அரூப தேவதைகள்

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவி செய்பவர்கள் கண நேரத்தில் நம் வாழ்வினை அழகாக்கிச் சென்று விடுகிறார்கள். சிலரின் பெயரோ முகமோ நினைவில் இல்லாமற் போனாலும், ஒரு அரூபமாக அவர்களின் சித்திரம் மனதில் படிந்து விடுகிறது. மனம் சுயநலம் கொண்டு வெறியாடும் போதெல்லாம் இந்த அரூப தேவதைகள் தான் கைப்பிடித்துக் கரையேற்றுகிறார்கள். பெரும்பாலும் அந்த தேவதைகள் பெண்களாக இருந்து விடுகிறார்கள்.

Unsplash.com Ludovica Dri

சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா சென்றவன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய், பின்பு அங்கிருந்து சென்னை. 3-4-3 என்ற தள அமைப்பில் இருக்கைகள் அமையப்பெற்ற ஏர்பஸ் A380 ரக விமானத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய்க்கு பதினாறு மணி நேரப் பயணம். இது போன்ற சில பயணங்களில் எனக்கு பிஸினஸ் கிளாஸ் வாய்த்திருக்கிறது. சில பயணங்களில் ஆட்கள் அதிகமில்லாமல் எகானமி வகுப்பில் நான்கு சீட்களும் எனக்கே பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிஸினஸ் க்ளாஸை விட பட்டா போடப்பட்ட எகானமி கிளாஸ் தருணங்கள் பேரானந்தம் மிக்கவை. ஆனால், அன்று எனக்கு வாய்த்த எகானமி வகுப்பு பயணத்தின் போது விமானம் நிரம்பி வழிந்தது.

நெடுந்தூர விமானப் பயணங்களில் நடைபாதை பக்கம் இருக்கும் இருக்கைகள் (aisle seats) கிடைத்தல் வரம். பக்கத்தில் இருப்பவர்கள் எழுந்து சென்றாலோ, திரும்பி வந்தாலோ நாம் விருட்டென்று நகர்ந்து விடலாம். தவிர, நமக்கு வேண்டும் போதெல்லாம் நாம் எழுந்து செல்லலாம். நடுவில் அமர்ந்தால், பக்கத்தில் இருப்பவரை எதிர்பார்த்து இருக்க வேண்டும். ஒருமுறை aisle சீட்டில் என்னுடன் ஒரு வெள்ளைக்காரர் வந்தார். அந்தப் பயணத்தில், ஒவ்வொரு முறை வெளியே வருவதற்குள், நடு இருக்கையில் இருந்த நானும், சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தவரும் திணற வேண்டியிருந்தது. வடிவேலு கிட்னி திருடும் காமெடியில், “ரொம்பப் பயங்கரமான ஆளா இருப்பாரோ” என்று சொல்லும் போது, மீசையை நீவி விடும் நடிகர் செல்லத்துரை அமெரிக்காவில் பிறந்திருந்தால் இவரைப் போலத் தான் இருப்பார். இரண்டு மூன்று பெக்குகளை உள்ளே தள்ளிவிட்டு, “Dont disturb for food” என்ற கார்டை கழுத்தில் தொங்கவிட்டு மட்டையாகி விட்டார். நாம் எழுந்து வெளியே போக வேண்டி வந்தால், இந்தாளை எப்படி எழுப்புவது என்ற யோசித்துக் கொண்டே நானும் தூங்கிவிட்டேன். 

தூங்கினாலும், உச்சா போக எழுந்து தானே ஆக வேண்டும். என் பாடி லாங்வேஜை, சன்னல் இருக்கையில் இருந்தவர் புரிந்து கொண்டார். இப்ப எந்திரிப்பாரு, அப்ப எந்திரிப்பாரு என்று வெகு நேரம் காத்திருந்த பிற்பாடு, இதுக்கு மேல சரியா வராது என்று செல்லத்துரையை எழுப்பினோம். இரண்டு மூன்று முறை எழுப்பிப் பார்த்தும் அவர் எழவில்லை என்றதும், நான் ஜம்ப் அடிக்க எத்தனிக்க, சரியாக நான் எவ்வும் போது விழித்து விட்டார். யார்றா இவன் கோமாளி என்பதைப் போல என்னைப் பார்த்த செல்லத்துரை, ஒரு சைஸாக கையைத் தூக்கி “பொறு” என்பதைப் போல காண்பித்து விட்டு, விலகி நின்று வழி காட்டினார்.

“யோவ் எவ்வளவு கூப்டும் நீ எந்திக்கலய்யா, அதான் ஜம்ப் அடிக்கப் பாத்தேன்” என்று விளக்கவா முடியும் ? இந்த பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சன்னலோர நண்பரும் வெளியே வந்து விட்டார். நான் திரும்பி வருவதற்குள் செல்லத்துரை மறுபடியும் மட்டை. எழுப்பினால், எரித்து விடுவதைப் போலப் பார்த்தார்.

“போனா வந்து தானய்யா ஆகணும். அங்கயேவா குடியிருக்க முடியும், இதுக்குப் போயி முறைக்கிற” என்று சொல்லலாம் தான். ஆனால் இதே டைமிங்கோடும், ரைமிங்கோடும் அவரிடம் ஆங்கிலத்தில் சொல்ல முடியாததால், நினைத்ததைச் சொல்லவில்லை. அமைதியாக கேட்டுக்குள் சென்று விட்டேன். நான் செட்டில் ஆகி, பதினைந்து நிமிடங்கள் ஆயிருக்கும். செல்லத்துரை தூங்கிச் சரியத் தொடங்கும் போது, திஸ்பிஸ் என்று சத்தம். ஹெட்ஃபோனைக் கழற்றி நிமிர்ந்தால், சன்னலோர இருக்கைக்காரர்,

“எக்ஸ்க்யூஸ்மி” என்று வந்து நின்றார்.

இது போன்ற ஸ்டண்ட்டுகளை தவிர்க்க டிராவல் ஏஜெண்டுகளிடம் ஒவ்வொரு முறையும் மிகத் தெளிவாக aisle இருக்கையை புக் செய்யச் சொல்வதுண்டு. இந்தப் பயணத்தில், டிராவல் ஏஜண்ட் சரியாக சோலி பார்த்திருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய் செல்லும் பயணத்தில், என்னுடன் வந்த இரண்டு நண்பர்களுக்கு 3 இருக்கைகள் கொண்ட வரிசையில் இடம் கிடைக்க, அங்கிருந்து பத்து பதினைந்து வரிசைகள் முன்னால், நான்கு இருக்கைகள் கொண்ட வரிசையில், நடுவில் உள்ள இருக்கை எனக்கு விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டதை நொந்து கொண்டு அமர்ந்தேன். 

வலப்பக்கம் இருந்த aisle சீட்டில், கார்ன்ரோஸ் (cornrows) ஹேர் ஸ்டைல், பாஷ்மீனா ஷாலுடன் எங்கள் மாவட்டக் கலரில் இருந்த பெண்ணொருத்தி வந்து அமர்ந்தாள். வழக்கமான ஹாய்களுக்குப் பிறகு, நான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்று அவளும், அவள் எத்தியோப்பியாவைச் சேரந்தவள் என்று நானும் தெரிந்து கொண்டோம். அவள் ஹேர் ஸ்டைல் வெறும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வைத்திருக்கும் கார்ன்ரோஸ் அல்ல, கார்ன்ரோஸ்-ஐ உள்ளடக்கிய அல்பாஸோ ப்ரெயிட் (albaso braid) என்பதும், எத்தியோப்பியா, எரித்த்திரியா நாடுகளில் அது பரவலான ஹேர் ஸ்டைல் அது என்பதும் பின்னாளில் தெரிந்து கொண்டது. சம்பிரதாய “லாங் ஃபளைட்” என்ற அங்கலாய்ப்பினை பகிர்ந்து கொள்ளும் போது, பின் வரிசையில் சீட் கிடைத்திருந்த என் நண்பன் இன்னொரு பெண்ணுடன் வந்து நின்றான்.

நண்பர்களுக்குக் கிடைத்த மூன்று இருக்கைகள் கொண்ட வரிசையில், நடு இருக்கை அவன் அழைத்து வந்த பெண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. “எங்கள் நண்பன் முன்னே தனியாக இருக்கிறான், நீங்கள் மாற்றிக் கொண்டால், நாங்கள் சேர்ந்து அமர்ந்து கொள்வோம்” என்று கூறி அவளை அழைத்து வந்திருக்கிறான். நடு இருக்கையில் இருந்து தப்பிக்க வழிவந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் சீட் பெல்ட்டை களைந்துவிட்டு எழத் தொடங்கினேன். நண்பனோடு வந்தவள், நான் நடு இருக்கையில் இருந்து எழுவதைப் பார்த்துவிட்டு,

“I cannot sit here. I thought you were offering an aisle seat” என்று நண்பனிடம் கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் திரும்பிச் சென்றுவிட்டாள்.

நண்பன் சிரித்துக்கொண்டு  நிற்க, நான் நடு இருக்கையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனதை பாதி எழுந்த நிலையிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அங்கயும் அவளுக்கு நடு சீட்டு தாண்டா” என்று சொல்லிவிட்டு நண்பன் சென்று விட்டான். எத்தியோப்பியாக்காரி என்னைப் பார்த்து சிரித்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, சிறிது நேரம் கழித்து,

“You know what, let her take my aisle seat. I can sit in the middle, you go sit with your friends” என்றாள்.

“No. Its okay. I’ll be fine” என்ற என் பதிலை அவள் ஏற்கவில்லை.

“I insist. Your face lit up when your friend came. I will anyway sleep most of the time. You go enjoy with your friends” என்றாள்.

“No, you don’t have to..” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னர், அவள் எழுந்து சென்று அந்தப் பெண்ணிடம் பேசி, நான் நண்பர்களோடு அமர வழி செய்தாள். 

அதிகம் போனால் நாங்கள் இருவரும் ஐந்து நிமிடம் பேசியிருப்போம், வாழ்நாளில் என்னை அவள் மறுபடியும் பார்க்கக் கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். எனக்கு உதவி செய்வதால் அவளுக்கு எந்தப் பலனும் இல்லை. அவள் இடத்தில் நான் இருந்திருந்தால், நிச்சயமாக அதைச் செய்திருக்க மாட்டேன். முகம் தெரியாத ஒருத்திக்காக பதினாறு மணி நேரம் நான் சிரமப்படத் தயாராக இருப்பேனா என்று தெரியவில்லை. நான் நண்பர்களோடு இருப்பதற்காக பதினாறு மணி நேரம் நடு இருக்கையில் அமரத் தயாராக இருந்த அந்த மனதை என்னவென்று விவரிப்பது. பெயர் தெரியாத அந்த எத்தியோப்பியாக்காரியின் நிழலுருவம் பேரழகாக என் நினைவில் பதிந்திருக்கிறது. அந்த அழகினை உங்களுக்குக் கடத்துவதைத் தவிர அவளுக்கு வேறென்ன செய்துவிட முடியும் நான் ?

***

2015 சென்னை பெருவெள்ளத்தின் போது, மழை ஊறப் போட்டு அடித்துக் கொண்டிருந்தது. விடிகாலையில் பிள்ளைகளுக்குப் பால் வாங்க அலைந்து கொண்டிருந்தேன். மெயின் ரோட்டை ஒட்டி சிறிய மாட்டுப்பண்ணை வைத்திருந்த வீட்டை நோக்கிச் சென்ற போது, அங்கே எனக்கு முன்னால் முழங்கால் அளவு தண்ணீரில் இருபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். தன் வீட்டு வாசலில், ஒரு லிட்டர் எண்பது ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தான் இருபதுகளில் இருந்த அந்த இளைஞன். நல்ல போதையில், வாயில் பீடியோடு கூட்டத்தை ரெகுலேட் செய்து கொண்டிருந்தான் அவனது நண்பன். மாட்டுப்பண்ணை ஓனர் இளைஞன் பாலை அளந்து ஊத்த, அவனது நண்பன் ஒரு பாலித்தீன் கவரில் அதை ரப்பர் பேண்ட் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தான். 

“கேரி பேக்ல குடுக்க வேண்டியதான. ரெண்டு காதையும் புடிச்சி கட்டிரலாம்ல. எதுக்கு ரப்பர் பேண்ட் போட்டுக்கினு” என்று பல் விளக்கிக் கொண்டே இன்னவேட்டிவ் ஐடியாவைத் துப்பியடி கடந்து சென்றது ஒரு பெருசு.

ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவர்கள், மறுபடியும் வேலையில் பிஸி ஆனார்கள்.

“கேரி பேக் ஒழுகிரும்பா, இதுதான் தாங்கும். ஆனா எம்பது ரூவா அநியாய ரேட்டு” என்றவரிடம்.

“வேணும்னா வாங்கு, இல்ல நவுரு” என்றான் அந்த நண்பன்.

இதைச் சட்டை செய்யாமல், இறுகிய முகத்தோடு பாலை அளந்து பாலித்தீன் கவர்களில் ஊத்திக் கொண்டிருந்தான் அந்த ஓனர் இளைஞன். ரப்பர் பேண்ட் போடும் போது, அவனது நண்பன் ஒரு பாக்கெட்டைத் தவற விட, பால் ஊத்திக் கொண்டிருந்தவன் பொளேரென்று ஒன்று வைத்தான்.  

“**தா கண்ண எங்கடா வச்சிருக்க”

“ஈரமா இருக்கு” என்று புறங்கையால் அறை விழுந்த கன்னத்தைத் துடைத்து விட்டு, தண்ணீரில் விழுந்து மிதந்த பீடியை எடுத்து வாயில் இடுக்கிக் கொண்டு, அடுத்த கவரைப் பிரித்து, 

“ம்ம் ஊத்து” என்றான் நண்பன்.

காசு வைத்திருந்தவர்கள் வாங்கிச் சென்றார்கள், இல்லாதவர்கள் முனகிக் கொண்டே விலகிச் சென்றார்கள். அந்த அநியாய விலையை எதிர்த்துக் கேட்கும் மனநிலை யாருக்கும் இல்லாத சூழலில், அத்தனை கரைச்சலுக்கும் நடுவே, கீச்சென்ற குரல் !

“இப்டி சம்பாதிச்சு என்ன செய்யப் போற. பசிக்கு பால் வாங்க வந்தவங்ககிட்ட யாவாரம் பண்ற நேரமாடா இது. நாசமாத் தான் போகப் போற நீயி. யக்கா இவங்கிட்ட பால் வாங்காதக்கா நீயி. புள்ளை பட்டினி கிடந்தாலும் பரவால்ல” – மாடியில் இருந்து கத்தினாள் ஒரு பெண்.

“த..சும்மாருக்க மாட்ட” 

“யேய்..சொல்லிட்டே இருக்கேன் கேக்க மாட்டியா நீயி, இந்தப் பாவத்தை எங்க போய் கழுவ. இத வச்சி நம்ம பொங்கித் திங்கணுமா” 

“போடி வேலையப் பாத்துட்டு…சாவடிச்சிருவேன்” என்றவனை, கூந்தலை முடிந்து கொண்டே எரித்த அவளது பார்வையின் வெக்கை சொல்லும், பேர் தெரியாத பிள்ளைகளின் மேல் அவள் கொண்ட எதிர்பார்ப்பில்லா அன்பினையும், அவளது மனதில் இருந்த அறத்தையும். நிறம் மங்கிய ஊதாக் கலர் நைட்டியோடு, அந்தச் சிறிய வீட்டின் மாடியில் பத்ரகாளியாய் நின்றவளை நான் எப்படி மறக்க முடியும் ?

***

அலுவலகத்தில் ஒருநாள் மதியம், கொலைப் பசி. வள்ளு வதக்கென்று எதையாது தின்ன வேண்டும் போல் இருக்க, கேஃபிட்டேரியாவுக்குச் சென்றேன். ஐடி கம்பெனிகளுக்கான அந்த வளாகத்தில், பத்துக்குப் பத்து சைஸில் குறைந்தபட்சம் இருபது உணவு கவுண்ட்டர்கள் உண்டு. அந்தந்த கவுண்ட்டர்களில் பணம் செலுத்திவிட்டு, வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். கொலைப் பசி நேரங்களில் உள்ளத்தில் நிறைந்திருப்பது பிரியாணி மட்டும்தானே. மனம் பிரியாணியை நாட, அந்த கவுண்ட்டரில் நின்றிருந்தேன்.

அப்போதுதான் இறங்கியிருந்த அண்டாவை “டங் டங்” கென்று தட்டிக்கொண்டிருந்தார் மாஸ்டர். எவர்சில்வர் தட்டு அலுமினிய அண்டாவில் மோதும் அந்தச் சத்தத்திற்கு பசியை பன்மடங்காக்கும் ஆற்றல் உண்டு. பசி பன்மடங்காகிப் பிரவாகம் எடுக்கும் அந்த நொடியில், பிரியாணியைக் கிளறும் போது எழும் வாசத்தில், கடவுளை உணரலாம். இது சாமி சத்தியம். தட்டிக் கிளறி முடித்து விட்டு, மாஸ்டர் தலையசைத்தார். கவுண்ட்டரில் நின்ற அக்காவிடம்,

“ஒரு சிக்கன் பிரியாணி, லெக் பீஸ் வேணும். வெங்காயம் கம்மியா வைங்க, தால்ச்சா நிறையா வைங்க” என்றேன். மாஸ்டர் வெடுக்கென்று திரும்பிப் பார்த்தார்.

அந்த அக்கா பாயிண்ட் ஆஃப் ஸேல் டெர்மினலில், QR கோட்-ஐ காண்பித்தார். நூற்றித் தொண்ணூறு ரூபாய் என்றது. இதற்குள் மாஸ்டர், பிரியாணியை ஒரு கிண்ணத்தில் குவித்து, அதற்குள் ஒரு முட்டையை ஒளித்து தயார் செய்து, பில்லிங் கவுண்ட்டருக்கு அருகே வைத்திருந்தார். பிரியாணிக் குவியலுக்குள் முங்கியிருந்த லெக் பீஸின் நுனி மட்டும் தெரிந்தது.

நான் QR கோட்-ஐ ஸ்கேன் செய்து, கன்ஃபார்ம் பட்டனை அழுத்தும் போது ஜி-பே காரன் சரியாகக் கழுத்தறுத்தான். 

“Your bank network may be down”. 

இரண்டு மூன்று முறை முயன்றும் அதே மெசேஜ். 

“Don’t worry if your money is debited. You’ll get a refund within 3 days of payment”. 

அதுவரை கற்றுத் தேர்ந்திருந்த, அத்தனை விதமான கெட்ட வார்த்தைகளில் இருந்து, ஜி-பே காரனைத் திட்ட சரியான வார்த்தையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன்.

“என்ன சார் ஆச்சு” என்றார் அந்த அக்கா. 

“இல்ல..நெட்வர்க் டவுன் போல”, என்றேன். நொடி நேரம் கூட தாமதிக்காமல்,

“சாப்டு டிரை பண்ணுங்க சார். இதுக்காகப் பசியில வெயிட் பண்ணுவீங்களா” என்றார் அந்த அக்கா.

“சரிக்கா..தேங்க்ஸ்” என்று மறுபேச்சு பேசாமல் பிரியாணியை எடுத்து வந்து விட்டேன்.

ஆயிரம் பேருக்கு மேல் பணிபுரியும் வளாகம் அது. நான் யார், எந்த அலுவலகத்தில் பணிபுரிகிறேன் என்ற ஒரு விவரமும் அந்த அக்காவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த சனத் திரளில் நான் பணம் கொடுக்காமல் போனால், என்னைத் தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் மிக அரிது. பின்னர் ஏதோ ஒரு நாளில், நான் திரும்ப வந்தாலும் என்னை நினைவில் வைத்திருத்தல் சிரமம். அந்த அக்கா கடையின் ஓனரும் இல்லை, சம்பளத்திற்கு வேலை செய்பவர். ஒரு வேளை நான் தராமல் போனால், அவர் தான் அந்த நூற்றித் தொண்ணூறு ரூபாயைத் தரவேண்டி வரும். பணம் கட்டிட்டு எடுத்துட்டுப் போங்க என்று அவர் சொல்லியிருக்கலாம். “கேஷ் இருக்கா” என்ற நியாயமாக கேட்கக் கூடிய கேள்வியைக் கூட அவர் கேட்கவில்லை. முகத்தைப் பார்த்து பசியில் இருக்கிறேன் என்று உணர்ந்து, ஜி-பே காரனின் கழுத்தறுப்பில் இருந்து என்னைக் காப்பாற்றி, நான் பசியாற வேண்டும் என்று நினைத்த அந்த உள்ளத்தை என்னவென்று சொல்வது. 

சிகாகோ விமான நிலையத்தில் என்னை அழைக்க வந்தபோது, “பசியில இருப்ப. வீட்டுக்குப் போக ரொம்ப நேரம் ஆவும். சாப்டுவீல” என்று டிபன் பாக்ஸ் நிறைய எலும்புக் குழம்பும், இட்லியும் எடுத்த வந்த என் தங்கையும், ஊர்த் தெருவில் பாய் விரித்து நிலாச் சோறு சாப்பிடும் போது ரசஞ் சோற்றைப் பிசைந்து கை நிறைய அள்ளி வைக்கும் பக்கத்து வீட்டு மகேஸ் அக்காவும், சீதா அக்காவும் தான் கண் முன்னே வந்து போனார்கள். அம்மாக்கள் மட்டுமல்ல, அக்காக்களும் தங்கைகளும் பசியாற்றும் தேவதைகள் தானே.

சாப்பிட்டு முடித்து விட்டு, பணம் கொடுக்கச் சென்றேன். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல, நான் QR கோட்-ஐ ஸ்கேன் செய்ய, மறுபடியும் “Don’t worry if your money is debited”. இது போன்ற சூழ்நிலைகளில் நாம் அனைவரும் அனிச்சையாய் டயல் செய்யும் நண்பனுக்கு ஃபோன் செய்தேன்.

“டேய்..ஒரு 200 ரூவா வேணும். பிரியாணி கவுண்ட்டர்ல நிக்கிறேன்” 

“இந்தா வர்றேன்” என்றான்.

அவன் வரும் வரை அமைதியாக கவுண்ட்டர் அருகே நின்று கொண்டு இருந்தேன். ஒருமுறை கூட என்ன ஏது என்று அந்த அக்கா கேட்கவில்லை. ஐந்து பத்து நிமிடங்கள் கழித்து நண்பன் வந்தான்.

“எவ்ளோ தரணும் ?” என்றபடி ஜி-பே ஆப்-ஐ திறந்தான்.

Leave a comment