பச்சைப் புத்தகம்

அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் க்ரீன் என்பவர் 1936ல் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கிறார். இந்தப் புத்தகம் புனைவோ, கட்டுரைத் தொகுப்போ அல்ல. ஒரு பயண வழிகாட்டி. இது கருப்பின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பதிப்பிடப்பட்டது. காரணம், அந்தப் புத்தகத்தில் இருந்தது கருப்பின மக்கள் பாதுகாப்போடு தங்கக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல் மட்டுமே. தங்கள் பயணங்களின் போது, ஆபத்தான இடங்களைத் தவிர்த்து, தங்களை அனுமதிக்கக் கூடிய விடுதிகள், உணவகங்களின் பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருந்தது. 

அனுமதிக்கப்படாத இடங்களில், கருப்பின மக்கள் நுழைந்தால், அவர்கள் அவமதிக்கப்பட்டார்கள். சில நேரங்களில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார்கள். முழு கூட்டாட்சி முறை என்ற காரணத்தால், சில மாநிலங்களில் கருப்பின மக்கள் இரவினில் வெளியே வரக்கூடாது போன்ற சட்டங்களும் இருந்தன. வெளியூர் வெளி மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் கருப்பின மக்களை, அங்கே இருந்த பாதகமான இடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களைத் தேட, இந்தப் புத்தகம் உதவி செய்தது. இந்தப் புத்தகத்தின் அட்டை தனித்துவமான பச்சை நிறத்தில் இருந்ததால் “க்ரீன் புக்” என்று பெயர் பெற்றது.

இந்தப் புத்தகம், ஒரு வகையில் அங்கே நிலவி வந்த பாகுபாட்டிற்கு எதிரான கலகக் குரல் என்று சொல்லலாம். It was a resistance in some way. அரசாங்கம் செய்யத் தவறிய, அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையை, இந்தப் புத்தகம் செய்தது. அதனை அரசாங்கமும் செய்ய வேண்டிய நாள் வந்தது.  1960களில் நிற மற்றும் இன ரீதியான பாகுபாட்டின் பால் மக்களுக்கு இருந்த பொதுப்புத்தி சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. சமூக சூழ்நிலை சற்று முன்னேறி, கருப்பின மக்கள் பயமின்றி தங்குதவற்கான நிறைய இடங்கள் உருவாயின. குறிப்பாக, நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிராக1964ல் இயற்றப்பட்ட சிவில் ரைட்ஸ் சட்டம் இந்தப் புத்தகத்தின் தேவையை வெகுவாகக் குறைத்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்.எஃப். கென்னடி ஜூன் 1963ல் சிவில் ரைட்ஸ் சட்டத்தை முன்மொழிந்திருந்தாலும், 1964 ஜூன் மாதம் லிண்டன் ஜான்சனின் ஆட்சிக்காலத்தில் தான் அது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரணம், நவம்பர் 1963ல் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவ்வாறாக, 1936ல் வெளியாகத் தொடங்கிய இந்தப் புத்தகம், படிப்படியாக 1967-ல் புழக்கத்தில் இருந்து நின்றது.

முன்னேறிய நாடு என்று சொல்லப்படுகிற அமெரிக்காவில் வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருப்பின மக்களுக்குத் தனி பயண வழிகாட்டி போடும் அளவிற்கு நிறவெறி இருந்ததா என்று சிலர் ஆச்சரியப்படலாம். ஆனால், இன்று வரையில் நம் நாட்டிலும் இதே பாகுபாடு சாதி, மதம் என்று வெவ்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிறது என்பது தான் நிதர்சனம். உதாரணத்திற்கு, வாடகைக்கு வீடு தேடும் போது நடக்கும் கூத்துகள். மாமிசம் உண்பவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும், எவ்வித சமரசங்களும் இல்லாமல், ஒரு வீடு வாடகைக்கு அமைய அவர்கள் எத்தனை வீடுகள் ஏறி இறங்க வேண்டியிருக்கிறது என்ற விகிதாச்சாரக் கணக்கெடுத்தால், இங்குள்ள சூழ்நிலை விளங்கும். தமிழ்நாட்டில் வெளிப்படையாக சாதியைக் கேட்க முடியாதென்பதால், வீடு வாடகைக்குக் கேட்டு வருவோரிடம், சாதிக்கான இடம் வெஜ்-ஆ நான்-வெஜ்-ஆ என்று உணவுப் பழக்கத்தை வைத்து நிரப்பப் பட்டிருக்கிறது. அப்படி எல்லாம் இல்லையே என்று சொல்பவர்கள், ஒன்று மாமிசம் உண்ணாதவர்களாக இருப்பார்கள் இல்லை இசுலாமியர் அல்லாதவர்களாக இருப்பார்கள். 

தவிர, ஒரு பிரச்சனை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் தானே, அதற்குத் தீர்வு என்று ஒன்றைத் தேட வேண்டும். அதனால், அப்படி ஒரு பிரச்சனையே இங்கு இல்லை என்று வாதாடுவது தான் இப்போதைய ஸ்டைல். “ஆமாப்பா, இங்க இப்டி ஒரு பிரச்சனை இருக்கு” என்ற ஒப்புதலுக்கு வருவதற்கே தாவு தீர்ந்து விடும். நம் ஊரிலும் ஒடுக்கப்படுபவர்களுக்கு எங்கே எளிதாக வீடு வாடகைக்குக் கிடைக்கும் என்று ஒரு பச்சைப் புத்தகம் போடலாம் தான். ஆனால் புத்தகம் போடும் அளவிற்கு கூட அத்தனை பகுதிகள் இருக்குமா என்பது சந்தேகமே.

ஆக, சட்டம் இயற்றினாலும் மனிதனுக்குள் இருக்கும் வெறுப்பும், வன்மமும் வெவ்வேறு வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கும். குழுவாக இயங்கும் பொழுது அதன் வேகம் பன்மடங்கு அதிகமாக இருக்கும். மேலும், அதனை கலாச்சாரம், பாரம்பரியம் என்று நியாயப்படுத்துதலும் நடக்கும். வைரஸிடம் இருந்து தப்பிக்க எவர்சில்வர் தட்டுகளையும், கரண்டிகளையும் பயன்படுத்தும் காலத்தில், வெறுப்பைப் பரப்ப நூதன வழிகளைக் கண்டுபிடித்தல் அவ்வளவு கடினமான காரியமில்லை என்றே தோன்றுகிறது. திருடனாய் உணர்ந்து திருட்டை நிறுத்தினால் ஒழிய, திருட்டு ஒழியப் போவதில்லை. ஆள் மாறலாம், செயல் மாறப்போவதில்லை. 

நிற்க, சமூகத்தில் தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்கு  கலையின் வழியாக தீர்வு காணலாம். குறைந்த பட்சம் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை திரைக்கதையில் நிகழ்த்திக் காட்டலாம். அப்படி ஒரு ஆற்றுப்படுத்தும் சக்தி கலைக்கும், எழுத்துக்கும் உள்ளது. அது போன்ற ஒரு படைப்பை பீட்டர் ஃபெரல்லி, விகோ மார்டென்சன் மற்றும் மாகர்ஷலா அலி ஆகிய கலைஞர்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். மேற்சொன்ன பச்சைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, டான் ஷிர்லி என்ற இசையமைப்பாளர், டோனி லிப் என்ற உதவியாளர் கதாப்பாத்திரங்களை வைத்து திரையில் “க்ரீன் புக்” என்று ஒரு மேஜிக் செய்திருக்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

மனிதனின் சிந்தனை மாறுவதற்கும், மேம்படுவதற்கும், சக மனிதன் மேல், சமூகத்தின் மேல் அவனுக்கு பரிவு இருப்பது மிக அவசியமானதாகிறது. தன் நாட்டில், தன் ஊரில், வாழும் சக மனிதனின் சிரமங்களை புரிந்துணர்ந்து பரிவு கொள்ள, அதனை தானும் அனுபவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவன் படும் சிரமங்களைப் அருகில் இருந்து பார்த்தாலே போதும். கருப்பின மக்களின் மேல் வெறுப்புணர்வோடும், மனிதர்களின் பிறப்பு சார்ந்த குணங்கள் தொடர்பான குறுகிய சிந்தனையோடும் இருக்கும் இத்தாலிய அமெரிக்கரான டோனிக்கும், புகழ்பெற்ற இசைக்கலைஞராக இருந்தும், கருப்பினத்தவராக இருப்பதால், சமூகத்தில் சம அங்கீகாரம் நிராகரிக்கப்படும் டான் ஷிர்லிக்கும் இடையேயான உரையாடல்களும், பரிமாற்றங்களுமே இந்தத் திரைப்படம்.

சற்றே மெதுவான திரைக்கதையாய் இருந்தாலும் நல்ல வசனங்களும், உறுத்தாத பின்னணி இசையும் இந்தப் படத்தை ரசிக்க வைக்கின்றன. இரு மனிதர்களின் சிந்தனைகளுக்கிடையேயான போராட்டத்தை வெகு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கருப்பின மக்கள் மீது பெரிய அபிப்ராயம் இல்லாத டோனி ஒரு கட்டத்தில், உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வியலில் இருந்து டான் ஷிர்லி எத்தனை தூரம் விலகியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட “ My world is way more blacker than yours” என்று சொல்லும் போது, அதற்கு டான் ஷிர்லி சொல்லும் பதில், கிளாஸிக் ! தனது திறமையால் பேர், பணம், புகழ் என்று அனைத்தையும் வென்றெடுத்த பின்னரும், பிறப்பினால், நிறத்தினால் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டால், ஒருவன் என்ன உணர்வான் என்பதை அதை விடத் தெளிவாக விளக்க இயலாது. பானைக்கு இந்த ஒரு சோறு பதம் !

மெல்லிய புன்னகையோடு கடந்து செல்லவும், ஆழ்ந்து சிந்தக்கவும் நிறைய காட்சிகள் உண்டு. சோனி லைவில் பார்க்கலாம். புத்தகத்தின் பெயர் “The Negro Motorist Green Book”.

Wikipedia

Leave a comment