கதார்சிஸ்

ஹ்வாக்கீன் ஃபீனிக்ஸ் (Joaquin Phoneix) ஒரு அற்புதமான கலைஞன். டிகாப்ரியோ, டாம் க்ரூஸ், கிலியன் மர்ஃபி வரிசையில் எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களுள் ஒருவர். இத்தனைக்கும் அவர் நடித்த படங்கள் இரண்டை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒன்று 2000த்தில் வெளியான கிளாடியேட்டர், மற்றொன்று 2019ல் வெளியான ஜோக்கர். இரண்டுமே எதிர்மறையான கதாப்பாத்திரங்கள். அவரது முகஅமைப்பும் உடல்மொழியும், எதிர்மறையான கதாப்பாத்திரங்களுக்கு வெகுவாக ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன். அவரது முக அமைப்பில் ஏதோ ஒன்று பழைய நடிகர் ஶ்ரீகாந்தை நினைவுபடுத்தும். இயல்பாகவே ஃபீனிக்ஸின் கண்களில் கருணை இருக்காது. இயக்குனர் பாலா, நான் கடவுள் படத்தையொட்டி கொடுத்த நேர்காணல் ஒன்றில் ஆர்யாவின் கண்களைக் குறித்து இதையே கூறியிருப்பார்.

ஜோக்கர் திரைப்படத்தில் ஃபீனிக்ஸின் பணி மிகச் சவாலானது. ஜோக்கரின் பாத்திரப் படைப்பு, நிறைய படிமங்களால் ஆனது என்பதைத் தாண்டி, அதற்கு முன்னர் அந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த ஹீத் லெட்ஜர், ஜோக்கரின் உளவியலை வெளிப்படுத்துவதில் உச்சம் தொட்டிருப்பார். அந்தக் கதாப்பாத்திரத்திற்காக ஹீத் லெட்ஜர் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட விதம், தொடர்ந்து அவர் உயிரிழந்தது என்று நிறைய சிக்கல்களோடு தொடர்புடைய கதாப்பாத்திரம் அது. ஜோக்கர் படத்தைப் பார்ப்பதற்கு எனக்கான சில உந்துதல்கள் இருந்தன. முதலாவது, டிரெயிலரில் ஃபீனிக்ஸ் தனது வலது கையில் சிகரெட் பிடித்தபடி அநாயசமாக நடந்து வரும் காட்சி ஒன்று மற்றும், மேல் சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே, உடலைக் குறுக்கிக் கட்டுப்பாடின்றி சிரித்துக் கொண்டு வரும் ஒரு காட்சி. (அதற்குப் பெயர் Pathological Laughter என்பது பின்னாளில் தெரிந்து கொண்டது). இரண்டாவது, படத்தின் இயக்குனர் டாட் ஃபிலிப்ஸ். அவர் அதற்கு சற்று முன்னர் இயக்கியிருந்த படங்கள் – Hang Over-ன் மூன்று பாகங்கள், Due Date மற்றும் War Dogs. வணிக ரீதியான நகைச்சுவைப் படங்களை எடுத்தவர், இப்படி ஒரு கதையைக் எப்படி காட்சிப்படுத்தியிருப்பார் என்ற ஆர்வம். வெங்கட் பிரபுவிடம் இருந்து வடசென்னை போன்றோ அல்லது கர்ணன் போன்றோ ஒரு டிரெயிலர் வந்தால் எப்படி இருக்கும். கிட்டத்தட்ட அதே உணர்வு தான். மூன்றாவது, படிக்கட்டிலும் கழிவறையிலும் ஜோக்கர் தனியாக ஆடும் சில நடனக் காட்சிகள்.

படம் பார்க்கும் பொழுது, அந்தப் படிக்கட்டு நடனக் காட்சி நன்றாக இருந்தாலும், கழிவறையில் ஜோக்கர் ஆடும் நடனம் அதிகமாக ஈர்த்தது. அந்தக் காட்சியின் தொடக்கத்தில், ரயிலில் தன்னைத் தாக்கியவர்களைச் சுட்டுக் கொன்று விட்டு, ரயில் நிலையத்தில் இருந்து வெகு தூரம் ஓடி வந்து, ஒரு பொதுக் கழிவறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொள்வார். அதன் பின்னர், பூட்டிய கழிவறைக்குள் இந்த இரண்டு நிமிட நடனக் காட்சி வரும். மிக மெதுவான அந்த நடனத்தின் போது ஒரு trance நிலையில் இருப்பார். இறுதியில், கண்ணாடி முன் நின்று, இரு கைகளையும் விரித்து, ஒரு standing ovationஐ பெற்றுக்கொள்வதைப் போல் அந்த நடனத்தை முடிப்பார். அந்த நடனக் காட்சி முடிந்த பின்னர், ஜோக்கரின் நடையும், உடல்மொழியும் தலைகீழாக மாறியிருக்கும். ஆர்த்தர் ஃப்ளக் என்ற பலவீனமான மனிதன் முற்றிலும் மறைந்து இரக்கமற்ற ஜோக்கர் விஸ்வரூபம் எடுக்கும் தொடக்கப் புள்ளி அதுதான். அது வரையில் அவருக்கு இருந்த மன அழுத்தங்கள் எல்லாம் காணாமற் போய், வேறு ஒரு மனிதனாக மாறியிருப்பார்.

இது போல ஏதேனும் ஒரு கலையின் வழியாகவோ அல்லது கலையின் தாக்கத்தாலோ, அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகள் வெளிப்படுவதை catharsis என்று அழைக்கிறார்கள். இயக்குனர் டாரண்டினோ ஒரு நேர்காணலில், தனது படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் சில பார்வையாளர்களுக்கு cathartic feelingஐ அளிக்கிறது என்று குறிப்பிடுவார். இதே போன்ற காட்சிகள் சில தமிழ் சினிமாவிலும் உண்டு, உதாரணத்திற்கு, பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கொல்லப்பட்ட பின்பு வரும் பாடலில், “இறந்தது நீயா இருப்பது நானா” என்ற வரிகள் வரும் போது, ஒப்பாரி வைக்கும் பெண்கள் கூட்டத்தின் நடுவே பரியன் வெறிகொண்டு ஆடும் காட்சி அமைந்திருக்கும். தாள முடியாத சோகத்தையும், ஆத்திரத்தையும், மனதில் உள்ள அழுத்தத்தையும் நடனத்தின் மூலமாக பரியன் வெளிப்படுத்துவான். பார்வையாளர்களுக்கு பரியனின் வலியைக் கடத்த அந்தக் காட்சி உதவியிருக்கும்.இது போன்று அமைக்கப்பெற்ற காட்சிகள் பார்வையாளர்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. காதல் கொண்டேன் க்ளைமேக்ஸில், திவ்யா திவ்யா என்று தனுஷ் ஆடும் அந்த ஒற்றைக் காட்சி போதாதா, வினோத் என்ற அந்தக் கதாப்பாத்திரத்தைப் புரிந்து கொள்ள ? “பட்டியல்” திரைப்படத்தில் ஆர்யா கொல்லப்பட்ட பிறகு, வீட்டில் கிடத்தி வைத்திருப்பார்கள். அதனைத் தொடர்ந்து பரத் ஆடும் ஒரு காட்சி வரும். அதில் தனது இழப்பையும், ஆங்காரத்தையும் பரத் அவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

மேற்சொன்னவை கலையின் வழியாக சோகத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்துதல். கவிஞர் மகுடேசுவரன் கலை எப்படி தனது ஆழ் மனதில் இருந்த சோகத்தை வெளிப்படுத்தத் தூண்டியது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். இளையராஜாவின் இசை நம் உணர்வுகளோடு பிணைந்திருப்பதை சிலாகித்துப் பேசும் கட்டுரை அது. மகுடேசுவரன், தனது தந்தை இறந்த செய்தி தெரிய வந்ததில் இருந்து அவரை அடக்கம் செய்யும் வரை தனக்குக் கண்ணீரே வரவில்லை என்று கூறியிருப்பார். அத்தனை பேர் வந்து துக்கம் விசாரிக்கும் போது அழத்தோன்றவில்லை என்பார். இறப்பு சார்ந்த அனைத்து சடங்குகளும் முடிந்த பிற்பாடும், அவரது மனநிலையில் ஒரு மாற்றமும் இருக்காது. நான்கைந்து நாட்கள் கழித்து ஈமக்கிரியைக்காக குடும்பத்துடன் பொருட்கள் வாங்கச் சென்றவர், பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு பாடல் ஒலிக்கும். “இதயம் ஒரு கோயில், அதில் உதயம் ஒரு பாடல்” எனத் தொடங்கி, “ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே” என்ற வரி வரும் போது, பெருங்குரலெடுத்து அழுது அரற்றியதாகச் சொல்லுவார். அந்தப் பாடலில் இருக்கும் ஏதோ ஒன்று, அவரின் அழுத்தத்தை வெளியேற்றும் மருந்தாக இருந்திருக்கிறது. ஒரு வகையில், இளையராஜாவின் அந்தப் பாடல் கவிஞர் மகுடேசுவரனுக்கு ஒரு cathartic reliefஐ அளித்திருக்கிறது. 

தமிழ்ச் சமூகத்தில் இப்போதும் இறுதி ஊர்வலத்தில் ஆடும் வழக்கம் இருக்கிறது. சோகத்தை வெளிப்படுத்துவதற்காக தொடங்கியிருக்கலாம். இன்று வேறு மாதிரி ஆகியிருந்தாலும் வழக்கம் அப்படியே இருக்கிறது. வேறு எந்த சமூகத்திலும் இது இருப்பதாகத் தெரியவில்லை. Art is a form of expression என்பது இது போன்ற சில விசயங்களினால் வேறு ஒரு தளத்தில் விளங்கத் தொடங்குகிறது. இது போன்ற வலியை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை, அதனை சரியான பார்வையில் புரிந்து கொண்டவர்கள் ஆகச்சிறந்த கலைஞர்களாக உருவாகிறார்கள். இப்படி, மனித வாழ்வில், உணர்வுகளில் கலையின் தாக்கத்தைப் பார்க்கையில், யோகி-பி யின் மடை திறந்து பாடலின் இறுதியில் வரும் “கலை! மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும், அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா அது” என்ற சொற்றொடரின் உண்மை விளங்குகிறது.

Leave a comment