சோவியத் யூனியன் உருவாகக் காரணமாய் இருந்த ரஷ்யப் புரட்சிக்கு (1917) முன்னர் அந்நிலப்பரப்பு ஜார்(tsar) மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மன்னர்களின் பட்டப்பெயரான tsar என்ற சொல் caesar என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து மருவி பயன்பாட்டுக்கு வந்தது. ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போது, நாம் caesar-ஐ சீசர் என்றாலும், லத்தீன் மொழியில் அதன் உச்சரிப்பு கெய்சர் (kaesar) தான். இந்த கெய்சர் எனும் சொல் பண்டைய ரோம் பேரரசை ஆண்ட பேரரசன் ஜூலியஸ் கெய்சர் (Julius Caesar) பெயரில் இருந்து பெறப்பட்டது.
உண்மையில் ஜூலியஸ் சீசரின் முழுப் பெயர் கயூஸ் ஜூலியஸ் சீசர் (Gaius Julius Caeasar) என்பதாகும். மூன்று சொற்கள் கொண்ட பெயர். இதில், ஜூலியஸ் என்பது இனத்தின் பெயர். சீசர் என்பது குடும்பப் பெயர். கயூஸ் என்பது தான் அவரது பெயர். கயூஸ் என்றால் மகிழ்ச்சி என்று பொருள். ஜூலூஸ் (Julus) என்பவரின் வழிவந்தவர்கள் தங்களை ஜூலியஸ் என்று அழைத்துக் கொண்டார்கள். பின்னர் ஜூலூஸை கிரேக்க புராண கடவுளான ஏனியஸின் (Aeneas) மகன் என்று கூறி தங்கள் இனப் பெயரை சிறப்பித்துக் கொண்டார்கள்.
பண்டைய ரோம் சமூகத்தில் இப்படி மூன்று சொற்கள் கொண்ட பெயர்கள் வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. கிளாடியேட்டர் திரைப்படத்தில் ரஸல் க்ரோ கதாநாயகனாக ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர் கூட இந்த வகையில் அமைந்திருக்கும் – மேக்சிமஸ் டெசிமஸ் மெரீடியஸ் (Maximus Decimus Meridius). இதில் மேக்சிமஸ் கதாநாயகனின் பெயர். டெசிமஸ் மற்றும் மெரிடியஸ் முறையே இன மற்றும் குடும்பப் பெயர்கள்.
ஏன் சீசர் (கெய்சர்) என்ற குடும்பப் பெயர் வந்தது என்பதற்கான சரியான காரணங்கள் இல்லை. ஆனால் பண்டைய ரோம் சமூகத்தில், உடலியல் அடையாளங்களை வைத்து பெயர் சூட்டும் முறை வழக்கில் இருந்தது. அதனால் தலை முடி அதிகமாக இருந்ததால் கெய்சர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உண்டு. லத்தீன் மொழியில் முடி, kaesaris என்று அழைக்கப்படும்.
தலை முடி, சமஸ்கிருதத்தில் ‘கேசம்’ என்று இதே ஒலி அமைப்பில் உள்ள சொல்லால் அழைக்கப்படும். அதனையொட்டி முடி அதிகமாக இருந்த ஆண் சிங்கத்திற்கு சமஸ்கிருதத்தில் கேசரி என்று பெயர். தமிழகத்தில் வடமொழி ஊடுருவிய பிற்பாடு தமிழக பேரரசர்கள் சிலரை சிறப்பிக்க ராஜகேசரி (ராஜ ராஜ சோழன்), பரகேசரி (பராந்தக சோழன்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
சீசரின் முப்பாட்டன் செக்ஸ்டஸ் ஜூலியஸ் சீசர் என்பவரின் காலத்தில் இருந்து அவர்களது குடும்பப் பெயரான சீசர் வழக்கில் உள்ளது. சீசர் என்பது இனத்தின் பெயராக இருந்தாலும், அந்தப் பெயரில் ஆட்சி புரிந்த ஒருவரால் அந்தப் பெயர் சிறப்புப் பெற்று, இனப் பெயரே அவரின் பெயராக மாறி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அந்த வம்சாவளியில் எத்தனை சீசர்கள் இருந்தாலும், சீசர் என்ற பெயர் இன்றும் என்றும் கயூஸ் ஜுலியஸ் சீசரை மட்டுமே குறிக்கும்.
மகப்பேறில் இன்று நாம் பயன்படுத்தும் சிசேரியன் என்ற சொல்லும் அங்கிருந்து வந்தது தான். அன்றைய ரோம் சமூகத்தில் மகப்பேறு தருவாயில், தாயைக் காப்பாற்ற முடியாமல் போனால், பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக தாயின் வயிற்றைக் கிழித்து பிள்ளையை வெளியே எடுக்க சட்டம் இருந்தது. மகப்பேறில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு சீசரின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் அது. அதனைத் தொடர்ந்து சிசேரியன் என்ற பெயர் இன்று வரை நிலைத்திருக்கிறது.
இதே போன்று Res Public (The Public) என்ற லத்தீன் மொழிச் சொற்றொடர் இன்று உலகம் முழுக்க Republic (குடியரசு) என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் குறிக்கப் பயன்படுகிறது.
ரோமில் கிமு 100ல் இருந்து கிமு 44 வரை வாழ்ந்த ஒரு மனிதனின் பெயர், ஏறத்தாழ 1500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்த ஒரு வம்சாவளியின் பட்டப் பெயராக மாறுகிறது. அதே சொல் தமிழகத்தில் சோழ மன்னர்களின் பட்டப்பெயருக்கு வேர்ச்சொல்லாக இருந்திருக்கிறது. எத்தனை வலிமையும், தாக்கமும் இருந்தால், ஒரு பெயர் உலக வரலாற்றில் ஊடே இத்தனை ஆண்டுகள் நீடிக்கும் ?
கயூஸ் ஜூலியஸ் சீசர், படைத் தளபதி, செனட்டர் (senator), கான்சுல் (consul) என்று பல பதவிகளை வகித்து இறுதியில் சர்வாதிகாரியாக மாறி, அதன் பின்னர் கொல்லப்பட்டவர். இவரது வலிமையையும், ஆளுமையையும் பறைசாற்றும் கதை ஒன்று உண்டு.
இளமைக்காலத்தில், தனது நண்பர்கள் மற்றும் சேவகர்களோடு மத்தியத் தரைக்கடல் வழியாகச் செல்லும் பொழுது சிலிசியன் கடற்கொள்ளயைர்களால் ஒரு தீவில் சீசர் சிறைப் பிடிக்கப்படுகிறார். கடற்கொள்ளையர்கள் அவரை விடுவிக்க அவரது குடும்பத்திடம் 20 டேலண்ட் வெள்ளிகள் கேட்கிறார்கள்.ஜூலியஸ் சீசர்,
“உங்களுக்கு நான் யார் என்று தெரியவில்லை. 20 டேலண்ட் போதாது. நான் அதைவிட மதிப்பு வாய்ந்தவன். அதனால் 50 டேலண்ட் வெள்ளி கேளுங்கள்” என்கிறார்.
ஒரு டேலண்ட் என்பது கிட்டத்தட்ட 30 கிலோ. கொள்ளையர்களும் 50 டேலண்ட் கேட்கிறார்கள். அத்தனை பெரிய தொகையை தயார் செய்ய அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நேரம் பிடிக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்கள் பணயக்கைதியாக இருக்கிறார் சீசர். அந்த 40 நாட்களும், அவர் ஒரு பணயக்கைதியாக நடந்து கொள்ளவில்லை, மாறாக ஒரு அரசனைப் போல் நடந்து கொண்டார், கொள்ளையர்களை சேவகர்கள் போல் நடத்தினார் என்று கதைகளில் கூறப்பட்டுள்ளது.
கேட்ட தொகை வந்ததும், சீசர் விடுவிக்கப்படுகிறார். நாட்டிற்குத் திரும்பியவுடன் சீசர் தப்பித்தோம் என்று அமைதியாக இருக்கவில்லை. உடனடியாக படை திரட்டிக் கொண்டு, அந்தக் கொள்ளையர்களை விரட்டிச் சென்று, சிறைப்பிடித்து, கொடுத்த பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்கிறார். அத்தோடு விடவில்லை. அவர்களுக்கு சரியான தண்டனை அளிக்கத் திட்டமிடுகிறார். இது போன்ற குற்றங்களுக்கு அந்தக் காலத்தில் உயிரோடு சிலுவையில் அறைவது தான் தண்டனையாக இருந்திருக்கிறது. கொள்ளையர்களுக்கும் இதே கதிதான் என்று சீசரின் உடன் இருந்தவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் சீசர், “உங்களுடன் 40 நாட்கள் இருந்துள்ளேன். பழகிவிட்டேன். அதனால் உங்களை உயிரோடு சிலுவையில் ஏற்ற மனமில்லை” என்கிறார். பழக்கத்துக்காக மன்னித்து விட்டார் போலும் என்று எல்லாரும் எண்ணிக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் இருந்தவரிடம் திரும்பி,
“சிலுவையில் அறையும் முன், இவர்களை கழுத்தறுத்து விடுங்கள்” என்று கூறிச் சென்று விடுகிறார்.
இது புனைவாக இருக்கலாம் என்ற கருத்து உண்டு. அதை மறுக்க முடியாது. பெயரும், புகழும் தேவைப்படுபவர்கள், இன்று போல அந்தக் காலத்திலும் இது போன்ற மிகையான, ஆனால் சற்றே நம்பும் தன்மை இருக்கக்கூடிய கதைகளைச் சுற்றலில் விடும் வாய்ப்பிருந்ததை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வரலாறு வென்றவர்களால் எழுதப்படுவது. அதனை வைத்து யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற தீர்மானத்திற்கு வர முடியாது. பாடங்களைக் கற்றுக் கொண்டு, ஒரு பார்வையாளராக கடந்து செல்ல மட்டுமே முடியும். இந்தக் கதையின் உண்மைத் தன்மையை அறிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் தாண்டி இதோ 2023லும் ,கயூஸ் ஜூலியஸ் சீசர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதுதான் அவனது ஆளுமைக்கு சான்று.