நேர்மை

சில வருடங்களுக்கு முன்பு வரையில், “நேர்மை” என்கிற சொல்லைக் கேட்டவுடன், கமல்ஹாசன் தான் நினைவுக்கு வந்து கொண்டிருந்தார். வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில், கமலுக்கும் சிநேகாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், “எங்க அப்பா ஒரு நேர்மையான..” என்று கமல் சொல்லத் தொடங்கும் போது “போலீஸ் ஆபீசரா” என்பார் சிநேகா. “நேர்மையானனு சொன்னாலே போலீஸ் ஆபீசராத்தான் இருக்கணுமா ? எங்க அப்பா ஒரு நேர்மையான ஸ்கூல் வாத்தியாருங்க” என்பார் கமல்.

உண்மையில் அது வரையில் நேர்மை என்ற சொல்லை, போலீஸோடு மட்டும் தான் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தது என் சினிமா சார்ந்த பொதுப்புத்தி. வேறு எந்தத் தொழிலோடும் அதனை பொருத்திப் பார்த்ததில்லை. ஒரு வேளை, அதிகமாகத் தவறு செய்யும் வாய்ப்பும், அதிகார அத்துமீறலுக்கான வாய்ப்பும் காவல்துறையில் இருப்பதால், அப்படித் தோன்றியதா என்று தெரியவில்லை. வாசிப்பும், வெவ்வேறு துறை சார்ந்தவர்களோடு பழக்கமும் ஏற்பட்ட பிற்பாடு திருத்திக் கொண்டேன். சமீப காலத்தில், இந்த நேர்மை சார்ந்த புரிதல் மேம்பட வேறு இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று தமிழ் எழுத்தாளர் இமையம், மற்றொன்று மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா.

எழுத்தாளர் இமையத்தை முதன்முதலில் பார்த்தது, என் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு புரொவிசன் ஸ்டோரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் தான். “இலக்கியம் என்பதே பிரச்சாரம்தான்” என்கிற வாசகத்தோடு அவர் சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது அந்த மாத “விகடன் தடம்” இதழுக்கான விளம்பரம். சில வருடங்கள் கழித்து Madras School of Economics-ல் நடந்த அவரது புத்தகம் தொடர்பான ஒரு விவாதத்திற்கு சென்றிருந்தேன். அவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, “If there is a God” என்ற பெயரில்  ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டிருந்தது. ஜஸ்டிஸ் பிரபா ஶ்ரீதேவன் அவர்கள் அதனை மொழிபெயர்த்திருந்தார். 

விவாதத்தில், நேர்மை குறித்து பேசும் போது “ தமிழ் நாட்டுல எல்லாரும் ஒருத்தர நேர்மையான ஐ.ஏ.எஸ் ஆபீசர்னு சொல்றாங்க. மணியடிச்சா எல்லாம் கிடைக்கும் உனக்கு, இதுல நீ நேர்மையா இருக்கிறது என்ன பெருசா ? நீ என்ன விரும்புனாலும் உன் வாசப்படியில உனக்கு கிடைச்சிரும், நீ எதுக்கு லஞ்சம் வாங்கணும் ? எதுவுமே இல்லாம, நூத்தம்பது ரூவா, ஐநூறு ரூவா சம்பளம் வாங்குறவன் லஞ்சம் வாங்கலன்னா, அத வேணா நான் நேர்மைனு சொல்லுவேன் நானு. ” என்று பதில் அளித்தார். அரங்கம் அமைதியானது. அப்படி ஒரு பதிலை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மொத்த அரங்கத்தின் அமைதியையும் அநாயசமாக கடந்து சென்றார் இமையம்.

போதுமான வசதியோடும், செல்வாக்கோடும் இருக்கும் உயரதிகாரி ஒருவரின்  நேர்மையோடு, சொற்ப சம்பளத்தில், அதே அலுவலகத்தில், அவருக்குக் கீழே பணிபுரியும் ப்யூன் ஒருவரின் நேர்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இமையம் சொல்வது விளங்கும். சமூகத்திலும் அலுவலகத்திலும் இவ்விருவருக்கும் கிடைக்கும் மரியாதைக்கான வித்தியாசம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவையான எல்லாம் கிடைத்த பிற்பாடு, மேலும் சொகுசுக்கு பேராசைப்படாமல், லஞ்சம் வாங்காமல், நேர்மையாக இருப்பது பெரிய விசயமென்றால், தேவைகள் எல்லாம் நிறைவேறாத நிலையிலும், அதனைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகக் கூட லஞ்சம் வாங்காமல், நேர்மையாக இருப்பது அதனினும் பெரிது. பொதுவெளியில் பிரபலமாக இருப்பவர்களின் நேர்மையை சிலாகிக்கும் அளவிற்கு, நம் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கும் நிறைய எளியவர்களின் நேர்மைக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இமையம், உயர் அதிகாரத்தில் இருப்பவர்களின் நேர்மையைக் குறைத்து மதிப்பிடவில்லை. அடிமட்டத்தில் இருப்பவர்களின் நேர்மையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். உயரதிகாரிகளின் நேர்மையை பாராட்டும் போது, அடிமட்ட ஊழியர்களின் நேர்மையின் முக்கியத்துவத்தையும், அதன் பின்னர் இருக்கும் வலியையும் நம்மை அறியாமல் கூட மறைத்துவிடக் கூடாது என்ற புரிதல் ஏற்பட்டது.

நான்கைந்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். இமையத்தின் புகைப்படத்தைப் பார்த்த அதே கடையில் தான் பால் சக்காரியாவின் புகைப்படத்தையும் பார்த்தேன். “இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை” என்ற வாசகத்தோடு பால் சக்காரியா கைகளை உயர்த்தி, இன்னொரு விகடன் தடம் இதழுக்கான போஸ்டரில் பேசிக்கொண்டிருந்தார். அதற்கு முன்னர் பால் சக்காரியா தொடர்பான எந்த அறிமுகமும் இல்லை. ஆனால், விளம்பரத்தில் இருந்த ஒரே வாசகத்தில் – இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர் அங்கீகரித்ததும், அதனை சிலாகித்திருந்ததும், அவரை மனதுக்கு நெருக்கம் ஆக்கியது. மழை, கொரோனா, ஆட்சி மாற்றம் என்று அனைத்தையும் கடந்து, பால் சக்காரியாவின் போஸ்டர் இன்னும் அந்தக் கடையின் நீல நிற உள்புற சுவரில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதனை மறுபடியும் பார்த்த பிற்பாடு பால் சக்காரியாவின் நேர்காணல்களைத் தேட ஆரம்பித்தேன். 

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், பெங்களூர் இலக்கியத் திருவிழாவில் அவர் பேசியிருந்த காணொளியைப் பார்க்க நேர்ந்தது. “Writer’s role in speaking out” என்ற தலைப்பில் பேசியிருந்தார். “சமகால அரசியல் சூழல் குறித்த உண்மைகளையும், மக்களின் சிந்தனையை அதிகார வர்க்கம் எவ்வாறு ஒடுக்க நினைக்கிறது என்பதையும் குறித்து ஒரு எழுத்தாளன் எழுத வேண்டும். அப்படி எழுதவில்லை என்றால், அவன் தன்னை வாசிப்பவர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று பொருள்” என்றார்.

தொடர்ந்து மதத்தைப் பற்றி பேசும் பொழுது, “மனிதன் பிறந்தவுடன் மதம் அவனுக்குள் புகுத்தப்படுகிறது. மதம் ஒரு போதும், ஆன்மீகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதில்லை. அதன் பின்னால் ஒரு எப்போதும் ஒரு அஜெண்டா இருக்கிறது. மதத்தின் தேடல் ஆன்மீகத்தைத் தாண்டி, பணத்தையும், அரசியல் அதிகாரத்தையும் நோக்கியே இருக்கிறது. எனவே ஒரு எழுத்தாளன் மதம் சாராதவனாக இருத்தல் அவசியமாகிறது” என்றார். 

எழுத்தாளனின் நேர்மை குறித்து பேசத் தொடங்கியவர், மீடியாவின் நேர்மை குறித்தும் பேசியிருப்பார்.”இப்போதிருக்கும் சூழ்நிலையில் (2017), நான் நரேந்திர மோதியை விட, அவரை ஆதரித்துப் பேசுபவர்களைக் கண்டுதான் அச்சப்படுகிறேன், குறிப்பாக மீடியா” என்று கூறியிருந்தார். தொடர்ந்து, “ஊடகங்களுக்கு துளி கூட பொறுப்பு இல்லை. அரசியல்வாதிகளாவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுக் கேட்டு நம்மிடம் வர வேண்டும். Poor politicians. But the media is completely unaccountable. They have made us as orphans” என்றிருப்பார். முதல் முறையாக ஒருவர், அரசியல்வாதிகளை poor politicians என்று சொல்லிக் கேட்கிறேன்.

அவருடைய பெங்களூர் இலக்கியத் திருவிழா சொற்பொழிவில் ஒரே ஒரு கருத்துடன் மட்டும் நான் சற்றே முரண்பட விரும்புகிறேன். “இந்தியாவில், சனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்குமான கடைசி புகலிடமாக கேரளா இருக்கும்” என்றார். கேரளா மட்டும் அல்ல, தமிழ்நாடும் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். காரணம், மலையாளிகளைப் போல, தமிழர்களும் தங்கள் மேல் திணிக்கப்படும் எதனையும் ஏற்றுக் கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். நிச்சயமாகக் கேள்வி கேட்பார்கள், அதனால் தான் கேள்விகளையும், கேள்வி கேட்பவர்களையும் வெறுக்கும் எதேச்சதிகாரத்துக்கு எதிரான முதல் குரல் எப்போதும் தெற்கில் இருந்து தொடங்குகிறது.

உண்மையில் சக்காரியா சொல்வதைப் போல, சுயநலத்துக்காக இந்தியாவை ஒரு மதத்திற்குள்ளும், ஒரு மொழிக்குள்ளும் சுருக்க நினைப்பவர்களைப் பார்த்து அச்சப்படுவதைத் தாண்டி பரிதாபப்பட வேண்டிய தேவையுமிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்பதற்காக வேண்டுமானால், நாம் அவர்களைக் கண்டு அச்சப்படலாம். ஆனால், சக மனிதனை சமமாக மதிக்க இயலாத மனநிலை உடையவர்களிடம் பரிதாபத்தைத் தவிர வேறு என்ன உணர்வை நாம் வெளிக்காட்ட முடியும். 

இந்தியாவையும், அதன் முதுகெலும்பான உழைக்கும் வர்க்கத்தையும், நேசிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இரண்டு உரைகள்.

The Writer’s Role in Speaking Out – Paul Zacharia

Imayam speech | If there is a God – Book Launch | இமையம்

Leave a comment