உதியன் சேரலாதன் எனும் சேர மன்னனின் பெருமையைக் கூறும் புறநானூற்றுப் பாடலில்(புறம் 2), அவன் பெருஞ்சோறு அளித்த நிகழ்வானது எடுத்துச் சொல்லப்படுகிறது. இதனால் பாடப்பட்டோன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகிறான்.
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் !
சேரலாதன் என்பதை சேரல் + ஆதன் என்று பொருள் கொளல் வேண்டும். சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படும். ஆதன் எனும் சேரமன்னனின் வழி வந்தவர்கள் சேரலாதன் எனும் குடிப்பெயரைக் கொள்வார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். உதியன் என்பது அந்த மன்னனின் பெயராக இருந்திருக்கக் கூடும்.
புறம் 2ல் கூறப்பட்டுள்ள பெருஞ்சோற்று நிகழ்விற்கான சில விளக்கங்களில் உதியன் சேரலாதன் மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பெருஞ்சோறு அளித்ததாக கூறப்பட்டுள்ளது. அது தவறாகும். உண்மையில் பாரதப் போர், நடந்ததா இல்லையா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு வேளை பாரதப் போர் நடந்திருந்தாலும், உதியன் சேரலாதனின் காலகட்டமும் பாரதப் போர் நடந்ததாகக் கூறப்பட்ட காலகட்டமும் ஒத்து வரவில்லை. தவிர, தென் நாட்டில் வாழ்ந்த ஒரு தமிழ் அரசனுக்கும், வட நாட்டில் வாழ்ந்த ஆரிய மன்னர்களுக்கும் நட்பு இருந்ததாகவும் எந்தத் தரவுகளும் இல்லை. எடுத்துக்காட்டாக, ஓர் அகநானூற்றுப் பாடல் (அகம் 396), சேர மன்னன் ஆரியரை அலறத் தாக்கி, தன் வில் சின்னத்தை அங்குள்ள மலையில் பொறித்ததை,
ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
என்று குறிப்பிடுகிறது.எனவே மகாபாரத ஒப்பீடு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகிறது.
பழம்பெரும் காப்பியமான தொல்காப்பியம், நாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் போர் தொடுக்கும் செயல்களை வஞ்சித்திணை என்று குறிப்பிடுகிறது. போர் தொடுப்போர் வஞ்சிப்பூ சூடிச் செல்வதால் இப்பெயர் வந்தது. தொல்காப்பியர் வஞ்சித் திணையை பதின்மூன்று துறைகளாக பிரித்து விளக்குகிறார்.
இயங்குபடை அரவம், எரிபரந்தெடுத்தல்
வயங்கல் எய்திய பெருமையானும்
கொடுத்தல் எய்திய கொடைமை யானும்
அடுத்து ஊர்ந்து அற்ற கொற்றத்தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புயலை கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமும், தோற்றோர் தொய்வும்
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்
அழிபடைத் தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ
கழிபெருஞ் சிறப்பின்துறை பதிமூன்றே
அதில் ஒன்பதாவதாக, “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்” என்று பெருஞ்சோறு அளிப்பதை போரின் ஒரு நிகழ்வாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இது ஒரு தனித்த நிகழ்வாகாது, மாறாக அன்றைய வீரத்தமிழ்ச் சமூகத்தில் பொதுவான ஒரு மரபாக இருந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக, இதே பெருஞ்சோறளித்தல் எனும் நிகழ்வு, இலக்கியங்களில் வேறு சில இடங்களிலும் குறிப்பிடப் படுகிறது. வரலாற்றுக் குறிப்புகளை தன் பாடல்களில் உவமையாகக் கொள்ளும் மாமூலனார் இயற்றிய பாடல் ஒன்றில் (அகம், 233) இதனைக் காணலாம்.
மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்இசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல்
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்குக்
குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
காதலனைப் பிரிந்து உழலும் ஒரு காதலி அழுகிறாள். அவளைத் தேற்றும் விதமாக அவளது தோழி கூறும் பாடல் இது. சிறிதும் பெரிதுமாகிய குன்றுகளை உடைய பாலை நிலத்தைக் கடந்து உன் தலைவன் சென்றிருந்தாலும், உன் கூந்தல் அருகே பெறும் இனிய உறக்கத்தை விடுத்து, அவனால் அங்கே நீண்ட காலம் இருக்க முடியாது என்று தோழி கூறுகிறாள். மாமூலனார், இதில் பாலை நிலத்திலுள்ள குன்றுகளுக்கு உவமையாக, உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த நிகழ்வில், சிறிதும் பெரிதுமாக கூடியிருந்த போர்வீரர் கூட்டத்தை (கூளிச் சுற்றம்) குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரத்திலும் (சிலம்பு,26: 48-49) படைத்தலைவர்க்கு அளிக்கப்பட்ட பெருஞ்சோற்று விருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த
பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து
முன்னோருக்கு படையல் வைக்கும் இந்த மரபினை, நம் தமிழ்ச் சமூகத்தில் இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்.இந்தப் படையலைத்தான் இடையில் வந்த ஆரியர், தங்களிடம் அரிசி, காய், கனி போன்றவற்றைக் கொடுத்தால், அதனை முன்னோர்களிடம் சேர்ப்பிக்கிறோம் என்று மூடப்பழக்கத்தை திணித்து விட்டனர் என்கிறார், திரு. இலக்குவனார் திருவள்ளுவர் அவர்கள்.
மேலதிகமாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்ட, “சோறு” எனும் சொல் இன்னும் அப்படியே பழக்கத்தில் இருப்பது, உள்ளபடியே நம் மொழியின் செழுமையைக் காட்டுகிறது.