பஞ்ச் டயலாக் என்றதும் நினைவுக்கு வருவது ரஜினி தான். அதிலும் குறிப்பாக அண்ணாமலை படத்தில் அவர் பேசும் வசனம். சரத் பாபுவை நோக்கி “அசோக்..இது வரைக்கும் நீ இந்த அண்ணமலைய நண்பனாத்தான் பாத்திருக்க” என்று தொடங்கி சவால் விடும் காட்சி, பஞ்ச் டயலாக்குகளின் மாஸ்டர் பீஸ். இது போன்ற வசனங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் உண்டு. சட்டென நினைவுக்கு வருவது, Taken திரைப்படம். தன் மகளைக் கடத்தியவனிடம், லியம் நீசன் கூறும் – “I dont know who you are” என்று தொடங்கி, “I will find you and I will kill you” என்று முடியும் வசனம். மேற்சொன்ன இரண்டுமே 30-40 நொடிகளுக்குள் முடியும் வசனங்கள். ஆனால் அந்த கதாப்பாத்திரங்கள் தாங்கள் கூறுவதை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று பார்வையாளர்களும் விரும்பும் படி அமைந்தவை. கதாநாயகர்களின் வீரத்தை, திறமையைப் பறைசாற்றும் படி அமைந்தவை. இது போன்ற வீர வசனம் சங்க இலக்கியத்திலும் உண்டு. அதனை வஞ்சினம் உரைத்தல் என்கிறார்கள். வீர வசனம் பேசி, அதனை செய்து முடித்தால், அது வரலாற்றில் இடம் பெறும். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்று பாண்டியன் நெடுஞ்செழியன் உரைத்த வஞ்சினம்.
பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தந்தை மறைந்ததால் இளவயதில் அரியணை ஏறியவன். வயதிலும் அனுபவத்திலும் இளையவனாக இருந்த காரணத்தினால், மற்ற அரசர்கள் நெடுஞ்செழியனை வென்று அரசைக் கைப்பற்ற நினைத்தனர். சேர அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழ அரசன் பெருநற்கிள்ளி, இவர்களோடு வேளிர்கள் திதியன், எழினி, இருங்கோ, பொருநன், எருமையூரன் ஆகிய எழுவரும் சேர்ந்து நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட வந்ததாகத் தெரிகிறது. அந்தச் செய்தி அறிந்த நெடுஞ்செழியன் சினங்கொண்டு உரைத்ததே பாண்டியன் வஞ்சினம்.
“நான் வயதில் சிறியவன் ஆதலால் என்னைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள், என்னிடம் சிறந்த யானைகளும், குதிரைகளும், போரிற் சிறந்த மறவர்களும் இல்லையென்று எண்ணிக்கொண்டு, எனது வலிமையை உணராமல், என்னை எளிதாக வென்று விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எழுவரையும் களத்தில் சிதறடித்து, அவர்கள் முரசினைக் கைப்பற்றுவேன். அவ்வாறு நான் செய்யத் தவறினால், என் வேந்தன் கொடியவன் என்று என் மக்கள் என்னைப் பழிக்கும் நிலை உண்டாகட்டும். என்னிடம் இரந்து உதவி கேட்பவருக்கு உதவ முடியாத வறுமை எனக்கு உண்டாகட்டும், புலவர்கள் என் அரசைப் புகழாது ஒதுக்கட்டும்” என்று வஞ்சினம் உரைக்கிறான். பாண்டியன் உரைத்த இந்த வஞ்சினம் புறநானூற்றில் 72ம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
இதில் நாம் கூர்ந்து நோக்க வேண்டிய விசயங்கள் இரண்டு –
1.பகைவர்களைத் தோற்கடித்து, முரசைக் கைப்பற்றுவேன் என்று கூறுகிறான். கடிமரம் போல் முரசும் குலக்குறியாக, மானத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்;
புறம் 72
கடிமரம் மற்றும் அது சார்ந்த மரபினைப் பற்றி இங்கே எழுதியுள்ளேன் – கடிமரந் தடித்தல்
2. வஞ்சினம் உரைக்கும் போது, ஒரு வேளை நான் தோற்றால், என் மக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று பழிக்கட்டும் என்று சொல்கிறான் பாண்டியன். முடியாட்சியாக இருந்தாலும், மக்கள் போற்றும்படி ஆட்சி செய்ய வேண்டும் என்ற அறம் எவ்வளவு முக்கியமானதாகக் கருதப்பட்டிருக்கிறது என்று இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
‘கொடியன் எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
புறம் 72
சிலப்பதிகாரத்தில், செய்யாத குற்றத்திற்காக கோவலனைக் கொன்று விட்டோம் என்று அறிந்த பின்பு, பாண்டிய மன்னன்,
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன், யானே கள்வன்
சிலப்பதிகாரம், வழக்குரை காதை 74,75
என்று சொல்லி, நீதி காக்க தவறியதற்காக உயிர் நீத்ததை நினைவில் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றும் தமிழ்ச்சமூகத்தில் அறம் இத்தனை முக்கியமானதாக இருப்பதற்கு காரணம், அது கலையினாலும், இலக்கியத்தினாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதால் தான். மற்ற மொழியில் உள்ள சில இதிகாசங்களைப் போல சூட்சுமங்களைக் கொண்டும், மொன்னையான காரணங்களைக் கொண்டும், அநியாயத்தையும், அக்கிரமத்தையும் நியாயப்படுத்தாமல், அறத்தையும், நேர்மையையும் பொட்டில் அடித்தாற் போல Grey Area இல்லாமல் நிறுவியதே தமிழ் இலக்கியங்களின் சிறப்பு.
இந்த வஞ்சினத்தின் சிறப்பினை உறுதி செய்து கொள்ள, இரண்டு விசயங்களில் நாம் தெளிவுற வேண்டும்.
- பாண்டியனின் வயது – உண்மையில் பாண்டியன் இளவயதில் தான் இந்தப் போரைச் சந்தித்தானா ?
- பாண்டியனது வெற்றி மற்றும் வலிமை – இந்தப் போரில் பாண்டியன் வெற்றி பெற்றானா அல்லது தோல்வி அடைந்தானா ? வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி ?
பாண்டியனின் வயது
பாண்டியன் நெடுஞ்செழியன் இளவயதில் இந்தப் போரைச் சந்தித்தான் என்பதை வேறு சில புறநானூற்றுப் பாடல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இடைக்குன்றூர் கிழார் எனும் புலவர், நெடுஞ்செழியனை சிறப்பித்துக் கூறும் போது,
தாலி களைந்தன்று மிலனே: பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே
புறம் 77
என்று சொல்கிறார். இதில் தாலி என்பது சங்ககாலத்தில் சிறுவர்கள் அணிந்தது (ஐம்படைத்தாலி என்பார்கள் – ஐந்து ஆயுதங்கள் பொறிக்கப்பட்ட தாலி, சிறுவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கும் என்ற நம்பிக்கையில் அணிவிக்கப்படுவது. திருமணத்தின் போது மணப்பெண்ணின் கழுத்தில் அணியப்படும் தாலி இந்த மரபில் வந்தது என்று சொல்வார்கள்). போருக்குச் செல்லும் வயது அடைந்த பிற்பாடு, தாலியைக் களைந்து கால்களில் கழல் அணிவார்கள். தாலியைக் களையாமல் இருக்கிறான், இப்போது தான் பால் உணவை விடுத்து சோற்று உணவை உட்கொள்ளத் தொடங்கி இருக்கிறான் என்று சொல்வதன் மூலம் நெடுஞ்செழியன் இளமையானவன் என்று உணர்த்துகிறார். இந்த அளவிற்குச் சிறிய வயது என்று சொல்வது இலக்கிய நயத்திற்காக செய்யப்பட்ட மிகைப்படுத்தலாய் இருந்தாலும், எதிரிகளை விட வயதில் மிகச் சிறியவன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது
புறம் 78
இதில், நம்மை எதிர்க்கும் பாண்டியன் இளையவன், ஆனால் அவனிடம் இருக்கும் செல்வமோ பெரிது என்று எதிரிகள் கூறுவதாக இடைக்குன்றூர் கிழார் குறிப்பிடுகிறார்.
பாண்டியனின் வெற்றி மற்றும் வலிமை
வஞ்சினத்தைத் தொடர்ந்து தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில் பாண்டியன் வென்றதாகத் தெரிகிறது. அதனால்தான் அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்று அழைக்கப்படுகிறான். தலையாலாங்கானம் என்றால், ஆலமரங்கள் நிறைந்த பெரிய காடு என்று பொருள். பாண்டியன் நெடுஞ்செழியனின் போர்த்திறனையும் மூர்க்கத்தையும் விளக்க இரண்டு பாடல்களை எடுத்துக் கொள்ளலாம். இடைக்குன்றூர் கிழார் எழுதிய பாடலில்,
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
புறம் 78
என்று நெடுஞ்செழியன் போர் செய்த விதத்தை விளக்குகிறார்.
நெடுஞ்செழியன், பகைவரை போர் நடந்த தலையாலங்கானத்தில் கொல்லவில்லை. அவர்களை இழிவு படுத்த, அவர்கள் சொந்த ஊருக்குத் துரத்திச் சென்று, அவர்தம் மனைவியர் முன்னால் கொன்றான் என்று குறிப்பிடுகிறார்.
மாங்குடி கிழார் இன்னொரு பாடலில், பாண்டியன் நெடுஞ்செழியனின் போர்க்களத்தை விவரிக்க எடுத்துக் கொள்ளும் உவமைகள், அவனது மூர்க்கத்தை விளக்கும்.
பகைவரின் தலைகளை அடுப்பாக்கி, அதில் கூவிள விறகினைப் போல் வரிகள் உள்ள குடல்களை, பெண்ணொருத்தி சமைக்கிறாள். விலங்குகள் கூட உண்ண மறுக்கும் இந்தக் கூழை, மண்டையோட்டில் செய்த அகப்பையைக் கொண்டு, சமையல்காரன் ஒருவன் எடுத்துத் தெளித்தால் வரும் நாற்றத்தை போல, உனது போர்க்களம் நாற்றம் எடுத்தது என்று விவரிக்கிறார்.
பொருந்தாத் தெவ்வர் அருந்தலை அடுப்பில்
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்க
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
மாமறு பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே
புறம் 372
ஆக, வஞ்சினம் உரைத்ததோடு நில்லாமல், தன்னை எள்ளி நகையாடிய பகைவர்களை இரக்கமில்லாமல், மூர்க்கத்தோடு அழித்தொழித்ததால் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் சிறப்புக்குரியவன் ஆகிறான்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பாண்டியன் நெடுஞ்செழியனும் வெவ்வேறு நபர்கள். சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியனை சிறப்பிக்க,
இளைய ராயினும் பகையரசு கடியுஞ்
செருமாண் தென்னர் குலமுத லாகலின்
சிலப்பதிகாரம்
என்று கூறுகிறார் இளங்கோவடிகள். இளைய வயதினனாய் இருந்தாலும், பகைவரை வென்ற குலவழி வந்தவன் என்று சிறப்பிக்கிறார். எனவே சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை விட, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் காலத்தால் முற்பட்டவன் என்று கொள்ளலாம்.