கல் பொரு சிறு நுரை

வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனுக்கும் முப்பதுகளில் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று நினைக்கிறேன். இன்றைய சூழலில் ஒவ்வொருவரின் சமூக பொருளாதார நிலையைப் பொறுத்து, அந்த வாய்ப்பு ஐந்து பத்து ஆண்டுகள் முன்னரோ பின்னரோ அமையலாம். சராசரி நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மனிதனுக்கு, கல்வி பயின்று, தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு, குடும்ப வாழ்வில் நுழைந்த பிற்பாடு அந்த வாய்ப்பு பெரும்பாலும் முப்பதுகளில் நிகழ்கிறது. 

செய்யும் தொழில், உறவுகள், பொருளாதாரம் சார்ந்து பல சவால்களை நாம் சந்திக்க நேரும். இது போன்ற சவால்கள், ஒரு வகையில் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும் வாய்ப்புகளும் கூட. அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறவர்களின் அடுத்த முப்பது ஆண்டுகள், அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களின் அடுத்த முப்பது ஆண்டுகளை விட, சிறப்பாக இருக்கும். சிறப்பு என்பதை விட ஓரளவுக்கு கணிக்கக் கூடியதாக, பக்குவம் மிக்கதாக இருக்கும் என்பதே சரி. அந்த பக்குவமும், கணிக்கக் கூடிய தன்மையும், நாம் எதிர்கொள்ளும் இன்னல், நல்வினை இரண்டையும் சரியாகக் கையாளக் கற்றுத் தருகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு அதனைக் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்ற நிலையில் நம்மை வைத்திருக்கிறது.

திடீரென்று ஒரு நாள் பெருமாற்றம் நிகழ்ந்து விடும், நாம் வெற்றி பெற்று விடுவோம், சமூகத்தில் நமக்கான அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற பொய்யான நம்பிக்கை உடைந்து ,பெருவெற்றி என்பது எண்ணற்ற, கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறிய வெற்றிகள் நிறைந்தது என்ற புரிதல் உண்டாகும் காலம் அது. பொருளாதார தளத்தில் இதனை விளக்குவது எளிது. என்றேனும் ஒரு நாள், தனது கடின உழைப்பால், தேவைக்கு அதிகமாக சம்பாதித்து, பணம் பெற்றவர்களாக மாறி விடுவோம் என்று நம்மில் பலர் நினைக்கலாம், ஆசைப்படலாம். ஆனால் ஏதோ ஒரு செவ்வாய்க்கிழமை காலையில் உங்கள் வாழ்வில் அந்த அற்புதத்தை நிகழ்த்துவதற்காக, இந்தப் பிரபஞ்சம் காத்திருப்பதில்லை. அற்புதம் நிகழ்வதற்கான சாத்தியம் மிக அரிதானது என்று புரிந்து, செலவுகளைக் குறைத்து, சரியான வழியில் சேமித்தல் மட்டுமே பொருளாதார சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் என்ற தெளிவு பிறப்பது இந்த காலகட்டத்தில் தான். ஒரு வேளை அது போன்ற அற்புதம் நிகழ்ந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல. கோடிகளில் பணம் ஈட்டும் சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் சிலர் தங்களது கடைசி காலத்தில் வறுமையில் உழல்வதற்குக் காரணம் பொருளாதாரம் தொடர்பான இந்த புரிதல் இல்லாமை தான்.

பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி உறவுகளுக்கும் இது பொருந்தும். மனித உறவுகள் தானே வாழ்க்கை. பெற்றோர், மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள், உடன் பணி செய்பவர்கள் என்று அனைவரின் ஒருங்கிணைந்த பிரதிபலிப்பு தானே நாம். இத்தனை உறவுகளிலும் நாம் ஒரு சேர, ஒரே அளவிலான கவனம் செலுத்துதல் சாத்தியமற்ற ஒன்று. ஆனால் பகுத்தறிந்து அதற்கான நேரத்தையும், கவனத்தையும் ஒதுக்கினால் தான் நமக்கு வேண்டிய காலத்தில் நமக்கு அது திரும்பக் கிடைக்கும். தனது குடும்பத்திற்காக போதுமான நேரம் ஒதுக்காத ஒருவர், தனது கடைசி காலத்தில் குடும்பத்தினர் தன் தனிமைத் துயர் களைவார்கள் என்று எதிர்பார்த்தால், அது ஏமாற்றத்தில் தான் முடியும். தவிர தனக்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்கிற கழிவிரக்கமும் சேர்ந்து கொள்ளும் அபாயம் உண்டு. முக்கியத்துவம் இல்லாமற் போதல், பாதுகாப்பின்மையையும் ஆத்திரத்தையும்  ஒரு சேர கொண்டு வந்து சேர்க்கும். அது தனக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் பெருங்கேடாக முடியும்.

பள்ளி, கல்லூரிக் காலம் வரையிலும் ஒருவர் மேல் ஏகப்பட்ட கருத்தியல்கள் திணிக்கப்படுகின்றன. குடும்பம், பயிலும் இடத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து தன்மையைப் பொறுத்து அந்தக் கருத்தியல் ஆக்கப்பூர்வமானதாகவோ, அல்லது அழிக்கும் தன்மை உடையதாகவோ இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், வாசிப்பும், வாழ்க்கை அனுபவங்களும் மட்டுமே நாம் இருக்கும் இடத்தில் இருந்து நம்மை இன்னும் மேம்படுத்திக் கொள்ள, மீளுருவாக்கம் செய்து கொள்ள வழி செய்யும். நம்மில் சிலருக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்த காய்கறிகளைப் போன்றதொரு சொகுசான வாழ்க்கை அமைந்திருக்கலாம். அது போன்ற வாழ்க்கைப் பாடம் வாய்க்காத சூழ்நிலைகளில் நல்ல வாசிப்பும், தன்னைச் சுற்றி நடப்பவைகளை கூர்ந்து நோக்கும் திறனும் மட்டுமே அன்றாட வாழ்வில் நன்றியுணர்ச்சியையும், பரிவையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

கல் பொரு சிறு நுரை போல

மெல்ல மெல்ல இல்லாகுதுமே 

என்பது குறுந்தொகைப் பாடல். தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி, தோழியிடம் தன் நிலை குறித்து வருந்தி விளக்கும் பாடல் இது. பெருவெள்ளம் பாறையில் மோதும் போது தோன்றும் நுரையோடு தன் உயிரினை ஒப்பிடுவாள். ஆற்று வெள்ளம் பாறையில் மோதும் போது உருவாகும் நுரையானது, மெல்ல கரைந்து இல்லாமற் போவதைப் போல், தலைவனைப் பிரிந்த துயரினால் தன் உயிரும் இல்லாமற் போய்விடும் என்பாள். சற்று சிந்தித்து பார்த்தால், நம் அனைவரின் வாழ்க்கையும், கண் முன்னே உருவாகி இல்லாமற் போய் விடும் அந்த நுரை போலத்தான். எப்போது வேண்டுமானாலும் காணாமல் போகக் கூடிய நுரை போன்ற இந்த வாழ்வினை ரசிக்க, நிறைவோடு வாழ்வது ஒன்றே வழி.

நன்றியுணர்ச்சி, பரிவு – இவை இரண்டும் இல்லாத, இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் தராத எந்தவொரு மனிதனின் வாழ்வும் நிறைவாக இருக்காது. நம்மிடம் இருப்பவற்றின் முக்கியத்துவத்தை உணர இந்த இரண்டு குணங்களையும் வளர்த்துக் கொள்வது மிக அவசியமானதாகிறது. வேலை, உறவு, அன்பு, நட்பு என்று தனக்கு கிடைத்தவற்றின்  முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டால், அதனை இழந்துவிடாமல் இருக்கத் தேவையான அனைத்தையும் நம்மால் செய்ய இயலும். We get what we focus on. 

பணம், பொருள், புகழ் இருப்பதற்கும் நிறைவிற்கும் தொடர்பில்லை. எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதது போன்ற ஒரு மனநிலை வாய்த்தல் கொடுமை. அந்த மனநிலைக்கு செல்லாமல் இருப்பதே நிறைவு. அது அத்தனை எளிதானதல்ல.

Leave a comment