சென்னை MRTS மற்றும் மெட்ரோ ரயில் பாலங்களின் தூண்களில் சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட மாந்தர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்துக்குச் செல்லும் மெட்ரோ தூண்களில் இவற்றை அதிகம் பார்க்கலாம். அதில் “பாண்டியன் வெள்ளியம்” என்கிற பெயர் இன்று ஈர்த்தது. யாரென்று தேடிப்பார்க்கையில் புறநானூற்றில் பாடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் என்று தெரிய வந்தது. சிறப்பு என்னவென்றால், பாண்டியன் வெள்ளியம், சோழ மன்னர் ஒருவரோடு நட்போடு இருந்தது தான். பெரும்பாலும் தீராப்பகையோடு இருந்த சோழ பாண்டிய மன்னர்கள் மத்தியில் இது வித்தியாசமாகப் பட்டது.
பாண்டியன் வெள்ளியம் நட்போடு இருந்த சோழ மன்னரின் பெயர், “குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமா வளவன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சோழ மன்னனின் பெயர் திருமாவளவன். குராப்பள்ளி என்பது ஊரின் பெயர். துஞ்சிய என்றால் இறந்த என்று பொருள். திருமாவளவன் என்ற மன்னனை அவன் இறந்த இடத்தோடு சேர்த்துக் குறிப்பிடுகிறது புறநானூற்றுப் பாடல். இது போன்று ஒரு மன்னன் இறந்த காலத்தையும்,இடத்தையும் சிறப்பித்துக் கூறும் மரபு திருவனந்தபுரம் அரசிலும், கோழிக்கோடு ஸாமூரி அரசிலும் இருந்திருக்கிறது.
குராப்பள்ளி சோழமண்டலத்தில் இருந்த ஊர். இதே ஊரில் கிள்ளிவளவன் என்ற சோழ மன்னனும் இறந்திருக்கிறார். அவர் புறநானூற்றுப் பாடல் ஒன்றில், “குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன்” என்று பாடப்படுகிறார். திருச்சிராப்பள்ளி எனும் ஊர் மருவி திருச்சி என்று ஆனதைப் போல், குராப்பள்ளி மருவி பிற்காலத்தில் குறிச்சி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
பாண்டியன் வெள்ளியம் என்று குறிப்பிடப்படும் மன்னனின் முழுப்பெயர் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகும். அதுவே சுருங்கி பாண்டியன் வெள்ளியம் என்று ஆகி விட்டது. அம்பலம் என்றால் வெளி அல்லது அரங்கம் என்றும் பொருள் உண்டு. நடராசர் ஆடும் அரங்கத்தை அம்பலம் என்று குறிப்பிடுவது வழக்கம். வெள்ளியம்பலம் என்றால் வெள்ளியால் ஆன நடராசர் ஆடும் அரங்கத்தைக் குறிக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள நடராசர் சன்னிதியில் வெள்ளியிலான நடராசர் உண்டு.
வெள்ளியம்பலம் என்று வருவதால், பாண்டியன் வெள்ளியம் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள நடராசர் சன்னிதியில் இறந்ததாகப் பொருளாகாது. அம்பலம் என்ற சொல் சங்ககாலத்தில் மருத்துவமனை இருக்கும் ஊரைக் குறிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. கிள்ளி வளவன் இறந்த குராப்பள்ளியிலும் பல மருத்துவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மற்ற இடங்களில் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர், இங்கே மட்டும் வலக்காலைத் தூக்கி ஆடுகிறார். இதில் ஒரு கிளைக்கதை உண்டு.
இராசசேகர பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன், 63 கலைகள் கற்றவன், நாட்டியத்தைத் தவிர.சமகால மன்னனாகிய கரிகால் சோழனோ 64 கலைகளையும் கற்றறிந்தவன். பாண்டியனின் அவைக்கு வந்த சோழ நாட்டுப் புலவர் ஒருவர் இதனை குறையாகச் சொல்ல, தானறியாத நாட்டியக்கலையை கற்றுக் கொள்ள முயல்கிறான் இராசசேகர பாண்டியன். நாட்டியம் ஆடக் கற்றுக்கொண்ட பின், அதில் உள்ள சிரமத்தை உணர்கிறான். ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் நடராசருக்கும் கால் வலிக்குமே என்று வருந்துகிறான். இறைவனின் கால் வலிக்கக்கூடாது என்பதற்காக அவன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறான். அதனால் இங்கு மட்டும் இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுகிறார்.இது திருவிளையாடல் புராணத்தின் 24வது படலமான கால் மாறி ஆடிய படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிள்ளி என்ற பெயர் சோழர்களுக்கானது போல, வழுதி என்பது பாண்டியர்களின் குடிப்பெயராக விளங்கி வந்தது.உக்கிரப்பெருவழுதி, மாறன் வழுதி போன்ற பெயர்களை உதாரணமாகக் கொள்ளலாம். வழுதி என்ற சொல்லுக்கு மதிக்கத்தக்க, வாழ்த்துக்குரிய, சிறப்புக்குரிய போன்ற பொருள் வரும்.பெருவழுதி என்றால் பெருஞ் சிறப்புக்குரியவன் என்று பொருள்.இதே வழுதி என்ற பொருளோடு விளங்கும் மற்றொரு சொல் பழு என்கின்றனர். உதாரணத்திற்கு பழுவேட்டரையர். பழு+வேல்+அரையர். பெரிய அல்லது சிறப்பான வேலை(வேல்) உடைய அரசர் என்று பொருள். அரசர் என்பது மருவி, அழைக்கப்படும் பெயரோடு சேர்ந்து அரையர் ஆகிவிட்டது என்று பொன்னியின் செல்வன் நாவலில் கூட ஒரு செய்தி உண்டு. வல்லவரையன், வானாதிவிரையன் போல.
பாடலில், இரு மன்னர்களையும் ஒரு சேர போற்றிப் பாடியிருப்பது சிறப்பு. இற்றுப் போன ஆலமரத்தை விழுதுகள் தாங்குவது போல, முன்னோர்கள் இறந்த பின்பு பாண்டியன் வெள்ளியம் தன் நாட்டைத் தாங்குவதாக பாடல் சொல்கிறது. அனைத்தும் அனைவருக்கும் சமம் எனும் வகையில் ஆட்சி புரிந்தான் என்று தெரிய வருகிறது.
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நொடிந்திருந்த பாண்டிய அரசை மேலும் வருத்தாமல் இருக்க, சோழ மன்னனோடு நட்பு பாராட்டி இருக்கலாம். சோழனிடம் தோற்றதாகவோ அடிமையானதாகவோ தெரியவில்லை. இருவரும் திருமாலும் பலராமனும் போன்று இருப்பதாக பாடலாசிரியர் குறிப்பிடுகிறார்.
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
மேலும், குன்றுகளில் புலி, மீன் ஆகிய இரு கொடிகளையும் சேர்த்துப் பொறிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். வீம்புக்கு சண்டை வளர்க்காமல், நாட்டு நலனுக்காக சோழனுடன் இணக்கமாக இருந்ததாகத் தெரிகிறது.
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே