டில்லீஸ்வரன்

டில்லீஸ்வரனைப் பற்றி தெரிந்து கொள்ள, முதலில் திருவரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். டெல்லி, சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்த போது, அங்கே இருந்த ஒரு சுல்தான் தெற்கு நோக்கிப் படையெடுத்தார். அந்தப் படையெடுப்பின் போது திருவரங்கம் கோயிலைத் தாக்கிய சுல்தானின் படைகள், அங்கே இருந்த பெருமாள் சிலையினை டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். 

கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண், தினசரி பெருமாளை வணங்கக் கூடிய பழக்கம் உடையவள். இப்படி பெருமாள் சிலையை சுல்தானின் படைகள் எடுத்துச் செல்வதைக் கண்டு, அவர்களைப் பின் தொடர்ந்து டெல்லி வரை செல்கிறாள். மாறுவேடத்தில் சுல்தானின் கோட்டைக்குள் நுழைந்து, பெருமாள் சிலை அங்குள்ள ஒரு சேமிப்பு அறையில் இருப்பதைக் கண்டுகொள்கிறாள். இந்தத் தகவலை திருவரங்கத்திற்கு வந்து கோயில் அதிகாரிகளிடம் தெரிவிக்க, அவர்கள் பெருமாள் சிலை இருக்கும் இடம் தெரிய வந்ததால், மனம் மகிழ்ந்து இந்தப் பெண்ணுக்கு பின்சென்றவல்லி என்று பெயரிடுகிறார்கள்.

பெருமாள் சிலை இருக்கும் இடம் தெரிந்ததும் திருவரங்கம் கோயிலில் இருக்கும் வைணவர்கள் அதைத் திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார்கள். திருவரங்கம் கோயிலில் இருந்து 60 பேர் கிளம்பிச் சென்று, டில்லீஸ்வரனை நேரில் சென்று சந்தித்து சிலையைத் திரும்பக் கேட்கலாம் என்று முடிவு செய்யப்படுகிறது. இந்த விவரங்கள், அனைத்தும் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் தொகுத்த “கோயிலொழுகு” எனும் நூலின் 19வது பக்கத்தில் இருந்து விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தான் டெல்லி சுல்தானை “டில்லீஸ்வரன்” என்று குறிப்பிடுகிறார்கள். தங்கள் பேரன்புக்குரிய பெருமாளைக் களவாடிச் சென்ற சுல்தானை ஏன் டில்லீஸ்வரன் என்று அழைக்கிறார்கள என்பது விளங்கவில்லை.

திருவரங்கத்தில் இருந்து கிளம்பிய 60 பேரும் சண்டையிட்டு பெருமாள் சிலையை திரும்பக் கொண்டுவரச் செல்லவில்லை, சுல்தானை மகிழ்வித்து அவர் படையினர் களவாடிச் சென்ற சிலையை பரிசாகப் திரும்பப் பெறச் செல்கிறார்கள். டெல்லி சென்ற குழுவினர், தங்கள் நாட்டியத் திறமையால் (இந்த நாட்டியத்தை ‘ஜக்கிந்தி’ என்று சொல்கிறார்கள்) சுல்தானை மகிழ்வித்தார்கள். அவர் என்ன பரிசு வேண்டுமென்று கேட்க, இவர்கள் சுல்தானின் படையினர் களவாடிச் சென்ற பெருமாள் சிலையைத் திருப்பித் தர வேண்டும் என்கிறார்கள். சுல்தானும் அதற்கு ஒப்புதல் அளித்து விடுகிறார். பிரச்சனை தீர்ந்தது என்று  நினைத்து சிலையினை எடுக்க பின்தொடர்ந்தவல்லி குறிப்பிட்ட சேமிப்பு அறைக்குச் செல்கிறார்கள். ஆனால் பின்தொடர்ந்தவல்லி கூறியபடி சேமிப்பு அறையில் பெருமாள் சிலை இல்லை. சுல்தானின் மகளான இளவரசி சுரதாணி அந்த சிலை பிடித்துப் போனதால், அதனை அவள் தன்னுடைய அறைக்கு எடுத்துச் சென்றுவிட்டது தெரிய வருகிறது. என்ன செய்வதென்று தெரியாமல், வைணவர்கள் மறுபடியும் சுல்தானிடம் சென்று முறையிடவும், அவர் உங்கள் தெய்வம் உங்களோடு வந்தால் நீங்கள் அழைத்துச் செல்லலாம் என்று அனுமதி தருகிறார். 

இதனைத் தொடர்ந்து வைணவர்கள் பெருமாளிடம் முறையிட, பெருமாள் இளவரசியைத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டு, இவர்களுடன் திருவரங்கத்திற்கு வரச் சம்மதிக்கிறார். இளவரசி தூங்கிக் கொண்டிருக்கும் போது 60 பேரும் சிலையை எடுத்துக் கொண்டு டெல்லியில் இருந்து திருவரங்கம் நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள். தூக்கம் கலைந்து எழுந்த இளவரசி, சிலை காணாமல் போனதைக் கண்டு வருந்துகிறாள். வைணவர்கள் தன் தந்தையிடம் பேசி சிலையைத் திருவரங்கத்துக்கு எடுத்துச் சென்றது தெரிந்து, தன்னால் அச்சிலை இல்லாமல் உயிர் வாழ இயலாது என்று தந்தையிடம் முறையிடுகிறாள். மகளில் துயர் பொறுக்காமல், தன் படைகளை அனுப்பி சிலையைத் திரும்பக் கொண்டு வர உத்தரவிடுகிறார் டில்லீஸ்வரன். இளவரசி சுரதாணியும் அந்தப் படைகளுடன் செல்கிறாள். இத்தகவல் அறிந்த வைணவர்கள், மறுபடியும் சிலை பறிபோவதைத் தடுக்க ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். தங்களில் மூன்று பேரை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் சிலையைக் கொடுத்து திருப்பதிக்கு அனுப்பிவிட்டு, மீதமிருப்பவர்கள் திருவரங்கத்தை நோக்கி பயணத்தை தொடர்கிறார்கள்.

இவ்விவரம் அறியாமல் திருவரங்கத்திற்கு வந்த சேர்ந்த இளவரசி சுரதாணி, பெருமாளைக் காணாமல் வருந்தி, கோயில் வாசலில் தன் உயிரைத் துறக்கிறாள். திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெருமாள் சிலை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து  செஞ்சி வழியாக திருவரங்கத்திற்கு வந்து சேர்கிறது. தனது தலத்திற்கு திரும்ப வந்த பெருமாள், தனக்காக உயிர் துறந்த சுரதாணிக்கு கோயிலில் இடம் தர வேண்டும் என்று வைணவர்களைப் பணிக்கிறார். இசுலாம் மார்க்கத்தில் சிலை வழிபாடு இல்லாத காரணத்தினால், இளவரசி சுரதாணியை படமாக வரைந்து கோயிலுக்குள் வைக்கிறார்கள். பெருமாள் மீது பேரன்பு கொண்ட அந்த இளவரசி சுரதாணி, இன்று வரையில் துலுக்க நாச்சியார் என்ற பெயரில் விளங்குகிறாள். அவளுக்கு வட இந்திய உணவான ரொட்டி பிரசாதமாக படைக்கப்படுகிறது. இளவரசி இசுலாம் சமயத்தைச் சார்ந்தவர் என்று குறிப்பிதற்காக துலுக்க நாச்சியார் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. துலுக்க நாச்சியாருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, பெருமாள், தீபகற்ப இசுலாமியர்களின் வழக்கத்தின் படி லுங்கி அணிந்து காட்சியளிக்கிறார்.

துலுக்க நாச்சியார் என்ற பெயரில் வரும், “துலுக்க” எனும் சொல், “துக்ளக்” (முகமது பின் துக்ளக்-ஐ நினைவு கொள்க) வம்சாவளியைக் குறிக்கும் என்றும், துருக்கியர் என்பதைக் குறிக்கும் என்றும் சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. துருக்கியில் இருந்த வந்தவர்வகளை துருக்கர் என்றழைக்கத் தொடங்கி, அது காலப்போக்கில் துலுக்கர் என்று மருவியதாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை “துலுக்க” என்ற சொல்லின் வேர் துக்ளக் என்ற சொல்லில் இருந்து வந்திருந்தால், துக்ளக் வம்சாவளியின் ஆட்சியின் போது இந்த சம்பவம் நடந்ததாகக் கொள்ளலாம். துக்ளக் வம்சாவளியின் ஆட்சிக்காலம் 1320ல் தொடங்கி 1413 வரை நீடித்தது.

சில இடங்களில் இந்தக் கதையை விவரிக்கும் போது, அந்த சுல்தான் அலாவுதீன் கில்ஜி என்றும், கொள்ளையடித்துச் சென்ற தளபதி மாலிக் கபூர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாலிக் கபூரின் மதுரை படையெடுப்புடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் இது சரியாக பெருந்தி வரும். “ஆனால் “கோயிலொழுகு” நூலில் இன்னார் என்று தெளிவான பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பொதுவாக டில்லீஸ்வரன் என்று தான் குறிப்பிட்டுருக்கிறார்கள். தவிர, வரலாற்றுக் குறிப்புகளில் கில்ஜி மற்றும் மாலிக் கபூரின் குணாதிசயங்களைப் பார்க்கிற வகையில், எடுத்துச் சென்ற சிலையை திருப்பிக் கொடுப்பவர்களாகவோ, மகள் இறந்த பிற்பாடு அதனை அப்படியே விட்டுவிட்டு, பழிவாங்காமல் செல்பவர்களாகவோ தெரியவில்லை. கில்ஜிக்கு சுரதாணி என்ற மகள் இருந்ததாகவும் எந்த ஆவணங்களும் இல்லை. கில்ஜி வம்சாவளியின் காலம் துக்ளக் வம்சாவளிக்கு முந்தையது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் நடந்த காலகட்டம் 1500 என்கிறார்கள் சிலர். ஆனால் மாலிக் கபூர் மற்றும் கில்ஜியின் காலம் 1300கள். 1520களில் எல்லாம் பாபர் வந்து, முதலாம் பானிபட் போரில், லோடி வம்சத்துக்கு முடிவுரை எழுதி, முகலாயப் பேரரசு தொடங்கியிருந்தது.

பொதுவாக சுல்தான் என்பதால், டெல்லி சுல்தான்கள் காலம் மொத்ததையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது. அது 1200களில் மாமூலுக் வம்சத்தில் தொடங்கி, கில்ஜி, துக்ளக், சையத், லோடி வம்சம் என 1526ல் நடந்த முதலாம் பானிபட் போர் வரை நீளும். அதனால், இந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் இந்த டில்லீஸ்வரன் சம்பவம் நடந்திருக்கும் என்று தோராயமாகக் கணக்கில் கொள்ளலாம். இல்லையென்றால் இசுலாம் மார்க்கத்தை பின்பற்றிய இளவரசி ஒருத்தி ஒரு இந்துக் கடவுளின் மீது காதல் கொள்ளும் புனைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகர் வண்டியூரில் துலுக்க நாச்சியாரைக் காணச் செல்லும் நிகழ்வும் குறிப்பிடத்தடக்கது. இதே போல, ஶ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலுக்கும் இசுலாமியர்களுக்கும் தொடர்பு உண்டு. அந்தக் கோயிலில் இசுலாமியர்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். மாசி மகத்தில், பெருமாள் கடலாடுவதற்காகக் கிள்ளை எனும் ஊருக்கு அழைத்துச் செல்லப் அடுகிறார். வழியில் தைக்கல் எனும் ஊரில் இருக்கும் தர்காவில் பெருமாளுக்கு மரியாதை செய்யப்படுகிறது. சையத் ரஹமத்துல்லாவுடைய அந்த தர்காவில் பெருமாளுக்கு மரியாதை செய்யப்படுவதன் காரணம் ஒரு தனிக்கதை. தீராத நோயினால் அவதிப்பட்டு வந்த ரஹமத்துல்லா எனும் ஜமீனிடம், கிள்ளையச் சேர்ந்த உப்பு வெங்கட ராவ் எனும் தாசில்தார், பூவராகப் பெருமாளை வேண்டிக் கொண்டால் குணமடையும் என்று சொல்ல, ரஹமத்துல்லாவும் அவ்வாறே செய்கிறார். நோய் குணமானவுடன், பெருமாள் மீது கொண்ட பக்தியால், பூவராகப் பெருமாள் கோயிலுக்கு நிலங்களை எழுதி வைக்கிறார். இதன் காரணமாக கடலாடச் செல்லும் பொழுது, ரஹமத்துல்லாவின் தர்காவில் பெருமாளுக்கு மரியாதை செய்யப்படுகிறது. ரஹமத்துல்லாவின் வழித்தோன்றல்கள்தான் பெருமாளை வரவேற்று, அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

புனைவோ, உண்மைச் சம்பவங்களோ, வெவ்வேறு இறை நம்பிக்கை கொண்டவர்கள் இணக்கமாக ஒன்றிணைந்து இருக்க மரபு ரீதியாகவே நம் தமிழ்ச் சமூகத்தில் இடம் இருக்கிறது. புதிதாக ஒன்றை எடுத்துக்கூட்டி நிறுவ வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஆனால், இன்று வடஇந்திய அரசியல் கோட்பாடுகளுக்காக, இத்தனை வெறுப்புணர்வு விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யாரேனும் ஒருவரை விளிம்பு நிலைக்குத் தள்ளி வைத்துப் பார்ப்பதில் தான் சிலருக்கு திருப்தி கிடைக்கிறது. அதற்கு அவரவர் நிலையைப் பொறுத்து சாதி, மதம், பணம் என்று வெவ்வேறு காரணிகளைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். கற்றறிந்தவர்களில் பலரும், இதனை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கவே செய்கிறார்கள். இதில் இருந்து, கல்வி மட்டுமே ஒருவருக்கு வளமான சிந்தனையைத் தந்து விடாது என்பது தெரிகிறது. வாசிப்பும், கலையும் நம் சமூகத்தைப் பற்றி நமக்கு இருக்கும் புரிதலை மேம்படுத்திக் கொள்ள, நமக்கு இருக்கும் கருவிகள். அந்தக் கருவிகள் மட்டுமே சமூகத்தை பரிவோடு நோக்கவும், அடுத்தவரை ஒடுக்க நினைக்கும் மனப்பிறழ்வு நிலைக்குச் செல்லாமலும் நம்மைக் காப்பாற்றும்.

ஈரவாடை தீர்த்தம்

திருவரங்கம் துலுக்க நாச்சியார் கதையில், கிளைக்கதையாக ஈரவாடை தீர்த்தத்தைப் பற்றி ஒரு சேதி உண்டு. பல ஆண்டுகள் கழித்து களவு போன சிலை திருப்பதியில் இருந்து செஞ்சி வழியாக திரும்ப வந்ததல்லவா ? அத்தனை ஆண்டுகளுக்குள் கோயிலில் இன்னொரு சிலையை பிரதிஷ்டை செய்து விட்டிருந்தார்களாம். முன்னர் இருந்த வைணவர்கள் யாரும் உயிரோடு இல்லாததால், இரண்டில் எது முதலில் அங்கிருந்தது என்ற குழப்பம் எழுந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கிருந்த 90 வயதான, கண் தெரியாத ஈரக்கொல்லி என்ற வண்ணார் ஒருவர் உதவியதாக கோயிலொழுகு தெரிவிக்கிறது.

முதல் சிலை களவு போவதற்கு முன்னர், அந்த சிலையின் மீது உடுத்தப்பட்ட ஆடையை துவைக்கும் வேலை இவருடையதாக இருந்திருக்கிறது. அப்படி பெருமாள் உடுத்திய ஆடை துவைப்பதற்கு வரும் போது, அதனை நீரில் நனைத்து, பின்னர் அந்த நீரை பிரசாதமாக பருகியிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். எனவே இரு சிலைகளுக்கும் திருமஞ்சனம் சாத்திய பிற்பாடு, அந்தந்த உடைகளைத் தந்தால், அந்தத் துணி நனைந்த நீரைப் பருகி தன்னால் எது முதலில் இருந்த சிலை என்று கண்டுபிடிக்க முடியும் என்று கூறி, அவ்வாறே கண்டுபிடித்தும் தருகிறார். களவு போன சிலை மறுபடியும் நிறுவப்படுகிறது. அந்த நீர் ஈரவாடை தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது.

Leave a comment