்போதும் போல பொங்கலை ஒட்டி வரும் போது மட்டும் நேரில் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை வீட்டுக்கு வரும் போது மரத்தால் செய்த ஒரு அழகான கிருஷ்ணர் சிலை ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். 

“இத வச்சு நான் என்னடா செய்ய” என்றதற்கு,

“குடுத்தா வாங்கி வச்சிக்கணும். கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது, புரியுதா, மண்ட பத்ரம்” என்றான். 

“எப்படா இங்கிட்டு வரப் போற. போயி ஆறு வருசம் ஆகப் போவுது. அஞ்சு வருசத்துல டிரான்ஸ்பர் வாங்கிரலாம்ன”

“வந்துரும் பிக்காலி. கேட்டுருக்கேன்”

“நீ இருக்க ஊருக்கு எவனும் பொண்ணு குடுக்க மாட்டாண்டா. இங்கிட்டு வந்தாத்தான் ஆச்சு” என்றதற்கு

“எனக்கு எவன் பொண்ணு தரமாட்டேங்கிறவன்” என்றான்.

அன்றைக்கு ஏர்போர்ட் சென்று விட்டு “You will not find your brown color leather shoes in your shoe stand. Don’t search for those. They have come with me. Thank you” என்று மெசேஜ் அனுப்பியிருந்தான். அனைத்திலிருந்தும் வெளிவந்து நார்மல் ஆகிவிட்டான் என்று நினைத்தேன். 

மேற்சொன்ன உரையாடல் நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து, ஒரு நாள் மதியம் அலுவலக மீட்டிங்கில் இருந்த போது, சுரேஷ் ஃபோன் செய்தான். அவன் அப்போது வேலை விசயமாக துபாய் சென்றிருந்தான்.  மீட்டிங்கில் நான் பேசிக்கொண்டு இருந்ததால், அவன் இரண்டு முறை போன் செய்த போதும் எடுக்கவில்லை. மனதில் எதோ பிசிறு தட்ட, போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, சுரேஷுக்கு டயல் செய்தேன்.

நான்கைந்து ரிங் கழித்து சுரேஷ் போனை எடுத்தான். சர்வ நிச்சயமாக கெட்ட செய்தி எதோ சொல்லப் போகிறான் என்று தெரிந்தது.

“ஹலோ” என்றான்.

“சொல்றா..போன் பண்ணிருந்த…மீட்…” என்று முடிப்பதற்குள்.

“செல்வம் செத்துட்டாண்டா” என்றான்.

எதுவும் பேச முடியாமல், தலையில் கைவைத்து, அலுவலகத்தின் கண்ணாடி சுவர் வழியாக ரோட்டை வெறித்துக் கொண்டிருந்தேன். மொட்டை வெயில் வெளேரென்று அடித்துக் கொண்டிருந்தது.

செல்வம், எப்போதும் போல பொங்கலுக்கு ஊருக்கு வரக் கிளம்பியிருக்கிறான். அவன் இருக்கும் இடத்தில் இருந்து போர்ட் ப்ளேருக்கு ஜீப்பில் வந்து, பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வருவான். அன்றைக்கும் அதே போல அவனது ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான். இடையே ஒரு காட்டுப்பகுதியில் இருந்த செக் போஸ்டில் கையெழுத்திட்டவன், அங்கேயே சுருண்டு விழுந்து இறந்திருக்கிறான். மாரடைப்பு. அருகில் அவசர சிகிச்சைக்குக் கூட மருத்துவமனை கிடையாது.

வேறு சில தொடர்புகளின் மூலம் அவனது அலுவலகத்தின் சென்னைக் கிளையில் இருந்த ஒரு உயர் அலுவலரை தொடர்பு கொண்டோம். நிறைய உதவி செய்தார்கள். போஸ்ட் மார்ட்டம் முடிந்து அவனது உடலை விமானம் மூலம் ஊருக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னார்கள்.

“போர்ட் ப்ளேரில் இருந்து சென்னைக்கு ஃப்ளைட்ல அனுப்பி, அங்க இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு அனுப்பி, வீட்டுல கொண்டு போயி இறக்கிருவோம். ஆனா ஃபார்மாலிட்டீஸ் லேட் ஆகும். நீங்க நேரா final ritesக்கு வீட்டுக்கு போயிருங்க” என்றார் அங்கே இருந்த அதிகாரி.

சுரேஷ் அன்றே துபாயில் இருந்து வந்து சேர்ந்தான். அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, மதுரை சென்றோம். பிரபாவும், விஜியும் மதுரையில் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். செல்வம் இல்லை என்று நம்பவே முடியவில்லை. யாருக்கும் அழுகை கூட வரவில்லை. கயத்தாறு போகிற வழியில் நிறுத்தி நிதானமாக டீ எல்லாம் கூட குடித்தோம். வெகு சாதாரணமான பயணம் போல் இருந்தது. செல்வத்தின் உடல் வருவதற்கு சற்று முன்னரே அவனது ஊருக்குச் சென்று விட்டோம். கயத்தாறு தாண்டி, கிழக்கே செல்ல வேண்டும். மிகவும் பின்தங்கிய, சிறிய ஊர். இங்கிருந்து தொடங்கிய ஒருவன், தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்று, டெல்லி வரை சென்று நேர்காணலில் தேர்வாகி, மத்திய அரசில் ஒரு நல்ல பதவியை அடைந்தான் என்று நினைக்கவே சிலிர்த்தது.

ஊர் முக்கில் இருந்த புளியமரத்தின் அருகே மொத்த ஊரும் காத்திருந்தது. போஸ்ட் மார்ட்டம் செய்த உடலை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல, சில ஊர்களின் கட்டுப்பாடுகள் அனுமதிப்பதில்லை. ஊருக்குள் இறக்கி வைத்து, அப்படியே இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். செல்வத்தின் அம்மாவும், அக்காமாரும் அழுது ஒய்ந்திருந்தார்கள்.

சற்று நேரத்தில் ஒரு வெள்ளை நிற வேன் ஊருக்குள் வந்தது. அது ரிவர்ஸ் எடுத்து நிற்கவும், அழுகைச் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. செல்வத்தின் பெயர் எழுதிய, வெள்ளைத்துணி சுற்றப்பட்ட ஒரு சவப்பெட்டியை வேனுக்குள் இருந்து இறக்கினார்கள். காத்திருந்தோர் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்கள். வேனில் உடன் வந்த ஒருவர், பெட்டியைத் திறந்தார், செல்வம் தூங்குவது போல சலனமில்லாமல் படுத்திருந்தான். அழுகை ஓலமாக மாறியது. செல்வம் படுத்திருப்பதையும், சுற்றியிருப்போரின் ஓலத்தையும் தாங்க முடியாமல் விலகி நின்று விட்டேன். விஜியும், சுரேசும் அவனைப் பார்த்தபடியே நின்று அழுதுகொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், பெட்டியை மூடி இடுகாடு நோக்கி கொண்டு செல்ல, கூடவே சென்றோம். அவனது அப்பா அடக்கம் செய்யப்படிருந்த இடத்துக்கு அருகே, கல்லறைக்கு இடம் தயார் செய்திருந்தார்கள். செல்வம் இருந்த பெட்டியை கயிற்றில் கட்டி இறக்கினோம். மண்ணை மூடி நிரப்பும் போது, அங்கிருந்து விலகி, இடுகாட்டின் அருகே இருந்த வேப்பமரத்தின் நிழலில் நின்றிருந்தேன். சுரேஷ் மரத்தில் கையை வைத்து, சாய்ந்தபடி நின்றிருந்தான். விஜி கைகளைக் கட்டியபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் எங்களுடன் இருக்கும் வெயில் அன்றும் வெளேரென்று அடித்துக் கொண்டிருந்தது.  நான், சுரேஷ், விஜி, வேப்பரம், வெயில் என்று, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நான் செல்வத்தை முதன்முதலில் பார்த்த போது இருந்த அனைத்தும் அன்றும் இருந்தன, செல்வத்தைத் தவிர.

என்னைவிட சுரேசுக்கு தான் செல்வம் நெருக்கம். சுரேஷ் அவனை சொந்த தம்பியைப் போல தான் பாவித்தான். இன்னமுமே அவன் இல்லாமையை சுரேஷ் எப்படி தாங்கிக் கொள்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. செல்வம் இறந்த பிற்பாடு, மாயா பந்தரில் அவன் இருந்த வீட்டுக்கு சென்று பொருட்களை எடுத்து வருவோம் என்று சுரேஷ் அழைத்த போது நான் செல்ல மறுத்து விட்டேன். எனக்கு அவன் இருந்த வீட்டையோ, அந்த இடத்தையோ பார்க்கும் தெம்பு இல்லை.

“நீயும் போகாத. கஷ்டமா இருக்கும். அவனே இல்லன்னு ஆயிருச்சு. பொருளைக் கொண்டு வந்து என்ன செய்யப் போற. பேசாம இரு” என்றேன்.

சில மாதங்கள் கழித்து, ஒரு மத்தியானத்தில் சுரேஷை பார்க்க வேளச்சேரி வீட்டுக்குச் சென்றேன். வாசலில் இருந்த ஒரு வேப்பமரத்தின் நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். புல்லட்டில் நான் உட்கார்ந்திருக்க, சுரேஷ், ஹேண்டில் பாரில் கையை வைத்து சாய்ந்து நின்றிருந்தான்.

“அந்த வண்டியைப் பாத்தியா” என்று கைகாட்டினான்.

எதிரே ஒரு கருப்பு நிற பொலீரோ ஜீப் நின்று கொண்டிருந்தது. சுரேஷ் அந்தமான் சென்று பொருட்களை மட்டுமல்லாது. செல்வத்தின் ஜீப்பையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறான்.

“டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தா, உன் வீட்டு வாசல்ல இதக் கொண்டு வந்து நிறுத்தணும்னு சொன்னான். ஊருக்கு அனுப்பப் போறேன். சாவி எடுத்துட்டு வரவா. பாக்குறியா ?” என்றான்.

எப்போதோ ஒரு உரையாடலில் எனக்கு பொலீரோ மிகவும் பிடிக்கும் என்று சிலாகித்துச் சொன்னதை அத்தனை நாட்கள் நினைவில் வைத்திருந்திருக்கிறான்.

“வேணாம்டா” என்று மறுத்து விட்டேன். தூசி படிந்து நின்ற அந்த கருப்பு நிற பொலீரோ இன்னும் வெகு காலத்திற்கு என் நினைவில் நிற்கும்.

பல நேரங்களில் செல்வம் இன்னும் எங்கோ வெகு தூரத்தில் இருப்பதாக மனதுக்கு தோன்றினாலும், அவன் இல்லை என்ற நிதர்சனத்தின் கனம் அவ்வப்போது உறுத்தும். பெருஞ்சோகங்களின் கனத்தை லேசாக்கும் ஆற்றல் எழுத்துக்கு உண்டு. வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து, இதோ எழுத்தின் மூலம் அந்தக் கனத்தை சற்று இறக்கி லேசாக்கிக் கொண்டேன். எழுத்தாகி விட்ட எங்கள் செல்வம் இனி தொடர்ந்து வாழ்வான்.

பிக்காலி.

One thought on “பிக்காலி

Leave a comment