கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்

கிங்ஸ்மேன் படங்களில் சீக்ரெட் சர்வீஸ் (2014), கோல்டன் சர்க்கிள் (2017) வரிசையில், 2021ல் “தி கிங்ஸ்மேன்” வெளியானது. இந்தப் படத்தின் கதை, முந்தைய இரு படங்களுக்கும் prequelஆக எடுக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்மேன் எனும் பிரிட்டிஷ் ரகசிய உளவு அமைப்பு ஏன் உருவானது, அதன் அலுவலகம் ஒரு தையல் கடையில் அமைந்துள்ள பிண்ணனி முதலியவற்றை முதலாம் உலகப் போரின் உண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி முடிந்த அளவு விறுவிறுப்பாக எடுத்துள்ளனர். சில போர்க்கள காட்சிகள், முழுக்க போர் சார்ந்த திரைப்படங்கள் அளவுக்கு நன்றாக இருந்தன. 

விசயம் அதுவல்ல. இந்தப் படத்தின் pre-climax காட்சியில், கதாநாயகனுக்கு வில்லனை கண்டுபிடிக்க உதவியாயிருப்பது  ஒரு கஷ்மீரி (cashmere) துணி. வில்லனின் அடியாளான ஒரு பெண் அந்த வகை துணியை கழுத்தைச் சுற்றி அணிந்திருக்க, அதனை வைத்து வில்லன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பார் கதாநாயகன். அந்தப் பெண்ணுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் சண்டையின் ஊடே, அது உண்மையான கஷ்மீரி துணியா என்று உறுதிப்படுத்த அந்த முழு துணியும் ஒரு மோதிரத்தின் உள் சென்று வெளிவருவதாக காண்பிக்கப்படும். ஒரு துணி ஒரு மோதிரத்தினுள் சென்று வெளிவர, அது எவ்வளவு மெலியதாக இருக்க வேண்டும் ? என்ன வகையான நூலில் நெய்யப்பட்டிருக்க வேண்டும் ?

பொதுவாக கம்பளி துணிகள் செம்மறி ஆடுகளின் முடியிலிருந்து தயாரிக்கப்படுபவை. ஆனால் கஷ்மீரி துணிகளை மலை ஆடுகளின் முடியிலிருந்து தயாரிக்கின்றனர். அதனால் தான் இத்தனை மெல்லிசாக உள்ளன. குறிப்பாக இவை இமயமலைத் தொடர்களில் வசிக்கும் ஆடுகளின் முடியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை ஆடுகள் சீனா, மங்கோலியா போன்ற நாடுகளின் மலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.

NADAM என்ற நிறுவனம், மங்கோலியாவில் இருக்கும் மலை ஆடுகளில் இருந்து இந்தக் கம்பளியை கொள்முதல் செய்து, அதில் துண்டுகள், ஸ்வெட்டர்கள் முதலியவற்றை தயாரிக்கின்றது. தரமான கம்பளி ஸ்வெட்டர்களை குறைவான விலையில் விற்பதாகச் சொல்லும் இவர்கள், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ஸ்வெட்டர்களுக்கு நிர்ணயித்திருக்கும் ஆரம்ப விலை 75 அமெரிக்க டாலர்கள். நமது மதிப்பில் கிட்டத்தட்ட 5600 ரூபாய். அதிகபட்சமாக 350 டாலர் வரை விலை போகிறது. இத்தனை விலை உயர்ந்த துணியின் தரத்தை அறிய, முன்னாளில் ring test எனப்படும் மோதிரத்தினுள் துணியை செலுத்திப் பரிசோதிக்கும் முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைத் தான கிங்ஸ்மேன் திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். இந்த வகைக் கம்பளியை ஐரோப்போவைச் சேர்ந்த ஒருவர் வாங்கிச் செல்ல, அது காஷ்மீரில் இருந்து வந்ததாகச் சொல்லி, இடத்தின் பெயரே அந்தத் துணி வகையின் பெயராகவும் மாறிப் போனது. 

இதை போன்ற சொகுசான இன்னொரு துணி வகையின் பெயர், பஷ்மீனா (pashmina). கஷ்மீரி, பஷ்மீனா ஆகிய பெயர்கள் மாறி மாறி பயன்படுத்தப்பட்டாலும், இரண்டும் வெவ்வேறு வகைகள். இதில், கஷ்மீரியைப் போல் அல்லாமல், பஷ்மீனா லடாக் பகுதியைச் சார்ந்த சங்தாங்கி எனும் ஒரு குறிப்பிட்ட வகை மலை ஆடுகளின் முடியிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இந்த வகை ஆடுகளிடம் இருந்து தருவிக்கப்படும் கம்பளி நூல்கள், மற்ற மலை ஆடுகளிடம் இருந்து தருவிக்கப்படும் கம்பளி நூல்களை விட மிக மெல்லியவை. உதாரணத்திற்கு, கஷ்மீரி வகை கம்பளி நூல்களின் தடிமன் 10-15 மைக்ரான்கள் அளவில் இருக்கும். பஷ்மீனா வகை கம்பளி நூல்களின் தடிமன் 15-19 மைக்ரான்கள் மட்டுமே. இவ்வளவு மெலிதாக இருக்கும் காரணத்தினால், இந்த வகை நூல்களை கைத்தறியில் மட்டுமே நெய்ய முடியும். அதனால இவை அளிக்கும் வெப்பமும், சொகுசும் கஷ்மீரி வகை துணிகளை விட சிறப்பாக இருக்கும். எனவே விலையும் அதிகம்.

15ம் நூற்றாண்டில், காஷ்மீர் பகுதியை ஆண்ட சைனுலாப்தீன் எனும் மன்னர், பாரசீகத்தில் இருந்து நெசவாளர்களை அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாரசீக மொழியில் கம்பளிக்கு “பஷ்ம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். சைனுலாப்தீன் அழைத்து வந்த நெசவாளர்கள், அந்தப் பகுதியில் இருந்த சங்தாங்கி வகை ஆடுகளிடம் இருந்து இந்த துணிகளை தயாரித்து இருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில், அந்தப் பகுதியில் இருந்து கிடைத்த ஒரே வகை கம்பளியாக இது இருந்திருக்கக் கூடும். அதுவே அந்தத் துணி வகைக்கு பஷ்மீனா எனும் பெயர் கிடைக்க காரணமாக இருந்திருக்கலாம்.

Leave a comment