“மாற்றான்” படத்தின் அருமையான பாடல்களில் ஒன்று கால் முளைத்த பூவே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடல். மெட்டு, பாட்டு என்று இரண்டு தளங்களிலும் மிகவும் கடினமான பாடல் இது. ஜாவேத் அலி மற்றும் மகாலட்சுமி பாடிய இப்பாடலை பதிவு செய்ய மூன்று நாட்களானது என்று ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளில் ரஷ்யா தொடர்பான சில சொற்களைப் பயன்படுத்தியிருப்பார் கார்க்கி. வால்கா நதி, பேலே நடனம், கேமாமில் பூ போன்றவை. இவற்றில் பேலே நடனம் இத்தாலியப் புரட்சியின் போது உருவாகி, ரஷ்யாவில் பரவியது. கேமாமில் பூ, ரஷ்யாவின் தேசிய மலர், ரஷ்யாவின் கலாச்சாரத்தோடு ஒன்றியிருப்பது. நமது மஞ்சள், துளசியைப் போன்று மருத்துவ குணங்களுக்காக ரஷ்ய மக்களின் வாழ்வியலோடு இணைந்தது. ரஷ்யாவின் நாட்டுப்புறக் கதைகளில் கூட கேமாமில் பூவிற்கு இடம் உண்டு. அதற்குப் பின்னர் வரும் “சோவியத் ஓவிய கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்” என்ற வரியில், சோவியத் ஓவியங்களைக் கவிதையோடு ஒப்பிட்டு, அதனை காதலியின் விழிகளை சிறப்பிக்க பயன்படுத்தியிருப்பார். இந்த சோவியத் ஓவியங்கள் சார்ந்த சொல் பயன்பாடு சற்றே சுவாரஸ்யமானது.
ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் கலையை, குறிப்பாக ஓவியங்களை அரசுக்கு ஆதரவாக பயன்படுத்த தொடங்கினார்கள் ரஷ்ய ஆட்சியாளர்கள். ஓவியர்கள் அரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கும் ஆதரவான படைப்புகளை உருவாக்க பணிக்கப்பட்டார்கள்.அதற்குத் தகுந்த சன்மானமும் வழங்கப்பட்டது. இந்தப் படைப்புகளை “சோஷலிஸ யதார்த்தவாதம்” என்று அழைத்தார்கள். ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக்காலம் தொடங்கி 1980கள் வரை இது தொடர்ந்தது. ஆனால் அந்தப் படைப்புகளுக்கும் அன்று நிலவிய யதார்த்த வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட இடைவெளி இருந்தது. உண்மையான சமூக யதார்த்தத்தை பிரதிபலித்த ஓவியங்கள் தடை செய்யப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியை, அதன் ஆட்சியை, கொள்கைகளை உயர்த்திப் பேசும் ஓவியங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைத்தது. பிற்காலத்தில் சோவியத் உடைந்து இந்தக் கோட்பாடுகளுக்கு வேலை இல்லாமற் போய் விட்டது. அதற்குப் பின்னர் கலைஞர்கள் சற்றே சுதந்திரமாக செயல்பட்டார்கள்.
கனடாவைச் சேர்ந்த ஜோர்டன் பீட்டர்சன் எனும் உளவியலாளர் சோவியத் கால ஓவியங்களை சேகரிப்பவர். ஒரு நேர்காணலில் மாக்சிம் கார்க்கி, லெனின் சார்ந்த ஓவியங்களை e-bay இணைய தளத்தில் தள்ளுபடியில் வாங்க இயலும் இன்றைய சூழ்நிலையைச் சுட்டிக்காட்டி, கம்யூனிச சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை, முதலாளித்துவத்தின் பிரதிபலிப்பான மின் வர்த்தக வணிகத்தில் வாங்க இயலும் முரணைச் சொல்லிச் சிரிப்பார். கலையை சர்வாதிகாரம் ஒடுக்கவதில் உடன்பாடில்லாமல் சர்வாதிகாரத்தையும் சோவியத்தில் நிலவிய கம்யூனிசத்தையும் சிறுமைப்படுத்தி பேசியிருப்பார். அந்த நையாண்டியின் ஊடே அந்த ஓவியங்களின் கலை நயத்தையும் சிலாகித்துப் பேசியிருப்பார். ஆனால், அதைத் தாண்டி அவர் சொல்லும் விசயம் மிக முக்கியமானது.
அந்த “சோஷலிஸ யதார்த்தவாத” ஓவியங்களைப் பார்க்கும் போது, அன்றைய காலகட்டத்தில் கலைக்கும் சர்வாதிகார பிரச்சாரத்துக்கும் இடையே நிலவிய போராட்டம் அந்த ஓவியங்களில் தெரிவதாகக் கூறுவார். கலைஞர்களால் வெளிப்படையாக சர்வாதிகாரத்தை எதிர்க்க முடியாவிடினும், அவர்கள் சர்வாதிகாரத்துக்கு ஆதரவான ஓவியங்களைப் படைத்தாலும், அந்த ஓவியங்களில் ஒரு போராட்டமும் எதிர்ப்பும் இழையோடுவதாகக் கூறியிருப்பார். இப்படியான ஒரு மறைமுக போராட்டத்தின் முடிவில் ஓவியமே வெல்லும் என்பார். உதாரணத்திற்கு, இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து நெப்போலியனோ, லெனினோ வரலாற்றில் இருந்து காணாமற் போகலாம், அவர்கள் அன்றைய காலத்திற்கு தேவையில்லாமல் போகலாம். ஆனால் அப்போதும் அவர்கள் சார்ந்த ஓவியங்கள், கலை என்பதன் அடிப்படையில், சிறந்த படைப்புகளாகத் திகழும். எப்போதும் முடிவில் கலை தான் வெல்லும் என்று அழகாக விளக்கியிருப்பார்.
சர்வாதிகாரம் கலையை பிரச்சாரத்துக்கான கருவியாக பயன்படுத்துவது இன்று வரையில் தொடர்வதைப் பார்க்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியாலும், மக்களை எளிதாக கவர முடிவதாலும், இன்று சினிமா அந்தக் கருவியாக மாறியிருக்கிறது. இதைப் பற்றிப் படிக்கும் பொழுது, மனித வரலாற்றில் கலையும் இலக்கியமும் அதிமுக்கியம் வாய்ந்தவை என்று கூற்று மேலும் உறுதியானது. சோவியத் அரசியலில் இருந்து கால் முளைத்த பூவிற்கு வருவோம். பாடலுக்கான சூழல் உக்ரைனில் நிகழ்வதாக இருப்பதால், சோவியத் சார்ந்த சொற்களை கார்க்கி பயனபடுத்தி இருக்கலாம். மிக நேர்த்தியாக சொற்களைக் கோர்த்திருப்பார். சோவியத் ஓவியங்கள் அழகாக இருந்தாலும், அவற்றின் வழியாக உண்மை நிலவரத்தைச் அறிய முடியாத சூழல் இருந்ததால் கார்க்கி, காதலியின் கண்களுக்கு உவமையாக அவற்றைப் பயன்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன்.
இனி எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் சோவியத் நினைவு வருவதை தடுக்க இயலாது.