நிமிரல் என்ற சொல்லை சங்கப் பாடல்களில் சில இடங்களில் காண முடிகிறது. பெரும்பாலும் இந்தச் சொல் கொக்கு உகிர் நிமிரல் என்ற சொற்றொடரில் வருவதாகத் தான் அமைந்திருக்கிறது.
புறநானூற்றில் கவிஞர் திருத்தாமனார், சேரமான வஞ்சனின் சிறப்புகளைக் குறிப்பிடும் பொழுது, அவன் தனக்கு கள்ளும், மான்கறியும் கொடுத்ததாகச் சொல்கிறார். அப்போது கொக்கின் நகம் போல இருக்கும் சோற்றையும் அளித்ததாகக் கூறுகிறார்.
நிழல்காண் தேறல் நிறைய வாக்கி,
யான்உண அருளல் அன்றியும், தான்உண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர
புறநானூறு, 398
இதில் உகிர் எனும் சொல்லுக்கு நகம் என்று பொருள். நிமிரல் என்றால் விரைப்பான பருக்கைகள் உடைய சோறு என்று பொருள், கிட்டத்தட்ட இப்போதிருக்கும் ஃப்ரைடு ரைஸ் போல. கொக்கு உகிர் நிமிரல் என்ற சொற்றொடர், கொக்கின் நகம் போல இருக்கும் சோறு என்று பொருளாகிறது.
மருங்கூர்ப்பட்டினம் எனும் ஊரில் தலைவியைக் காண இயலாமல் திரும்பும் தலைவனிடம், தோழி ஒருத்தி சொல்லும் கூற்றை நற்றிணைப் பாடல் ஒன்று விளக்குகிறது. அதில் மருங்கூர்ப்பட்டினத்தின் சிறப்பை தோழி இவ்வாறு விளக்குகிறாள் – “பொன் வளையல் அணிந்த மகளிர், தாங்கள் சமைத்த கொக்கின் நகம் போன்ற சோற்றை கடைகளின் முற்றத்தில் பலியாக வைக்கிறார்கள். அந்தச் சோற்றை உண்ட காக்கை ஒன்று, மாலை வேளையில் கடைகளில் குவித்திருக்கும் காய்ந்த இறாலினை எடுத்துக் கொண்டு, கடலில் நங்கூரமிட்டு அசைந்து கொண்டிருக்கும் கப்பலின் பாய்மரக் கூம்பில் சென்று அமர்கிறது“
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள்
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே
நற்றிணை, 258
இங்கும் அரிசிச் சோறு கொக்கு உகிர் நிமிரல் என்றே குறிப்பிடப்படுகிறது. மிகச் சரியாக பொருந்தி வந்தால் அன்றி, இரு வேறு புலவர்கள் ஒரு பொருளை ஒரே உவமையோடு குறிப்பிட்டிருக்கும் சாத்தியக் கூறுகள் குறைவு. இதே நற்றிணைப் பாடலில் வரும் கப்பல் குறித்து தூங்கல் வங்கம் கட்டுரையில் எழுதியுள்ளேன்.
உகிர் என்ற சொல் தனித்து வரும் சில பாடல்களைக் காண்போம். பட்டினப்பாலையில், காவிரிப்பூம்பட்டினத்து பண்டகசாலை முற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அந்த முற்றத்தில் கூரிய நகங்களை உடைய ஆண் நாய்களும், வலைந்த கால்களையுடைய ஆட்டுக் கிடாய்களும் தாவிக் குதிப்பதாக விளக்கியிருக்கிறார் உருத்திரங்கண்ணனார். இங்கே ஞமலி எனும் சொல் ஆண் நாயைக் குறிக்கும்.
கூர் உகிர் ஞமலி கொடுந்தாள் ஏற்றை
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்
பட்டினப்பாலை, 140
அதே பட்டினப்பாலையில் திருமாவளவனின் மன வலிமையைச் சிறப்பித்துக் கூற அவனை கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்ட கூரிய நகம் கொண்ட வரிப்புலியுடன் ஒப்பிடுவதற்காக,
கூர் உகிர்க் கொடுவரிக்
குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்கு
பட்டினப்பாலை 220
என்று குறிப்பிடுகிறார் உருத்திரங்கண்ணனார்.
உகிர் என்ற சொல் இது போல பல இடங்களில் நகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோற்றை நாயின் நகத்தோடோ, அல்லது புலியின் நகத்தோடோ ஒப்பிட்டு இருக்கலாம். ஆனால் மேற்சொன்ன இரண்டு இடங்களிலும் கொக்கின் நகத்தொடு ஒப்பிட்டு இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த சோறு கொக்கின் நகம் போல கருப்பு நிறத்தில் இருந்திருக்கலாம் என்று கருத்தில் கொள்ளலாம். வெள்ளை நிற அரிசி என்றால் வேறு உவமைகளை பயன்படுத்தியிருப்பார்கள்.
பாட்ஷா படத்தில் வரும் ஸ்டைலு ஸ்டைலு தான் தான் பாடலில், “பச்சரிசிப் பல்லழகா பால் சிரிப்பில் கொல்லாதே” என்று ரஜினியின் பற்களை பச்சரிசியோடு ஒப்பிட்டிருப்பார் கவிப்பேரரசு வரைமுத்து. சங்க காலத்தில் கொக்கின் நகத்தோடு ஒப்பிடப்பட்ட அரிசி, ஆயிரம் ஆண்டுகள் கழித்து ரஜினியின் பல்லுக்கு உவமையாகியிருக்கிறது.