தமிழ் வரலாற்றுப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும் வெள்ளையரை “பரங்கியர்கள்” என்று குறிப்பிட்டு பார்த்திருப்போம். இந்த பரங்கியர் என்ற சொல்லின் வேர் சற்று சுவாரசியமானது. இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில நூறு ஆண்டுகள் பின் செல்ல வேண்டும்.
சிலுவைப் போர்கள் நடந்த காலகட்டத்தில், மேற்கே இருந்து வந்த சண்டையிட வந்த வெளிநாட்டவர்களை பெர்சியர்கள் ஃபாரெஞ்சி (farenji) என்று அழைத்தார்கள். அவர்கள் பிரான்ஸிலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பதற்காக இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. வெளி நாட்டில் இருந்து தங்கள் நாட்டில் குடியேற வந்தவர்களை இழிவுபடுத்த இந்தச் சொல்லை பயன்படுத்தினார்கள். பின்னர் இந்த சொல் ஃபிரங்கி (firangi) என்று மாற்றம் அடைந்தது. குறிப்பாக இந்தியாவில், முகலாயர்கள் ஆட்சியின் போது ஐரோப்பாவில் இருந்து வந்த கிறித்தவ மிஷனரிகளை firangi என்று அழைக்கத் தொடங்கினார்கள். மேற்கு ஐரோப்பாவைக் குறிப்பிட பெர்சியர்கள் ஃபிராங்கிஸ்தான் என்ற பெயரை பயன்படுத்தினார்கள். ஃபிராங்கி என்பது ஃபிராங்க்ஸின் (franks, french people) பெர்சிய வடிவம். -istan பெர்சிய மொழியில் நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்.
வட இந்தியாவின் சில கிராமப்புறங்களில் இந்த சொல் கேலிக்காகவும், கவர்ச்சிக்காகவும் புனைப்பெயராக பயன்படுத்தப்பட்டு, பின்னர் புழக்கத்தில் இருக்கும் பெயர்களாகவும் உருமாறியிருக்கிறது. உதாரணத்திற்கு, வங்காளத்தில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை வழிநடத்திச் சென்ற தலைவர்களில் ஒருவரின் பெயர் முன்ஷி ஃபிரங்கி. ஃபிரங்கி சிங், கேசு ஃபிரங்கி என்ற பொதுவான பெயர்களோடு இந்த சொல் ஒன்றிப்போனது.
தக்காண சுல்தான் அரசுகளில் வெள்ளையர்களுக்காக படைப்பிரிவுகளும் இருந்தது. வெள்ளையர்கள பீரங்கி இயக்குவதில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால், சுல்தான்கள் அவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். வெள்ளையர்கள் நிறைந்த இது போன்ற படைப்பிரிவுகள் “ஃபிரங்கியான்” என்று அழைக்கப்பட்டன. யோசித்துப் பார்க்கையில் தமிழில் பீரங்கி என்ற சொல்லின் வேர், அந்த கருவியை இயக்குவதில் தேர்ச்சி பெற்றிருந்த “ஃபிரங்கியர்கள்” என்ற சொல்லாக இருக்கலாம்.
பெர்சிய-முகலாய வேர்கள் கொண்ட இச்சொல், தமிழகத்திற்கு இந்த மிஷனரிகள் வருகை தந்த பொழுது, தமிழில் “ஃப” இல்லாததால், சற்று மாற்றமடைந்து “பரங்கி” என்று மருவியது. பின்னர் அதனுடைய பன்மையான பரங்கியர்கள் என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்த போர் வீரர்கள் படையெடுத்த போது, அவர்களைக் குறிப்பிட கும்பினியர் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். கம்பெனி என்ற சொல் உருமாறி கும்பினியராக மாறியது. காலப்போக்கில் பரங்கியர், கும்பினியர் என்ற இரு சொற்களும் ஒன்றன் இடத்தில் மற்றொன்று என்று பயன்படுத்தப்படத் தொடங்கி, வெள்ளையர்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாக மாறியது.
வெளியே இருந்து வந்த மஞ்சள் பூசணி பரங்கிக்காய் என்று பெயர் பெற்றது. வெள்ளைப் பூசணியை சமையலுக்கு மட்டுமன்றி திருஷ்டி கழித்தலுக்கும் வேறு சில சுபகாரியங்களுக்கும் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் உள்ளது. மஞ்சள் பூசணி எனும் பரங்கிக்காய் சமையலைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவது இல்லை.