எந்த ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கும், மனதில் இருக்கும் ஒரு குறிக்கோளை அடைவதற்கும் அடித்தளம் மனிதனின் சிந்தனை. எல்லோரும் தான் சிந்திக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள். கடின உழைப்பாளிகள் , நன்கு யோசித்து முடிவெடுப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. கடின உழைப்பாளிகளுள், நினைத்த குறிக்கோளை அடைவது மிகச் சிலரே. காரணம், சிந்திக்கும் முறை. குறிக்கோள், உழைப்பு போன்றவை ஜெயிப்போர் தோற்போர் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், சிந்திக்கும் முறை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது.
ஓவியம், எழுத்து போல சிந்தித்தலும் ஒரு கலைதான். இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று நமது மூளை ஆண்டாண்டு காலமாக பழக்கப்பட்டிருக்கிறது. வெற்றி ஒன்றே குறிக்கோள், அதனை அடையும் வழியை மட்டும் பார் என்று கடிவாளம் கட்டிய குதிரை போல ஓடப் பழக்கப்பட்டிருக்கிறோம். கல்வி முறை மட்டுமன்றி சமூக பொருளாதாரச் சூழலும் அதற்குக் காரணம். ஆனால், காரணத்தைக் கைகாட்டி ஏதும் செய்யாமல் இருந்தால், இருக்கும் நிலையிலேயே உழன்று கொண்டு இருக்கவேண்டியது தான். தடைகளை ஒதுக்கி, முன்னேறிச் செல்ல, அரதப் பழசான சிந்திக்கும் முறையில் இருந்து விலக வேண்டியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் Smart Work என்பது போல Smart Thinking-கும் அவசியமாகிறது. எந்த வகையான சிந்தனை நமக்கு சாதகமான முடிவுகளை, ஏதுவான சூழலை விரைவாக உருவாக்கித் தரும் என்பது தொடர்பான நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வகை “Inversion Thinking”, தலைகீழாகச் சிந்தித்தல்.
நமது குறிக்கோளிற்கு நேர் எதிரான குறிக்கோளை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அதை அடைவதற்கான வழிமுறைகளைப் பட்டியலிட்டு, அவற்றைச் செய்யாமல் விடுதல் Inversion-ன் அடிப்படை. அதாவது, ஜெயிப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல், தோற்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அவற்றைச் செய்யாமல் இருப்பதன் மூலம் தோல்வியைத் தவிர்ப்பது. உதாரணத்திற்கு,
அலுவலகத்தில் நல்ல மேலாளராக பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர், மோசமான மேலாளராக பெயரெடுக்க விரும்பி, அதற்கான வழிமுறைகளைப் பட்டியலிட்டால் எப்படி இருக்கும் ?
- சக ஊழியர்களிடம் பரிவு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.
- அனைத்து முடிவுகளையும் தொலை நோக்குப் பார்வை இல்லாமல் எடுக்க வேண்டும்.
- ஊழியர்கள் எனது கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறினால், அதனை ஏற்றுக் கொள்ளாமல் உடனே புறந்தள்ள வேண்டும்.
- எளிதாகக் கடந்து செல்லக் கூடிய சிறிய பிரச்சனைகளுக்குகூட அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட வேண்டும்.
- சிக்கலான நேரங்களில் ஊழியர்களுக்கு பக்கபலமாக இல்லாமல், அவர்களை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும்.
மேற்சொன்ன அனைத்தையும் செவ்வனே செய்தால், மிக மோசமான மேலாளராக பெயரெடுப்பது சுலபம். ஆனால், இவை அனைத்தையும் மிகக் கவனமாக செய்யாமல் இருந்தால், நல்ல மேலாளர் என்ற பெயர் கிடைக்குமோ இல்லையோ, குறைந்த பட்சம் மோசமான மேலாளராக இருக்க மாட்டார். மோசமான மேலாளராக இல்லாமல் இருப்பதுதானே நல்ல மேலாளராக இருப்பதற்கான முதற்படி. வெற்றியை அடைய தோல்வியைத் தவிர்ப்பதை விட சிறந்த வழி வேற என்ன இருக்க முடியும் ? இதைத் தான் Avoid failures to attain success என்பார்கள். இந்த முறையில் சிந்திப்பது, ஒரு தெளிவைத் தரும். அதன்மூலம் கடினமாக குறிக்கோள்களை அடைவதை எளிதாக்கும்.
இது போன்று நீங்கள் சிந்தித்த அனுபவம் உண்டா ? இல்லை என்றால், இதனை உங்களின் அன்றாட செயல்களில் முயற்சி செய்து பாருங்கள். காலை அலுவலகத்திற்கு தாமதமாக செல்வது எப்படி என்பது கூட இந்த activityக்கு ஒரு நல்ல ஆரம்பப்புள்ளி. தலைகீழாகச் சிந்திக்க வாழ்த்துகள்.