இரவு பத்து மணி இருக்கும். அன்றைக்கான கடைசி மீட்டிங்கை முடித்து விட்டு, பெருங்குடியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அலுவலக ஸ்டோர் ரூமைத் தாண்டும் போது, அங்கே அமர்ந்து இருந்த செக்யூரிட்டி எழுந்து நின்று சிரித்தார். ஐம்பதுகளின் இறுதியில் இருப்பார். ஆறடிக்கு சற்றே மேற்பட்ட உயரம், ஒடிசலான தேகம், நன்கு சவரம் செய்யப்பட்ட முகம், ஒடுக்கு விழுந்த கன்னங்கள், பாதி வழுக்கைக்கு மேல் எண்ணெய் தேய்த்து இழுத்து வாரிய தலைமயிர். ஒரு எக்ஸ் சர்வீஸ்மேனுக்கான எல்லா அடையாளங்களுடனும் பொருந்தக் கூடியவர்.
யார் கிளம்பினாலும், ஃபார்மாலிட்டிக்காக செக்யூரிட்டிகள் செய்யும் அந்த தலையசைப்புக்குத் தயாரானார். ‘கிளம்பியாச்சா, பாத்துப் போங்க, நாளைக்குப் பாப்போம்’ என்று பல உரையாடல்களை உள்ளடக்கிய செக்யூரிட்டிகளுக்கே உரிய ஒற்றைத் தலையசைப்பு அது.
“கிளம்பலையா சார் ? ” என்று கேட்டபடி பக்கத்தில் இருந்த வாட்டர் கூலரில் இருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பத் தொடங்கினேன்.
“போகணும் சார். பதினோரு மணிக்கு தான் டூட்டி முடியுது”.
“எட்டு மணி நேர ஷிஃப்டா சார் ? ” என்றேன்.
“ஒம்போது சார், ரெண்டு மணிக்கு வந்தா பதினோரு மணி வரைக்கும்”
“சாப்டாச்சா”
“இல்ல சார், வீட்டுக்குப் போயி தான்”.
“இதுக்கப்புறம் போயி, நீங்க என்னைக்கு சாப்பிட ? வடிவேலு சொல்ற மாதிரி கோழி கூவும் போதுதான் ஏப்பம் விடுவீங்க போல” என்றதற்கு சிரித்தார்.
வாட்டர் பாட்டிலில் இருந்து ஒரு மிடறு குடித்து விட்டு, பாட்டிலின் வெளிப்புறத்தை கைக்குட்டையால் துடைத்தபடி,
“பாப்போம் சார். வீடு எங்க” என்று கேட்டுவிட்டு லிஃப்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
“முட்டுக்காடு பக்கத்துல சார்” என்று அவர் சொன்ன பிற்பாடு அடுத்த கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது. லேசாகத் தலையைத் திருப்பி,
“பாத்துப் போங்க சார், பஸ்சா ?” என்று கேட்டவுடன் தான் உரைத்தது. ‘எத வச்சு பஸ்ஸுனு முடிவுக்கு வர்ற, பைக்கா கூட இருக்கலாம்ல’ என்ற யோசனையோடு அடுத்த அடியை எட்டி வைத்தேன்.
“சைக்கிள் சார்” என்றார்.
பதினோரு மணிக்கு அவரது ஷிஃப்ட் முடிவது, பெருங்குடிக்கும் முட்டுக்காடுக்கும் இடையே உள்ள தூரம், சைக்கிள், அவரது வயது என்று மூளை அரை செகண்டில் நேரத்தையும் தூரத்தையும் கணக்கிட, டக்கென்று நின்று விட்டேன். திரும்பிப் பார்த்து,
“சைக்கிளா ?” என்றேன்.
“ஆமா சார்” என்று சிரித்தார்.
திரும்பி, அவரை நோக்கி நடந்து அருகில் சென்றேன்.
“சைக்கிள்ல போயி…எத்தன மணிக்கு நீங்க வீடு போயிச் சேர?”
“டிராஃபிக் இருக்காது சார், ஒன்றை ரெண்டு அவர்ல போயிரலாம்” என்றார்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. மறுபடியும் அவரது வயது, வருமானம், வேலை என்று எல்லாம் சேர்ந்து குழப்ப,
“வீட்டுக்குப் பக்கத்துலயே எதாது வேலை பாத்துக்கலாம்ல சார், இல்ல இந்தப் பக்கம் வீட்டை மாத்தலாம்ல ? பிள்ளைகலாம் என்ன பண்ணுது ? ” என்றேன்.
“சொந்த ஊரே முட்டுக்காடு பக்கத்துல தான் சார். வீட்ல வேற அவங்க உடம்புக்கு முடியாதவங்க. அங்கன்னா ஒதவிக்கு ஆள் இருக்கும். இந்தப்பக்கம் இருக்க வாடகை நமக்கு கட்டுப்படியாகாது சார்.” என்று புன்னகையோடு சொன்னவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை,
“டிப்ளமா படிச்சிட்டு, ஓசூர்ல டைட்டன் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். 45 வயசு வரைக்கும் அங்க தான் சார் வேலை. மூணு தங்கச்சி. கடைசித் தங்கச்சிக்கு கல்யாணம் பண்றதுக்கு பணம் தேவைப்பட்டுச்சு. முத ரெண்டு தங்கச்சிகளுக்கு வாங்குன கடனே நிறைய இருந்ததால வெளிய வேற கடன் கிடைக்கல. அதுனால வேலையை விட்டுட்டு, மொத்த பி.எஃப், செட்டில்மென்ட்னு எல்லாத்தையும் எடுத்துட்டு, அவளுக்கு கல்யாணத்தப் பண்ணிட்டு, மீதி இருந்தத பையன் காலேஜ் படிப்புக்கு வச்சிக்கிட்டேன். எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு சார். பையன் வேலைக்குப் போயிட்டான்னா அப்புறம் தங்கச்சிய அவன் பாத்துக்குவான்ல சார். ஆனா, எந்தத் தங்கச்சிகளுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டனோ, அதுல ஒருத்தி கூட என் கஷ்டத்துல் என்னை திரும்பிப் பாக்கல சார்” என்று செய்யுள் போல ஒப்பித்து விட்டு அதே புன்னகையோடு நின்றார்.
எதுவும் பேசாமல் அவர் கண்களை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“சாரி சார். நான் பாட்டுக்கு நிறைய பேசிட்டேன். சைக்கிள்னு சொன்ன உடனே டக்குனு நின்னீங்களா, நான் பேசுறது புரியும்னு கடகடனு பேசிட்டேன் போல. நீங்க போங்க சார், டயம் ஆவுது” என்றார்.
காலம் அவரிடம் இருந்த இளமை, உறவுகள், நம்பிக்கை, பி.எஃப் பணம் என்று அனைத்தையும் இரக்கமின்றிச் சுரண்டி விட்டு, ஒரு கம்பெனியின் ஸ்டோர் ரூமுக்கு அருகில் இருந்த ஆரஞ்சு நிற ப்ளாஸ்டிக் சேரில் கொண்டு வந்து சாத்தியிருந்தது. உதவி எதுவும் வேண்டுமா என்று கேட்டு அவரது வைராக்கியத்தை சிறுமைப்படுத்தி விடுவோமா என்ற தயக்கத்திலும், போலியான ஆறுதல் சொல்ல விருப்பமில்லாமலும்,
“இதுக்கு எதுக்கு சார் சாரி கேக்குறீங்க, என்ன சொல்றதுனு தெர்ல, பாத்துப் போங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து, அவர் வேலை பார்த்த ஏஜன்சியில் அவரை வேறு எங்கோ மாற்றி விட்டார்கள். அதன் பிறகு எந்த செக்யூரிட்டியையும் என்னால் இயல்பாக பார்க்க முடிந்ததில்லை.
ஒரு நாள் இரவு ஆபிஸ் விட்டு வரும் பொழுது, துரைப்பாக்கம் டோல் அருகேயுள்ள சுபம் ஓட்டலில் புரோட்டா பார்சல் சொல்லிவிட்டு,
“சால்னா எக்ஸ்டிரா கட்டிருங்கண்ணே” என்று கேட்கும் போது, பக்கத்தில் உள்ள TGIF பார் வாசலில் ஏதோ ரகளை.
தமிழனுக்கே உரிய அதீத க்யூரியாஸிட்டியோடு “ரசத்துல பூனை கிடக்குதான்னு பாப்போம்” என்று லேசாக எட்டிப் பார்த்தேன். தனது அறுபதுகளில் இருந்த அந்த பாருடைய செக்யூரிட்டி, முப்பதுகளில் இருந்த ஒருவனை ஐடி கார்டு கயிற்றோடு, சட்டையைக் கொத்தாகப் பிடித்து, வேப்பமரத்தில் சாத்தியிருந்தார்.
“* ** …** னே, யாருன்னு நினைச்ச. ** ருவேன்.” என்று உறுமிக் கொண்டிருந்தார்.
மரத்தில் சாத்தப்பட்டிருந்தவனின் கார் இக்னிஷனில் இருந்தது. டிரைவர் பக்க கதவு மட்டும் திறந்து கிடந்தது. ஏப்பை சாப்பையாக சண்டை செய்யாமல், மிகத் தெளிவாக, காரில் இருந்தவனை வெளியே இழுத்துப்போட்டு, நிதானமாக சாத்தியிருக்கிறார். நைஸ் ஜென்டில்மேன். He had my respect at that moment.
“விடுணே..விடுணே” என்று இரண்டு மூன்று பேர் விலக்கி விட்டோம்.
“பெரிய புடுங்கி…காசத் தூக்கி எறியுறான். என்னைப் பாத்தா பிச்சக்காரன் மாதிரியா இருக்கு..**தா” என்று எகிறிக் கொண்டிருந்தார்.
“ஹழோ..ஜ்ஜீ..ஜ்ஜீ” என்று, கிழிந்த உதட்டுடன், தள்ளாடிபடியே தன்னை நியாயப்படுத்த முயன்று கொண்டிருந்தவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
காரை ரிவர்ஸ் பார்த்தவருக்கு, கண்ணாடியை இறக்கிப் பணம் கொடுத்திருக்கிறான். அவர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். போதையில், அந்த பத்து ரூவாய் நோட்டை அவரை நோக்கி வீசவும், செக்யூரிட்டி கடுப்பாகிவிட்டார். என்ன வெறுப்பில் இருந்தாரோ, இவனைப் போட்டு பொளந்துவிட்டார்.
“சீவரத்துல ரெண்டு கிரவுண்டு இடம் வச்சிருக்கேண்டா நானு, காசத் தூக்கி எறியுறான்..ல***ல் ” என்றபடி நகர்ந்து சென்று பாருக்கு செல்லும் மாடிப்படி அருகில் இருந்த அவருக்கான பச்சை நிற ப்ளாஸ்டிக் சேரில் சென்று அமர்ந்து மறுபடியும் திட்டத் தொடங்கினார்.
“அதிழ்ழை ஜ்ஜீ” என்றவனிடம்,
“போங்க பாஸு. தனியா குடிக்க வந்துட்டு சண்டை போடலாமா. வண்டிய எடுங்க. ஜீ-ன்னு சொல்றத பர்ஸ்டு நிப்பாட்டுங்க. கூட ரெண்டு வச்சிரப் போறாப்ல.” என்று அனுப்பி வைத்தோம்.
புரோட்டாவையும், எக்ஸ்டரா சால்னா பாக்கெட்டையும் வாங்கி வரும் வரை, செக்யூரிட்டி அவனைத் திட்டிக் கொண்டுதான் இருந்தார். என் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது, வேப்பமரத்தில் சாத்தப்பட்டவன் காரை சர்வீஸ் லேனில் ஓரங்கட்டி விட்டு, மறுபடியும் பாரை நோக்கி போய்க் கொண்டிருந்தான். செக்யூரிட்டி சேரில் இருந்து எழுந்து இரண்டாவது ரவுண்டுக்குத் தயாரானார்.
“சீவரத்துல ரெண்டு கிரவுண்டு வச்சுக்கிட்டு, எதுக்கு பார்ல செக்யூரிட்டி வேலை பாக்குறீங்க” என்று அவரிடம் கேட்டிருக்கலாம் தான். அன்றைக்கு அவர் இருந்த வேகத்தில், என்னையும் வேப்பமரத்தில் தூக்கி சாத்தியிருக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகமாக இருந்ததால், அதனைக் கேட்கவில்லை. அதனால் இன்று வரை பதில் தெரியவில்லை.
அப்பார்ட்மெண்டில் இருக்கும் செக்யூரிட்டிகளின் வாழ்க்கை இன்னும் கொடுமையானது. நான் இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில், ஒரு செக்யூரிட்டி சேரில் உட்கார்ந்தபடி தூங்கிவிட்டார். அறுபது வயதுக்கு மேல் உள்ள ஒரு பிரகஸ்பதி அவர் உட்கார்ந்தபடி தூங்குவதை போட்டோ எடுத்து,
“இதுனால தான் இவங்களுக்கு எல்லாம் உட்கார சேர் குடுக்கக் கூடாதுன்னு சொன்னேன். டூட்டி டயம் ஃபுல்லா நிக்கவிட்டா தான் ஒழுங்கா வேலை பாப்பாங்க. ரிமூவ் ஆல் தி சேர்ஸ் கிவன் டூ செக்யூரிட்டி” என்று வாட்ஸாப் க்ரூப்பில் அனுப்பியிருந்தார்.
“வேலை நேரத்துல தூங்குனா வார்னிங் குடு, இல்லன்னா வேலைய விட்டுத் தூக்கு. அதென்ன உட்கார சேர் குடுக்கக் கூடாதுங்கிற? அவரு உட்கார்றதுல கூட உனக்கென்ன காண்டு. ஒரே எடத்துல பத்து மணி நேரம் நீ நிப்பியா மூதேவி ? ” என்று செவுள் மேலயே நாலு போடலாம்தான்.
வன்முறையின் மேல் நம்பிக்கை இல்லாததாலும், சென்னையில் இன்னொரு முறை வீடு தேடி அலைய பொறுமை இல்லாததாலும் அதைச் செய்வது உசிதமில்லை. தவிர, இது போன்ற தருணங்களில், மனம் எனும் வேட்டை நாயை அடக்கி வைத்துப் பழகுதல் சாலச் சிறந்தது என்று முந்தைய அனுபவங்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றன. க்ரூப்பில் அந்த மெசேஜுக்கு பெரிதாக வரவேற்பில்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல். இது போன்ற சாடிஸ்டுகளிடம் இருந்து எளியவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான், கடைகளில் வேலை செய்பவர்கள் உட்கார நாற்காலி போட வேண்டும் என்ற அடிப்படை செயல்பாடுகளுக்குக் கூட சட்டம் இயற்ற வேண்டியிருக்கிறது.
காலமெல்லாம் உழைத்து ஓடித் திரிந்த ஒருவன், நாள் முழுக்க ஒரே இடத்தில் ஒடுங்கி நிற்க வேண்டி வருவது எத்தனை கொடுமை. வயதானோர் டயாபடீஸ், வெரிகோஸ் என்று எத்தனை உபாதைகளைச் சமாளித்துக் கொண்டு இருப்பார்கள். இதில் தாங்கள் நடந்து வரும் போது, செக்யூரிட்டிகள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் கனவான்களும் உண்டு. காலையில் அபார்ட்மெண்ட் வாசிகள் நடைபயிற்சி செல்லும் போது, வளாகத்தில் உள்ள சில செக்யூரிட்டிகள், திரும்பத் திரும்ப எழ அயர்வுப் பட்டுக்கொண்டு, நின்று கொண்டே இருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு வேளை அவர்கள் உட்கார முடிந்தாலும், அந்த ப்ளாஸ்டிக் நாற்காலி அடுத்த பன்னிரெண்டு மணி நேரத்திற்கு அவர்களுக்கு ஒரு சிறை தான். இதை எழுதும் போது, “மேற்கு தொடர்ச்சி மலை” க்ளைமேக்ஸில், கதாநாயகன் ரெங்கசாமி, தனக்கு சொந்தமான நிலத்தை இழந்து, அதில் கட்டப்பட்ட காற்றாலைக்கு செக்யூரிட்டியாகி, உச்சி வெயிலில், ஒரு ப்ளாஸ்டிக் சேரில் உட்கார்ந்திருக்கும் அந்தக் காட்சி நினைவுக்கு வந்து படுத்துகிறது. காலமும் சமூகமும் முதியவர்களை மேலும் வலிக்கு உள்ளாக்க, அவர்களை செக்யூரிட்டியாக்கி ஏடிஎம் வாசலிலும், கார் பார்க்கிங்குகளிலும், அப்பார்ட்மெண்ட் கேட்களிலும் நிற்க வைக்கிறது போலும்.
உங்கள் அலுவலகத்திலோ, வீட்டிற்கு அருகிலோ செக்யூரிட்டிகள் இருந்தால், அடுத்த முறை அவர்களைப் பார்க்கும் போது, “நல்லாருக்கீங்களா” என்று ஒரு வார்த்தை கேளுங்கள். ஒரு ஒற்றைத் தலையசைப்பின் மூலம் அவர்களின் முழு நாளை உங்களால் அர்த்தமாக்கி விட முடியும். தங்களை ஒருவர் கவனிக்கிறார் என்ற உணர்வு அவர்களை ஆற்றுப்படுத்தக் கூடும். யாருக்குத் தெரியும், உங்களிடம் அவர்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளவும் கூடும்.
மிகவும் மன நிறைவான பதிவு மாப்ள ! I just remembered மேற்கு தொடர்ச்சி மலை more and you mentioned it in the next line ! In fact I kept calling everyone sir instead of Anna ( which gives them great pleasure) after having seen you many times da ! Keep writing da !!!
LikeLiked by 1 person