சோழ மன்னன் கரிகாலனுக்கும், சேர மன்னன் உதியன் சேரலாதனுக்கும் இடையே போர் நடந்த இடம் வெண்ணிப் பறந்தலை எனும் ஊராகும். கழாத்தலையாரும், வெண்ணிக்குயத்தியாரும் பாடி, புறநானூற்றில் (முறையே புறம் 65,66) தொகுக்கப்பட்டுள்ள பாடல்களில், இந்தப் போரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
கழாத்தலையாரின் பாடல், கரிகாலனின் வெற்றியையும் அதனைத் தொடர்ந்து சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்ததையும் குறிப்பிடுகிறது. தோற்ற சேரன் ஏன் வடக்கிருந்து உயிர் நீத்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னர், வடக்கிருத்தல் எனும் பண்டைய மரபைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.
தன்னுடைய மானத்திற்கு கேடு வரும் பொழுது, அதனை மீட்டெடுக்கும் பொருட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல், வடக்கிருத்தல் எனப்படும். இதற்கான சான்றுகளை நாம் பல்வேறு இலக்கியங்களில் காணலாம்.
- தன் பிள்ளைகளால் உண்டான கலகத்தின் காரணத்தால், தன் மாண்புக்கு கேடு வந்ததென்று, கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். தான் கண்ணால் கண்டிராத உற்ற நண்பன், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தயாருக்கும் தன்னருகே இருக்கை ஏற்பாடு செய்யச் சொன்னான். அவரும் நண்பனுக்காக வடக்கிருந்து உயிர் நீத்ததை நாம் அறிவோம்.
- சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் எனும் பெண் சமணத் துறவி கதாப்பாத்திரம் உண்டு. இவர் கோவலனுக்கும் கண்ணகிக்கும், மாதரி எனும் மூதாட்டியிடம் அடைக்கலம் கோருகிறார். கோவலன் கொலையுண்டது, அதனைத் தொடர்ந்து பாண்டியன் மாண்டது, கண்ணகியின் கோபத்தீயிற்கு மதுரை எரிந்தது போன்ற துயரங்களைத் தாங்க முடியாமல், கவுந்தி அடிகள் வடக்கிருந்து உயிர் துறக்கிறார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
வடக்கிருந்து உயிர் நீத்தல் பற்றிய செய்திகள் சமண நூல்களில் இருப்பதால், இது சமண மரபென்று தெரிகிறது. சிலப்பதிகாரமும் சமண நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருங்கலச் செப்பு எனும் சமண நூலில் வரும்,
இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால்
கடை துறத்தல் சல்லே கனை
எனும் பாடல், துயரம், தீராத நோய், மூப்பு ஆகியவையால் துன்பப்பட்டால் சல்லேகனை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது. இதில் “சல்லேகனை” என்பது வடக்கிருத்தலைக் குறிக்கும். வடதிசை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் காரணத்தால், இது வடக்கிருத்தல் என்று வழங்கப்பட்டது.
வெண்ணிப் பறந்தலைக்கு வருவோம்,
போரில், கரிகாலன் எறிந்த வேலானது, சேரலாதனின் மார்பைத் துளைத்து முதுகில் வெளியேறியதுதான் அவன் வடக்கிருந்ததற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பண்டைய தமிழரின் போர் மரபில், முகத்திலும், மார்பிலும் பெற்ற காயங்களே விழுப்புண்களாக கருதப்பட்டன. வேறு இடங்களில், குறிப்பாக முதுகில் பெறும் காயங்கள் “புறப்புண்களாக” கருதப்பட்டன.
தன் முதுகில் காயம்பட்டதால் அவமானத்திற்குள்ளான சேரன், போர்க்களத்திலயே தன் வாளை ஊன்றி, வடக்கிருந்து உயிர் நீத்தான். கழாத்தலையார் இதனை,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்,
வாள் வடக்கு இருந்தனன்
என்று பாடுகிறார்.
வெற்றி பெற்ற கரிகாலனை நோக்கி பாடப்பட்டிருந்தாலும், தோல்வியடைந்த சேர மன்னன் அதிகமாகப் புகழப்பட்டிருப்பது, வெண்ணிக்குயத்தியார் இயற்றிய பாடலின் தனிச்சிறப்பு. காரணத்தையும் விளக்கத்தையும் பார்ப்போம்.
புறப்புண் கொண்டதால், போரில் தான் வெற்றியடைந்தாலும் அதைத் தோல்வியாகத்தான் கருத முடியும். அது வெற்றியாகாது என்ற நினைகிறான் சேரலாதன். வெற்றி தோல்வியை விட, உயிரை விட, மானமே பெரிதென்று வடக்கிருந்து உயிர் துறக்கிறான்.போரில் கரிகாலன் வெற்றி பெற்றிருந்தாலும், தன்னுடைய மானத்தின் வெற்றியை அவனுக்கு விட்டுத்தராமல், வடக்கிருந்து உயிர் நீத்தான். போரில் வென்று சோழன் அடைந்த புகழை விட, தோற்று சேரன் அடைந்த புகழ் பெரிது. அத்தகைய புகழை சோழனால் வெல்ல இயலாது. அதனால், சேரலாதன் கரிகாலனை விட சிறந்தவன் ஆகிறான் என்கிறார் வெண்ணிக்குயத்தியார்.
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே
வெண்ணிப் போரைப் பற்றியே இரு பாடல்கள் உண்டு,
- முடத்தாமக் கண்ணியார் பாடியது.
- வெண்ணிக்குயத்தியார் மற்றும் கழாத்தலையார் பாடியது.
சோழ மரபில் இரு கரிகாலன்கள் உண்டு என்பதையும், இந்தப் பாடல் அவர்களில் யாரைப் போற்றி பாடப்பட்டது என்பதையும் இவற்றில் இருந்து அறியலாம்.
முடத்தாமக் கண்ணியார் பாடிய “பொருநாற்றுப்படை” கரிகாலனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. இதிலுள்ள வெண்ணிப் பறந்தலைப் போரைப் பற்றிய பாடலில், சேர, பாண்டிய மன்னர்களை கரிகாலன் வென்றதாக செய்தி உள்ளது.ஆனால், கழாத்தலையார் மற்றும் வெண்ணிக்குயத்தியார் பாடல்களில் பாண்டியனைப் பற்றிய குறிப்புகள் இல்லை. இத்தனை சிறப்பு வாய்ந்த போரில் பாண்டியன் இருந்திருந்தால், கழாத்தலையாரோ, வெண்ணிக்குயத்தியாரோ அவனைப் பற்றி பாடியிருக்க வேண்டும். மாறாக, சேரனைப் பற்றி மட்டும் பாடியிருப்பதால், இவை இரண்டும் ஒரே இடத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த இரு வேறு போர்கள் எனக் கொள்ளலாம்.
மேலும் மாமூலனார் எனும் புலவர் எழுதிய அகநானூற்றுப் பாடல் (அகம் 55) ஒன்றில், வெண்ணிப் பறந்தலைப் போரினைப் பற்றிய உவமை உள்ளது. தன் மகள் காதலனுடன் போய்விட்டதறிந்த ஒரு தாய், தன் அண்டை வீட்டாரிடம் இவ்வாறு அழுது புலம்புகிறாள்.
“வெண்ணிப் பறந்தலைப் போரில், புறப்புண் பட்டதால், சேரலாதன் வடக்கிருந்ததைப் பார்த்த சான்றோர் சிலர், அவனோடு சேர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தனர். அச்சான்றோர்களுக்கும் சேரலாதனுக்கும் எவ்வித உறவும் இல்லாத போதும், பெறுதற்கரிய பேருக்காகவும், அவன்பால் கொண்ட அன்பிற்காகவும் உயிர் நீத்தனர். ஆனால், என் உயிருக்குச் சமமான என் மகள் பிரிந்து சென்ற பின்பும், நான் இன்னும் உயிரோடிருக்கிறேனே” என்று அழுது அரற்றுகிறாள்.
மாமூலனார் எழுதிய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. வடக்கே பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு, மகத நாட்டை ஆண்ட நந்தர்களைப் பற்றி எழுதிய பாடல் (அகம் 265) பின்வருமாறு,
பல்புகழ் நிறந்த வெல்போர் வேந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ
நந்தர்களின் காலம் கிமு 4ம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மெளரியர்களின் தெற்கு நோக்கிய படையெடுப்பு குறித்தும் எழுதியிருக்கிறார். மெளரியர்களின் காலம் கிமு 322 முதல் கிமு 184 வரையிலான காலகட்டம். தன் வாழ் நாளில் கரிகாலனைப் பற்றியும், நந்தர்களைப் பற்றியும், மெளரியர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால் இவரது காலம் கிமு 320ஐ ஒட்டியது என்று கருதப்படுகிறது.
கல்லணையைக் கட்டியது கரிகாலன் என்று நமக்குத் தெரியும். கல்லணை கட்டப்பட்டது கிமு 150-100 காலகட்டத்தில். 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாமூலனார், இந்தக் கரிகாலனைப் பற்றி பாடியிருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இவர்கள் இரு வேறு நபர்கள் எனக் கொள்ளலாம். வெண்ணிப் பறந்தலைப் போரில் வெண்ணிக்குயத்தியாராலும், கழாதலையாராலும்பாடப்பட்டவன் காலத்தால் முற்பட்ட கரிகாலன். முக்கியமாக, இவர்களையும் ஆதித்த கரிகாலனையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. அவன் இடைக்கால சோழர் வம்சத்தைச் சார்ந்தவன். மற்ற இருவரும், முற்கால சோழர் வம்சத்தைச் சார்ந்தவர்கள்.