பண்டைய தமிழ் இலக்கியங்களில் வடக்கிருத்தல் எனும் தற்கொலைச் சடங்கினைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. இந்தச் சடங்கிற்கு “சல்லேகனை” என்று இன்னொரு பெயரும் உண்டு. போரில் புறமுதுகிட்டுத் தோற்றாலோ, தீராத துன்பம், நோய் முதலியவற்றால் அவதியுற்றாலோ சல்லேகனை மேற்கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். வரலாற்றில், இலக்கியத்தில் நமக்கு அறிமுகமான சிலர் இதனை மேற்கொண்டு உயிர் நீத்ததைப் பற்றி வெண்ணிப் பறந்தலை யில் எழுதியுள்ளேன்.
இதே போல் ஒரு தற்கொலைச் சடங்கு ஜப்பானிலும் இருந்திருக்கிறது. “செப்புகு” என்றழைக்கப்படும் அந்தச் சடங்கினை சாமுராய் வகுப்பினைச் சார்ந்தவர்கள் பின்பற்றி வந்திருக்கிறார்கள். போரில் தோற்கும் பட்சத்தில், தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, இச்சடங்கினை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், போரில் வென்றவர்கள், தோற்றவர்களிடம் “செப்புகு” மேற்கொண்டு உயிர் துறக்கச் சொல்வதும் வழக்கமாக மாறியிருக்கிறது. 12ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கிய இந்தச் சடங்கு, கிட்டத்தட்ட 1800களின் இறுதி வரையில் பழக்கத்தில் இருந்திருக்கிறது.
பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் ஒரு வேளை முதுகில் காயம்பட்டு இறந்தால், புதைப்பதற்கு முன், அவ்வீரர்களின் நெஞ்சில் வாளால் கீறும் மரபு இருந்திருக்கிறது. புறமுதுகிட்டு ஓடினால் மட்டுமே முதுகில் காயம்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. துணிச்சலான வீரனாக இருந்தாலும், எதிரிகள் மறைந்திருந்து தாக்கும் பொழுது, முதுகில் காயம்பட்டு உயிர் துறக்க வாய்ப்புண்டு. அம்மாதிரியான சூழ்நிலைகளில் மாண்பு குறையாமல் இருக்க, இறந்த வீரர்களை புதைப்பதற்கு முன் இது போல நெஞ்சில் கீறியிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான “யாத்திசை” திரைப்படத்தில் இது குறித்த காட்சி உண்டு. பாண்டிய மன்னன் ரணதீரனைக் கொல்ல எயினர் கூட்டம் முயலும் போது, இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். போரில் மாண்ட ரணதீரனின் மெய்க்காவலர்களை புதைக்கும் பொழுது, அவ்வீரர்கள் சிலரின் நெஞ்சில் வாளால் கீறும் நிகழ்வினை இயக்குனர் தரணி ராசேந்திரன் காட்சிப் படுத்தியிருப்பார். இந்த மரபு இருந்ததைப் பதிவு செய்யும் பொருட்டே அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
சல்லேகனையுடன் ஒப்பிடும் பொழுது, கத்தியினால் தன் வயிற்றைக் கிழித்து உயிர் துறக்கும் செப்புகு சற்றே கோரமானது. ஆங்கிலத்தில் disembowelment என்கிறார்கள். அதாவது, ஒருவர் தன் வயிற்றைக் கிழித்துக் கொள்வதால், குடல் வெளியே வந்து, அதனால் மரணம் நிகழ்வது. செப்புகு மேற்கொள்பவர், தன்னுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்ட பிற்பாடு, அவரை அந்த வேதனையில் இருந்து விடுவிக்க, வயிறு கிழிபட்டவரின் தலையினை வேறொருவர் துண்டிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. இப்படி தலையைத் துண்டிப்பவர்களுக்கு “கைஷாகுனின்” என்று பெயர். ஜப்பானிய மொழியில் கைஷாகுனின் என்றால் பராமரிப்பவர் என்று பொருள் தரும். ஒரே வெட்டில் தலை துண்டிக்கப்படாவிடில், கைஷாகுனினுக்கு அவப்பெயர் வந்து சேரும் நிலையும் இருந்திருக்கிறது.
போரின் வெற்றி தோல்வி சார்ந்த இந்தச் சடங்கு காலப்போக்கில் வெகுவாக மாற்றமடைந்திருக்கிறது. வலிமையான, நிலையான அரசு அமையப் பெற்றால், போர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விடும். இப்படி போர்கள் இல்லாத சூழ்நிலையில், சாமுராய் வகுப்பினருக்கு அதிக வேலையில்லாமல் போக, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தின் உயர் பதவிகளில் அமரத் தொடங்கினார்கள். இது போன்ற சுகபோகமான உயர் பதவிகளில், அதிகாரங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில், நெறி பிறழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததால், சாமுராய்களுக்கு கடுமையான விதிகள் இருந்தன. அவற்றை மீறுபவர்கள், செப்புகு மேற்கொண்டு உயிர் துறக்கப் பணிக்கப்பட்டார்கள். இப்படியாக, தற்கொலைச் சடங்காக இருந்த செப்புகு தண்டனையாக மாற்றம் அடைந்தது. 1800களில் இறுதியில் தண்டனையாக செப்புகுவை பயனபடுத்தும் வழக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டாலும், தற்கொலைச் சடங்காக அந்த வழக்கம் தொடர்ந்தது.
கடைசியாக 1970களில் யுகியோ மிஷிமா எனும் நபர் இச்சடங்கின் மூலம் உயிர் துறந்துள்ளார். மிஷிமாவும் அவருடைய தோழர்கள் நால்வரும், ஒரு ராணுவ முகாமில் நுழைந்து, அதன் தளபதியை சிறைப்பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி படுதோல்வி அடையவே, மிஷிமா செப்புகு மூலம் உயிர் துறக்க முடிவு செய்திருக்கிறார். மிஷிமா தன் வயிற்றைக் கிழித்த பிற்பாடு, அவரது நண்பர் மோரிட்டா கைஷாகுனினாக பொறுப்பேற்று, மிஷிமாவின் தலையை மூன்று முறை துண்டிக்க முயன்று தோற்றுப் போக, நான்காவது முறையாக வேறொருவர் துண்டித்து சடங்கினை முடித்து வைத்திருக்கிறார். யுகியோ மிஷிமா ஒரு நாடக ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் யுகியோ மிஷிமா ராணுவ முகாமைக் கைப்பற்ற முயன்றார் என்பதொரு தனிக்கதை, படித்துப் பாருங்கள்.