இப்போது வரும் பாடல்களில், பத்தில் ஒன்பதையாவது அனிருத் பாடிவிடுகிறார். Spotify, FM என்று எதைத் தட்டினாலும் அனிருத் மயம்தான். அண்மையில் வெளியான மாவீரன் படத்தில், அவர் பாடிய “சீனா சீனா” என்ற ஒரு பாடல் நன்றாக மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது. குறிப்பாக அதில் வரும்,
“அன்னாண்ட அன்னாண்ட வங்கக் கரை
இன்னாண்ட இன்னாண்ட கோல்டு பேலஸு” என்ற வரிகள். எழுதியவர் கபிலன்.
இந்த வரியின் மொத்தத் துள்ளலும் வங்கக்கரை எனும் சொல்லில் தான் அடங்கியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் வழக்கில் இருந்து வரும் சொல்.
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள்
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே
நற்றிணை 258
என்பன நற்றிணை பாடல் ஒன்றில் வரும் வரிகள். பெரிய கடைகளின் நிழலில் குவிக்கப்பட்டிருக்கும் இறால்களை எடுத்த காக்கை ஒன்று, கப்பலின் பாய்மரக் கூம்பின் மீது சென்று உட்காருவதாக – மருங்கூர்ப்பட்டினம் என்ற ஊரைப் பற்றி விவரிக்கும் போது, இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். (இதே பாடலில் மற்றுமொரு அழகியலும் உண்டு. வேறொரு கட்டுரையில் விளக்குகிறேன்)
இந்தப் பாடலில் வங்கம் எனும் சொல் கப்பலைக் குறிக்கின்றது. தூங்கல் வங்கம் என்பது நகராமல் இருக்கும் கப்பல் என்பதை விளக்கப் பயன்படுகிறது. சாதாரணமாகக் கப்பல் என்று சொல்லி விட்டால், அது கடலில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் கப்பல் என்று பொருளாகி விடும். அது துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கும் கப்பல் ஆதலால் – அருகே இருந்த கடையில் உள்ள இறாவினை, காக்கை எடுத்த காட்சியையும், அது சென்று கப்பலின் பாய்மரத்தில் அமர்ந்த காட்சியையும் ஒரு சேரப் பார்த்ததாக ஆசிரியரால் வர்ணிக்க முடிகிறது. கடையில் எடுத்த இறாவினை, காக்கை கப்பலுக்கு கொண்டு சென்று அமர்கிறது என்பதால், இது ஒரு கடற்கரை நகரம் என்று அறியலாம். தவிர, பட்டினம் என்ற சொல், பழங்காலத்தில் இருந்து கடற்கடையோர நகரங்களைக் குறிப்பிடப் பயன்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு – காவிரிப்பூம்பட்டினம். நாகப்பட்டினம், காயல்பட்டினம், தேவிப்பட்டினம் என்று இன்று வரையில் சில பெயர்கள் வழக்கில் உள்ளன. காலப்போக்கில் பட்டினம் என்றால் நகரம் என்ற பொருள் ஆகி விட்டது.
வங்கம் என்ற சொல், வேறு சில பாடல்களிலும் கப்பலைக் குறிக்கப் பயன்படுகிறது.உலகமே கிளர்ந்து எழுந்து வருவதைப் போல தோற்றம் கொண்ட பெரிய கப்பல், கடல் நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் என்று சொல்கிறது அகநானூற்றுப் பாடல் ஒன்று.
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ
அகம், 255
காற்றினால் உந்தப்பட்டு வந்த கப்பலில் இருந்து பல்வேறு பொருட்கள் பட்டினத்தில் இறங்கின என்பதை பின்வரும் மதுரைக்காஞ்சி பாடல் மூலம் அறியலாம். இதிலிருந்து வங்கம் என்பது பாய்மரத்தினால் கடலில் செலுத்தப்பட்ட கலம் என்பதை அறியலாம்.
வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
மதுரைக்காஞ்சி, 536
கங்கை ஆற்றில் வங்கத்தில் பயணக்கும் வழக்கம் இருந்ததை,
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ
நற்றிணை, 189
எனும் வேறு ஒரு நற்றிணை பாடல் வரியின் மூலம் அறியலாம்.
இந்தப் பாடல்கள் இயற்றப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து, இன்றும் தமிழ் நாட்டின் கிழக்கே உள்ள கடல், வங்கக்கடல் என்றுதான் அழைக்கப்படுகிறது. மக்கள், வங்கத்தின் (கப்பலின்) மூலம் பயணித்த கடல் என்பதால், இது வங்கக்கடல் என்ற அழைக்கப்பட்டிருக்கலாம். வங்க நாட்டுக்கு (இன்றைய மேற்கு வங்காளம், பங்களாதேஷ், திரிபுரா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி) இந்தக் கடலின் மூலம் சென்றதாலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம். ஆனால், அன்று தமிழர்கள் வங்க நாட்டுக்கு மட்டும் செல்லவில்லை, ஜாவா, சுமத்திரா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் இதே கடல் வழியாக வணிகத்தின் பொருட்டு சென்றிருக்கிறார்கள். எனவே, கடல் வழியாகச் சென்ற நாட்டின் அடிப்படையில் வங்கக்கடல் என்று பெயர் வந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. முதல் காரணம் தான் சற்று லாஜிக்கலாக இருக்கிறது. தவிர, தமிழ்க் கல்வெட்டுகளில் வங்கநாட்டுப் பகுதியை வங்காளம் என்றே குறிப்பிடுகிறார்கள். பங்லா (Bangla) என்ற மொழி தான், Bengal (பெங்கால்) என்ற பெயருக்கு வேர்ச்சொல்லாக இருந்திருக்கிறது. அது வங்காளமாக மாறியிருக்கலாம்.
பி.கு:
வங்காளத்தின் தெற்கேயுள்ள கடல் பகுதிக்கு பண்டைய காலத்தில் மகோடதி என்ற பெயர் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆங்கிலேயர் வந்த பிற்பாடுதான் அந்தக் கடலுக்கு “Bay of Bengal” என்ற பெயர் சூட்டப்படுகிறது. அதனைத் தமிழில் வங்காள விரிகுடா என்கிறோம். கடல் நிலப்பரப்புக்குள் புகுந்து, அதன் மூன்று பக்கங்களிலும் நிலத்தினால் சூழப்பட்டிருந்தால், அதற்கு Gulf அல்லது Bay என்று பெயர். நிலம் சூழாத கடல் பக்கம் ஒடுக்கமாக இருந்தால், அதற்கு Gulf என்று பெயர். விரிந்து இருந்தால் Bay என்று பெயர். பொதுவாக Gulfகள் Bayகளைவிட பெரியவை என்பார்கள். ஆனால் உலகின் மிகப்பெரிய Gulf-ஆன Gulf of Mexico, உலகின் மிகப்பெரிய Bayவான Bay of Bengalஐ விட அளவில் சிறியது. தமிழில் இத்தனை குழப்பங்கள் இல்லை. Gulfக்கு வளைகுடா என்று பெயர், Bayக்கு விரிகுடா என்று பெயர். Bay of Bengal, வங்காள நிலப்பரப்பில் இருந்து பரந்து விரிவதால் வங்காள விரிகுடா. ஆரம்ப காலங்களில் வெள்ளையர்கள் வங்காளத்தில் இருந்ததாலும், அந்த நிலப்பரப்பில் இருந்து கடல் விரிந்ததாலும், Bay of Bengal என்று பெயரிட்டு இருக்கலாம். கூகுள் மேப்பில் பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும்.
2 thoughts on “தூங்கல் வங்கம்”