மெலிதல்

1999ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமான் மற்றும் விந்தியா நடிப்பில் வெளியான படம் சங்கமம். வடிவேலு, மணிவண்ணன் என்று ஏகப்பட்ட நல்ல கலைஞர்கள் இருந்தும் படம் சரியாகப் போகவில்லை. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாலச்சந்தரின் சீடர். பாட்ஷா, அண்ணாமலை, சத்யா என்று cult classicக்குகளை எடுத்த இவர் எப்படி ஆளவந்தானையும், பாபா-வையும், சங்கமத்தையும் எடுத்தார் என்பது இன்று வரை புரியாத புதிர். படம் சரியாகப் போகவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமான் இசை, வைரமுத்து வரிகள் என பாடல்கள் அனைத்தும் அட்டகாசம்.

ஒரு வெள்ளை நிற பின்புலத்தில், நடிகர் ரகுமான் நடனமாடுவது போல கேசட்டின் முன்புறத்தை வடிவமைத்திருந்தார்கள். அனைத்துப் பாடல்களின் வரிகளையும் அச்சிட்டு கேசட்டோடு கொடுத்தார்கள். “வராக நதிக்கரை ஓரம்” மற்றும் “மழைத்துளி” பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள். இதே படத்தில் நித்யஶ்ரீ மகாதேவன் பாடிய “செளக்கியமா..கண்ணே செளக்கியமா” என்ற பாடல் உண்டு. தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் “நலந்தானா” பாடலைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போலும். காதலனைப் பிரிந்து வாடும் காதலி, தன் சோகத்தைச் சொல்வதாக வரும் அந்தப் பாடலில், வைரமுத்து இவ்வாறு வரிகளை அமைத்திருப்பார்,

அன்பு நாதனே அணிந்த மோதிரம்

வளையலாகவே துரும்பென இளைத்தேன்

அந்த மோதிரம் ஒட்டியாணமாய் 

ஆகும் முன்னரே அன்பே அழைத்தேன்

காதலனைப் பிரிந்த காதலி, தன் உடல் ஏக்கத்தில் இளைப்பதாகக் கூறுகிறாள். இந்த அழகியல் சங்க இலக்கியம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூங்கல் வங்கம் குறித்த கட்டுரையில் பார்த்த நற்றிணை பாடலில் இருக்கும் மற்றுமொரு அழகியல் இதுதான். தலைவனைக் காண தலைவியின் தூது ஒருத்தி வருகிறாள். தலைவியை அவளது தாய் வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பதாக தூது வந்தவள் சேதி சொல்வது தான் பாடலின் கரு. தலைவியின் அழகை, அவள் வசிக்கும் ஊரான மருங்கூர்ப்பட்டினத்தின் அழகோடு ஒப்பிட்டு, அதன் பின்னர் தலைவியின் நிலையை விளக்குவதாக பாடல் அமைந்திருக்கும். மருங்கூர்ப்பட்டினத்தின் அழகை விவரிக்கும் போது தான், அங்காடியில் நிழலில் இறால் குவித்திருப்பதையும், அதனை காக்கை ஒன்று எடுத்துச் சென்று கப்பலின் பாய்மரக் கூம்பில் அமர்வதையும் பாடலாசிரியர் விளக்கியிருப்பார். 

தலைவி தன் கையில் இறுக்கமாக அணிந்திருந்த வளையல்கள் கழன்று ஒடுவதைப் போல நெகிழ்ந்ததை வைத்து, தலைவி காதல் பிரிவில் வாடுவதை உணர்ந்த தாய், அவளைப் பூட்டி வைத்துக் காவல் இருப்பதாகத் தூது வந்தவள் தலைவனிடம்  சொல்வாள்.

மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் 

நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே

நற்றிணை, 258

பிரிவுக்காலத்தில் உடல் மெலிதலை திருக்குறளிலும் காணலாம். தலைவன் பிரிந்து சென்றதால், தலைவியின் கண்களில் ஒளியில்லை. அது மட்டுமல்ல, தலைவன் சென்ற நாட்களை சுவற்றில் குறித்து, அந்த கோடுகளைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்ததால் தலைவியின் விரல்களும் தேய்ந்து விட்டதாக பின்வரும் திருக்குறள் குறிப்பிடுகிறது.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

குறள், 1261

“தில்” திரைப்படத்தில் ஒரு நகைக்கடை சீன் உண்டு. மோதிரத்தை எடுத்து மாட்டிப் பார்த்த லைலா, தன் விரலில் இருந்து அதைக் கழட்ட முடியாமல் தவிப்பார். எத்தனை பேர் முயன்றும் வராத அந்த மோதிரம், காதலன் விக்ரம், லைலாவின் விரலைத் தொட்டதும் நெகிழ்ந்து வந்து விடும். நிஜ வாழ்வில் இந்த மெலிதல், உருகுதல் சாத்தியமா என்று தெரியவில்லை. காதல் பிரிவால் உடல் மெலிவதாகச் சொல்லும் நம் கவிஞர்களின் கற்பனை நயத்தை புறந்தள்ளி விட்டு, இயக்குனர் தரணி இதே அழகியலை வேறு ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். It still looked convincing though 🙂 

Leave a comment