வாளுடைமை

தேவர் மகன் படத்தில் சக்தி, மாயனிடம் “உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க அதே மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு. அத வீணா எழுப்பிடாத” என்று சொல்வார். நீ செய்கிற அனைத்து தீய செயல்களையும், அக்கிரமங்களையும் என்னால் உனக்குத் திருப்பிச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன் என்பது தான் அதன் பொருள். அறம் என்பது அதுதான். அசுரன் படத்தில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் “அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறம் அவனுக நமக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாத. பகையை வளர்க்கிறத விட, அத கடக்குறதுதான் முக்கியம்” என்று சொல்வார். இருபது பேரை வெட்டி சாய்க்கக் கூடிய வலிமை கொண்ட ஒருவர் பகையைக் கடந்து செல்ல வேண்டும் என்று சொல்லுவதும் அறம் தான்.

கதைக் களத்தைத் தாண்டி, இரண்டு படங்களிலுமே அந்தந்த கதாப்பாத்திரங்கள், எதிரிக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தினார்கள் என்பதில் தான் இந்த வசனங்களின் வீரியம் உள்ளது. அது தான் இந்தக் கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்த்து காலம் தாண்டி நிற்கச் செய்கின்றது. ஒரே வித்தியாசம், தேவர் மகனில் எதிரியைக் கொல்லும் முன்னர் எச்சரிக்கையாக வரும் வசனம், அசுரனில் எதிரியைக் கொன்ற பிற்பாடு பக்குவமான புரிதலாக வெளிப்பட்டிருக்கும். இருவருமே ஆகச் சிறந்த கலைஞர்கள் என்பதும், இரண்டுமே டைட்-க்ளோஸ் ஷாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரியைப் பாதிக்கும் செயல்களை செய்ய முடிந்தும், நிர்மூலமாக்கும் திறன் இருந்தும், பகை வளர்க்கக் கூடாது என்பதற்காக அதனைச் செய்யாமல் இருப்பதை அறம் எனக் கொள்ளலாம். மாறாக, எதிரியை எதிர்கொள்ளத் தேவையான துணிச்சல் இல்லாமலும், தயக்கத்தினாலும் எதுவும் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் அறம் அல்ல. அது பலவீனம். பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள பயந்து, ஒதுங்கிச் செல்வது அறத்திலோ, ஒழுக்கத்திலோ சேராது. நாம், பெரும்பாலான  நேரங்களில் பலவீனம், இயலாமை, தயக்கம், பயம் போன்றவற்றிற்கு அறம், ஒழுக்கம் போன்ற முகமூடிகளை அணிந்து கொள்கிறோம். அதனால் நம்மை நல்லவர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம்.  நாம் எல்லாருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டியது இல்லை, இருக்கவும் முடியாது. பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக, நேரத்திற்கு தகுந்தாற் போல், ஆட்களுக்கு தகுந்தாற் போல் நம்மை மாற்றிக் கொண்டு, ஒடுக்கிக் கொண்டு நாம் நல்லவர்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்தலை விட, அறம் சார்ந்து வலிமையாகத் திகழ்தல் சிறந்தது. 

உண்மையில், இன்றைய சூழலில், நமக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, நாம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவராய் இருத்தல் அவசியமாகிறது. அதற்காக, அடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தேவையில்லை. ஆனால், தேவைப்பட்டால் அதனைச் செய்யக்கூடிய திறன் உறுதியாக வேண்டும். “வம்புக்குன்னு இவனைத் தொட்டா பிரச்சனை, சும்மா விட மாட்டான்” என்று எதிரி உணர்ந்தால் போதுமானது.  நீங்கள் ஆயுதமின்றி இருக்கும் நேரத்தில், உங்களைத் தாக்க முயற்சிக்கும் எதிரி ஒருவர், உங்களிடம் ஒரு கூரான வாள் இருப்பது தெரிந்தால், அதே வேகத்தோடு வரமாட்டார். ஒரு வேளை நீங்கள் திருப்பித் தாக்கினால், தான் என்ன செய்வது என்று ஒரு சிறிய யோசனையும், தயக்கமும் இருக்கும். உங்களுக்கு நன்கு வாள் வீசத் தெரியும் என்ற மேலதிக விவரமும் தெரிந்தால், உங்களைத் தாக்க முயற்சிக்கும் யோசனையே அவருக்கு வராது. இதற்காக நீங்கள் வாளால் யாரையும் காயப்படுத்த வேண்டிய அவசியமில்லை, சண்டைக்கான சூழல் வரும்போது, வாளை உறையில் இருந்து எடுக்கக் கூடத் தேவையில்லை, உங்களிடம் வாள் இருக்கிறது என்று  எதிரிக்கு தெரிந்தால் மட்டும் போதும்.

இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக ஒயிட் காலர் பணியிடக் கலாச்சாரத்தில், வாள் என்பது நமது புத்திக் கூர்மையும், நாம் பயன்படுத்தும் சொற்களுமே. அவற்றை நன்கு பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பையும் சிந்தனையையும் வளர்த்துக் கொள்வது அவசியமானதாகிறது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையை நுழைக்கக் கூடாது. எப்போதும் எளியவர்கள்  பக்கம், ஒடுக்கப்படுபவர்கள் பக்கம் நிற்க வேண்டும். முக்கியமாக அடுத்தவருக்கு கெடுதல் நினைக்கக் கூடாது. இந்தப் பண்புகள் நமக்கு உறுதியாக வெற்றியைத் தேடித் தரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் சிறப்பாக, ரோசமாக சண்டை செய்யக் கூடிய வலுவையும், நெஞ்சுரத்தையும் தரும். சவாலான சூழ்நிலையில் சண்டை செய்வது மட்டுமே அதிமுக்கியம். வெற்றி தோல்வி எல்லாம் பிற்பாடு. 

வாள் நமக்கு வலிமையைத் தரும். வலிமை அறம் சார்ந்த வாழ்விற்கு வழிவகுக்கும். அறம் வென்று நிலைக்கும். நமக்கான வாள் ஒன்றை வடித்துக் கொள்வோம். வாள் கொண்டு வெல்லப் பழகுவோம்.

உளவியலாளர் ஜோர்டன் பீட்டர்சன் ஒரு நேர்காணலில் சொல்வார்

You have to be dangerous. It does not mean you have to harm anybody. But, you need to have the capability to cause harm to others, if needed.

So, It is good to be dangerous.

Leave a comment