தமிழ்ச் சமூகத்தில் மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, வேந்தர்களும், மன்னர்களும் மரங்களைத் தங்கள் குலக்குறியாகவும், மானம் மற்றும் வீரத்தின் அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். தங்கள் முன்னோரும், குலதெய்வங்களும் இம்மரங்களில் உறைந்திருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகையால், இம்மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தீங்கு வராமல் பாதுகாத்தனர். இவை காவல் மரங்கள் அல்லது கடி மரங்கள் என்று அழைக்கப்பட்டன.
சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் முறையே பனை, அத்தி மற்றும் வேம்பு ஆகியவற்றை தங்கள் காவல் மரங்களாக கொண்டிருந்தனர். பனம்பூ, அத்திப்பூ, வேப்பம்பூ மாலைகளைத் தங்களுக்கு உரியவைகளாகக் கொண்டதும் இதன் பிந்தைய வடிவமே. செயல்பாட்டுக்கு அடையாளமாக வஞ்சி, வாகை முதலிய மலர்களைச் சூடிக் கொள்வதும் இம்மரபில் வந்திருக்கலாம். வேந்தர்கள் மட்டுமன்றி சிற்றரசர்களும் தங்களுக்கான காவல் மரங்களைக் கொண்டிருந்தனர். அரசமரம் கூட ஒரு அரசனால் இவ்வாறு கருதப்பட்ட ஒரு காவல் மரமாக இருக்கலாம். கடம்பு, மா, புன்னை போன்ற மரங்களும் காவல் மரங்களாகக் கருதப்பட்டன.
காவல் மரங்களில் தெய்வம் (அணங்கு) உறையும் என்ற நம்பிக்கையும் சங்ககால சமூகத்தில் இருந்தது என்பதை,
துளங்கிடுங் குட்டந் தொலைய வேலிட்டு
அணங் குடை கடம்பின் முழு முதல் தடிந்து
என்ற பாடலின் (பதிற்றுப்பத்து – 88) வழி அறியலாம்.
முருகனுக்கு கடம்பன் என்ற பெயர் இருப்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். முருக வழிபாடான வெறியாட்டத்தில் கடம்ப மலர்மாலை சூடும் வழக்கம் இருந்ததை,
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
என்ற பாடலின் (நற்றிணை – 34) மூலம் அறியலாம்.
குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய முருகன், கடம்ப மரத்தில் உறைந்திருக்கும் தெய்வம் என்பதையும், மகளிர் அம்மரத்தைத் தழுவி குரவைக்கூத்து நிகழ்த்தி வழிபட்டதையும்,
கார் மலர்க் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை
என்ற பாடலின் (மதுரைக்காஞ்சி – 613,615) மூலம் அறியலாம்.
இன்று வரையில் நம்மிடம் இருக்கும், வேப்பமரத்தில் மாரியம்மன் உறைந்திருக்கிறாள் என்ற நம்பிக்கையும், புளியமரத்தில் பேய் இருக்கும் என்கிற நம்பிக்கையும் இந்த மரபு சார்ந்ததே.
இத்தனை சிறப்பு வாய்ந்த இம்மரங்களை வெட்டுவதோ, அவற்றின் காய், கனிகளைப் பறிப்பதோ குற்றமாகவும், அரசனை இழிவுபடுத்துவதாகவும் கருதப்பட்டது. எனவே படையெடுத்து செல்லும் மன்னர்கள், எதிரி மன்னனின் காவல் மரத்தை வெட்டுவது, மரத்தை சிதைக்கும் பொருட்டு அதில் யானையைக் கட்டுவது, வெட்டிய மரத்தைக் கொண்டு முரசு செய்வது போன்ற செயல்களைச் செய்தனர்.
உதாரணத்திற்கு குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை தலைவனாகக் கொண்டு ஆலத்தூர்க் கிழார் பாடிய பாடலை (புறநானூறு – 36) எடுத்துக் கொள்வோம். கிள்ளிவளவன், கரூவூரைத் தலை நகராக கொண்ட சேர மன்னனின் மீது படையெடுத்துச் செல்கிறான். கிள்ளிவளவனின் படைகள் கரூவூரை முற்றுகையிட்டு சேரனின் காவல் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வெட்டப்படும் மரங்களில் இருந்து மரத்துகள்கள் சிதறுவதை விளக்க, ஆலத்தூர்க்கிழார் கொடுக்கும் உவமை மிக அழகானது. பொருநை நதியின் மணல் மேடுகளில், சிலம்பு அணிந்த இளம்பெண்கள், பொன்னால் செய்த கழங்கினை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கழங்கினைத் தெற்றி விளையாடும் பொழுது, மணல் சிதறுவதைப் போல, சேரமன்னனின் காவல் மரங்கள் சிதறுவதாகக் குறிப்பிடுகிறார்.
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய
இவ்வாறு தன் மரம் வெட்டப்படும் ஒலி கேட்டும், போருக்கு வராமல் இருக்கும் வீரமற்ற சேர மன்னனுடன், கிள்ளிவளவன் போரிடுவது பெருமையா அல்லது வெட்கம் தரும் செயலா என்று கேட்கும் விதம் இந்தப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.
கடிமரம் தடியும் ஓசை, தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனோடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே.
வெளிமான் எனும் சிற்றரசனிடம் பரிசில் பெறச் சென்ற பெருஞ்சித்திரனார், வெளிமானின் தம்பி இளவெளிமானால் அவமானப்படுத்தப்படுகிறார். அங்கிருந்து நேராக குமணனிடம் செல்கிறார். குமணன், பெருஞ்சித்திரனாரின் புலமையைப் பாராட்டி பெருஞ்செல்வத்தை பரிசாக அளிக்கிறான். பரிசுப்பொருளாக வந்த யானை ஒன்றை இழுத்துச் சென்று இளவெளிமானின் காவல்மரத்தில் கட்டி வைத்து, இதுவே அவனுக்குத் தான் தரும் பரிசு என்று கூறி இளவெளிமானை பதிலுக்கு அவமானப்படுத்துகிறார். பின்வரும் பாடல் (புறநானூறு – 162) இதனைக் குறிப்பிடுகிறது.
இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண்இனி; நின்ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்;